சனி, 27 மே, 2023

சிதம்பர ஞானம் / சைவ ஞானம் - பகுதி 4

 

சிதம்பர ஞானம்  /   சைவ ஞானம் - பகுதி 4


ஓம் அகத்தீசாய நமஹ.


இதற்க்கு முந்தைய பகுதியை படித்துவிட்டு இதைத் தொடரவும். குருநாதர் அருளால் நமக்குக் கிடைத்த குறிப்புகளைப் பார்க்கலாம்.


ஊர்த்தவ தாண்டவர் :-

 சிதம்பரம் கோவிலின் உச்சகட்ட காட்சி இதுதான். சிவனும் காளியும் போட்டி போட்டுக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். காளியானவள் சிவனுக்கு சரியாக எல்லா வகையான ஆட்டத்தையும் ஆடுகிறாள். கடைசியில் சிவன் எளிதாக தனது வலது காலை முற்றிலுமாக தலைக்கு மேலே உயர்த்தி விட்டார். அப்படி உயர்த்திய வலது காலை நோக்கி தனது வலது கையையும் உயர்த்தி சுட்டிக்காட்டி விட்டார். பொதுவாக பின்கலை என்பது காந்த ஆற்றல் கொண்ட சிவனைக் குறிக்கும். இடகலை என்பது வெப்ப ஆற்றல் கொண்ட சக்தியை குறிக்கும். சக்தியால் பிரபஞ்சத்தின் வெப்பமண்டலம் வரை எளிதில் செல்ல முடியும். மேலும் பிரபஞ்சத்தின் காந்த மண்டலத்தில் ஓரளவிற்கு மட்டுமே ஊடுருவ முடியும். ஆனால் அவளால் கண்டிப்பாக வெட்டவெளி என்னும் பூரணத்திற்குள் செல்லவே முடியாது. சிவனால் மட்டுமே பின்கலையை முழுவதுமாக உயர்த்தி, அப்படியே நிறுத்தி, வெட்டவெளிக்குள் ஊடுருவி செல்ல முடியும். யோகியானவர் இந்த நிலையில், தனது உடல் உள் உறுப்புகளின் இயக்கத்தை முழுமையாக நிறுத்தி, சமாதிக்குள் சென்று கொண்டிருப்பார். அவர் காந்த மண்டலத்தைத் ( பாதரச ஆற்றல் ) தாண்டும் பொழுது உடுக்கை  நாதம் அவருக்குக் கேட்கும்.



 இறுதியாக போட்டியில் காளி தோற்று விடுகிறாள், சிவபெருமான் ஜெயித்து விடுகிறார். பின்னர், தலைவர் காளியாத்தாளை கச்சிதமாய் தன் கைக்கு அடங்கிய காதலியாக்கி அருகே வைத்துக் கொண்டார்.

 ஆற்றல்களின் பயணம் மற்றும் தன்மையைப் புரிந்து கொள்ள கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு உதவும்.


 ஆற்றல்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனில் கீழே உள்ள புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.


 உங்கள் மனதில் உள்ள கேள்வி:-

 இந்த யோக நுணுக்கங்களை யார் கற்றுத் தருவார்?

 நம் கொண்டைக்கார குருநாதரால் மட்டுமே கற்றுத் தர முடியும். அதுவும் சுழுமுனை நாடியில் வந்து, உயிர் தரிசனம் தந்து, கற்றுத் தருவார். ஆனால் அவர் சில விஷயங்களையும் புரிதலையும் முதலில் எதிர்பார்ப்பார்.



 அதை விளக்கமாக அடுத்த பதிவான "ஞானச் சரவெடி"யில் விரைவில் பார்க்கலாம்.  அதுவரை நம் குருநாதர் கண்டிப்பாக எதிர்பார்க்கும் அடிப்படைத் தகுதியான "ஆன்ம சுதந்திரம்" என்ற மனப்பக்குவத்தை பற்றிய கீழ்கண்ட பதிவுகளை முழுமையாகப் படித்து, உணர்ந்து, இறைவனிடம் அதையே தினமும் தவறாமல் பணிந்து வேண்டுங்கள்.  கீழே உள்ள பதிவுகளில் ஒரே விஷயத்தை தான் வேறு வேறு விதமாக எழுதியிருப்பேன். சலிக்காமல் அனைத்தையும் படித்து விடுங்கள். ஏனெனில் அவ்விதமே உங்கள் ஆழ்மனம் வரை ஊடுருவி செல்ல வேண்டும், என்பதற்காகவே அப்படி எழுதப்பட்டது.










தெய்வச்சிலை என்பது யோக நுணுக்கம் தான் எனில், பக்தி வழிபாடு தேவையா?
பக்தி வழிபாடு கண்டிப்பாகத் தேவை. இதுவே மனது ஒருமுகமாக்கி பின் மனமுருகும்போது நம் உயிரை உணரலாம், இறைவனின் தொடர்பைப் பெறலாம். ஆனால் உங்கள் உயிரின் இருப்பிடத்தை நீங்கள் கண்டிப்பாய்த் தெரிந்திருக்கவேண்டும்.


 முடிவுரை :- 

 நம் குருநாதரின் அருளால் இயன்றவரை சில பூட்டுகளை திறந்து விட்டோம் என்று நினைக்கிறேன். மீண்டும் அடுத்த பதிவான "ஞானச் சரவெடி" யில் சந்திப்போம்.



 இப்படிக்கு,
 அகத்திய பக்தன்.




சிதம்பர ஞானம் / சைவ ஞானம் - பகுதி 3

 

சிதம்பர ஞானம்  /   சைவ ஞானம் - பகுதி 3


ஓம் அகத்தீசாய நமஹ.


இதற்க்கு முந்தைய பகுதியை படித்துவிட்டு இதைத் தொடரவும்.


 தட்சணாமூர்த்தி :-  

சென்ற பதிவில் பார்த்த அதே காலை மடிக்கும் நுணுக்கம்தான், ஆனால் இடது காலை வலது காலின் மேல் மடக்கி வைத்துள்ளார். கற்பக விருச்சமாய் ஞானம் அவர் தலைக்கு மேல் நன்கு வளர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் இவர் கையில் மீண்டும் அக்கினி வந்துவிட்டதை கவனியுங்கள்.




யோகி இந்த நிலையில் குடும்ப நிலையை கடந்து பெரும்பாலும் மௌனம் அல்லது சமாதி நிலையிலேயே இருக்கிறார்.  மௌனமே ஞான வரம்பு  என்ற ஔவையின் வாக்கை நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். 

காது பொத்தர் என்ற இருவர் அருகே இருப்பார்கள். சிவயோகி, தனக்கு மட்டும் கேட்கும் நாதத்தையே கவனிக்கவேண்டும் என்பதை நமக்குப் புரியவைக்கிறார்கள்.



 கீழே உள்ள படம் பரமஹம்ச யோகானந்தரின் கிரியா யோக  நுணுக்கம். இப்போது மேலே காது பொத்தரின் படத்தையும். கீழே உள்ள கிரியா யோகம் நுணுக்கத்தின் படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள் உங்களுக்கே புரியும். கிரியா யோகத்தை பழக விரும்புவோர் பரமஹம்ச யோகாநந்தரின் யோக அமைப்பை இணையதளத்தில் தேடி தொடர்பு கொண்டு கிரியா யோகா பழகலாம்.





 உண்மையில் தட்சணாமூர்த்தி தன் வாயால் எதையும் உபதேசிக்கவும் இல்லை, அவருடைய சீடர்களான முனிவர்களும் அவர்களுடைய காதுகளால் எதையும் கேட்கவும் இல்லை.  இங்கே மகாரம் என்ற மௌனமே ஞானம் ஆகும். யோகி ஆனவர் தனது உச்சகட்ட மவுனத்தால் "தான் அவன் ஆகுதல்" அதாவது "தத்துவமசி" என்ற உயர்நிலைக்கு மாறுகிறார்.


(  சிதம்பரம் கோவிலில் தட்சிணாமூர்த்தி, சண்டேஸ்வரர் மற்றும் நந்தீஸ்வரரையும் கவனிக்க மறந்து விட்டேன். அடுத்த முறை செல்லும் பொழுது குறிப்பெடுத்து எழுதுகிறேன். )



 நர்த்தன கணபதி :-

 வெளிப் பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது, கிழக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தூணில் நடன கணபதி  செதுக்கப்பட்டிருக்கும். இவர்  வலது காலை உயர்த்தியும், இடது காலை ஊன்றியும் நடன கோலத்தில் இருப்பார்.  உயர்த்திய வலது காலை பார்ப்பது போல் ஒரு பல்லி இருக்கும்.  அந்த வலது பல்லியின் வாலும் மேல் நோக்கி வளைந்து இருக்கும். ஊன்றிய இடது காலைப் பார்த்தபடி மற்றொரு பல்லி இருக்கும், அதன் வாலும் வளைந்து கீழ்நோக்கி இருக்கும். அவரின் தும்பிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்கும். இங்கே பல அற்புத யோகஞான குறிப்புகள் உள்ளது.




 சிவன் ஆன்மாவைக் குறிப்பவர். 
 சக்தி உயிரை ( ஒற்றை அணு அல்லது வாலை ) குறிப்பவர். 
 கணபதி சுழுமுனை நாடியை குறிப்பவர். "சுருண்ட முனை" என்பது சுழுமுனை ஆச்சு. அதாவது சுருண்ட தும்பிக்கையை இது குறிக்கிறது. தும்பிக்கை இடப்பக்கமாகவோ அல்லது வலப்பக்கமாகவோ அசையலாம்.  கணபதி என்ற சுழுமுனை நாடி,  தான் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டார். ஆனால் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, தான் சாதிக்க விரும்புவதை சாதித்து விடுவார். தேவையான அளவுக்கு நீட்டிக் கொள்ளும் தும்பிக்கையின் மூலம் தாய் தந்தையரை சுழற்றி வந்து, உலகத்தையே சுற்றி வந்ததாக சொல்லி, ஞானப்பழத்தைப் பெற்றுக் கொள்வார்.  விநாயகர் மூஞ்சூறை ( முச்சுடரை ) வாகனமாகக் கொண்டவர்.   விநாயகர் ஔவைக் கிழவியை தன் தும்பிக்கையால் வளைத்துப் பிடித்து, தும்பிக்கையை நீட்டிக்கொண்டே போய், கைலாசத்தில் ஔவையாரைச் சேர்த்தாராம். இது எப்படி என்று இப்போது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.




கீழே, தும்பிக்கை நுனியில் சங்குடன் நடன கணபதி, மிகுந்த அபூர்வமான யோக நுணுக்கம் கொண்டது. இடதுகாலை ( இடகலையை ) சிறிது உயர்த்தி தும்பிக்கை நுனியில் சங்கை காட்டுவது, யோகிக்கு கிடைக்கும் நாத ஓசையைக் குறிக்கிறது.




 ஆறுமுகன் தலைமைச் சுரபியை குறிப்பவர். தலைமைச் சுரபியான முருகனால் உடலில் ( உலகில் ) உள்ள அனைத்து சுரப்பிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியும், சூட்சுமமாக சுற்றிவர முடியும். ஆனால் அவரால் வாலை எனும் வள்ளியை நெருங்க முடியாது, அதற்கு சுழுமுனை நாடி என்னும் விநாயகரின் துணை தேவை.




 ஆன்மா தனக்குக் கிடைக்கும் சூரிய ஆற்றலை உயிருக்கு அனுப்பி விடும். உயிர் அதை காந்த ஆற்றலா அல்லது வெப்ப ஆற்றலா என்பதைப் பிரித்து உணர்ந்தபின்,  சுழுமுனை நாடிக்கு கொடுத்துவிடும். சுழுமுனை நாடி, தனக்கு வரும் ஆற்றல் காந்த ஆற்றல் எனில் வலது பக்கமாக வளைந்து பெற்றுக்கொள்ளும், அதுவே வெப்ப ஆற்றல் எனில் இடது பக்கமாக வளைந்து பெற்றுக்கொள்ளும். சுழுமுனை நாடி இவ்வாறு பகுத்து உணர்ந்த ஆற்றலை தலைமை சுரபிக்கு அனுப்பி விடும். ( இந்தப் பதிவு நீண்டு கொண்டிருக்கிறது. மேற்கண்ட ஆற்றல் பரிமாற்றத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமெனில், நீங்கள் "மூளை எனும் தலைமை சுரபி" என்ற நூலை 


வாங்கி படியுங்கள் )


 இப்படிக் கிடைக்கும் காந்த ஆற்றலை இந்திரியம் அல்லது விந்து என்று சொல்லுவார்கள். சுழுமுனையின் இடது பாகத்தை பெண் என்று சொல்லுவார்கள். இப்போது நம் குருநாதரின் ஒரு ஞானப் பாடலை பார்த்தால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.

உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கி

உறங்குகின்ற போதெல்லாம் அதுவே யாகும்

பெண்ணின்பால் இந்திரியம் விடும்போது எல்லாம்

பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு

திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே யாகும்

தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்

மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார் பாரு

மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே"

 
யோகியானவருக்கு குருநாதர் சுழுமுனை நாடியில் இருந்து பரிசளித்த யோக நுணுக்கத்தின்படி, காந்த ஆற்றல் எனும் இந்திரியத்தை பெண் எனும் இடது பாகத்தில் செலுத்தும்போது, வலது கலையை உயர்த்தி நிற்பார். இதனால் அவர் மரலிகை எனும் மரணத்தில் அகப்பட மாட்டார்.

 இந்தப் பாடலை அபத்தமான பொருளில் புரிந்து கொண்டவர்கள் பல ஆயிரம் பேர்கள். இப்படி எல்லா பாடலுக்கும் ஒவ்வொரு வரிக்கும் உள்ள பொருளை எதிர்பார்க்காதீர்கள். அது மிகவும் கடினம், மேலும் குருநாதர் வராமல் அதனால் ஒரு பயனும் இல்லை. சுலபமான வழி யாதெனில் நம் குருநாதர் அகத்தீசரின் பாதத்தை உங்கள் உயிரில் பணிவை வைத்து முழுமையாக சரணடைவது மட்டுமே. அடியேன் நான் "குருநாதர்" என்று எப்போது குறிப்பிட்டாலும் அது "அகத்தீசரை" மட்டுமே, மனித குருமார்களைக் குறிப்பிடுவது அல்ல.  



சிதம்பர ஞானம் மேலும் தொடரும்.....



 இப்படிக்கு,
 அகத்திய பக்தன்.

சிதம்பர ஞானம் / சைவ ஞானம் - பகுதி 2


 சிதம்பர ஞானம்  /   சைவ ஞானம் - பகுதி 2


ஓம் அகத்தீசாய நமஹ.


இதற்க்கு முந்தைய பகுதியை படித்துவிட்டு இதைத் தொடரவும்.


கால சம்ஹார மூர்த்தி :-


வெளிப்பிரகாரத்தில் உள்ள தூணில் மேற்கு பார்த்தபடி இவர் சிலை இருக்கும். சிவபெருமான் தனது வலது காலை சற்றே உயர்த்தி, காலன் என்ற எமனின் மேல் வைத்து, மார்க்கண்டேயனை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார். 



யோகியானவர் தனது பின்கலையை சற்றே உயர்த்தி, யோக நுணுக்கத்தால் தனக்கு வரும் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்.

மார்+கண்+டேயர் => மார்பில் உள்ள யோக கண் என்பது அனாத சக்கரம் அல்லது இருதய சக்கரம் ஆகும். அனாகதம் என்றால் சமஸ்கிருதத்தில் "தாக்கப்படாதது" என்று பொருள். இந்த சக்கரம் பிராணனை சேமித்து விநியோகிக்க பயன்படுகிறது. தவத்தில் இருக்கும் யோகி தன் இருதயத்துடிப்பை நிறுத்தினாலும், ஏற்கனவே சேமித்த பிராண சக்தியை பின்கலை வழியாக உபயோகித்து தனக்கு வரும் மரணத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறார்.


 சோம ஸ்கந்தர் :-


மேற்கண்ட அதே தூணில் வடக்கு பக்கம் சோமஸ்கந்தர் சிலை இருக்கும். இதில் சிவபெருமான் தன் மனைவி குழந்தை என குடும்பம் சகீதமாக, சாந்த சுரூப சம்சாரியாக அமர்ந்திருப்பார். அவரின் தலைக்கு மேல் மற்றொரு பெண் அமிர்தத்தை கொட்டிக் கொண்டிருப்பாள். சிவபெருமானிடம் வழக்கமாக இருக்கும் அக்கினியும் உடுக்கையும் சம்சாரி கோலத்தில் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக மாய மனதிற்கான மானை இடது கையிலும், கோபத்தை ஒழிக்கும் கோடரியை வலது கையிலும் வைத்திருப்பார். சிவபெருமான் அமர்ந்த நிலையில் தனது இடது காலை சரிபாதியாக மடித்து, தனது வலது காலுக்கு அருகில் வைத்திருப்பார். அதாவது மடித்த இடது கால், வலது காலில் படாதவாறு வைத்திருப்பது முக்கியமானது. இந்த நுணுக்கம்தான் அவர் தலையின் மேல் இருக்கும் பெண்ணை அமிர்தம் கொட்டச் செய்ய வைக்கிறது. கோபம் வரும்போதெல்லாம் வலது கண்ணில் கவனத்தை செலுத்தி அதை கையாளுகிறார், மனம் மயங்கும் போதெல்லாம் இடது கண்ணில் கவனத்தை செலுத்தி அதையும் கையாளுகிறார். அப்போது தானே இரண்டு பெண்களிடம் ஒழுங்காய் குடும்பம் நடத்த முடியும்! 




 யோகியானவர் இடகலையை சரியாக மடக்கிய நுணுக்கத்தால், இல்லற வாழ்வு பாதிக்காத வகையில், ஒரு பக்கம் தன் மனைவிக்கு அன்புக் கணவனாகவும், குழந்தைகளுக்கு தகப்பனாகவும் வாழ்ந்து கொண்டு, மறுபக்கம் தன் தலைக்குள் இருக்கும் தன் உயிர் என்ற வாலைப் பெண்ணோடும் ரகசியமாய் சரசமாய் ( சரம் அம்சமாய் ) வாழ்ந்து கொண்டிருக்கிறார். சிரசுக்குள் இருக்கும் சீமாட்டியும் அன்பிற்க்குப் பிரதிபலனாய் அமிர்தத்தைப் பொழிகிறாள். ஒருவர் இரண்டு பெண்களிடம் வாழ்க்கை நடத்துவது மிகவும் கஷ்டமான காரியம். 
 கடந்த 2015 ஆம் ஆண்டு குருநாதர் எனக்கு உயிர் தீட்சை தந்த பின், நான் தினசரி காலையும் மாலையும் தவறாமல் தியானம் செய்யும் பழக்கத்தில் இருந்தேன். இந்த தினசரி பழக்கம், எனது மனைவிக்கு பெரும் குழப்பத்தையும் வருத்தத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. எங்கே தன் கணவன் இப்படியே சாமியாராக மாறி விடுவானோ என்ற பயமும் கோபமும் அன்னவளை ஆட்கொண்டது. நிலைமை விபரீதமாவதற்குள் குருநாதர் அருளால் சமாதானம் செய்து விட்டேன். நான் தினசரி தியானம் செய்வதால், எந்த வகையிலும் சாமியாரோ பிரம்மச்சாரியோ அல்ல, என்பதை சரியாக விளக்கிப் புரிய வைத்தேன். இப்படி உள்ளேயும் வெளியேயும் இரண்டு பெண்களை சமாளித்து குடும்பம் நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை கீழே உள்ள பாடலின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

"ஒரு தாரம் தலையில் வெச்சு
மறு தாரம் பக்கம் வெச்ச
சிவனே சிவனே சிவனே
ஒரு போதும் மறவாதுன்னை
தெரு ஓரம் பாடும் இந்த
மகனே மகனே மகனே
கண் கொண்டு பாரும் அய்யா
வரம் ஒன்று தாரும் அய்யா
ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா
அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா

ஆற்றில் ஒரு காலை வைத்தான்

சேற்றில் ஒரு காலை வைத்தான்

சிவனே சிவனே சிவனே
கூழுக்கும் ஆசைப் பட்டான்
மீசைக்கும் ஆசைப் பட்டான்
மகனே மகனே மகனே
பறந்தோடி வாரும் அய்யா
பாவத்தைத் தீரும் அய்யா
ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா
அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா

ஒரு தாரம் தலையில் வெச்சுமறு தாரம் பக்கம் வெச்சசிவனே சிவனே சிவனேகைக்குள்ளே கனியும் உண்டுகாயை ஏன் தேடிப் போனான்சிவனே சிவனே சிவனேபடித்தாலும் புத்தி வல்லேபுரியாத மக்குப் புள்ளேமகனே மகனே மகனேதலைவா உன் அருளைக் கூட்டுதெளிவான வழியைக் காட்டுஈசா சர்வேசா எனை ஆளும் மகராசாஅய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா"


பாடலையும் கீழே கேளுங்கள்.




 சிதம்பர ஞானம் மேலும் தொடரும்.....



 இப்படிக்கு,
 அகத்திய பக்தன்.






சிதம்பர ஞானம் / சைவ ஞானம் - பகுதி 1

 சிதம்பர ஞானம்  /   சைவ ஞானம் - பகுதி 1


ஓம் அகத்தீசாய நமஹ.


 குருநாதர் அருளால் கடந்த வாரம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி பலரும் பல பதிவுகளை இணையதளத்திலும் யூட்யூபிலும் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறார்கள். நாம் இந்தப் பதிவில் குருநாதர் அருளால் நமக்கு புரிந்த சில யோகஞான நுணுக்கங்களை பார்க்கலாம்.




 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் கோயில்களுக்கு சென்று வழிபட்டது முழுமையான பக்தி மார்க்கமாக எனக்கு இருந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு இறுதியில் நம் குருநாதர் அருளால் எனக்கு கிடைத்த "கலியுக காவியம் -  ஆன்மாவின் சுயசரிதை" என்ற நூலை படித்த பிறகு எனது புரிதலில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. 


பழமையான கோயில்களுக்கு செல்லும்பொழுது "வெளியே" பக்தி மார்க்கமாய் வணங்கினாலும் "உள்ளே" குருநாதர் நமக்கு ஏதோ சூட்சுமங்களைச் சொல்வதாகவே உணர்வேன்.  எந்த தகவல் தொடர்பு சாதனமும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நமது ரிஷி முனிவர்கள் தாங்கள் பயின்ற ஆன்ம முன்னேற்றம் காண உதவிய பல யோக ஞான தத்துவங்களையும் நுணுக்கங்களையும் சாமர்த்தியமாக தெய்வ சிலை வடிவங்களில் புகுத்தி இருக்கிறார்கள். நேரடியாக விஷயத்திற்குள் நுழைவோம்.


 பழமையான கோயில் சிலைகளை காணும் பொழுது நான் முதலில் அந்த தெய்வங்களின் கால்களை கவனிப்பேன்.  இரண்டாவதாக கைகள் மற்றும் கைகளில் ஏந்தியவைகளை கவனிப்பேன். மூன்றாவதாக அந்த தெய்வத்தின் முகபாவம். நான்காவது ஒட்டுமொத்த உருவமும் சொல்லும் செய்தி. இறுதியாக அந்த தெய்வத்திற்கு உண்டான வாகனத்தை கவனிப்பேன்.  நான் குறிப்பிடுவது குறைந்தது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் மற்றும் ஏதாவது ஒரு மகாசித்தரோடு தொடர்புடைய கோயிலாக இருக்க வேண்டும். ஏனெனில் மற்ற கோவில்களில் குறியீடுகளை மாற்றி தவறாக  அமைத்திருக்கலாம்.


 சித்தர்கள் பரிபாஷையில் "கால்" என்றால் "காற்று" என்று பொருள். இடது நாசி சுவாசத்தை இடகலை என்பார்கள். மேலும் உகாரம் அல்லது பெண் அல்லது சந்திரன் அல்லது மதி என்றும் சொல்லுவார்கள். வலது நாசி சுவாசத்தை பின்கலை என்பார்கள். மேலும் அகாரம் அல்லது ஆண் அல்லது சூரியன் அல்லது ரவி என்றும் சொல்லுவார்கள்.


 இப்போது சிதம்பரம் கோவிலின் கதாநாயகனான நடராஜர் சுவாமி சிலைக்கு வருவோம். நடராஜர் தனது இடது காலை உயர்த்தி, அதை தன் இடது கையால் சுட்டிக் காட்டுகிறார். தனது வலது காலை சிறிது தாழ்த்திய வகையில் கீழே ஊன்றியுள்ளார்.  இந்த கால் நுணுக்கத்தின் பலனாக இடது கையில் அக்கினியை உயர்த்திக் காட்டுகிறார்.  




யோகியானவர் தனது இடகலையை சிறிது உயர்த்தியும், பின்கலையை குறிப்பிட்ட அளவு தாழ்த்தியும் செய்து,  சுழுமுனை நாடி வழியாக தவம் செய்யும் போது, தனது உயிரின் இருப்பிடத்தை அக்கினியாக ( வன்னி ) காண்பார், என்ற யோகஞான தத்துவத்தை நாம் குருவருளால் புரிந்து கொள்ளலாம். 

 காகபுசுண்டர் தனது ஞானப்பாடல் 80 என்ற நூலில் இந்த யோக ஞான தத்துவத்தை கீழ்கண்டவாறு தெளிவாக சொல்லியுள்ளார்.

காகபுசுண்டர் ஞானம் 80 – பாடல் 17 & 18.

பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப்
      பாடுவா னொருகாலைத் தாழ விட்டே
ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய்
      என்மகனே மதியென்ப ததற்குப் பேரு
கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா
      
கண்டுபார் ரவியென்று கருத லாகும்
மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும்   மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே. 17

பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப்
      
பார்தனிலே அறுபத்து நாலு யோகம்
ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக   அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து   நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று
வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே   விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே. 18

காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு   காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்”


கீழே பாடலைக் கேட்கலாம். 13 ஆம் விநாடியிலிருந்து கவனியுங்கள்.



கீழே நம் குருநாதர், இடது காலை மடித்து, யோகப் பட்டை ( belt ) அணிந்து, தவம் செய்வதைப் பாருங்கள்.



குறிப்பு :- யோகியானவர் என்றால் யோகி மற்றும் யோகினி என்ற இருபாலரையும் குறிக்கும்.

ஆச்சர்யம். குரங்கின் தவம். அதுவும் இடக்காலை உயர்த்தி, முதுகை நிமிர்த்தி !!!
தன் இடது நாசி சுவாசத்தைக் கையாளுகிறதோ?






சிதம்பர ஞானம் மேலும் தொடரும்.....


 இப்படிக்கு,
 அகத்திய பக்தன்.