வில்லி எங்கே ? வெற்றி அங்கே.
தாயான பராசக்தி பாதம் போற்றி.
ஓம் அகத்தீசாய நமஹ.
பொருளாதாரத்தில் முன்னேற்றம், எடுத்த காரியத்தில் வெற்றி, சௌகரியமான வாகனங்கள் வைத்திருக்கும் யோகம், அரசியல் செல்வாக்கு என நன்றாக சென்று கொண்டு இருந்த வாழ்க்கையில் ஏன் திடீரென மாற்றம் ஏற்படுகிறது ? தொழிலில் லாபம் இல்லை, செல்வாக்கு சரிகிறது, எதிரிகள் சூழ்ச்சி, அரசியல் ஆதரவு இல்லை, எடுத்த காரியத்தில் குழப்பம் தோல்வி, தனக்கு துன்பத்தைக் கொடுக்கும் வில்லன் அல்லது வில்லி எங்கே இருக்கிறார்? அங்கே இருக்கிறாளா, இங்கே இருக்கிறாளா என தேடிக்கொண்டே குழப்பத்தில் இருக்கும் நிலை ஏன் ஏற்பட்டது? தொடர்ந்து ஏறுமுகமாய் இருந்த வாழ்க்கை இறங்குமுகம் ஆனது எப்படி? ஏன்? தீர்வு என்ன?
காலகட்டம் :-
ஒருவரின் ஜாதகத்தில் நீண்ட காலத்திற்கான நல்ல நேரம் அல்லது கெட்ட நேரத்தை கொடுப்பதில் வலிமையானவை நான்கு கிரகங்கள். இவைகளின் ஜாதக திசைக் காலத்திலேயே ஒருவருக்கு நல்ல காலம் அல்லது கெட்ட காலமாக இருக்கும். இந்த திசை காலகட்டம் கீழ்க்கண்டவாறு சராசரியாக 20 ஆண்டுகள் இருக்கும்.
ராகுதிசை 18 வருடங்கள்
குருதிசை 16 வருடங்கள்
சனி திசை 19 வருடங்கள்
சுக்ர திசை 20 வருடங்கள்
ராகுதிசை 18 வருடங்கள்
குருதிசை 16 வருடங்கள்
சனி திசை 19 வருடங்கள்
சுக்ர திசை 20 வருடங்கள்
வினை விதைத்தவன் :-
முந்தைய பிறவியில் ஒரு குறிப்பிட்ட ஜாதக கிரகத்திற்குரிய புண்ணிய காரியங்களை செய்திருந்தால், இந்தப் பிறவியில் அதே கிரகத்தின் திசையில் அவருடைய வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் படிப்படியாக நடந்து இருக்கும். இதன் மூலம் அவரின் முந்தைய பிறவியின் புண்ணிய கணக்கு செலவாகி தீர்க்கப்படும். இதே போல முந்தைய பிறவியின் பாவக் கணக்கும் அந்த கிரகத்திற்குரிய திசை காலத்தில் படிப்படியான பல துன்பங்களை அனுபவித்து தீர்க்கப்படும். இதை சுருக்கமாக "கர்மா" என்பார்கள்.
நல்ல காலத்தின் எகத்தாளம் அல்லது ஆணவம் :-
உதாரணமாக ஒருவரின் சுக்கிர திசைக்கு உரிய நல்ல காலம் 20 ஆண்டுகள் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த காலகட்டத்தின் ஆரம்பத்தில் அவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்திருப்பார் பிறகு படிப்படியாக முன்னேறி நல்ல வசதி வாய்ப்பு, அரசியல் செல்வாக்கு, பதவிகள் என நல்ல முன்னேற்றத்தை கண்டு இருப்பார். இந்த காலகட்டத்தில் அவர் சில தவறுகள் அல்லது ஒழுக்கமற்ற செயலே செய்திருந்தாலும்கூட அவருக்கு எந்த தண்டனையும் இல்லாமல் எளிதில் தப்பித்து விடுவார். ஏனெனில் அப்படித்தான் அவரின் முந்தைய பிறவிக்கான புண்ணிய கணக்கை விரைந்து செலவு செய்ய முடியும். இந்த நல்ல காலத்தில் அவருக்கு எதிராக இருப்பவர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் தோற்றுத்தான் போவார்கள், ஏனெனில் அந்த நல்லவர்களின் கெட்ட காலம் அப்போது நடந்து கொண்டிருக்கும். ஆனால் நல்ல காலம் நடந்து கொண்டிருக்கும் அந்த சுக்கிர திசைக்காரருக்கு, "கர்மா - கெட்ட நேரம் - தலைவிதி" என்றெல்லாம் எதையும் நம்ப மாட்டார். எல்லாம் தன் அறிவாலும் தன் திறமையாலும்தான் தனக்கு வெற்றிகள் கிடைக்கிறது என்று நம்புவார், எகத்தாளமாய் பேசுவார்.
ஆடிய ஆட்டமென்ன :-
20 ஆண்டுகள் நல்ல கிரகத்திற்கான திசைக்காலம் முடிந்த பின்னர், அந்த ஜாதகரின் தற்போதைய பிறவி மற்றும் முந்தைய பிறவியின் பாவக் கணக்கு ஆரம்பித்து விடும். நல்ல காலத்தில் எகத்தாளமாய் பேசியவர் இப்போது படிப்படியான துன்பங்களையும் தோல்விகளையும் சந்திப்பார். சிறிய தவறுக்கும் பல மடங்கு துன்பம் மற்றும் தோல்விகளை அனுபவிக்க வேண்டி வரும் இந்த கெட்ட காலகட்டத்தில். தனது துன்பத்திற்கும் தோல்விக்கும் தனது எதிரிகளே காரணம் என்றும், தனது எதிரிகளை ஜெயித்து விட்டால் தனது துன்பம் மறைந்து விடும் என்றும் நம்புவார். ஆனால் தனக்கான "வில்லி" வெளியே இல்லை! அவள் அவருக்குள்ளே தான் இருக்கிறாள்! என்ற சத்திய நிலை பாவம் அவருக்குத் தெரியாது. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
வில்லி யார் ? அவளின் துல்லிய கணக்கு எப்படி ?
நமது இயங்கு சக்திக்கு ஆதாரமாய் இருக்கும் நமது உயிரே பராசக்தி. ஆழ்மனம் இவளின் ஒருங்கிணைந்த பகுதியே. ஒருவரின் பாவ புண்ணியங்களை வில்லியான இவளே ஆழ்மனத்தில் பதிந்து வைக்கிறாள். அதற்குரிய கிரகத் திசைக்கான காலகட்டத்தில் வெளிப்படுத்துபவளும் இவளே. நிறைவேறாத கணக்குகளையும் ஆசைகளையும் எடுத்துக்கொண்டு மற்றொரு பிறவியில் வேறு ஒரு உடலுக்குள் செல்பவளும் இவளே. பாவக் கணக்கின் காரணமாய் துன்பங்களை அனுபவிக்க வேண்டியவருக்கு, அதற்குரிய எதிரிகளை அனுப்பி வைப்பவள் வேறு யாரும் அல்ல உள்ளே உயிராய் இருக்கும் நமது வில்லி தான். ஆனால் "தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாய்" நமது ஹீரோவான ஜாதகர் எதிரியை வெளியிலேயே தேடிக் கொண்டிருப்பார், அவரை எப்படி வீழ்த்துவது என்று வீணாய் தன் நேரத்தை விரயம் செய்து மேலும் மேலும் துன்பத்தில் சிக்கிக் கொள்வார். நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் தன் மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்த கதையாய் தான் இவர் கதையும் இருக்கும்.
தீர்வு :-
கதையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இப்போது கர்மாவின் கெட்ட நேரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவருக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு என்ன? கர்மா வீரியமாய் செயல்படுவதற்கான முக்கியமான காரணம் அவரது எதிர்பார்ப்பு, சுயநலத்திற்குரிய அன்பு மற்றும் உயிரின் பிறவி நோக்கத்தைப் புரிந்து கொள்ளாதது மட்டுமே.
எனவே எப்படியாவது முயற்சி செய்து கீழே உள்ள மூன்று குணங்களை இந்த பாவக் கணக்கிற்கான காலகட்டத்தில் பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.
இயன்றவரை,
1) எதிர்பார்ப்பற்ற செயல்.
2) நிபந்தனையற்ற அன்பு.
3) பிறவி நோக்கத்தை புரிதல்.
கேள்வி பதில் :-
விதியை மதியால் வெல்லலாமா ?
ஆம், ஆனால் இதன் சரியான பொருளை புரிந்து கொள்ள வேண்டும். மதி என்றால் சந்திரன் என்று பொருள். ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன், மனதை குறிக்கிறது. எனில், மதி என்றால் மனம் என்று பொருள். மனதை உயிரான பராசக்தியோடு இணைத்து, தனது பிறவி நோக்கமான மோட்சத்தை விரும்பிய படியே, தன் அன்றாட கடமைகளை செய்து வாழ்பவரே, விதியை மதியால் வெல்வார்கள்.
ஏன் கெட்டவர்கள் நன்றாக இருக்கிறார்கள், நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள் ?
முற்பிறவியில் நல்லவனாய் இருந்து சேர்த்த புண்ணிய கணக்கை இந்தப் பிறவியில் கெட்டவராக இருந்து வேகமாய் செலவழித்து விடலாம். முந்தைய பிறவியின் பாவக் கணக்கை இந்த பிறவியில் நல்லவராக இருந்து வேகமாக கழிக்க முடியும். இந்த நுணுக்கத்தை நோக்கியே நம் மனதை செலுத்திக் கொண்டிருப்பவள் நம் தாயான பராசக்தி, அதாவது நம் சிரசிற்குள் இருக்கும் உயிரான வில்லியே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனக்கு கிடைத்த சொத்துக்களும் இன்பங்களும் எனது திறமையால் தான் வந்தது. எனக்கு மட்டும் துன்பம் வருவதற்கான காரணம் என்ன? விதி தான் என்பதை எப்படி நம்புவது?
உங்களோடு சிறுவயதில் படித்த பழகிய பலரும் உங்களை விட நல்ல திறமைசாலிகள், உழைப்பாளிகள், அறிவாளிகள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத சொத்துக்களும் இன்பங்களும் உங்களுக்கு மட்டும் ஏன் கிடைக்க வேண்டும்? இதற்கான பதிலிலேயே உங்கள் கேள்விக்கான பதிலும் உள்ளது.
எனக்கு எதிரானவர்களின் திருஷ்டி மற்றும் கெட்ட எண்ணங்கள் என்னை பாதிக்குமா ?
நம்மைச் சுற்றிலும் எப்போதும் கோடிக்கணக்கான நோய்க்கிருமிகள் சுற்றிக் கண்டே தான் இருக்கிறது. ஒருவருக்கு எப்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதோ அப்போதுதான் அந்த நோய்க்கிருமி அவரை தாக்க ஆரம்பிக்கிறது, நோயும் வருகிறது. இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் என்ன என்ன? நமது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக் கொள்வது, அல்லது நோய்க்கிருமி உள்ளே வராதபடிக்கு ஒரு அபூர்வமான கவசத்தை வாங்கி எப்போதும் அதை அணிந்து கொண்டே இருப்பது, அல்லது நோய்க் கிருமிகளை நீக்கிக் கொண்டே இருப்பது. இதில் எது புத்திசாலித்தனமானது? நமது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக் கொள்வதே புத்திசாலித்தனமானது.
திருஷ்டியும் கெட்ட எண்ணங்களும் நம்மை எப்போதும் சூழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எப்போது நமது கர்மாவின் கெட்ட நேரம் நடந்து கொண்டிருக்கிறதோ, அப்போதுதான் அது நம்மை தாக்க ஆரம்பிக்கிறது. எனில் மேற்குறிப்பிட்ட மூன்று நுணுக்கங்களை பின்பற்றினால் நமது ஆன்மா ஆற்றல் அதிகரிக்கும், அதுவே கெட்ட எண்ணங்கள் திருஷ்டிக்கு எதிராக நம்மை காக்கும். உங்களுக்கான வில்லி எங்கே இருக்கிறாள் என்று மீண்டும் நீங்களே யோசியுங்கள். உங்களுக்கு உள்ளேயா அல்லது வெளியேயா ?
மேலும் விவரமாய் புரிந்து கொள்வதற்கான இது தொடர்புடைய மற்ற பதிவுகள் :-
கர்ம வினை நீக்குவதற்கான தினசரி வேண்டுதல் கீழ்கண்ட பதிவில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை அன்றாடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
கர்ம வினையின் துன்பங்களை வேகமாய் நீக்குவதற்கான தீப வழிபாடு கீழே உள்ள பதிவில் உள்ளது. இதை ஒரு முறையேனும் வழிபாடு செய்ய வேண்டும்.
கர்மாவின் ராணி ஆன நமது வில்லின் துல்லியமான இருப்பிடத்தைச் சொல்லும் பதிவு கீழே உள்ளது.
இப்படிக்கு
அகத்திய பக்தன்.