புதன், 27 மார்ச், 2024

அனுபவ ஞானம் : நவகண்ட யோகம்

 அனுபவ ஞானம் - நவகண்ட யோகம்


பராசக்தியே போற்றி.



கடந்த 2018 ஆம் ஆண்டு அன்பாலயம் ஜெயந்தி அன்னை மூலமாக, பரத்வாஜ முனிவர் அருளிய "ஆகம வேதம்" என்ற நூலினை குருவருளால் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. 


அந்த நூலின் 5 ஆம் பக்கத்தில், மன பாவனையின் மூலமாக பாவ கர்மாவை நீக்கும் பயிற்சி அற்புதமாக விளக்கப்பட்டு இருக்கும். இந்த பயிற்சியை யூடியூபிலும் எளிதாக விளக்கியுள்ளார்கள். லிங்க் கீழே.


 

நான் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து இந்த பயிற்சியை செய்தேன். ஒவ்வொரு அம்மாவாசை மற்றும் பௌர்ணமி காலை நேரம் பயிற்சி செய்வதை வழக்கப்படுத்தினேன். பல கர்ம வினைகள் என்னிடமிருந்து விலகுவதை நன்கு உணர முடிந்தது. எனினும் பல பிறவிகளாய் தொடரும் கடினமான கர்மவினைக்கு இன்னும் வீரியமான பயிற்சி தேவை, என குருவருளால் உணர்ந்தேன். தினமும் மோசமான கனவுகளால் அதிகம் வருந்தினேன். குருநாதரின் பாதம் பணிந்து  "ஒரு வரி" ஞானத்தின் பிரார்த்தனையோடு தினமும் வேண்டினேன். சில நாட்கள் கழித்து ஒரு நாள் காலை நேரம் தியானிக்கும் போது, குருநாதர் கருணையோடு அந்த வீரியமான பயிற்சியை அருள் செய்தார்.



கடினமான கர்மவினையை நீக்கும் இந்த வீரியப் பயிற்சி, எனக்கு வினோதமாக இருந்தது. தினமும் "ஒரு வரி ஞானத்தை" விரும்பிப் பிராத்திப்பதால் எனக்கு சிறிதும் அச்சம் வரவில்லை. ஆரம்பத்தில் இந்த வீரிய பயிற்சியை குருநாதர் எனக்கு மட்டும் அருளி இருப்பதாகத்தான் நினைத்தேன். ஆனால் பின்னர் தான் தெரிந்தது இதை குருநாதர் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே நவகண்ட யோகம் என்ற பெயரில் பல சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் அருளி இருக்கிறார் என்று. வள்ளலார் இந்த நவகண்ட யோகத்தை செய்திருக்கிறார், ஆனால் மனதின் கற்பனையால் அல்ல, உண்மையிலேயே உடலை துண்டு துண்டாக பிரித்து தரையில் ஆங்காங்கே பரப்பிவிட்டு, "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! நான் என்பது இங்கே சிதறி கிடக்கும் உடல் அல்ல, சதா அலை பாயும் வெளி மனமும் அல்ல. நான் அருட்பெருஞ் ஜோதியின் ஒரு பகுதியான ஆன்ம ஜோதியாவேன்",  என பூரணமாய் உணர்ந்து, பரப்பிரமம் எனும் வெட்ட வெளியில் கலந்து சமாதி யோகமும் செய்திருக்கிறார்.



அடியேன் நான் எப்படி இந்த  வீரியப் பயிற்சியை மனத்தினால் செய்தேன் என்பதை விளக்குகிறேன். நான் வெண்ணிற உடையில் கடலின் மேல் பறந்து நடுக்கடலுக்கு செல்கிறேன்.



 அங்கே ஒரு ஆழமான "கடல் நீர் சுழல்" பிரம்மாண்டமாய் சுழன்று கொண்டிருக்கும். 



அந்த சுழல் மேல் நின்று என் உயிரான பராசக்தியை சரணாகதமாக வணங்கி, என் கொடிய கர்ம வினைகளை நீக்கிவிட பிரார்த்திக்கிறேன்.



"கொற்றவைத் தாயே! என் உயிரான பராசக்தியே! உன் பாதங்களை வணங்குகிறேன். இந்த பூமியிலே கர்மாவினால் சிறை படுத்தப்பட்ட என் ஆன்மாவை நீ உன் வல்லமையால் விடுவிக்க வேண்டும் தாயே! என் ஆன்ம விடுதலைக்கு எதிரான கர்ம தடைகளை நீ அழித்து வெற்றி கொள்ள, என் உடலை நவகண்டமாய் இந்த கடல் நீர் சுழலில் உனக்கு பலியிடுகிறேன் தாயே!"  என்று சரணாகதமாய் வணங்கி நீண்ட கூரிய வாளால் உடலை ( மனதிலேயே ) ஒன்பது கூறுகளாய் வெட்டி, வட்ட குண்டத்தின் வடிவான கடல் நீர் சுழலில் பலியாக வீசி விட வேண்டும்.





நம் மனதின் மூலம் பலியிடும் வரிசை :-

 1) வலது கால்

 2) இடது கால்

 3) இடுப்பு 

4) மார்பு 

5) தோள் 

6) கழுத்து 

7) தலை 

8) இடது கை 

9) வாளோடு கூடிய வலது கை.


 உருவமற்ற சூட்சம உயிராக, விண்ணைப் பார்த்து மேலே எழும்பிப் பறக்கிறேன். சூரியனின் வெப்ப மண்டலத்தை நெருங்கும் போது, சூரியனின் மத்தியில் உள்ள குளிர்ந்த காந்த ஆற்றலான இறைவன் நம் உயிரை தானே ஈர்த்துக் கொள்வார்.



 பிரகாசமான ஒளியில் சிறிது தியானித்து விட்டு வெட்டவெளியில் கலக்க வேண்டும். இயன்றவரை மௌனமாக அந்த வெட்டவெளியிலேயே லயித்து தியானிக்க வேண்டும். சில வினாடிகள் தான், உடனே நாம் வெளி மனம் சுதாரித்து, வெளி உலக உருவங்களையும் எண்ணங்களையும் காட்ட ஆரம்பித்து விடும். எனினும் அந்த ஒரு சில வினாடிகள் வெட்ட வெளியில் தியானப்பது மிகவும் அற்புதமே.  



குடும்பக் கடமைக்காக செயல்பட வேண்டிய  கட்டாயத்தில் உள்ளவர்கள் இந்த நவகண்ட யோக பயிற்சியை, மாதம் ஒரு முறை அல்லது கர்மாவின் வீரியம் அதிகமாக உணரும் போது மட்டும் செய்வது நல்லது. இல்லாவிடில் குடும்ப கடமைகளை செய்ய மனம் இல்லாத போய்விடும். இதை குருநாதர் ஏற்க மாட்டார்.
இந்த பயிற்சியினால் நம் உள் மூளையில் வெகுகாலமாய் சிறைப்பட்ட  கடினமான கர்மாக்கள் சிறிது சிறிதாக விடுவிக்கப்படும். இதன் தாக்கத்தால் சில காலத்திற்கு மோசமான கனவுகளும் வெளி உலகில் சில போராட்டங்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். இது சில காலம் தான். குருநாதரின் பாதத்தை இறுகப்பற்றி, "ஒரு வரி" ஞானத்தை தொடர்ந்து பிரார்த்தித்து, இந்த போராட்ட காலத்தை எளிதாய் கடந்து விடலாம். இந்த போராட்ட காலம் சிலருக்கு சில மாதங்கள் இருக்கும், சிலருக்கு சில வருடங்கள் இருக்கும், இது அவரவர் கர்மாவை பொறுத்தது. அடியேன் எனக்கு ஐந்தாண்டுகள் வரை  போராட்டங்கள் உள்ளேயும் வெளியேயும் இருந்தது. நீங்கள் குருநாதரின் ஒரு வரி ஞானத்தை  முழுமையாக ஏற்று, தினமும் பிராத்திப்பவராயின் இந்தப் பயிற்சியை தாராளமாக செய்யலாம்.


இந்த நவகண்ட யோகத்தைப் பற்றிய குறிப்புகள் கலிங்கத்துப் பரணி, சிலப்பதிகாரம் மற்றும் சில இலக்கிய நூல்களில் உள்ளது. தன் நாடு போரில் வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த நாட்டு வீரன் நம் தமிழ் பெண் தெய்வமான கொற்றவைக்கு, தன் உடலை தானே வெட்டி பலியிடுவான். தடைகள் விளங்குவதற்காக தன்னைத் தானே தியாகம் செய்கிறான். கீழே ஒரு உதாரண பாடல் கலிங்கத்துபரணியில்.


அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ

அரிந்தசிரம் அணங்கின் கைக்கொடுப்பராலோ

கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவுமாலோ

குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ.


[கொற்றவை-காளி; பாவும்-துதிக்கும்]


இவ்வளவு ஏன்? இன்றைக்கும் கூட பழமையான கோயில்களின் வாயிலில், தனக்கு எந்த உடல் பாகத்தில் நோய் உள்ளதோ, அந்த உடல் பாகத்தை வெள்ளியிலே வாங்கி, உண்டியலில்  காணிக்கை செலுத்தும் பழக்கம் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? 





எல்லாம் மூடநம்பிக்கை  அல்லது  காட்டுமிராண்டித்தனமோ இல்லை. அனைத்திலும் ஆழ்ந்த மனோதத்துவம் இருக்கிறது.

நம் கர்மவினைகள் நமது உள் முளையின் நரம்பணுக்களில் சிறைப்படுவதைப் பற்றிய  சுவாரசியமான தகவல்களை வேறு தனிப் பதிவில் பார்ப்போம்.



இப்படிக்கு,

அகத்திய பக்தன்.


2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஐயா, ஒரு வரி ஞானம் என்பது என்ன என்று பகிருமாறு வேண்டுகிறேன்.

Agathiya Bakthan சொன்னது…

ஐயா, குருநாதர் அளித்த "ஒரு வரி ஞானம்" கீழே உள்ள பதிவில் தெளிவாக எழுதி உள்ளேன்.

https://fireprem.blogspot.com/2024/03/blog-post_6.html?m=1