புதன், 6 மார்ச், 2024

சுசிலா பெரியம்மாவுக்கு கிடைத்தது

 அழைக்கிறான் மாதவன்…
ஆநிரை மேய்த்தவன்…





      சென்ற திங்கள் கிழமை மாலை, பிரார்த்தனையை முடித்துவிட்டு பூஜை அறையை விட்டு வெளியே வந்தேன். எனது தாயார் சுசிலா பெரியம்மாவிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். தாயார் என்னைப் பார்த்ததும் அலைபேசியை என்னிடம் கொடுத்து, சுசிலா பெரியம்மாவிடம் பேசச் சொன்னார். 

முருகப்பெருமானை ஆறு பெண்கள் சேர்ந்து வளர்த்தார்களாம். அதுபோல் என்னையும்  பல்வேறு காலகட்டங்களில் பல தாய்மார்கள் வளர்த்திருக்கிறார்கள். அதில் சுசிலா பெரியம்மாவும் மிகவும் முக்கியமானவர்.  நான் திண்டுக்கல்லில்  உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது சுசிலா பெரியம்மா வீட்டில் தான் அடிக்கடி தங்கி இருப்பேன். இப்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக உருண்டு ஓடிவிட்டது.

தற்போது சுசிலா பெரியம்மா உடல் நலக் கோளாறால் மதுரையில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். நான் வரவேற்பு அறையில் உள்ள குருநாதரின் படத்தைப் பார்த்துக்கொண்டே அலைபேசியை வாங்கி பேசினேன். சுசிலா பெரியம்மாவிற்கு விரைந்து உடல் நலம் தேரவும் வலியை தாங்கிக் கொள்வதற்கும் என்ன மந்திரம் ஜெபிக்கலாம் என்று என்னைக் கேட்டார். இது போன்ற கேள்வியை வேறு யாரேனும் கேட்டிருந்தால்  மன ஆறுதலுக்காக ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லி இருப்பேன். ஆனால் இன்று ஏனோ  குருநாதர் எனக்கு அளித்த "ஒரு வரி ஞானத்தை" சொல்லி விட வேண்டும் என்று எனக்கு தோன்றியது. பெரியம்மா, குருநாதர் எனக்கு கொடுத்த ஒரு முக்கியமான ஞானத்தை இன்று உங்களுக்குச் சொல்ல போகிறேன். நாம்  இந்த பூமியில் பிறப்பது முக்தியை அடைவதற்காகத் தான். இதை ஏற்றுக் கொள்வதற்கு  கசப்பாகத்தான் இருக்கும், ஆனால் இதுதான் உண்மை. எனவே நீங்கள் மனம் உருகி, "இறைவா உன் பாதம் சேரும் முக்தி எனக்கு விரைவில் வேண்டும்" என கேளுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளையேனும், இதை மனம் உருகி பிரார்த்தை செய்து  வேண்டியபின் "நமச்சிவாய" மந்திரத்தை ஜெபமாலை கொண்டு ஜெபியுங்கள் என்று சொன்னேன்.  பெரியம்மாவிடம் சில வினாடிகளுக்கு எந்த பதிலும் இல்லை. மனம் இல்லாமல் "சரி" என்று ஒரு வார்த்தை சொன்னார். அத்தோடு   இருவரும் விடைபெற்று அலைபேசியை வைத்து விட்டோம். 

அலைபேசியை வைத்த இரண்டு நிமிடங்களில் மீண்டும் பெரியம்மா அலைபேசியில் என்னை அழைத்தார். மைந்தா, நான் ஒரு விஷயத்தைக் கேட்பேன்,  அதற்கு உன் பதிலை சொல் என்றார்.  எனக்கு காசிக்கு செல்ல வேண்டும் என்று வெகு நாளாய் ஆசை. ஆனால் எனது நோய்வாய்ப்பட்ட கால்களை வைத்துக் கொண்டு என்னால் செல்ல முடியுமா? இதனை வேண்டுவதாலோ ஆசைப்படுவதாலோ எந்த பலனும் இல்லை. அதுபோல் "எனக்கு முக்தியை தரும் மரணம் வேண்டும் என்று வேண்டினால் மட்டும் என்ன பலன்? அது கிடைக்கும் விதி இருக்கும்போது தானே கிடைக்கும்",  என்று கேட்டார். அடியேன் நான் குருநாதரின் பாதங்களைப் பார்த்துக் கொண்டே  பதில் உரைத்தேன். தாயே, உங்களால் காசிக்கு செல்ல முடியாவிட்டாலும், அதற்காக ஆசைப்பட்ட நொடியில் உங்கள் மனதால்  காசிக்கு சென்ற பலனையும்  புண்ணியத்தையும் அடைகிறீர்கள்.  அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் நான் கோவையில் இருக்கிறேன், நீங்களோ மதுரையில் இருக்கிறீர்கள். ஆனால் இந்த நொடியில், உங்கள் மனதில் நானும், என் மனதில் நீங்களும் இருக்கிறீர்கள் அல்லவா!  
முக்தி வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நீங்கள் மனதால் கேட்கும் நொடியில்,  உங்கள் மனதாலேயே கையிலாசத்தில் இருக்கும் ஈசனிடம் சென்றுவிட்டு, மீண்டும் உங்களது உடம்பிற்குள் திரும்புகிறீர்கள். இதற்கான  இறைவனின் அருளை நீங்கள் கட்டாயம் பெறுகிறீர்கள். 



இந்த இறையருள் உங்கள் வலியையும் தாங்க உதவும், குணப்படுத்தவும் செய்யும். மேலும் இந்தப் பிரார்த்தனையை தினசரி தவறாமல் வேண்டிக் கொண்டிருந்தால், உங்களை எந்த துன்பமும் வருத்த முடியாது. மாயையால் கட்டுண்டு கிடக்கும் உங்கள் வெளிமனம் வலுவிழந்து விடும். ஒரே பிரார்த்தனையை பலமுறை மனம் உருகி வேண்டுவதால், அதுவே ஆழ்மனதில் பதிந்துவிடும்,  பேரானந்த வாழ்வும்  சித்திக்கும். இறையன்பினால் எப்போதும் நிரம்பி இருப்பீர்கள். பல வருடங்களாய் நானும் இப்படித்தான் வேண்டிக் கொண்டிருக்கிறேன். எனது குழந்தைகள், மனைவி, தாயார் அனைவருக்கும் இதையே சொல்லிக் கொடுத்தேன், என்று சொன்னேன்.
சில வினாடிகளுக்கு பெரியம்மாவிடம் பதில் இல்லை, சில வினாடிகள் யோசனைக்கு பின் சமாதானமாகி "சரி மைந்தா" என்றார்.


விரக்தியா? விருப்பமா?
 இந்த ஒரு வரி ஞான பிரார்த்தனையை விரத்தியாலோ அல்லது ஏதோ ஒரு  எதிர்பார்ப்பிற்காகவோ வேண்டுவதால் எந்த பலனும் இல்லை.  இந்த பிரார்த்தனையை மனம் உருகி முழு விருப்பத்தோடு வேண்டினால் அனேக பலன்கள் உண்டு. ஆண்டாள் நாச்சியார் கண்ணனே வேண்டும், என எவ்வளவு விருப்பத்தோடும் ஏக்கத்தோடும் வேண்டினாலோ, அதுபோல் இந்த ஒரு வரி ஞானத்தை தினசரி மிகுந்த விருப்பத்தோடு வேண்ட வேண்டும்.




இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வயோதிக காலத்தில் கேட்க வேண்டிய ஞானம் என்றா தோன்றுகிறது?  அப்படி தோன்ற வைப்பது தான் வெளி மன மாயையின் சதிவேலை. மேலும் விளக்கம் தேவைப்படுவோர் கீழ்க்கண்ட பதிவுகளைப் படித்தால் நிச்சயமாய் தெளிவு பிறக்கும். அற்புத சக்திகளைப் பெறும் ரகசியமும் தெரியும்.


இந்த ஒரு வரி ஞானத்தை தினசரி தொடர்ந்து வேண்டும் பொழுது என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பதை கீழ்க்கண்ட பதிவைப் படித்து புரிந்து கொள்ளலாம்.


இந்த ஒருவரி ஞானம் எனக்கு எப்படி கிடைத்தது என்பதற்கான பதிவு.


வெளி மனத்திற்கும் ஆழ்மனத்திற்கும்  உள்ள வேறுபடும் சக்திகள்.


இந்த மகளிர் தினத்தில் என்னை தகப்பனாக  ஏற்றுக்கொள்ளும் அனைத்து மகள்களுக்குமான பரிசாக  கவிதைப் பதிவு.



   இப்படிக்கு
 அகத்திய பக்தன்