சனி, 5 நவம்பர், 2022

சாக்த ஞானம் - உயிரின் இரகசியம்

 சாக்த ஞானம் - உயிரின் இரகசியம்


 பராசக்தியை பற்றிய சில முக்கிய யோக குறிப்புகளை குருநாதர் அருளால் இந்த பதிவில் பார்க்கலாம். நமது ரிஷிகளும் சித்தர்களும் வடிவமைத்த யோக நுணுக்கங்களைப் பற்றியது. சிறிது நிதானமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டிய பதிவு.

மானாமதுரை பஞ்சமுக பிரத்தியங்கரா தேவி கோவிலுக்கு அடியேன் குடும்பத்துடன் அடிக்கடி தரிசனம் செய்வது வழக்கம். வருடத்திற்கு இரண்டு முறையேனும் செல்வது உண்டு. கருவறைக்கு அருகில் நின்று தீபாராதனையோடு அம்பாளை தரிசனம் செய்துவிட்டு கண்களை மூடி உள்ளே பார்க்கும் பொழுது, உயிரில் ஒரு அற்புதத் துடிப்பை நம்மால் உணர முடியும். தாயான தேவி தன் உக்கிர ரூபங்களான காளி மற்றும் பிரத்தியங்கரா தேவி என வெளிப்படுத்தும்போது, ஏன் நாக்கை நீட்ட வேண்டும்? என்ற கேள்வி எனக்குள் ஒரு நாள் எழுந்தது. நமது முன்னோர்களான ரிஷி முனிவர்கள் ஏன் இப்படி ஒரு உக்கரமான ரூபத்தை நாக்கை நீட்டியவாறு வடிவமைக்க வேண்டும்?  இதற்கான யோகஞான விளக்கம் என்ன? என்ற கேள்வி எனக்குள் பெரிதாய் எழுந்தது. வழக்கம்போல் குருநாதரிடம் கேள்விகளை சமர்ப்பித்தேன்.




 சில காலம் கழித்து, ஒரு நாள் மாலை ஆழ்ந்த தியானத்திற்கு பிறகு குருநாதர் அருளால் விளக்கம் கிடைத்தது. பாண்டிச்சேரி ஜெயந்தி அன்னை மூலம் வெளிவந்த நூல்கள் எனது புரிதலுக்கு மிகவும் உதவியது. யோக விளக்கத்தை குறிப்புகளாக கீழே எழுதியுள்ளேன். குருநாதர் அருளால் புரியும். அடுத்த முறை நீங்கள் பிரத்தியங்கரா தேவியை வணங்கும் பொழுது, குருநாதருக்கு நன்றி சொல்லிவிட்டு, இந்த விளக்கக் குறிப்புகளை நினைவு கூறுங்கள். உங்கள் உயிரின் அருளாற்றல் பிரவாகமாய் விரிவதை உணரலாம். 


1) நமது புருவ மத்திக்கு உள்ளே அண்ணாக்கிற்கு மேலே நமது உயிர் இருக்கிறது. இந்த "உயிரே" நமது இயங்கு சக்திக்கு ஆதாரமாக உள்ளது.


2) சக்தியான உயிரை, நமது சித்தர்கள் பெண்பாலாக, அதாவது தாயாக வருணிக்கிறார்கள். இதற்கான விரிவான விளக்கம் "கலியுக காவியம் - ஆன்மாவின் சுயசரிதை" என்ற நூலில் உள்ளது.


3) நம் தாயான உயிரை நமது சித்தர்கள் வாலைதாய், சக்தி, ஒற்றைஅணு, மனோன்மணிதாய், பாலா, நாதம், உகாரம், உப்பு என பல பெயர்களில் அழைக்கிறார்கள் வணங்குகிறார்கள்.


4) யோகியானவர் தமது நாவை இயன்றவரை அண்ணாக்கை நோக்கி மேல் நோக்கி ஒட்டி வைத்து, தம் உயிரான தாயை தியானிப்பார்கள். இந்த யோக நுணுக்கத்தை "கேசரி முத்திரை" என்பார்கள். இந்த யோக முறையை "கேசரி யோகம்" என்றும் அழைப்பார்கள். இந்த யோக விளக்கத்தை சுட்டிக்காட்டவே பராசக்தி தன் நாவை நீட்டி நமக்கு கேசரி யோகத்தை விளக்குகிறாள். 



நம் குருநாதர், கீழ்க்கண்ட பாடலில் இவளை "கேசரியாள்" என அழைக்கிறார்.


https://saumyasagaram.blogspot.com/2016/04/377-at-pinnacle.html?m=1


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எந்த மின்னணு சாதனமும் இல்லாமலேயே, ஒரு உயரிய யோக நுணுக்கத்தை இன்று வரை பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதற்காகவே நமது முனிவர்கள் சித்தர்கள் இப்படியான தேவி ரூபங்களை வெளிப்படுத்தினார்கள்.




5) பராசக்தி வெளிப்புறமாக நீட்டிய நாவை அதே அளவில், உட்புறமாக மேல் நோக்கி மனதால் பார்த்தால், நமது உயிரின் இருப்பிடத்தையே காட்டும். கீழே உள்ள படத்தில் அடியேன் சுட்டிக்காட்டி உள்ளேன். கீழ்நோக்கிய முக்கோணத்தை மேல் நோக்கிப் பாருங்கள், நன்கு புரியும்.



6)  கேசரி என்றால் "சிங்கம்" என்று பொருள்படும். பிரத்தியங்கரா தேவி சிங்க முகத்தை காட்டுவதன் மூலமும், நாவை நன்றாக நீட்டி காட்டுவதன் மூலமும் தாயான சக்தி, கேசரி முத்திரையின் மூலம் தன்னை ( உயிரை ) யோக மார்க்கமாக வழிபடும் முறையை தெளிவுபடுத்துகிறாள்.


7)  நமது உயிரான பராசக்தி அல்லது ஒற்றை அணு பல ஆயுதங்களை ஏந்திய உக்கிர தோற்றத்துடன் காளியாக காட்டுவது ஏனெனில் நமது சிரசில் இருக்கும் அசுரர்களான மாய கர்ம ஆணவத்தை அழிப்பதற்காகவே.  இத்தனை போராட்டங்களும் இரவு நேரத்தில் நமது மூளை நரம்பணுக்களில் நடக்கிறது. மாய கர்மா ஆணவத்தால் நரம்பணுக்களில் சிறைப்பட்ட ஆன்ம துகள்களை மீட்பதற்காகவே இந்த போராட்டத்தை தாயான பராசக்தி செய்கிறாள். இவள் தான் பயணிக்கும் மூளை பகுதியின் தன்மைக்கு ஏற்றவாறு தனது உருவத்தையும் ஆற்றலையும் மாற்றிக் கொள்கிறாள். இதனாலேயே பல அவதாரங்களாக சக்தி தேவி வெளிப்படுகிறாள்.  இதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை கீழ்கண்ட நூலில், ஆதிசக்தி அணு என்ற அத்தியாயத்தில் நீங்கள் படிக்கலாம்.



8) சென்ற மாதம் காளி மாதாவைப் பற்றிய ஒரு வட இந்திய பக்தி வீடியோவை youtubeல் பார்க்க நேரிட்டது.  இந்த வீடியோ காட்சிகள் மிக அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.  தேவியானவள் தான் செல்லும் இடத்திற்கு ஏற்றபடி தனது நிறத்தை நீலம் மற்றும் கருமை நிறமாக மாற்றி காளியாக உருவெடுக்கிறாள், பல ஆயுதங்களை எடுக்கிறாள்,  அசுரர்களோடு போராட்டம்,  சிறைப்பட்ட சிறு குழந்தையான ஆன்மத்துகளை மீட்டு தன்னோடு அணைத்து சேர்த்துக் கொள்கிறாள். 



கடைசியாக தனது உக்கிரமான வெப்ப ஆற்றலை தணித்துக் கொள்வதற்காக, உயரிய "குளிர்ந்த காந்த ஆற்றல்" வேண்டும் என்ற தேவை உருவாகிறது. இதற்காக ஆன்மாவான சிவனை தனது காலால் மிதிப்பது ( இடகலை என்ற காற்று நுணுக்கத்தால். கால் என்றால் காற்று என்று பொருள் ) போன்ற ஒரு நரம்பிழை நுணுக்கத்தின் மூலம் குளிர்ந்த காந்த ஆற்றலை வீரியமாக ஈர்த்துப் பெற்று தன்னை குளிர்வித்துக் கொள்கிறாள். இந்த புரிதலோடு கீழ்கண்ட யூடூயூப் வீடியோவை பாருங்கள். 

ஓம் அகத்தீசாய நமஹ.



 இங்கே ரத்தபீஜன் என்பது  அனைத்து வகையான புற்றுநோய்களைக் குறிக்கிறது. முக்கியமாக மூளை புற்றுநோய் மற்றும் ரத்தப் புற்றுநோய்.
பராசக்தியை சிம்மவாஹினி என்று அழைத்ததன் பொருள்,  சிம்மம் என்ற கேசரி முத்திரைக்கு மேலே இருப்பவள், கேசரி முத்திரையை வாகனமாகக் கொண்டவள் என்பதே.


நமது குருநாதர், காயத்திரி தேவியை "காயாஸ்திரி" என்று தனது நூலான "சௌமிய சாகரத்தில்" குறிப்பிட்டுள்ளார்.

காயம் + ஸ்திரி = காயாஸ்திரி.

அதாவது, காயம் என்ற நம் உடலில் இருக்கும் பெண் தெய்வமான "வாலை சக்தி".  கீழே நம் குருநாதரின் பாடலைப் பாருங்கள். இதற்கு மேல் யாரால் சொல்லமுடியும்? நாம் பக்தியோடு இறைவனை வணங்கும்போது, அதன் தத்துவம் மற்றும் இறைவனின் இருப்பிடத்தையும் தெரிந்து உள்ளுணர்ந்து வணங்கினால், பலன் மிக அதிகம்.


சௌமிய சாகரம் - பாடல் 460.

காணுகின்ற சுழிதனிலே சுழலாமல்தான, 
கருவான காயாஸ்திரி விஞ்சை கேளு,
ஊணுகின்ற விஞ்சையடா மவுன ஞானம்,
உண்மையென்ற ஞானமடா மந்திரவாலை,
தோணுகின்ற வாலையடா மந்திர ரூபி,
சுயஞ் சோதியான ஜெக ஜோதிதன்னை,
பூணுகின்ற சித்தமதாய் தானே நின்று,
பூரணமாய்க் கேசரியைப் பூசைபண்ணே.


பாடல் 459.

பாரப்பா பரஞான மூலமான
பத்தியுள்ள காயாஸ்திரி விஞ்சை தன்னை
நேரப்பா அறியாமல் மதங்கள் பூண்டு
நிசமில்லா ஆதிமறை யோர்கள் கூடி
வீரப்பா கொண்டதொரு அட்சரத்தையோதி
வீணிற் பலநாள் அலைந்து விசையுங் கெட்டு
தூலப்பா அடிப்படையும் தகர்ந்து நல்ல
சுழிவான சுழிதனிலே சுழன்றார் காணே.


9) பெண்ணரசி - காகபுஜண்டர்

நமது பழமையான கோயில்களில் பெண் சிலைகளின் வடிவங்கள் மிகவும் எடுப்பான உடல் அமைப்போடு செதுக்கப்பட்டு இருப்பதை பார்க்கும் பொழுது, சித்தர்கள் இதில் ஏதோ சூட்சமம் வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. நம் குருநாதர் ஆழ்மனத்திலிருந்து ஏதோ ஒரு முக்கியமான சூட்சுமத்தைக் க்ற்றுக்கொடுக்க வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். குருநாதர் நடத்தும் பாடம், 2019 ஆம் ஆண்டு காகபுஜண்டர் ஞானம் 80 என்ற நூலைப் படிக்கும் பொழுது தான் புரிந்தது. 44 ஆவது பாடலை கீழே காணலாம்


"இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
      என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா!
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்;
      ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது
பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம்
      புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம்

மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே
      வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே.  பாடல் 44."


youtube song

https://www.youtube.com/watch?v=oEHIfXtjHWw


இப்போது மேற்கண்ட பாடலில் சில சொற்களை மட்டும் நன்றாகக் கவனியுங்கள். 
கம்பம், 
பெண்ணரசி,
 முன் பார்த்தால் புருட ரூபம்,
 பின் பார்த்தால் பெண் போல் ரூபம்.
 இந்த வரிகளை பொருளோடு பார்க்கும் பொழுது காகபுஜண்டரின் நுணுக்கமான யோகம் மற்றும் மருத்துவ அறிவியலை வியந்து பார்க்கிறேன்.
 கம்பம் என்பது உள்மூளை தண்டைக் குறிக்கிறது ( brain stem ).
 பெண்ணரசி என்பது  பீனியல் சுரப்பிக்கு மிக அருகே இருக்கும் உயிர் சக்தி ஆகும். பீனியல் சுரப்பியை seat of the soul என்று மருத்துவ அறிவியலில் குறிப்பிடுவார்கள்.
இப்போது கீழ்கண்ட உள்மூளைத்  தண்டின் பின்பக்க அமைப்பைப் பாருங்கள். பெண்ணின் உடலைப் போலவே இருக்கிறதா?




இப்போது நமது கோவிலில் உள்ள பெண் தெய்வங்களின் உடல் அமைப்பைக் கவனித்துப் பாருங்கள்.


 உள்மூளை தண்டின் பின்பக்கம்  பீனியல் சுரப்பியுடன். அசல் படம்.



வெப்ப ஆற்றலான உயிர்ப் பெண்ணிடம் இருந்து எப்படி காந்த ஆற்றலான அகார வெள்ளம், அல்லது அமிர்தம் கிடைக்கும் என்பதை அடுத்த பதிவில் விளக்குகிறேன். அதுவரை இந்த அமிர்தப் பெண்ணான மோகினியுடன் திருமாலின் யோகமார்க்கத் தொடர்பு என்ன என்பதை  யோசித்துக் கண்டுபிடிங்களேன் பார்க்கலாம்.


நமது ரிஷி முனிகள் வடிவமைத்த தத்ரூபமான சிலைகளின் பரிபாசையைப் புரிந்து கொள்ள முடியாமல், ஆபாசமாய் பார்த்துவிட்டோமே !!

புருடன் என்றால் ஆண் அல்லது ஆண் குரங்கைக் குறிக்கும். உள்மூளை தண்டின் "முன் பார்த்தால் புருட ரூபம்" என்று காகபுஜண்டர் பாடி இருப்பார். இப்போது கீழ்கண்ட பிட்யூட்டரி  சுரப்பியுடன் கூடிய மூளையின் உருவத்தைப் பாருங்கள். மூக்கு நீண்ட, வயிறு பெருத்த ஆண் தோற்றத்தைப் பார்க்கிறீர்களா?








மூக்கு நீண்ட ஒரு வகைக் குரங்கு.


இந்தக் குரங்குகளின் வயிறு இயல்பாகவே பெருத்த தோற்றம் உடையது.


இவ்வாறு  உள்முகமாகக் உள்மூளை உறுப்புகளை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தி (visuvalise ), நமது உள்மூளையை நோக்கி தவம் செய்யும் பொழுது, சில ஆண்டுகளில் எளிதாக வாலை எனும் உயிரை உணர முடியும். 


10) வாசியோகம் - பெண்ணோடு போகம் :-

நமது மனதை ( வெளிமனம் ) வகாரம் அல்லது வாயு மூலக்கூறு என்று சித்தர்கள் கூறுவார்கள். இதற்கான குறியீடு "வா".

 நமது உயிர், வெப்பத்தன்மை கொண்டது. இயங்கு சக்திக்கு ஆதாரமானது.  ஆழ்மனத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டது. சித்தர்கள் நமது உயிரை  பல பெயர்களில் அழைப்பார்கள். கன்னிப் பெண், உகாரம், வாலை, சிகாரம், வன்னி என்ற பல பெயர்கள் உண்டு. இதற்கான குறியீடு "சி".

     இங்கே "வா" என்ற வெளிமனத்தை "சி" என்ற உயிர் அல்லது ஆழ்மனத்தோடு இணைப்பதையே, "வாசி"யோகம் என்று அழைக்கிறார்கள்.

தன் மனதை, தன் உயிரை நோக்கி செலுத்தும் பொழுது உடனே பலவிதமான எண்ணங்கள் குறுக்கீடு செய்து தடை செய்து விடும். அது அவ்வளவு சுலபம் அல்ல.  நீண்ட காலம் தொடர்ந்து பயிற்சிகள் செய்ய வேண்டும். கர்மாவை நீக்கிக் கொள்ள வேண்டும். மாயா மற்றும் ஆணவத்தில் நல்ல தெளிவு இருக்க வேண்டும்.

 போகநாதர் (பழனி) என்ற சித்தர் இந்த வாசியோகத்தின் மூலம், கன்னிப் பெண்ணான உயிரை தன் மனதோடு இணைத்து அல்லது புணர்ந்து அல்லது போகத்திலேயே இருந்ததால் அவருக்கு "போகர்" என்ற பெயர் உண்டாச்சு. இப்போது உங்களுக்கு புரிகிறதா? ஒருவர் தன் தமிழறிவை மட்டும் வைத்துக்கொண்டு, இந்த பாடல்களைப் புரிய முயற்சி செய்யும் பொழுது, என்ன ஆபத்து வரும் என்று ?

   அடியேன் எனக்கு இந்த சிறிய சூட்சுமம் புரிந்து கொள்வதற்கு ஆறு வருடங்களுக்கு மேல் ஆனது. பல ஆயிரக்கணக்கான  சித்தர் பாடல்களைப் படித்தும், யோகப் பயிற்சி செய்தும், ஓரளவிற்கு தான் புரிந்தது.  பாண்டிச்சேரி ஞானாலயத்தின் முக்கியமான நூலான "கலியுக காவியம் ஆன்மாவின் சுயசரிதை" என்ற நூலை  படித்தபின் குருநாதர் அருளால் நன்றாகப் புரிய ஆரம்பித்தது.

அதிகாரம் உள்ளோர் தவறாகப் புரிந்து கொண்டால் வரும் விளைவு :-

 சித்தர் பாடல்களைப் புரிந்து கொள்வதற்கு எவ்வளவு பெரிய தமிழ் அறிஞரானாலும் அல்லது தமிழ் பேராசிரியரானாலும் இயலாது.  சித்தர்கள் தன் உயிரோடு தன் மனதை இணைப்பதை, கன்னிப் பெண்ணோடு புணர்ந்தேன், அதனால் ஆயுள் நீடிக்கும், ஆரோக்கியம் நீடிக்கும் என்றெல்லாம் பாடல்களில் சொல்லி இருப்பார்கள். இதை சிலர் தவறாக புரிந்து கொண்டு கன்னிப் பெண்களை ஏமாற்றியோ மிரட்டியோ புணர்ச்சி செய்வது மூடநம்பிக்கையானது  சாபக்கேடானது. இதில் சிலர் எதேச்சையாகவே தன் விதிப்படிக்கு 90 வயதிற்கு மேல் நீண்ட காலம் வாழ்ந்து விடும்பொழுது, இந்த சாபக்கேடான செயலினால் தான் தன் ஆயுள் நீடித்ததாக அவரது வாரிசுகளும் நம்பி விடுவார்கள். இதனால் கன்னிப் பெண்களை மிரட்டி கற்பழிப்பதும், பிறகு அதை அதிகாரத்தால் மறைத்து விடுவதும் இந்த  கலியுக எல்லைக்காலத்தின் கொடுமையான செயல்.
11)  இறுதியாக கேசரி முத்திரையை பற்றிய சித்தர்களின் சில பாடல்களை பார்க்கலாம்.
திருமூலர்.
நாவில் நுனியை நடுவே விசிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லைச் சதகோடி யூனே
-திருமந்திரம் 803.


காகபுசுண்டர் ஞானம்
பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
    பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
    நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
    மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
    கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
ஒலி வடிவில் கேட்க,


சட்டைமுனி ஞானம் பின் - பாடல் 44.
சோமப்பால் சுழித்தோடுங் கேசரியைக் கண்டால்
சொல்லாத முத்திரையைச் சொல்லு றேனே.
சட்டைமுனி ஞானம் முன் - பாடல் 47.
தேனென்ற மொழியுடைய னமனாந் தத்தைத்,
தேவி பதம் என்ற கேசரி தான் காணே.


குறிப்பு: தேவி பதம் என்பது கேசரிதான் என்பதை தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார். இந்த வரியின் கடைசியில், இதைக் காண் ( கண்டுகொள் )  என்றும் சொல்லிவிட்டார். இனியும் சந்தேகமா?
 நமது குருநாதர் - பாடல் 51 அகத்தியர் ஞான சைதன்யம்.
ஆழ்ந்துப் பார் சுழினைதனை அகாரத்தாலே
 அருமையுடன் குறித்து விட்டேன் நடுமூலத்தை
 வாழ்ந்திருக்க ஓரிதழைச் சுழியில் நாட்டி 
 வைத்தாக்கால் மெய்ச் சோதிமயஞ் சொன்னேன் முற்றே.
 குறிப்பு: ஓரிதழ் என்றால் நாக்கு என்று இப்பாடலில் பொருள்படும்.


 பராசக்தி பார்வையில் :-
நோய்க்கும் பார்! பேய்க்கும் பார்! என்று ஒரு மருத்துவ பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். நோய்க்கு மட்டும் மருந்து கொடுத்து பலன் இல்லை, பேய்க்கும் நாம் மருந்து கொடுக்க வேண்டும். இங்கே பேய் என்பதை நமது பொல்லாத கர்ம வினை என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்குத்தான் நமது உயிரான பராசக்தி பல ரூபங்களை எடுக்கிறாள், அதாவது நீலி சூலி காளி சண்டி சாமுண்டி எனவும் பல வடிவம் எடுக்கிறாள்.

 குருநாதர் அருளால் நான் புரிந்து கொண்ட ஒரு ரகசிய சூத்திரம் இருக்கிறது. ஆனால் அதை நான் எனது உற்றார் உறவினரிடம் சொல்லும் போது அவர்கள் என்னை மிகவும் கோபித்துக் கொள்கிறார்கள். நான் என்ன நினைத்துக் கொள்வேன் எனில், சரிதான்! உண்மை கசக்கத்தானே செய்யும்!


ஞானாலைய நூல்களை 2018-19 ல் படித்த பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் எனது சிந்தனையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. குருநாதர் அருளால் எனது புரிதலையும் சில கேள்விகளையும் இங்கு வைக்கிறேன். உங்கள் கருத்தை நீங்களும் சொல்லுங்கள்


அடியேன் புரிதல் :-
 நமது முந்தைய பிறவிகளின் பதிவுகள் அல்லது கர்ம வினைகள் ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. 
ஆழ்மனம் என்பது சிறைப்பட்ட ஆன்ம துகள்களின் எண்ணத்தொகுப்பு. 
நமது ஒட்டுமொத்த கர்ம வினைகளின் ஒரு Plan Drawing அல்லது Overview என்பது நமது ஜாதகத்தில் இருக்கும்.
இவை அனைத்திற்கும் ராணியாக இருப்பவள், நமது உயிர் அல்லது வாலை அல்லது பராசக்தி அல்லது ஒற்றை அணு.

 இவள் நினைத்தால் மட்டுமே ஒரு கர்மவினை அல்லது சிறைப்பட்ட ஆன்மத்துகள், சமாதானமாகி விடுதலை அடைய முடியும். அதாவது முந்தைய பிறவியின் கர்மத்தால் வந்த நோய் அந்த சமயத்தில் தான் அந்த காலகட்டத்தில் தான் குணமாகும் என எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஜாதகர் தனது முந்தைய பிறவியின் கர்மநோயை இந்த குறிப்பிட்ட திசை மற்றும் புத்தி காலகட்டத்தில் அதை அனுபவித்து தீர்க்க வேண்டும் என்பது விதி ஆகிறது.


மனதில் தோன்றும் கேள்விகள் :-  

(1)  தெய்வச்சிலை என்பது யோக நுணுக்கம் தான் எனில், பக்தி வழிபாடு தேவையா?
பக்தி வழிபாடு கண்டிப்பாகத் தேவை. இதுவே மனது ஒருமுகமாக்கி பின் மனமுருகும்போது நம் உயிரை உணரலாம், இறைவனின் தொடர்பைப் பெறலாம். ஆனால் உங்கள் உயிரின் இருப்பிடத்தை நீங்கள் கண்டிப்பாய்த் தெரிந்திருக்கவேண்டும்.


(2)  ஒரு ஜாதகர் தனது முந்தைய பிறவியில் ஜமீன்தாராக இருக்கும்பொழுது பத்தாண்டு காலம் கடுமையான வேதனைகளை பலருக்கும் கொடுத்திருக்கிறார். இந்தப் பிறவியில் அவரது சனி திசையில் அதே பத்தாண்டு காலம் நோய்களால் துன்பப்படுகிறார், வலி வேதனைகளை அனுபவிக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம். இங்கே இவரது கர்ம நோய்க்கு ஒரு வைத்தியர் கொடுக்கும்  மருந்து உடனே வேலை செய்ய வேண்டும் என்று என்ன கட்டாயம் இருக்கிறது? எப்படி வேலை செய்யும்? என்னதான் அற்புதமான அதிசயமான மருந்தாக இருந்தாலும், அந்த வைத்தியம், கர்ம வினையை அவர் முற்பிறவியில் கொடுத்த வேதனையை தீர்த்து விடுமா?

நம் உயிரான பராசக்தி அந்த வேதனையை எப்படி மன்னித்து குணப்படுத்துவாள்? தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதையாக வல்லவா இது இருக்கிறது?
ஆங்கில வைத்தியம் கர்ம வினைகளை பைபாஸ் செய்து ஷார்ட்கட்டில் போய் நோயை குணப்படுத்துகிறதா? எனில் அந்த நிறைவேற வேண்டிய கர்மவினைகள் ஒன்று சேர்ந்து என்னவாக மாறுகிறது?
மேலும் பல ஞான விளக்கத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.


இப்படிக்கு,
அகத்திய பக்தன்.


   ----------------


இது தொடர்பான அடியேனின் பிற பதிவுகள் :-

1#  கர்மாவைப் பற்றிய அடியனின் ஒரு அனுபவப் பதிவை கீழே படிக்கலாம்.

http://fireprem.blogspot.com/2022/03/blog-post_12.html?m=0


2#   உச்சிஷ்ட கணபதியின் மூலம் ஒரு சிறப்பு கேசரி யோக நுணுக்கத்தை கீழே உள்ள பதிவில் படிக்கலாம்.

http://fireprem.blogspot.com/2022/03/blog-post.html?m=0

 

3#  உயிரான ஒற்றை அணுவின் சுய விபரங்களை கீழே உள்ள பதிவில் படிக்கலாம்.

http://fireprem.blogspot.com/2022/04/blog-post.html?m=1


4#    நமது குருநாதர், ஒற்றை அணு அல்லது வாலைத்தாயிடம் இருந்து எப்படி அருளைப் பெற்றார் என்ற குறிப்புகளை கீழே உள்ள பதிவில் படிக்கலாம்.

http://fireprem.blogspot.com/2020/10/blog-post_10.html?m=1






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக