சிதம்பர ஞானம் / சைவ ஞானம் - பகுதி 1
ஓம் அகத்தீசாய நமஹ.
குருநாதர் அருளால் கடந்த வாரம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி பலரும் பல பதிவுகளை இணையதளத்திலும் யூட்யூபிலும் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறார்கள். நாம் இந்தப் பதிவில் குருநாதர் அருளால் நமக்கு புரிந்த சில யோகஞான நுணுக்கங்களை பார்க்கலாம்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் கோயில்களுக்கு சென்று வழிபட்டது முழுமையான பக்தி மார்க்கமாக எனக்கு இருந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு இறுதியில் நம் குருநாதர் அருளால் எனக்கு கிடைத்த "கலியுக காவியம் - ஆன்மாவின் சுயசரிதை" என்ற நூலை படித்த பிறகு எனது புரிதலில் நிறைய மாற்றம் ஏற்பட்டது.
பழமையான கோயில்களுக்கு செல்லும்பொழுது "வெளியே" பக்தி மார்க்கமாய் வணங்கினாலும் "உள்ளே" குருநாதர் நமக்கு ஏதோ சூட்சுமங்களைச் சொல்வதாகவே உணர்வேன். எந்த தகவல் தொடர்பு சாதனமும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நமது ரிஷி முனிவர்கள் தாங்கள் பயின்ற ஆன்ம முன்னேற்றம் காண உதவிய பல யோக ஞான தத்துவங்களையும் நுணுக்கங்களையும் சாமர்த்தியமாக தெய்வ சிலை வடிவங்களில் புகுத்தி இருக்கிறார்கள். நேரடியாக விஷயத்திற்குள் நுழைவோம்.
பழமையான கோயில் சிலைகளை காணும் பொழுது நான் முதலில் அந்த தெய்வங்களின் கால்களை கவனிப்பேன். இரண்டாவதாக கைகள் மற்றும் கைகளில் ஏந்தியவைகளை கவனிப்பேன். மூன்றாவதாக அந்த தெய்வத்தின் முகபாவம். நான்காவது ஒட்டுமொத்த உருவமும் சொல்லும் செய்தி. இறுதியாக அந்த தெய்வத்திற்கு உண்டான வாகனத்தை கவனிப்பேன். நான் குறிப்பிடுவது குறைந்தது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் மற்றும் ஏதாவது ஒரு மகாசித்தரோடு தொடர்புடைய கோயிலாக இருக்க வேண்டும். ஏனெனில் மற்ற கோவில்களில் குறியீடுகளை மாற்றி தவறாக அமைத்திருக்கலாம்.
சித்தர்கள் பரிபாஷையில் "கால்" என்றால் "காற்று" என்று பொருள். இடது நாசி சுவாசத்தை இடகலை என்பார்கள். மேலும் உகாரம் அல்லது பெண் அல்லது சந்திரன் அல்லது மதி என்றும் சொல்லுவார்கள். வலது நாசி சுவாசத்தை பின்கலை என்பார்கள். மேலும் அகாரம் அல்லது ஆண் அல்லது சூரியன் அல்லது ரவி என்றும் சொல்லுவார்கள்.
இப்போது சிதம்பரம் கோவிலின் கதாநாயகனான நடராஜர் சுவாமி சிலைக்கு வருவோம். நடராஜர் தனது இடது காலை உயர்த்தி, அதை தன் இடது கையால் சுட்டிக் காட்டுகிறார். தனது வலது காலை சிறிது தாழ்த்திய வகையில் கீழே ஊன்றியுள்ளார். இந்த கால் நுணுக்கத்தின் பலனாக இடது கையில் அக்கினியை உயர்த்திக் காட்டுகிறார்.
யோகியானவர் தனது இடகலையை சிறிது உயர்த்தியும், பின்கலையை குறிப்பிட்ட அளவு தாழ்த்தியும் செய்து, சுழுமுனை நாடி வழியாக தவம் செய்யும் போது, தனது உயிரின் இருப்பிடத்தை அக்கினியாக ( வன்னி ) காண்பார், என்ற யோகஞான தத்துவத்தை நாம் குருவருளால் புரிந்து கொள்ளலாம்.
காகபுசுண்டர் தனது ஞானப்பாடல் 80 என்ற நூலில் இந்த யோக ஞான தத்துவத்தை கீழ்கண்டவாறு தெளிவாக சொல்லியுள்ளார்.
காகபுசுண்டர் ஞானம் 80 – பாடல் 17 & 18.
பாடுவா னொருகாலைத் தாழ விட்டே
ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய்
கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா
கண்டுபார் ரவியென்று கருத லாகும்
மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும் மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே. 17
பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப்
பார்தனிலே அறுபத்து நாலு யோகம்
ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று
வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே. 18
காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக