செவ்வாய், 16 ஏப்ரல், 2024

அனுபவ ஞானம் : பெண்ணரசி

 அனுபவ ஞானம் : பெண்ணரசி


ஓம் வாலை புவனேஸ்வரியே நமஹ.


யோக மார்க்கத்தில் பயிற்சி செய்வோர்கள், கொங்கணரின் வாலைக் கும்மி பாடலை கேட்டிருப்பார்கள். 18 சித்தர்களும் வாலை எனும் பெண் தெய்வத்தை வணங்கி சித்தி பெற்றதை அவர்களது ஞானப் பாடல்களில் விளக்கி இருப்பார்கள்.  நம் குருநாதர் எனக்கு அருள் பாலித்த வருடம் 2015 இல் இருந்து 2018 வரை எனக்கு வாலை அல்லது சக்தி என்ற பெண் தெய்வம் யார்? ஏன் சித்தர்கள் அந்த பெண் தெய்வத்தை வணங்கினார்கள் என்பது புரியவே இல்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு ஞானாலய நூல்களின் மூலம்தான் எனக்குப் புரிந்தது "சக்தி என்னும் ஒற்றை அணு" என்பது நமது உயிர் தான் என்று. இந்த ஒற்றை அணு, இயல்பாக வெப்ப ஆற்றல் கொண்ட இயங்கு சக்தி. இது சூட்சும ஒளி வடிவம் கொண்டது.



எனினும் எனக்கு நமது பழமையான கோயில்களில் பெண் சிலைகளின் வடிவங்கள் மிகவும் எடுப்பான உடல் அமைப்போடு செதுக்கப்பட்டு இருப்பதை பார்க்கும் பொழுது, சித்தர்கள் இதில் ஏதோ சூட்சமம் வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. நம் குருநாதர் ஆழ்மனத்திலிருந்து ஏதோ ஒரு முக்கியமான சூட்சுமத்தைக் க்ற்றுக்கொடுக்க வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். குருநாதர் நடத்தும் பாடம், 2019 ஆம் ஆண்டு காகபுஜண்டர் ஞானம் 80 என்ற நூலைப் படிக்கும் பொழுது தான் புரிந்தது. 44 ஆவது பாடலை கீழே காணலாம்


இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
      என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா!
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்;
      ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது
பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம்
      புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம்

மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே
      வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே.  பாடல் 44.


youtube song



சரி!  இப்போது மேற்கண்ட பாடலில் சில சொற்களை மட்டும் நன்றாகக் கவனியுங்கள். 

கம்பம், 

பெண்ணரசி,

 முன் பார்த்தால் புருட ரூபம்,

 பின் பார்த்தால் பெண் போல் ரூபம்.


 இந்த வரிகளை பொருளோடு பார்க்கும் பொழுது காகபுஜண்டரின் நுணுக்கமான யோகம் மற்றும் மருத்துவ அறிவியலை வியந்து பார்க்கிறேன்.


 கம்பம் என்பது உள்மூளை தண்டைக் குறிக்கிறது ( brain stem ).

 பெண்ணரசி என்பது  பீனியல் சுரப்பிக்கு மிக அருகே இருக்கும் உயிர் சக்தி ஆகும். பீனியல் சுரப்பியை seat of the soul என்று மருத்துவ அறிவியலில் குறிப்பிடுவார்கள்.


இப்போது கீழ்கண்ட உள்மூளைத்  தண்டின் பின்பக்க அமைப்பைப் பாருங்கள். பெண்ணின் உடலைப் போலவே இருக்கிறதா?






இப்போது நமது கோவிலில் உள்ள பெண் தெய்வங்களின் உடல் அமைப்பைக் கவனித்துப் பாருங்கள்.




 உள்மூளை தண்டின் பின்பக்கம்  பீனியல் சுரப்பியுடன். அசல் படம்.



வெப்ப ஆற்றலான உயிர்ப் பெண்ணிடம் இருந்து எப்படி காந்த ஆற்றலான அகார வெள்ளம், அல்லது அமிர்தம் கிடைக்கும் என்பதை அடுத்த பதிவில் விளக்குகிறேன். அதுவரை இந்த அமிர்தப் பெண்ணான மோகினியுடன் திருமாலின் யோகமார்க்கத் தொடர்பு என்ன என்பதை  யோசித்துக் கண்டுபிடிங்களேன் பார்க்கலாம்.


நமது ரிஷி முனிகள் வடிவமைத்த தத்ரூபமான சிலைகளின் பரிபாசையைப் புரிந்து கொள்ள முடியாமல், ஆபாசமாய் பார்த்துவிட்டோமே !!

புருடன் என்றால் ஆண் அல்லது ஆண் குரங்கைக் குறிக்கும். உள்மூளை தண்டின் "முன் பார்த்தால் புருட ரூபம்" என்று காகபுஜண்டர் பாடி இருப்பார். இப்போது கீழ்கண்ட பிட்யூட்டரி  சுரப்பியுடன் கூடிய மூளையின் உருவத்தைப் பாருங்கள். மூக்கு நீண்ட, வயிறு பெருத்த ஆண் தோற்றத்தைப் பார்க்கிறீர்களா?








மூக்கு நீண்ட ஒரு வகைக் குரங்கு.




இந்தக் குரங்குகளின் வயிறு இயல்பாகவே பெருத்த தோற்றம் உடையது.



இவ்வாறு  உள்முகமாகக் உள்மூளை உறுப்புகளை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தி (visuvalise ), நமது உள்மூளையை நோக்கி தவம் செய்யும் பொழுது, சில ஆண்டுகளில் எளிதாக வாலை எனும் உயிரை உணர முடியும். மேலே கண்ட சோட்டானிக்கரை பகவதி அம்மனை வணங்கி இப்பதிவின் முடிவிற்கு வருவோமாக. இனிமேல் சோட்டானிக்கரை அம்மனை பார்க்கும் பொழுது உங்கள் உயிரை உணரும் யுக்தியைப் புரிந்து கொள்வீர்களா?

எச்சரிக்கை ( முக்கியமாக 40 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு ) :-

இது போன்ற சில யோக நுணுக்கங்களையும், யோக ஞானத்தையும் தெரிந்து கொண்டபின், தனக்கு எல்லா ஞானமும் வல்லமையும் வந்துவிட்டது, இனி அனைவருக்கும் போதிக்கலாம் என்று, சமூக வலைதலத்தில் உபதேசம் தீட்சை என தன்னை ஒரு குருவாகவோ தெய்வமாகவோ நினைத்துக் கொள்வது மாயையின் வெளிப்பாடே.  இதில் மயங்கி விட வேண்டாம். உண்மையில் ஒரு யோக சாதகர், யோகஞான பயிற்சியை ஆரம்பித்ததில் இருந்து குறைந்தபட்சம் 12 வருடங்கள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பயிற்சி செய்ய வேண்டும். இந்த 12 ஆண்டுகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தோன்றும் அனைத்து எண்ணங்களையும் சாந்தப்படுத்தி உதாசீனம் செய்வது நல்லது. இது போன்ற தன்னை வெளிப்படுத்தும் எண்ணங்கள், தனது கட்டுப்பாட்டை மீறி வெளிப்பட்டால், ஒரு நரம்பியல் மருத்துவரை அணுகி  ஆலோசிப்பது நல்லது.  இவர்கள் யோகப் பயிற்சியை கைவிட்டு விட்டு, பக்தி மார்க்கத்திலேயே சில காலம் பக்குவப்படும் வரை பயணிக்கலாம். இவர்களின் உடலில் வாதம் அதிகரிப்பதாலேயே மனம்  சமநிலை தவறுகிறது. வாதம் என்பது ஆகாசம் மற்றும் வாயு மூலக்கூறு சமநிலை தவறுவதால் ஏற்படும். 
வாயு மூலக்கூறு வெளிமனத்தையும், ஆகாய மூலக்கூறு ஆழ்மனத்தையும் கட்டுப்படுத்துகிறது. வாத பிரச்சனையை சரி செய்யாவிடில் இதன் தாக்கம் உடலிலும் மனதிலும் நோயை உண்டாக்கும். 
கீழ்கண்ட 14 கேள்விகளை தனக்குத்தானே கேட்கும் பொழுது, குறைந்தது ஐந்து கேள்விக்கு "ஆம்" என்று பதில் வந்தால் அவர்களுக்கு "வாதம்" ஓரளவிற்க்கு உள்ளது என்று  பொருள். ஐந்துக்கு மேலே எத்தனை கேள்விகளுக்கு "ஆம்" என்று வருகிறதோ அவ்வளவு தீவிரமாக "வாதம்" இருக்கிறது என்று பொருள்.

1) ஒல்லியான தேகம். எப்பொழுதாவது எடை போடலாம்.

 2) வேகமான நடை மற்றும் வேகமான பேச்சு.

3) குளிர்காலத்தை விட வெதுவெதுப்பான  அல்லது வெயில் காலத்தில் அதிக சௌகரியமாக உணர்வது.

4) உடலில் மிகவும் குறைந்த வேர்வையை உணர்வது அல்லது எப்பொழுதாவது மட்டுமே வேர்க்கும்.

5) சமநிலையற்ற பசி உணர்வு. சில நேரம் பசிக்கும் சில நேரம் பசிக்காது.

6) சருமம் வறண்டது அல்லது பொலிவற்றது அல்லது சுருக்கம் கொண்டது.

7) மலக்கழிவு வறண்டது அல்லது கடினமானது. அடிக்கடி வாயு தொல்லை மற்றும் வயிற்றில்  உருளும் சத்தம் வருவது(bloating).

8) கண்களில்  வறட்சி அல்லது சோர்வை அடிக்கடி உணர்வது. அதிகமாய் கண் சிமிட்டுவது.

9) கை கால்களை மடக்கும் பொழுது மூட்டுகளில் சடசட சத்தம் வருவது.  சிறிய முன் நெற்றி. எளிதில் உடையும் நகங்கள்.

10) எளிதில் கற்க முடியும் ஆனால் எளிதில் மறந்து விடும். குறுகிய கால ஞாபக சக்தியில் பலமானவர்.

11) இயற்கையாகவே அனேகமான நேரங்களில் மனம் எதையாவது ஓய்வின்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும்.

12) ஒரு செயலை செய்வதற்கு முன்பு அளவுக்கு அதிகமாக யோசிப்பது.

13) லேசான மற்றும் தடைபட்ட உறக்கம். காலையில் சிரமம் இல்லாமல் எளிதில் எழுந்து விடுவது.

14) சிறிய விசயத்திற்கும் அதிக கவலை உணர்வு. அடிக்கடி பதட்டம் அல்லது கோபம் உணர்வது.





ஓம் அகத்தீசாய நம.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.







புதன், 27 மார்ச், 2024

அனுபவ ஞானம் : நவகண்ட யோகம்

 அனுபவ ஞானம் - நவகண்ட யோகம்


பராசக்தியே போற்றி.



கடந்த 2018 ஆம் ஆண்டு அன்பாலயம் ஜெயந்தி அன்னை மூலமாக, பரத்வாஜ முனிவர் அருளிய "ஆகம வேதம்" என்ற நூலினை குருவருளால் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. 


அந்த நூலின் 5 ஆம் பக்கத்தில், மன பாவனையின் மூலமாக பாவ கர்மாவை நீக்கும் பயிற்சி அற்புதமாக விளக்கப்பட்டு இருக்கும். இந்த பயிற்சியை யூடியூபிலும் எளிதாக விளக்கியுள்ளார்கள். 

நான் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து இந்த பயிற்சியை செய்தேன். ஒவ்வொரு அம்மாவாசை மற்றும் பௌர்ணமி காலை நேரம் பயிற்சி செய்வதை வழக்கப்படுத்தினேன். பல கர்ம வினைகள் என்னிடமிருந்து விலகுவதை நன்கு உணர முடிந்தது. எனினும் பல பிறவிகளாய் தொடரும் கடினமான கர்மவினைக்கு இன்னும் வீரியமான பயிற்சி தேவை, என குருவருளால் உணர்ந்தேன். தினமும் மோசமான கனவுகளால் அதிகம் வருந்தினேன். குருநாதரின் பாதம் பணிந்து  "ஒரு வரி" ஞானத்தின் பிரார்த்தனையோடு தினமும் வேண்டினேன். சில நாட்கள் கழித்து ஒரு நாள் காலை நேரம் தியானிக்கும் போது, குருநாதர் கருணையோடு அந்த வீரியமான பயிற்சியை அருள் செய்தார்.



கடினமான கர்மவினையை நீக்கும் இந்த வீரியப் பயிற்சி, எனக்கு வினோதமாக இருந்தது. தினமும் "ஒரு வரி ஞானத்தை" விரும்பிப் பிராத்திப்பதால் எனக்கு சிறிதும் அச்சம் வரவில்லை. ஆரம்பத்தில் இந்த வீரிய பயிற்சியை குருநாதர் எனக்கு மட்டும் அருளி இருப்பதாகத்தான் நினைத்தேன். ஆனால் பின்னர் தான் தெரிந்தது இதை குருநாதர் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே நவகண்ட யோகம் என்ற பெயரில் பல சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் அருளி இருக்கிறார் என்று. வள்ளலார் இந்த நவகண்ட யோகத்தை செய்திருக்கிறார், ஆனால் மனதின் கற்பனையால் அல்ல, உண்மையிலேயே உடலை துண்டு துண்டாக பிரித்து தரையில் ஆங்காங்கே பரப்பிவிட்டு, "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! நான் என்பது இங்கே சிதறி கிடக்கும் உடல் அல்ல, சதா அலை பாயும் வெளி மனமும் அல்ல. நான் அருட்பெருஞ் ஜோதியின் ஒரு பகுதியான ஆன்ம ஜோதியாவேன்",  என பூரணமாய் உணர்ந்து, பரப்பிரமம் எனும் வெட்ட வெளியில் கலந்து சமாதி யோகமும் செய்திருக்கிறார்.



அடியேன் நான் எப்படி இந்த  வீரியப் பயிற்சியை மனத்தினால் செய்தேன் என்பதை விளக்குகிறேன். நான் வெண்ணிற உடையில் கடலின் மேல் பறந்து நடுக்கடலுக்கு செல்கிறேன்.



 அங்கே ஒரு ஆழமான "கடல் நீர் சுழல்" பிரம்மாண்டமாய் சுழன்று கொண்டிருக்கும். 



அந்த சுழல் மேல் நின்று என் உயிரான பராசக்தியை சரணாகதமாக வணங்கி, என் கொடிய கர்ம வினைகளை நீக்கிவிட பிரார்த்திக்கிறேன்.



"கொற்றவைத் தாயே! என் உயிரான பராசக்தியே! உன் பாதங்களை வணங்குகிறேன். இந்த பூமியிலே கர்மாவினால் சிறை படுத்தப்பட்ட என் ஆன்மாவை நீ உன் வல்லமையால் விடுவிக்க வேண்டும் தாயே! என் ஆன்ம விடுதலைக்கு எதிரான கர்ம தடைகளை நீ அழித்து வெற்றி கொள்ள, என் உடலை நவகண்டமாய் இந்த கடல் நீர் சுழலில் உனக்கு பலியிடுகிறேன் தாயே!"  என்று சரணாகதமாய் வணங்கி நீண்ட கூரிய வாளால் உடலை ( மனதிலேயே ) ஒன்பது கூறுகளாய் வெட்டி, வட்ட குண்டத்தின் வடிவான கடல் நீர் சுழலில் பலியாக வீசி விட வேண்டும்.





நம் மனதின் மூலம் பலியிடும் வரிசை :-

 1) வலது கால்

 2) இடது கால்

 3) இடுப்பு 

4) மார்பு 

5) தோள் 

6) கழுத்து 

7) தலை 

8) இடது கை 

9) வாளோடு கூடிய வலது கை.


 உருவமற்ற சூட்சம உயிராக, விண்ணைப் பார்த்து மேலே எழும்பிப் பறக்கிறேன். சூரியனின் வெப்ப மண்டலத்தை நெருங்கும் போது, சூரியனின் மத்தியில் உள்ள குளிர்ந்த காந்த ஆற்றலான இறைவன் நம் உயிரை தானே ஈர்த்துக் கொள்வார்.



 பிரகாசமான ஒளியில் சிறிது தியானித்து விட்டு வெட்டவெளியில் கலக்க வேண்டும். இயன்றவரை மௌனமாக அந்த வெட்டவெளியிலேயே லயித்து தியானிக்க வேண்டும். சில வினாடிகள் தான், உடனே நாம் வெளி மனம் சுதாரித்து, வெளி உலக உருவங்களையும் எண்ணங்களையும் காட்ட ஆரம்பித்து விடும். எனினும் அந்த ஒரு சில வினாடிகள் வெட்ட வெளியில் தியானப்பது மிகவும் அற்புதமே.  



குடும்பக் கடமைக்காக செயல்பட வேண்டிய  கட்டாயத்தில் உள்ளவர்கள் இந்த நவகண்ட யோக பயிற்சியை, மாதம் ஒரு முறை அல்லது கர்மாவின் வீரியம் அதிகமாக உணரும் போது மட்டும் செய்வது நல்லது. இல்லாவிடில் குடும்ப கடமைகளை செய்ய மனம் இல்லாத போய்விடும். இதை குருநாதர் ஏற்க மாட்டார்.
இந்த பயிற்சியினால் நம் உள் மூளையில் வெகுகாலமாய் சிறைப்பட்ட  கடினமான கர்மாக்கள் சிறிது சிறிதாக விடுவிக்கப்படும். இதன் தாக்கத்தால் சில காலத்திற்கு மோசமான கனவுகளும் வெளி உலகில் சில போராட்டங்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். இது சில காலம் தான். குருநாதரின் பாதத்தை இறுகப்பற்றி, "ஒரு வரி" ஞானத்தை தொடர்ந்து பிரார்த்தித்து, இந்த போராட்ட காலத்தை எளிதாய் கடந்து விடலாம். இந்த போராட்ட காலம் சிலருக்கு சில மாதங்கள் இருக்கும், சிலருக்கு சில வருடங்கள் இருக்கும், இது அவரவர் கர்மாவை பொறுத்தது. அடியேன் எனக்கு ஐந்தாண்டுகள் வரை  போராட்டங்கள் உள்ளேயும் வெளியேயும் இருந்தது. நீங்கள் குருநாதரின் ஒரு வரி ஞானத்தை  முழுமையாக ஏற்று, தினமும் பிராத்திப்பவராயின் இந்தப் பயிற்சியை தாராளமாக செய்யலாம்.


இந்த நவகண்ட யோகத்தைப் பற்றிய குறிப்புகள் கலிங்கத்துப் பரணி, சிலப்பதிகாரம் மற்றும் சில இலக்கிய நூல்களில் உள்ளது. தன் நாடு போரில் வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த நாட்டு வீரன் நம் தமிழ் பெண் தெய்வமான கொற்றவைக்கு, தன் உடலை தானே வெட்டி பலியிடுவான். தடைகள் விளங்குவதற்காக தன்னைத் தானே தியாகம் செய்கிறான். கீழே ஒரு உதாரண பாடல் கலிங்கத்துபரணியில்.


அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ

அரிந்தசிரம் அணங்கின் கைக்கொடுப்பராலோ

கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவுமாலோ

குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ.


[கொற்றவை-காளி; பாவும்-துதிக்கும்]


இவ்வளவு ஏன்? இன்றைக்கும் கூட பழமையான கோயில்களின் வாயிலில், தனக்கு எந்த உடல் பாகத்தில் நோய் உள்ளதோ, அந்த உடல் பாகத்தை வெள்ளியிலே வாங்கி, உண்டியலில்  காணிக்கை செலுத்தும் பழக்கம் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? 





எல்லாம் மூடநம்பிக்கை  அல்லது  காட்டுமிராண்டித்தனமோ இல்லை. அனைத்திலும் ஆழ்ந்த மனோதத்துவம் இருக்கிறது.

நம் கர்மவினைகள் நமது உள் முளையின் நரம்பணுக்களில் சிறைப்படுவதைப் பற்றிய  சுவாரசியமான தகவல்களை வேறு தனிப் பதிவில் பார்ப்போம்.



இப்படிக்கு,

அகத்திய பக்தன்.


புதன், 6 மார்ச், 2024

சுசிலா பெரியம்மாவுக்கு கிடைத்தது

 அழைக்கிறான் மாதவன்…
ஆநிரை மேய்த்தவன்…





      சென்ற திங்கள் கிழமை மாலை, பிரார்த்தனையை முடித்துவிட்டு பூஜை அறையை விட்டு வெளியே வந்தேன். எனது தாயார் சுசிலா பெரியம்மாவிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். தாயார் என்னைப் பார்த்ததும் அலைபேசியை என்னிடம் கொடுத்து, சுசிலா பெரியம்மாவிடம் பேசச் சொன்னார். 

முருகப்பெருமானை ஆறு பெண்கள் சேர்ந்து வளர்த்தார்களாம். அதுபோல் என்னையும்  பல்வேறு காலகட்டங்களில் பல தாய்மார்கள் வளர்த்திருக்கிறார்கள். அதில் சுசிலா பெரியம்மாவும் மிகவும் முக்கியமானவர்.  நான் திண்டுக்கல்லில்  உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது சுசிலா பெரியம்மா வீட்டில் தான் அடிக்கடி தங்கி இருப்பேன். இப்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக உருண்டு ஓடிவிட்டது.

தற்போது சுசிலா பெரியம்மா உடல் நலக் கோளாறால் மதுரையில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். நான் வரவேற்பு அறையில் உள்ள குருநாதரின் படத்தைப் பார்த்துக்கொண்டே அலைபேசியை வாங்கி பேசினேன். சுசிலா பெரியம்மாவிற்கு விரைந்து உடல் நலம் தேரவும் வலியை தாங்கிக் கொள்வதற்கும் என்ன மந்திரம் ஜெபிக்கலாம் என்று என்னைக் கேட்டார். இது போன்ற கேள்வியை வேறு யாரேனும் கேட்டிருந்தால்  மன ஆறுதலுக்காக ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லி இருப்பேன். ஆனால் இன்று ஏனோ  குருநாதர் எனக்கு அளித்த "ஒரு வரி ஞானத்தை" சொல்லி விட வேண்டும் என்று எனக்கு தோன்றியது. பெரியம்மா, குருநாதர் எனக்கு கொடுத்த ஒரு முக்கியமான ஞானத்தை இன்று உங்களுக்குச் சொல்ல போகிறேன். நாம்  இந்த பூமியில் பிறப்பது முக்தியை அடைவதற்காகத் தான். இதை ஏற்றுக் கொள்வதற்கு  கசப்பாகத்தான் இருக்கும், ஆனால் இதுதான் உண்மை. எனவே நீங்கள் மனம் உருகி, "இறைவா உன் பாதம் சேரும் முக்தி எனக்கு விரைவில் வேண்டும்" என கேளுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளையேனும், இதை மனம் உருகி பிரார்த்தை செய்து  வேண்டியபின் "நமச்சிவாய" மந்திரத்தை ஜெபமாலை கொண்டு ஜெபியுங்கள் என்று சொன்னேன்.  பெரியம்மாவிடம் சில வினாடிகளுக்கு எந்த பதிலும் இல்லை. மனம் இல்லாமல் "சரி" என்று ஒரு வார்த்தை சொன்னார். அத்தோடு   இருவரும் விடைபெற்று அலைபேசியை வைத்து விட்டோம். 

அலைபேசியை வைத்த இரண்டு நிமிடங்களில் மீண்டும் பெரியம்மா அலைபேசியில் என்னை அழைத்தார். மைந்தா, நான் ஒரு விஷயத்தைக் கேட்பேன்,  அதற்கு உன் பதிலை சொல் என்றார்.  எனக்கு காசிக்கு செல்ல வேண்டும் என்று வெகு நாளாய் ஆசை. ஆனால் எனது நோய்வாய்ப்பட்ட கால்களை வைத்துக் கொண்டு என்னால் செல்ல முடியுமா? இதனை வேண்டுவதாலோ ஆசைப்படுவதாலோ எந்த பலனும் இல்லை. அதுபோல் "எனக்கு முக்தியை தரும் மரணம் வேண்டும் என்று வேண்டினால் மட்டும் என்ன பலன்? அது கிடைக்கும் விதி இருக்கும்போது தானே கிடைக்கும்",  என்று கேட்டார். அடியேன் நான் குருநாதரின் பாதங்களைப் பார்த்துக் கொண்டே  பதில் உரைத்தேன். தாயே, உங்களால் காசிக்கு செல்ல முடியாவிட்டாலும், அதற்காக ஆசைப்பட்ட நொடியில் உங்கள் மனதால்  காசிக்கு சென்ற பலனையும்  புண்ணியத்தையும் அடைகிறீர்கள்.  அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் நான் கோவையில் இருக்கிறேன், நீங்களோ மதுரையில் இருக்கிறீர்கள். ஆனால் இந்த நொடியில், உங்கள் மனதில் நானும், என் மனதில் நீங்களும் இருக்கிறீர்கள் அல்லவா!  
முக்தி வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நீங்கள் மனதால் கேட்கும் நொடியில்,  உங்கள் மனதாலேயே கையிலாசத்தில் இருக்கும் ஈசனிடம் சென்றுவிட்டு, மீண்டும் உங்களது உடம்பிற்குள் திரும்புகிறீர்கள். இதற்கான  இறைவனின் அருளை நீங்கள் கட்டாயம் பெறுகிறீர்கள். 



இந்த இறையருள் உங்கள் வலியையும் தாங்க உதவும், குணப்படுத்தவும் செய்யும். மேலும் இந்தப் பிரார்த்தனையை தினசரி தவறாமல் வேண்டிக் கொண்டிருந்தால், உங்களை எந்த துன்பமும் வருத்த முடியாது. மாயையால் கட்டுண்டு கிடக்கும் உங்கள் வெளிமனம் வலுவிழந்து விடும். ஒரே பிரார்த்தனையை பலமுறை மனம் உருகி வேண்டுவதால், அதுவே ஆழ்மனதில் பதிந்துவிடும்,  பேரானந்த வாழ்வும்  சித்திக்கும். இறையன்பினால் எப்போதும் நிரம்பி இருப்பீர்கள். பல வருடங்களாய் நானும் இப்படித்தான் வேண்டிக் கொண்டிருக்கிறேன். எனது குழந்தைகள், மனைவி, தாயார் அனைவருக்கும் இதையே சொல்லிக் கொடுத்தேன், என்று சொன்னேன்.
சில வினாடிகளுக்கு பெரியம்மாவிடம் பதில் இல்லை, சில வினாடிகள் யோசனைக்கு பின் சமாதானமாகி "சரி மைந்தா" என்றார்.


விரக்தியா? விருப்பமா?
 இந்த ஒரு வரி ஞான பிரார்த்தனையை விரத்தியாலோ அல்லது ஏதோ ஒரு  எதிர்பார்ப்பிற்காகவோ வேண்டுவதால் எந்த பலனும் இல்லை.  இந்த பிரார்த்தனையை மனம் உருகி முழு விருப்பத்தோடு வேண்டினால் அனேக பலன்கள் உண்டு. ஆண்டாள் நாச்சியார் கண்ணனே வேண்டும், என எவ்வளவு விருப்பத்தோடும் ஏக்கத்தோடும் வேண்டினாலோ, அதுபோல் இந்த ஒரு வரி ஞானத்தை தினசரி மிகுந்த விருப்பத்தோடு வேண்ட வேண்டும்.




இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வயோதிக காலத்தில் கேட்க வேண்டிய ஞானம் என்றா தோன்றுகிறது?  அப்படி தோன்ற வைப்பது தான் வெளி மன மாயையின் சதிவேலை. மேலும் விளக்கம் தேவைப்படுவோர் கீழ்க்கண்ட பதிவுகளைப் படித்தால் நிச்சயமாய் தெளிவு பிறக்கும். அற்புத சக்திகளைப் பெறும் ரகசியமும் தெரியும்.


இந்த ஒரு வரி ஞானத்தை தினசரி தொடர்ந்து வேண்டும் பொழுது என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பதை கீழ்க்கண்ட பதிவைப் படித்து புரிந்து கொள்ளலாம்.


இந்த ஒருவரி ஞானம் எனக்கு எப்படி கிடைத்தது என்பதற்கான பதிவு.


வெளி மனத்திற்கும் ஆழ்மனத்திற்கும்  உள்ள வேறுபடும் சக்திகள்.


இந்த மகளிர் தினத்தில் என்னை தகப்பனாக  ஏற்றுக்கொள்ளும் அனைத்து மகள்களுக்குமான பரிசாக  கவிதைப் பதிவு.



   இப்படிக்கு
 அகத்திய பக்தன்


சனி, 2 மார்ச், 2024

என் அசைவம் என் உரிமை

 என் அசைவம் என் உரிமை


சைவமோ அசைவமோ, உங்கள் தினசரி உடல் உழைப்புக்கு ஏற்றபடி உணவு உண்ணுங்கள்.  வியர்வை சிந்த கடின உடல் உழைப்பு உள்ளோர் மட்டும் அசைவ உணவைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் அசைவம் தவிர்க்கலாமே ?. 
"என் அசைவம் என் உரிமை" என்றால் இனி உங்கள் இஷ்டம்.



  நாற்பது வயதைக் கடந்தவர்கள் உணவுப் பழக்கத்தை சரி செய்யாவிடில், ஒரு 10 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 10 நாட்கள் உடனிருந்து உங்களை கவனிக்க ஒரு ஆளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். 
( இல்லத்தரசிகள், டாக்டர், இன்ஜினியர், வியாபாரி, பைனாஸ் தொழில் செய்வோர் மற்றும் ஓய்வுபெற்றோர் கவனத்திற்க்கு )
உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு ஒரு மரியாதையும் இருக்காது. பரிதாபம் தான்.



உழைப்பிற்கேற்ற உணவு, அல்லது உணவிற்கேற்ற உழைப்பு.

 இறைவனின் அருளை பெற்ற தூதர்களான இயேசுநாதர், முகமது நபி, சீரடி சாய்பாபா போன்றோர்கள், மாமிசம் உண்பதை  தவறாக சொல்லவில்லை. தாராளமாக மாமிசம் உண்ணலாம் என்று அறிவுறுத்தினார்கள். ஏனெனில் இவர்கள் வாழ்ந்த காலத்தில் இயல்பான அன்றாட வாழ்க்கையிலேயே அதிக உடல் உழைப்பு இருந்தது. அன்றைய காலத்தில், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், இயந்திர வாகனங்கள் என்ற எந்த ஒரு உடல் உழைப்பை குறைக்கும் இயந்திரமும் இல்லை. அதனால் அன்றைய காலத்தில், மாமிசம் உண்பதால் எந்த  பாதிப்பும் இல்லை. ஆனால் இப்போது அன்றாட வாழ்க்கையில், உடல் உழைப்பு என்பது மிக மிக குறைந்து விட்டது. மாமிச உணவு இன்றைய பெண்களுக்கு உடலில் துன்பத்தையும், ஆண்களுக்கு உயிரில் துன்பத்தையும்  தருகிறது.
 தினசரி கடினமான உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு மாமிச உணவு அவசியமானது. ஆனால் போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களும் மாமிச உணவை உண்பதால், அதன் விலையும் கூடிவிட்டது, தரமோ குறைந்துவிட்டது.

 இதனால் அதிக உடல் உழைப்பு உள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய மாமிச உணவானது, அவர்களால் தினசரி வாங்க முடியாத விலைக்கு ஏறி விட்டது. இது மிகப்பெரிய பாவமாகும். இந்தப் பாவம், உடல் உழைப்பில்லாத, அவசியமே இல்லாமல் மாமிச உணவு உண்பவர்களையே சாரும்.



 இதனால்தான் இறைதூதர்களால் அளிக்கப்பட்ட,  யுனானி, சித்தா, ஆயுர்வேதா போன்ற இயற்கை மருந்துகள் வேலை செய்வதில்லை. ஆங்கில மருந்தையே அதிகம் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.


கீழ்க்கண்ட வேலைகளை கடின உழைப்பு என கருதலாம். ( தினசரி வேலை ).

( சூரிய ஒளியில் அல்லது அக்கினியில் )
 விவசாய வேலை, விறகு வெட்டுதல்,
 கல் உடைத்தல்,  கட்டிட வேலை,
 இரும்பை உருக்கி அடித்தல், 
வியர்வை சிந்த கடின உழைப்பு,
சூரிய ஒளி படும் இடத்தில் ஆட்டாங்கல், அம்மிக்கல், துவைக்கும் கல் தினசரி உபயோகிக்கும் இல்லத்தரசிகள் மற்றும் கால்நடை பராமரிப்பு.

அசைவம் உண்ணும் உங்களிடம் மேற்கண்ட ஏதேனும் ஒன்று உள்ளதா ???

மிகக் கடின உழைப்பு உள்ளோர்க்கான உணவை, நீங்கள் உண்பதை உங்கள் ஆன்மா (இறைவன்) ஏற்றுக்கொள்வாரா?

இதய நோய் ஆபத்து :-

About 94 % of young patients, who suffered a heart attack, were non-vegetarians, according to a report released by Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research.

more information in below article.



அதிக உடல் உழைப்பு இல்லாத பெண்கள் மாதவிடாய் இருக்கும்வரை இதய ஆபத்து வெளியே தெரியாது. மட்டன் பிரியாணியோ சிக்கன் வறுவலோ வெலுத்துக்கட்டலாம். ஆனால் இதயவலி ஆபத்து, மாதவிடாய் நின்றபின்தான் தெரியும். எதற்கும் ஒரு பத்து லட்சம் ரூபாய் ரொக்கமாகவோ அல்லது மருத்துவ காப்பீடோ எப்போதும் தயாராய் வைத்துக்கொள்ளுங்கள் தாய்மார்களே.

50+ வயது பெண்கள் இறைச்சி சாப்பிட்டால் இதய நோய் வரும்.


இதுபற்றிய கட்டுரை கீழே.





மனநல பாதிப்பு :-

கடுமையான உடல் உழைப்பு இல்லாதவர்களின் மாமிச உணவு, ரத்தத்தின் அடர்தன்மை அதாவது blood viscosityயை அதிகமாக்கும். இதனால் உள்மூளை  நியூரான்ஸ் எனும் நரம்ப அணுக்கள் வரை ரத்த ஓட்டம் பரவாமல் தடுத்துவிடும். 




உள்மூளை நரம்பு அணுக்கள் வரை ரத்த ஓட்டம் பரவாமல் இருந்தால் அது மனம் நலம் சார்ந்த பிரச்சனையை அதிகமாய் உருவாக்கும்.



இப்படிக்கு
அகத்திய பக்தன்.

புதன், 21 பிப்ரவரி, 2024

சட்டி சுடவில்லை கை விடவில்லை*

 சட்டி சுடவில்லை கை விடவில்லை


எண்ண பதிவுகளை விரைவாக நீக்குவதற்கும், வெற்றிடத்தையும் ஆன்ம ஒளியையும் அதிகமாக பெருக்குவதற்குமான ஒரு எளிய ஞானத்தை குருநாதர் எனக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு வினோத அனுபவத்தின் மூலம் கொடுத்தார். உப்பு சப்பு இல்லாத ஒரு வரி ஞானம் தான், ஆனால் இதை அறிந்து உணர்ந்து ஏற்று தினசரி தவறாமல் எனது இறைவழிபாட்டோடு வேண்டும்போது, இதன் பலனோ கணக்கில் அடங்காதது,  இன்ப துன்பங்களில் சிக்காமல் எளிதாய் பயணிக்க மிகவும் உதவியாக எனக்கு இருந்தது.  தினசரி தவறாமல் வேண்டுவதால், எப்போதும் ஆன்ம உற்சாகத்தை தந்துகோண்டே இருக்கிறது.



குருநாதர் கொடுத்த ஞானம் இவ்வளவுதான். "இறைவா உன் பாதம் சேரும் மரணத்தை விரைந்து எனக்கு கொடு". படிப்பதற்கு சொற்பமாய் தோன்றும் இந்த ஒரு வரி என்னை ஒரு ஆழ்ந்த வேறு ஒரு பரிணாமத்திற்கு கொண்டு சென்றது. எனினும் 2015 இல்  இதை என் குடும்பத்தாரிடம் சொல்வதற்கும் கூட எனக்கு தயக்கமாக இருந்தது. ஏனெனில் இதை மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஏதோ ஒரு எதிர்மறை வாசகமாக உள்ளது. 2018 இல் "ஆன்மாவின் சுயசரிதம்" நூல் வெளிவந்தவுடன் எனக்கு இந்த ஞானத்தை வெளியே சொல்ல தைரியம் வந்தது. முதலில் என் மனைவியிடம் கூறினேன், ஆனால் அவள் இதை ஏற்கவே இல்லை, மேலும் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக்  கூறினாள். எனினும் அதையும் மீறி எனது நெருங்கிய உற்றார் உறவினர்களிடம் இந்த ஞானத்தை சொல்லிப் பார்த்தேன். அனைவரும் என்னை திட்டினார்கள். ஏதோ செய்யக்கூடாத தவத்தை செய்து மனநிலை தவறிவிட்டது என்றும் சொன்னார்கள். யார் மீதும் எனக்கு கோபம் இல்லை. அவர்கள் புரியாமல் சொல்கிறார்கள். எப்படியாவது அவர்களுக்கு புரிய வைத்து அவர்களை கரை சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். பல கோணங்களில் இந்த ஞானத்தை விளக்கி, எப்படியாவது புரிய வைக்க வேண்டும் என்பதற்காக வேறு வழி இல்லாமல், முதன்முதலாக இணையதளத்தில் பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். இன்று வரை பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் யாருக்கும் இந்த ஞானம் பிடிக்கவும் இல்லை, புரியவும் இல்லை.


இந்த வேண்டுதலை அடியேன் நான் தினமும் வேண்டிக் கொண்டே இருக்கிறேன். தொடர்ந்து ஐந்தாண்டுகள் மனமுருகி முழு விருப்பத்தோடு வேண்டிய பிறகு எனக்கு ஒரு தனிப்பட்ட உணர்வுநிலை கிடைத்தது. இந்தக் குழுவில் அந்த விசயத்தை  முதன்முதலாக சொல்கிறேன். அடியேன் எனது வெளி மனத்திற்கும் ஆழ்மனத்திற்கும் உள்ள இடைவெளி நிறைய குறைவதை உணர்ந்தேன். நடந்து முடிந்ததற்கும், என்முன்னே நடக்கப் போவதற்குமான காரண காரியத்தை உள்ளுணர்வாக ஓரளவுக்கு சிறிது உணர முடிகிறது. இதற்கு மேல் சொல்ல எனக்கு அனுமதி இல்லை. இது எனது தனிப்பட்ட கருத்து தனிப்பட்ட அனுபவம் 🙏🙏🙏


இந்த ஒரு வரி ஞானதை விளக்க  50க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதினேன் என்றால் நம்ப முடிகிறதா?


அகத்திய பக்தன்.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

அகத்திய பக்தன் - கேள்வி பதில்

 

சிவனின் சிரசில் உள்ள மூன்றாம் பிறை எதைக் குறிக்கிறது ஐயா?

நீங்கள் விரும்பிய பதிலை எடுத்துக் கொள்ளலாம்.

1) மதி என்ற மனம், அதாவது வெளி மனத்தை குறைத்து விட்டால், உயிர் தரிசனம் அதாவது சப்கான்சியஸ் மைண்டை உணரலாம்.


2)  ஆரம்பத்தில் ஒரு யோகி இடகலை வழியாக ஆக்கினை சக்கரம் வரை ஏறி,  உயிர் தரிசனம் கண்ட பிறகு,  இடகலை என்ற மதியை குறைத்து அதற்கு மேலே  சூரிய மத்தி மற்றும் சூனிய பிரம்மத்திற்கு பின்கலை வழியே ஏறுவார்.


3)  மதி என்பது வெப்ப அணுக்கள் அல்லது அறிவு அணுக்கள் அல்லது எதிர்மறை அணுக்கள் என்று கூறப்படுகிறது. இந்த மதியே எண்ண பதிவுகளுக்கு காரணமாகிறது. இந்த மதியை குறைக்கும் பொழுது, அதாவது துறக்கும் பொழுது உள்ளொளி பெருகும்.


4)  மதி என்பது இடகலை அல்லது உகாரம் அல்லது இயங்கும் தன்மை என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த மதியை குறைத்து விட்டால்  அகரம் என்ற அமுது கிடைக்கும். மகாரம் என்ற இயங்கா தன்மையும் சித்திக்கும்.


5) Changing the number of electrons will change the overall charge on an atom. An atom that loses electrons will become positively charged.

மதி= electrons.


இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.


1 apr 2024.

டிவி பார்த்துக் கொண்டோ மொபைல் பார்த்துக் கொண்டோ உணவு உண்ணும் பொழுது அந்த உணவோடு மிக எளிதாக மாயாவும் சேர்ந்து உள்ளே சென்று விடும். உணவும் சரியாக செரிக்காது. ஆனால் மாயா உள்ளே சென்று சுலபமாக அமர்ந்து விடும். மாயாவை விரட்டுவது கடினமான காரியம் ஆகிவிடும். தன்னைச்  சூழ்ந்து இருப்பவரோடு அன்பு பாராட்டி பகிர்ந்து உண்ணும் பொழுது அன்பு எனும் ஆற்றலும் உள்ளே உணவு வழியாக சென்று விடும். கலியுக காவியம் ஆன்மாவின் சுயசரிதம் நூலின்படி நமது மூலையில் உள் மூளையில் பத்து வட்ட அணுக்கள் உள்ளன. இதில் முதல் வட்டம் மாயாவுக்குரியது. இரண்டாவது வட்டம் கர்மாவுக்குரியது. மூன்றாவது வட்டம் ஆணவத்துக்குரியது, இதுவே அன்புக்கும் உரியது. மூன்றாவது வட்டமே அன்புக்கும் உரியது. அதாவது இந்த உலகியல் மக்களோடு சேர்ந்த அன்பு .இங்கு சிறைப்பட்ட அன்பு அணுக்கள் வெகு எளிதாக பிரிக்கப்படும். அதே சமயத்தில் ஆணவமும் நீக்கப்பட்டு விடும்.


நன்றி எனும் உணர்வின் ஆரம்பமும் அன்புதான், முடிவும் அன்பு தான். இந்த அன்பை ஒரு கனிமமாகச் சொல்லும் பொழுது, முருகப்பெருமான் அதை பாதரச ஆற்றல் என்று கூறுகிறார். ஒரு நாளின் பிரம்ம முகூர்த்தத்தில் இருந்து 15 நாளிகைகளுக்கு பாதரச ஆற்றலை கிடைக்கிறது. இதில் முதல் ஐந்து நாழிகையில் கிடைப்பது உயர்ந்த பாதரச ஆற்றல்.

முருகப்பெருமானின் கலியுக வேத நூலான "ஒளி" என்னும் நூலில் இது விளக்கப்பட்டுள்ளது.




அலுவலகப் பணியில் இருக்கும் எனக்கு இடைப்பட்ட நேரத்தில் இதை எழுதுகிறேன். அலைபேசி எடுக்க எனக்கு நேரமில்லை. தயவு செய்து மன்னிக்கவும்.


 எனினும் தினசரி குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது மனம் உருகிய பிரார்த்தனை செய்பவருக்கு மட்டும், வாரத்தின் கடைசியில் ஞாயிற்றுக்கிழமை,  சந்தேகங்கள் இருப்பின்  வாட்ஸ் அப்பில் பேச முயற்சிக்கிறேன்.  உங்களுக்கு தனிப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான ஒரே தீர்வு, குருநாதர் அளித்த "ஒரு வரி" ஞானம் மட்டுமே. எனக்கு குரு நாதர் கொடுத்த சர்வரோக நிவாரணி அல்லது சஞ்சீவி மூலிகை இந்த "ஒரு வரி" ஞானமே.

🙏🙏🙏


அடியே நான் எடுத்து வைத்த குறிப்புகளை கீழ்கண்ட ஸ்கிரீன்ஷாட்டில் பார்க்கலாம்.


 இதை முழுமையாக புரிந்து கொள்ள நீங்கள் ஒளி நூல் மற்றும் பிரம்மம் நூலையும் படிக்க வேண்டும்.


 இதில் எட்டு மணிக்கு மேல் நமது ரத்தத்தில் உள்ள நச்சு பொருள்களை நீக்க முயற்சி செய்வதால் அதாவது பாதரச ஆற்றல் நச்சுக்களை நீக்க முயற்சி செய்வதால், அந்த நேரத்தில் ஜனார்தனன் அய்யா கூறியது போல தீய எண்ணங்கள் வெளியே வரலாம், அதை பற்றி கவலை இல்லை.  மனம் உருகிய வழிபாடுகளை செய்ய செய்ய சரியாகிவிடும். 👍


3-apr-2024


குருநாதர் அருளால் அடியேன்  ஒரு ஞான விஷயத்தை இன்று சொல்லுகிறேன்.


* ஐந்தாம் இட்லி சூட்சுமம்*

 மனம் உருகிய பக்தியே முதல் படி.  பின்னர் மாய கர்மா ஆணவத்தை நீக்கும் பயிற்சிகள்.

 பின்னர் உயிரின் இருப்பிடத்தை துல்லியமாக தெரிந்து கொள்வது.

முதல் படி ஏறாமல்  மேற்கொண்டு ஏறுவது சிரமம்தான்.


இன்றைக்கு வாசியோகம் / யோகா பாதையில் இருப்போர், மற்றும் யோகம் பழக விரும்புவோர் உடனடியாகவும் நேரடியாகவும், வெறும் யோக நுணுக்கங்களை மட்டும் கேட்டோ படித்தோ வெற்றி பெற விரும்புகிறார்கள். இது எனக்கு சிறிது நகைச்சுவையாக உள்ளது. பசியோடு இருக்கும் ஒருவன் முதலில் ஒரு இட்லி சாப்பிடுகிறான். பின்பு இரண்டாம் இட்லி, மூன்றாம் இட்லி, நான்காம் இட்லி... ஐந்தாம் இட்லி சாப்பிட்டபின் அவன் பசி அடங்கிவிட்டது. இதைப் பார்த்த ஒரு புத்திசாலி தன் மனதில் "அப்படியானால், அந்த கடைசி ஐந்தாம் இட்லியில் தான் பசியடங்கும் சூட்சமம் உள்ளது, எனவே முதல் நான்கு இட்லியை உதாசீனம் செய்துவிட்டு, நேரடியாக “ஐந்தாம் இட்லியை மட்டும் சாப்பிட்டால் போதும்", என்ற முடிவுக்கு வந்தானாம்.


அய்யா எழுதிய "சௌம்ய சாகரம் 1200 "  என்ற நூலைப் படிக்கும் போது 623 ஆம் பாடல் நமக்காக ஜொலித்துக் கொண்டிருந்தது.


"காணவே சற்குருவும் கருணை கூர்ந்து,

      கண்கண்ட சரியையோடு கிரிகைரெண்டும்

 பூணவே செய்துவந்த நெறியைப் பார்த்து,

      புத்தியுள்ள என்மகனே வாவென்றே தான்

 ஊணவே வாசியுட வழியுஞ் சொல்லி,

      உண்மையுள்ள சிவயோக நிலையுங்காட்டி

தோணவே ஞானமென்ற அண்டத்துள்ளே,

      தொடுகுறிபோல் சின்மயத்தின் மயஞ்சொல்வரே."


முக்கிய பொருள் :- சரியை கிரியை இரண்டையும் "பக்தி மார்க்கம்" என்று சொல்வார்கள். இந்த அற்புத பாடலில், அய்யா எவன் / எவள் பக்திமார்க்கத்தில் சற்குரு என்ற "அகத்தீசரைப்போன்ற"  மஹாசித்தரை ( மனிதர் அல்ல ) உண்மையாக தினமும் வழிபடுகிறார்களோ, அவர்களை அந்த சித்தரே வந்து "என் மகனே / மகளே வா " என்ற சொல்லி மிகவும் உயர்ந்த யோகஞானமான "வாசியோகம், சிவயோகம் மற்றும் சின்மயத்தை" தொட்டுக் காட்டி அருள் செய்வார்கள்.




புதன், 14 பிப்ரவரி, 2024

ஈசனைக் காணலாம் வாருங்கள்

 

ஈசன் என்பவர் யார்? கையில் சூலாயுதம் வைத்திருப்பாரே? கழுத்தில் பாம்பு அணிந்திருப்பாரா? ஆஜானுபாகுவாக ஒரு ஆணாக நின்று கொண்டிருப்பாரா? அல்லது உட்கார்ந்து கொண்டிருப்பாரா? அவரின் மதம் என்ன? அவரின் மொழி என்ன?



 இத்தனை கேள்விகளுக்குமான பதில்,  பாண்டிச்சேரி அன்பாலயத்தின் மூலம் வெளிவந்த "ஆத்மாவின் சுயசரிதம்" என்ற நூலில் உள்ளது. இதனை அருள் செய்தவர் வால்மீகி மகரிஷிகள். கீழே அந்த புத்தகத்தில் உள்ளது உள்ளபடி அப்படியே எழுதி இருக்கிறேன். படித்துக் கொள்ளுங்கள். 

நன்றிகள் : அன்பாலயம் ஜெயந்தி அம்மா.


ஈசனை ஒரு மனிதனாக உருவகம் செய்து பார்ப்பதை நிறுத்திவிட்டு பூமிக்கோளைப் போல பல கோள்களுக்கும் பல அண்ட சராசரங்களுக்கும் அதிபதி என்றும் பிரம்மாண்டத்தின் உச்ச நிலை எனவும் கருதி போற்ற தயாராகுங்கள். ஈசன் என்ற ஒரு மனித கடவுளை சந்திக்கப் போவதாக யாரும் கற்பனை செய்யாதீர்கள். எவரின் கற்பனைக்கும் எட்டாத நிலை அவர். அவரை தன்மையாகவே உணர முடியும் அறிய முடியும். ஒரு வகை உணர்ச்சியில் மட்டுமே அவர் நிலை அறியப்பட வேண்டும் என தெளிவுருவாயாக. 


ஈசன் என நீங்கள் கருதுபவர் காணக்கூடிய ஒரு உருவம் கொண்டவரா? இல்லவே இல்லை. அவர் ஒரு உணர்வு நிலை என அறிதலே மிகப்பெரிய பரிணாம வளர்ச்சி. ஈசனின் நிலை மதங்களுக்கும் மொழிகளுக்கும் அப்பாற்பட்டது. ஈசனின் ஆத்ம அணுவே அண்ட சராசரம். ஈசத்துவ நிலையானது முதன் முதலில் உருவாக்கிய ஓர் ஆத்மா அணுவே ஆதிபராசக்தி ஆகும்.


சிவாயநம.



ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

முதியோரை வணங்குவோம்

 முதியோரை வணங்குவோம்

ஓம் அகத்தீசாய நமஹ.


 60 வயது கடந்த முதியோருக்கான வாழ்வியல் வேண்டுகோள் :-



 1) ஒரு நாளைக்கு அலைபேசி அல்லது தொலைக்காட்சியில் நீங்கள் செலவிடும் நேரத்தை விட, அதிகமான நேரத்தை இறை பக்தியில் செலவிடுங்கள். உதாரணமாக, ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் அலைபேசி அல்லது தொலைக்காட்சியில் செலவிடுகிறீர்கள் எனில் ( மெகா சீரியல்கள், அரசியல் செய்திகள், சினிமா, முக்கிய பிரமுகர்களின் மரண நிகழ்ச்சிகள், youtube, whatsapp மற்றும் உறவினர் நண்பர்களிடம் அலைபேசியில் பேசுவது ),  உங்கள் தினசரி இறை பக்திக்கான நேரத்தை குறைந்தது 5 மணி நேரமாவது  ஒதுக்கி செலவிடுங்கள்.


2) மேற்கண்டவாறு உங்கள் தினசரி அலைபேசி தொலைக்காட்சி நேரத்தை விடவும் அதிகமான நேரத்தை இறை பக்தியில் செலவிட்டால்தான் உங்களுக்கான மரியாதையை உங்கள் குடும்பத்தாரிடமிருந்து பெறுவீர்கள். இல்லையெனில் உங்கள் குடும்பத்தில் முதியோருக்கான / பெற்றோர்கான மரியாதையை எதிர்பார்க்காதீர்கள். அதாவது முதியோருக்கான மதிப்பு மரியாதையை நீங்கள் முழுவதுமாக இழந்து விட்டீர்கள் என்று பொருள்.


3) ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் உங்களால் ஏன் வாரம் ஒரு முறையாவது மௌனம் இருக்க முடியவில்லை ?


4) 60 வயது வரை உங்கள் குடும்பக் கடமைக்காக ஓடிய உங்களால், ஏன் 60 வயதுக்கு மேல் இறைவனை நோக்கி முழுமையாக ஓட முடியவில்லை ?


5) உங்களின் இறைவனை நோக்கிய முழுமையான பயணத்தை தடுப்பது எவை எவை?

 அலைபேசி அல்லது தொலைக்காட்சி உபயோகம்,

 ருசியான உணவுகள், உடை, தோற்றத்தில் கவனம்,

 உறவினர்களின் வீடுகளில் நடக்கும் விஷயத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம்,

 வெளி உலக விஷயங்களில் ஆர்வம்,

 வெளிப்பொருட்களை அதிகம் சார்ந்து வாழ்வது.


6) தினசரி பகல் பொழுதில் 5 மணி நேரம் இறை வழிபாட்டில் எப்படி கவனம் செலுத்துவது?

 மந்திர ஜெபம் :  உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை தினமும்  காலையும் மாலையும் ஜெபம் செய்யலாம். ஆரம்பத்தில் 100 முறை ஜெபம் செய்கிறீர்கள் எனில், அதை அடுத்த நாள் 110 முறை, அதற்கடுத்த நாள் 120 முறை என அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். இதில் ஒரு கட்டத்தில் 1008 முறை மந்திர ஜெபம், அதாவது காலை 1008 முறை மாலை 1008 முறை ஜெபம் செய்தீர்களெனில், ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இதிலேயே செலவாகி விடும். தொடர்ச்சியாக உட்கார முடியவில்லை எனில், சிறிது சிறிது இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். அலைபேசியில் உட்காருவதற்கு மட்டும் உங்களால் முடிகிறது எனில் ஏன் இதை மட்டும் முடியாமல் போகிறது?

பூக்களால் அர்ச்சனை :-  உங்கள் வீட்டில் அல்லது அருகில் இருக்கும் இடத்தில் இயன்றவரை பூக்கள் அல்லது இலைகளை எடுத்துக்கொண்டு அதை வைத்து உங்கள் இஷ்ட தெய்வத்தை அர்ச்சனை செய்யலாம். இவ்வாறு செய்யும் பொழுது அதிக நேரம் செலவழிக்கலாம்.

அருகில் உள்ள கோவில் :-  உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகர் கோயில் அல்லது ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அங்கு அதிக நேரத்தை காலையிலும் மாலையிலும் செலவிடலாம். கோயில் அர்ச்சனை, கோயில் உழவாரப் பணிகள் அதாவது தூய்மை செய்யும் பணிகள் செய்யலாம். தியானம் செய்ய தெரிந்தால் தியானம் செய்யலாம், ஆனால் அங்கு போய் வீட்டு விஷயத்தை சொல்லி நேரத்தை வீணாக்கக்கூடாது. குடும்ப விஷயத்தை சொல்லி புலம்பி  தனது குடும்பத்தாருக்கு அவப்பெயர் கொடுக்கக் கூடாது.

வாசியோகம் :-  தனது உயிரின் இருப்பிடத்தை துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும். இது ஆரம்பத்தில் சிரமம் தான், ஆனால் தினசரி பயிற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். பின்பு தனது உயிரிலேயே கவனத்தை வைத்து, தனது உயிரையே இறைவனாக வணங்குவது. இந்தப் பயிற்சியில் இயன்றவரை அதிக நேரத்தை நீங்கள் செலவழிக்கலாம்.

புத்தக வாசிப்பு:-  ஆன்மீகம் மற்றும் தத்துவம் சார்ந்த புத்தகங்களை தினசரி வாசிப்பதில் அதிக நேரத்தை செலவிடலாம். தேவைப்பட்டால் இதற்காக அலைபேசியை நீங்கள் உபயோகிக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு அரை மணி நேரத்திற்கு மேல் அலைபேசியை உபயோகிக்காதீர்கள்.


இறைவன் தந்த வரங்கள்

 40 வயதில் இருந்து சாலேஸ்வரம் என்ற கண் பாதிப்பு:-  உன் அறிவை சிறிது தூரத்தில் வைத்து பழகு. ஆண்டவனை அருகில் வைத்து பழகு. ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாய் பழக்கத்தை அதிகப்படுத்து.

50 வயதிலிருந்து படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன உளைச்சல் :-  வெளி உணவு ருசியை கைவிடு,  உள் உணவான இறைவனை ருசிக்கப் பழகு. மருந்துக்கு அடிமையாவது தேவைதானா?

60 வயதில் கண்புரை நோய்  ( cataracts ):-  வெளிப்பார்வையின் கவனத்தை குறைத்து விடு.  உன் உள் பார்வையை ( உயிர் / இறைவன் ) கூட்டிவிடு. அறுவை சிகிச்சை தேவைதானா?

65 வயதில் இருந்து உடல் வலி, கை கால் வலி, வேகமாக இயங்க முடியவில்லை, நிதானம் தவறுகிறது.  வெளி இயக்கத்தை நிறுத்து, உள் இயக்கத்தை உயிரை நோக்கி செலுத்து. இறைவனை உணர்ந்து உணர்ந்து வழிபடு. மந்திர ஜெபம், பக்தி வழிபாடு, கோவில் பணி, பக்தி பாடல்கள், தியானம், இறைவன் இறைவன் முக்தி.

70 வயதிலிருந்து இருதய வலி, மரண பயம் :-  மரண தேவதையை விரும்பி வணங்கு. மரண தேவதையை காதலி. இதுவே ஞானத்தை பெருக்கும். உன் மரணத்தை விரும்பிக் கேள் தினமும் தினமும். இதுவே மரணம் இல்லா பெருவாழ்வு.



நாற்பது வயதிலிருந்து அறுபது வயதில் உள்ளவர்களுக்கான தனிப்பதிவு கீழே உள்ளது. இணைப்பை அழுத்தி படித்துக் கொள்ளவும்.

https://fireprem.blogspot.com/2022/10/blog-post.html?m=1


40 வயதில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் உங்கள் வாகனத்தை செலுத்தும் வல்லமை உங்களிடம் இருக்கிறது எனில். 41 வயதில் உங்கள் வேகத்தை 190 ஆக குறைத்துக் கொள்வது நல்லது. எஞ்சிய 10 கிலோமீட்டர் வேகத்தை இறைவனை நோக்கி செலுத்துங்கள். இப்படியே ஒவ்வொரு வயது ஏற ஏற பத்து கிலோமீட்டர் குறைத்துக் கொண்டே வரும் பட்சத்தில், 60 வயதில் நீங்கள் முழுமையாக இறைவனை நோக்கி ஓடும்  அற்புதமான ஞான வாழ்க்கையைப் பெறுவீர்கள். 

அதெல்லாம் முடியாது, 60 வயது வரைக்கும் 200 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்வேன், அதற்கு பிறகு சடன்பிரேக் அடிப்பேன் என்றால், வாகனமும் காலி நீங்களும் காலி. இதைப் புரிந்து கொண்டவர் ஞானி.



இப்படிக்கு,

 அகத்திய பக்தன்.

 சிவாயநம - திருச்சிற்றம்பலம்.


செவ்வாய், 9 ஜனவரி, 2024

பேச்சாளரும், புத்தக வாசிப்பும்

 பேச்சாளரும், புத்தக வாசிப்பும்




இன்றைய உலகில் மிகவும் மலிவாக எங்கும் எளிதில் கிடைப்பது எது? வேறென்ன அறிவுரை தான் !.

 ஒரு பேச்சாளர் மிகவும் சுவாரசியமாகவும் பக்குவமாகவும் பேசுவதற்கு மிகவும் துணையாக இருப்பது  "புத்தக வாசிப்பு" மட்டுமே.


ஒரு மாதத்திற்கு குறைந்தது ஒரு புத்தகமேனும் படிக்கும் பழக்கம் இருப்பது நல்லது.

 பேப்பர் புத்தகம் படிப்பது சிறந்தது, எனினும் இயலாத பட்சத்தில் pdf வடிவிலும் படிக்கலாம்.

 அருகில் உள்ள நூலகத்திற்கு முடிந்தவரை செல்லும் பழக்கம் மிகவும் உதவும்.

 அடியேன் நான் ஒரு வருடத்திற்கு குறைந்தது 15 புத்தகங்களாவது படித்து விடுவேன் எனது விருப்ப தலைப்புகள்  கீழ்க்கண்டவாறு.

மனோதத்துவம், சுய முன்னேற்றம்,

 சித்தர் மருத்துவம், சித்தர் ரசாயனம்,

 ஜோதிடம், மூளை நரம்பியல்,

 யோக ஞானம், கலியுக அழிவும் ஆன்ம விடுதலையும்.


தனது விருப்ப தலைப்புகளுக்கு பொருத்தமான இணையதளங்களை தொடர்ந்து வாசிப்பதும் நன்மை தரும்.  வெறுமனே youtube வீடியோவை மட்டும் பார்ப்பதும் கேட்பதும்  வேண்டிய பக்குவத்தை தராது.


நான் எந்த புத்தகமும் படிக்க மாட்டேன், ஆனால் எனக்கு அறிவு தானாகவே அறிவி போல் கொட்டும்! என நம்புவது ஆபத்தானது, நம்பகத்தன்மையை குறைத்து விடும்.


புத்தகம் வாசிப்பது மற்றவர்களுக்கு போதிப்பதற்காகவா?

 இல்லை.  புத்தகம் வாசிப்பது பேச்சாளர்களை சிறப்பாக்குவதற்கும் பக்குவமாக்குவதற்கும் மட்டுமே.



இப்படிக்கு உங்கள்,

 அகத்திய பக்தன்

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

தெய்வ வாகன ஞானம்

 தெய்வ வாகன ஞானம்



இந்து தெய்வங்களின் வாகனங்களில் இருக்கும் ஞான தத்துவ குறிப்புகளை இங்கு காணலாம்.


1) காளை - நந்தி - யோகியின் உடல்


வால்மீகர் ஞானம் - பாடல்

"சிந்தை தெளிந்து இருப்பவனாம் அவனே சித்தன்

செகமெல்லாம் சிவம் என்றே அறிந்தோன் சித்தன்

நந்தி என்ற வாகனமே தூல தேகம்

நான்முகனே கண் மூக்கு செவி நாக்கு ஆகும்

தந்திமுகன் சிவசக்தி திருமூச்சு ஆகும்

தந்தை தாய் ரவி மதி என்று அறிந்து கொள்ளே"


நம் உடல் - சிவத்தைச் சிமக்கும் நந்தி என்னும் வாகனம்.


more in blog :-

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D


2) சிங்கம் - சிம்மவாஹினி - கேசரி முத்திரை

கேசரி என்றால் சிங்கம் என்று பொருள்படும்.

பராசக்தியை சிம்மவாஹினி என்று அழைத்ததன் பொருள்,  சிம்மம் என்ற கேசரி முத்திரைக்கு மேலே இருப்பவள், கேசரி முத்திரையை வாகனமாகக் கொண்டவள் என்பதே.

நம் குருநாதர், சௌமிய சாகரம்  பாடலில் இவளை "கேசரியாள்" என அழைக்கிறார்.

"பதிவான இடமதுதான் புருவ மத்தி

பரை ஞான கேசரியாள் இருக்கும் வீடு

விதியான வீடறிந்து கெதி என்றெண்ணி

மெஞ்ஞான அமுர்த ரசம் கொண்டாயானால்

மதியான சந்திரகலை ரவியில் சென்று

மகத்தான சோதி பிரகாசங் காணுங்

கெதியான சோதியான பிரகாசங் கண்டால்

கேசரத்தை ஆளுகிற வாசிதானே"


more in blog :-

https://fireprem.blogspot.com/2022/11/blog-post.html?m=1


3) எலி - மூஞ்சூறு - முச்சுடர்

விநாயகர் மூஞ்சூறை ( முச்சுடரை ) வாகனமாகக் கொண்டவர்.   


4) காகம் - நெருப்பு - காகபுசுண்டர்

பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நெருப்பு தத்துவம்.  நெருப்பு மூலக்கூறின் ரூபம். காகபுசுண்டர் கீழ்க்கண்ட தனது பாடலில், தான் பல யுகங்களாய், நெருப்பு ரூபத்தில் ( ஒளி உடலில் ) இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


காகபுசுண்டர் ஞானம் - பாடல் 48

பாரடா இப்படியே யுகங்கள் தோறும்

      பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி

ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ?

      ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன்

வீரடா விமலரிடஞ் செல்லும் போது

      வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்;

காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்!

      காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே



more in blog :- ( மயில், கோழி, ஆந்தை, வல்லூறு ).

https://fireprem.blogspot.com/2022/03/blog-post_27.html?m=1


5) நாய் - ஞமலி - நெருப்பு

பைரவரின் வாகனம்.

more in blog :-

https://fireprem.blogspot.com/2021/07/blog-post.html?m=1


6) மான் (or) கலைமான் - வாயு - மனம்.

வாயுவின் வாகனம் - விசுத்தி

சந்திரனின் வாகனம் - மனம்


காலங்கிநாதர் - கால் என்றால் காற்று என்று பொருள். காற்றை ஆடையாக அணிந்தவர்.


7) குதிரை - பரி - வாசிக்குதிரை.

பிராண சக்தி.

சண்டிகேஸ்வரர் வாகனம் குதிரை.

சண்டிகேஸ்வரர் வாசியோகத்தின் உச்சமான மௌனத்தில் எப்போதும் லயித்திருப்பார்.


8) எருமை - மரணதேவன் எமதர்மனின் வாகனம் - நிதானம்.

 மரணம், முக்தி அடையும் வரை நிதானமாக வர வேண்டும். அவசரப்பட்டு வரக்கூடாது. அவசரம் எனில் மீண்டும் பிறந்து விடுவோம் அல்லவா.


9) மேலும் மற்ற வாகன விலங்குகளை, ஒரு யோகியின் மனோபாவத்தில் யோசிக்கவும்.


கேள்வி எழுப்பிய அருமை நண்பர் "அன்பாலயம் செல்வகணேசுக்கு" அனேக நன்றிகளை தெரிவிக்கிறேன்.


இப்படிக்கு,

அகத்திய பக்தன்.

புதன், 6 செப்டம்பர், 2023

வைணவ ஞானம்

 

வைணவ ஞானம்


 ஹரி ஓம் அகத்தீசாய நமஹ.




ஸ ஏவாயம் மயா தே1த்3ய யோக3: ப்1ரோக்11: பு1ராத1ன: |

4க்தோ1‌ஸி மே ஸகா2 சே1தி1 ரஹஸ்யம் ஹ்யேத1து3த்11மம் ||3||

பொருள் :-

BG 4.3: யோகத்தைப் பற்றிய அதே மிக உயர்ந்த ரகசியமான பண்டைய அறிவை இன்று நான் உனக்கு வெளிப்படுத்துகிறேன், ஏனென்றால் எனது நண்பன் மற்றும் பக்தனான உன்னால் இந்த ஆழ்நிலை ஞானத்தை புரிந்துகொள்ள முடியும்.

*** ஸ்ரீமத் பகவத் கீதை. 4-3 ஞான யோகம்.


  குருநாதர் அருளால் இந்த அரிதான ஞானப்பதிவு இன்று கிருஷ்ண ஜெயந்தி அன்று வெளியிடப்படுகிறது. வைணவ மார்க்கத்தில் யோக ஞானத்தை, எப்படி புரிந்து பயிற்சி செய்வது, என்பதை குருநாதரின் கருணையினால் இப்பதிவில் நாம் பார்க்கலாம்.  அடியேன் நான், நம் குருநாதர் அருளியதை, இயன்றவரை மிகவும் சுருக்கமாகவே எழுதி இருக்கிறேன். எனினும் சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம்.


 வெங்கடாஜலபதி :-

வேங்கடம் + ஜலம் + அதிபதி.

* வேங்கடம் எனும் தமிழ்ச் சொல் வேம் + கடம் = வெப்பமான காடு. இது யோகியின் சிரசைக் குறிக்கும்.

* ஜலம் - சிரசில் யோகத்தால் கிடைக்கும் அமிர்தம்.  இதையே அப்பு என்றும், அகாரம் என்றும்,  கங்கை என்றும் சொல்லுவார்கள்.

அதாவது யோக-அக்கினியால் சிரசில் உருவாகும் அமிர்தத்திற்கு அதிபதியானவரே, வெங்கடாஜலபதி என்று ஞானப் பொருள்படும்.


      எம்பெருமானின் கையில் இருக்கும் சக்கரம்,  யோகி தவம் செய்யும் ஆதார சக்கரத்தைக் குறிக்கிறது. பிரயோகத்தைப் பொருத்து இதன் கலைகள் மாறுபடும் ( பொதுவாக 16 கலைகள் ).  எம்பெருமானின் மற்றொரு கையில் இருக்கும் சங்கு, யோகிக்கு மட்டும் கேட்கும் நாதத்தை குறிக்கிறது. ஆதிசேஷன், ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் இந்த மூவரும், பிராணாயாமத்தின் மூன்று நிலைகளை குறிக்கிறது. இது முறையே ரேசகம், பூரகம் மற்றும் கும்பகம் எனப்படும். யோகியின் வாகனங்கள் இதுவே.


 ஆதிசேஷன் - ரேசகம் - சீறி வெளிவரும் வெப்பக் காற்று.

 ஆஞ்சநேயர் - பூரகம் -  உள்ளே இழுத்து, பெரிதாகும் காற்று.

 கருடன் - கும்பகம் - கும்பித்து நிலைக்கும் அல்லது பறக்கும் காற்று.


 யோக நரசிம்மர் :-

 வைணவத் திருத்தலத்தில் யோகநரசிம்மரின் சிலையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிங்கமுகத்துடன் நரசிம்மர் யோகநிலையில் மௌனமாக அமர்ந்திருப்பார். அவருக்கு பின்னே சக்கரத்தாழ்வார் நின்று இருப்பார். வைணவத்தின் மிகவும் ரகசியமான யோகஞானம் இங்குதான் உள்ளது. பல காலம் மறைக்கப்பட்ட யோக ரகசியம் இன்று எம்பெருமானின் கருணையினால் வெளிப்படுகிறது. 

ஹரி ஓம் அகத்திசாய நமஹ.


 கேசரி என்றால் சிங்கம் என்று பொருள்படும் நரசிம்மரின் சிங்க முகம், கேசரி முத்திரையைக் குறிக்கிறது. அவரின் அமர்ந்த நிலை, யோகம் செய்வதை குறிக்கிறது. யோகியானவர் கேசரி முத்திரையின் மூலம் யோகம் செய்யவேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம். அதாவது யோகியானவர் அண்ணாக்கிற்கு மேலே, புருவமத்திக்கு உள்ளே உள்ள சுழுமுனை நாடியில் கவனம் வைத்து, அதன் மூலம் தனது உயிரையும், அதற்கு மேலே பூரணத்தையும் உணர்வது. கேசரி முத்திரையைப் பற்றிய மேலும் பல அபூர்வ தகவல்களை இப்பக்கத்தின் கடைசியில் உள்ள "சாக்த ஞானம்" ( #1 ) என்ற பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

யோகியானவர் இப்படி கேசரி முத்திரையால் யோகம் செய்வதன் உச்சக்கட்ட நோக்கம் என்ன?  இதற்கான பதிலை தெரிந்து கொள்ள நாம் யோகநரசிம்மருக்கு பின்பக்கம் செல்ல வேண்டும்.



  யோகநரசிம்மருக்கு பின்னே இருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு 16 கைகள் இருக்கும். இது 16 கலை என்ற குறியீடு. இந்தக் குறியீட்டை நம் குருநாதர், "பூரணம்" என்று அழைக்கிறார்.  பரப்பிரம்மம் என்றும் கூறலாம். அகத்தியர் ஞானம் 16 என்ற ஞானப் பாடலில் நமது குருநாதர் இந்த குறியீட்டை தெளிவாக சொல்லியுள்ளார். அந்தப் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 16 - பூரணம் 

   8 - உயிர் 

   4 - மனம்


 இந்தக் குறியீட்டை நாம் வைணவத்தில் கீழ்கண்டவாறு புரிந்து கொள்ளலாம்.

 16 - சக்கரத்தாழ்வார் - யோகியின் இலக்கான பூரணம்.

  4 - யோக நரசிம்மரின் நான்கு கைகள்-  மனம் புத்தி சித்தம் அகங்காரம் இவை நான்கும் ஒடுங்கி கேசரியின் மூலம் யோகம் செய்தல்.

 8 -  பயிற்சிக்கான எட்டெழுத்து மந்திரம் ( ஓம் நமோ நாராயணா ).


கஜேந்திர மோட்சம் :-

 யோகத்தின் முக்கிய கதாபாத்திரம் சுழுமுனை நாடிதான்.  சித்தர்களும் ரிஷிகளும் சுழுமுனை நாடியை விநாயகரோடு அல்லது யானையின் தும்பிக்கையோடு ஒப்பிடுகிறார்கள். இந்தியாவில் இருக்கும் ஆறு சமய வழிபாட்டிலும், விநாயகர் இல்லாமல் எந்த வழிபாடும் நடைபெறுவதில்லை. எனில், சுழுமுனை நாடியின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். கஜேந்திர மோட்சத்தில் கஜேந்திரனாக காட்டப்படும் யோகியானவர் தன் சுழுமுனை நாடியில் மனம் வைத்து, இறைவனோடு சேர வேண்டி யோகம் செய்கிறார். அப்போது ஆணவம் என்ற "முதலை" யோகியின் காலை கவ்வி கீழ்நோக்கி இழுக்கிறது. ( சித்தர்கள் மூச்சுக் காற்றை "கால்" என்று பரிபாஷையாக குறிப்பிடுவார்கள் ).



 ஐயோ இந்த கொடூர அசுரனான "ஆணவ முதலை" என்னை இறைவனோடு சேரவிடாமல் தடுத்து கீழ்நோக்கி இழுக்கிறதே!! என்ற வேதனையோடு யோகி துடித்து துன்பப்படுகிறார்.  சிரமப்பட்டு தன் சுழுமுனை நாடியான தும்பிக்கையை தன் சகஸ்ர தளத்திற்கு மேலே யோகசூட்சுமத்தால் நீட்டி உயர்த்தி,  "ஆதிமூலமே என்னை காப்பாற்று" என எம்பெருமானை வேண்டி அழைக்கிறார். பிராணயாமத்தில் கும்பகத்தைக் குறிக்கும் கருட பகவான் உடனே எம்பெருமானை சுமந்துகொண்டு யோகியைக் காப்பாற்ற வருகிறார். எம்பெருமான் தன் சக்கரத்தை சுழற்றி வீச ஆணவ முதலை அழிகிறது. சுழுமுனை நாடி, ஏன் விநாயகர் அல்லது தும்பிக்கையோடு ஒப்பிடப்படுகிறது? என்பதனை பற்றிய பல சுவராசியமான தகவல்களை கீழே தனிப் பதிவாக "கணாபத்திய ஞானம்" ( #2 ) என்ற தலைப்பில் உள்ளது. படித்து புரிந்து கொள்ளுங்கள்.


 வைணவ யோகஞானப் பயிற்சி :-

 நினைக்கும் போதே துன்பம் நீக்கும், எம்பெருமானின் எட்டு எழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணா" என்பதை மூன்று பகுதியாக பிரிக்க வேண்டும்.

 ஓம் + நமோ + நாராயணா

 இவ்வாறு பிரித்ததை முறையே ரேசகம் பூரகம் மற்றும் கும்பகத்தோடு பொருத்தி, சுழுமுனையில் கவனம் வைத்து பயிற்சி செய்ய வேண்டும்.  இந்தப் பயிற்சியை தனிப் பதிவாக  "அனுபவ ஞானம் 2 - மந்திரம்" ( #3 ) என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். இப்பதிவின் கீழே அதன் இணைப்பு உள்ளது.


கஜகேசரி யோகம் :-

 ஜோதிட சாஸ்திரத்தில் இந்த யோகம் மிகவும் பலமானதாகவும் அதிர்ஷ்டகரமானதாகவும் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பதிவில் எம்பெருமான் அருளால் இதன் யோகஞான நுணுக்கத்தை நாம் பார்க்க போகிறோம். மேலே கேசரியின் நுணுக்கத்தை "யோகநரசிம்மர்" மூலம் பார்த்தோம். அதற்குப் பிறகு கஜேந்திரன் நுணுக்கத்தில் "கஜேந்திர மோட்சம்" மூலம் பார்த்தோம். யோகியானவர் இந்த இரண்டு நுணுக்கங்களையும் இணைத்து இறைவனை வணங்கினால் அதுவே கஜகேசரி யோகம் எனப்படும்.

 இந்த யோகத்தை பயின்று சித்தியான நபரை யாரும் எளிதில் வெல்லவே முடியாது. ராவணேஸ்வரன் இந்த கஜகேசரி யோக நுணுக்கத்தின் மூலம் சிவனை வழிபட்டு, யாரும் வெல்லவே முடியாத ஆற்றலோடு இருந்தான்.   ஸ்ரீராமர், ராவணனை எப்படி வெல்வது என அறியாமல் மிகவும் சோர்ந்து போயிருந்தார். அப்போது நம் குருநாதர், ராவணனை வெல்ல ஒரே வழி "ஆதித்ய யோகஞானம்" மட்டுமே! என ஸ்ரீராமருக்கு அறிவுறுத்தி "ஆதித்ய ஹிருதயத்தை" சொல்லிக் கொடுத்தார்.  ஓம் ஸ்ரீ ராம அகத்தீசாய நமஹ.



ஸ்ரீராமர் நம் குருநாதரின் ஆசிரமத்திலேயே தங்கி சூரியயோக ஞானத்தை (ஆதித்ய ஞானம்) பயின்று, ராவணனை வென்றார். ஸ்ரீராமர் "ஆதித்ய ஞானம்" பயின்ற இந்த குருநாதரின் ஆசிரமத்தில் இப்போது "பஞ்சமுக பிரத்தியங்காரா தேவி" ஆலயம் உள்ளது. உலகில் யாரும் செய்ய தயங்கும் பல அறிய யாகங்களும் தர்மங்களும் இங்கு இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. நம் குருநாதரும், ஸ்ரீ ராமரும் தவம் செய்த தெய்வீகத் தாக்கம், இப்போதும் இந்த ஆலயத்தில் வலிமையோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தோடு இந்த ஆலயத்திற்கு சென்று   அருள் பெற வேண்டும் என அடியேன் வேண்டுகிறேன். நான் இந்த ஆலயத்தில் தியானம் செய்யும்போது, பலமுறை அபூர்வமான நாதங்களைக் கேட்டு உணர்ந்திருக்கிறேன்.
 ஆலயம் உள்ள இடம் : ராமேஸ்வரம் போகும் வழியில் மானாமதுரையில் வேதியநேந்தல் பஞ்சபூதேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது.


 அடியேன் "ஆதித்ய ஞானம்" என்ற அடுத்த பதிவை விரைவில் எழுதலாம் என நினைக்கிறேன். ஆனால் அடியேன் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் குறைந்தது 10 பேர்களாவது கேட்டுக் கொண்ட பின் எழுத ஆரம்பிக்கலாம் என காத்திருக்கிறேன். இனி குருநாதரின் சித்தம். 




கேள்வி :-
தெய்வச்சிலை என்பது யோக நுணுக்கம் தான் எனில், பக்தி வழிபாடு தேவையா?
பதில் : சரணாகதமான பக்தி வழிபாடு கண்டிப்பாகத் தேவை. இதுவே மனதை ஒருமுகமாக்கி, பின் மனமுருகும்போது நம் உயிரை உணரலாம், இறைவனின் தொடர்பைப் பெறலாம். ஆனால் உங்கள் உயிரின் இருப்பிடத்தை நீங்கள் கண்டிப்பாய்த் தெரிந்திருக்கவேண்டும்.


வீடியோ சுருக்கம். 



 மேலே குறிப்பிட்ட இணைப்பு பதிவுகள்.:-

 #1) சாக்த ஞானம்.


 #2) கணாபத்திய ஞானம்.


 #3) அனுபவ ஞானம் 2 -  மந்திரம்.


 #4) சைவ ஞானத்தையும் அறிய விரும்பினால், கீழே உள்ள நான்கு பதிவுகள்.






இப்படிக்கு,
அகத்திய பக்தன்.