சனி, 27 மே, 2023

சிதம்பர ஞானம் / சைவ ஞானம் - பகுதி 3

 

சிதம்பர ஞானம்  /   சைவ ஞானம் - பகுதி 3


ஓம் அகத்தீசாய நமஹ.


இதற்க்கு முந்தைய பகுதியை படித்துவிட்டு இதைத் தொடரவும்.


 தட்சணாமூர்த்தி :-  

சென்ற பதிவில் பார்த்த அதே காலை மடிக்கும் நுணுக்கம்தான், ஆனால் இடது காலை வலது காலின் மேல் மடக்கி வைத்துள்ளார். கற்பக விருச்சமாய் ஞானம் அவர் தலைக்கு மேல் நன்கு வளர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் இவர் கையில் மீண்டும் அக்கினி வந்துவிட்டதை கவனியுங்கள்.




யோகி இந்த நிலையில் குடும்ப நிலையை கடந்து பெரும்பாலும் மௌனம் அல்லது சமாதி நிலையிலேயே இருக்கிறார்.  மௌனமே ஞான வரம்பு  என்ற ஔவையின் வாக்கை நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். 

காது பொத்தர் என்ற இருவர் அருகே இருப்பார்கள். சிவயோகி, தனக்கு மட்டும் கேட்கும் நாதத்தையே கவனிக்கவேண்டும் என்பதை நமக்குப் புரியவைக்கிறார்கள்.



 கீழே உள்ள படம் பரமஹம்ச யோகானந்தரின் கிரியா யோக  நுணுக்கம். இப்போது மேலே காது பொத்தரின் படத்தையும். கீழே உள்ள கிரியா யோகம் நுணுக்கத்தின் படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள் உங்களுக்கே புரியும். கிரியா யோகத்தை பழக விரும்புவோர் பரமஹம்ச யோகாநந்தரின் யோக அமைப்பை இணையதளத்தில் தேடி தொடர்பு கொண்டு கிரியா யோகா பழகலாம்.





 உண்மையில் தட்சணாமூர்த்தி தன் வாயால் எதையும் உபதேசிக்கவும் இல்லை, அவருடைய சீடர்களான முனிவர்களும் அவர்களுடைய காதுகளால் எதையும் கேட்கவும் இல்லை.  இங்கே மகாரம் என்ற மௌனமே ஞானம் ஆகும். யோகி ஆனவர் தனது உச்சகட்ட மவுனத்தால் "தான் அவன் ஆகுதல்" அதாவது "தத்துவமசி" என்ற உயர்நிலைக்கு மாறுகிறார்.


(  சிதம்பரம் கோவிலில் தட்சிணாமூர்த்தி, சண்டேஸ்வரர் மற்றும் நந்தீஸ்வரரையும் கவனிக்க மறந்து விட்டேன். அடுத்த முறை செல்லும் பொழுது குறிப்பெடுத்து எழுதுகிறேன். )



 நர்த்தன கணபதி :-

 வெளிப் பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது, கிழக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தூணில் நடன கணபதி  செதுக்கப்பட்டிருக்கும். இவர்  வலது காலை உயர்த்தியும், இடது காலை ஊன்றியும் நடன கோலத்தில் இருப்பார்.  உயர்த்திய வலது காலை பார்ப்பது போல் ஒரு பல்லி இருக்கும்.  அந்த வலது பல்லியின் வாலும் மேல் நோக்கி வளைந்து இருக்கும். ஊன்றிய இடது காலைப் பார்த்தபடி மற்றொரு பல்லி இருக்கும், அதன் வாலும் வளைந்து கீழ்நோக்கி இருக்கும். அவரின் தும்பிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்கும். இங்கே பல அற்புத யோகஞான குறிப்புகள் உள்ளது.




 சிவன் ஆன்மாவைக் குறிப்பவர். 
 சக்தி உயிரை ( ஒற்றை அணு அல்லது வாலை ) குறிப்பவர். 
 கணபதி சுழுமுனை நாடியை குறிப்பவர். "சுருண்ட முனை" என்பது சுழுமுனை ஆச்சு. அதாவது சுருண்ட தும்பிக்கையை இது குறிக்கிறது. தும்பிக்கை இடப்பக்கமாகவோ அல்லது வலப்பக்கமாகவோ அசையலாம்.  கணபதி என்ற சுழுமுனை நாடி,  தான் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டார். ஆனால் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, தான் சாதிக்க விரும்புவதை சாதித்து விடுவார். தேவையான அளவுக்கு நீட்டிக் கொள்ளும் தும்பிக்கையின் மூலம் தாய் தந்தையரை சுழற்றி வந்து, உலகத்தையே சுற்றி வந்ததாக சொல்லி, ஞானப்பழத்தைப் பெற்றுக் கொள்வார்.  விநாயகர் மூஞ்சூறை ( முச்சுடரை ) வாகனமாகக் கொண்டவர்.   விநாயகர் ஔவைக் கிழவியை தன் தும்பிக்கையால் வளைத்துப் பிடித்து, தும்பிக்கையை நீட்டிக்கொண்டே போய், கைலாசத்தில் ஔவையாரைச் சேர்த்தாராம். இது எப்படி என்று இப்போது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.




கீழே, தும்பிக்கை நுனியில் சங்குடன் நடன கணபதி, மிகுந்த அபூர்வமான யோக நுணுக்கம் கொண்டது. இடதுகாலை ( இடகலையை ) சிறிது உயர்த்தி தும்பிக்கை நுனியில் சங்கை காட்டுவது, யோகிக்கு கிடைக்கும் நாத ஓசையைக் குறிக்கிறது.




 ஆறுமுகன் தலைமைச் சுரபியை குறிப்பவர். தலைமைச் சுரபியான முருகனால் உடலில் ( உலகில் ) உள்ள அனைத்து சுரப்பிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியும், சூட்சுமமாக சுற்றிவர முடியும். ஆனால் அவரால் வாலை எனும் வள்ளியை நெருங்க முடியாது, அதற்கு சுழுமுனை நாடி என்னும் விநாயகரின் துணை தேவை.




 ஆன்மா தனக்குக் கிடைக்கும் சூரிய ஆற்றலை உயிருக்கு அனுப்பி விடும். உயிர் அதை காந்த ஆற்றலா அல்லது வெப்ப ஆற்றலா என்பதைப் பிரித்து உணர்ந்தபின்,  சுழுமுனை நாடிக்கு கொடுத்துவிடும். சுழுமுனை நாடி, தனக்கு வரும் ஆற்றல் காந்த ஆற்றல் எனில் வலது பக்கமாக வளைந்து பெற்றுக்கொள்ளும், அதுவே வெப்ப ஆற்றல் எனில் இடது பக்கமாக வளைந்து பெற்றுக்கொள்ளும். சுழுமுனை நாடி இவ்வாறு பகுத்து உணர்ந்த ஆற்றலை தலைமை சுரபிக்கு அனுப்பி விடும். ( இந்தப் பதிவு நீண்டு கொண்டிருக்கிறது. மேற்கண்ட ஆற்றல் பரிமாற்றத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமெனில், நீங்கள் "மூளை எனும் தலைமை சுரபி" என்ற நூலை 


வாங்கி படியுங்கள் )


 இப்படிக் கிடைக்கும் காந்த ஆற்றலை இந்திரியம் அல்லது விந்து என்று சொல்லுவார்கள். சுழுமுனையின் இடது பாகத்தை பெண் என்று சொல்லுவார்கள். இப்போது நம் குருநாதரின் ஒரு ஞானப் பாடலை பார்த்தால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.

உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கி

உறங்குகின்ற போதெல்லாம் அதுவே யாகும்

பெண்ணின்பால் இந்திரியம் விடும்போது எல்லாம்

பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு

திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே யாகும்

தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்

மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார் பாரு

மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே"

 
யோகியானவருக்கு குருநாதர் சுழுமுனை நாடியில் இருந்து பரிசளித்த யோக நுணுக்கத்தின்படி, காந்த ஆற்றல் எனும் இந்திரியத்தை பெண் எனும் இடது பாகத்தில் செலுத்தும்போது, வலது கலையை உயர்த்தி நிற்பார். இதனால் அவர் மரலிகை எனும் மரணத்தில் அகப்பட மாட்டார்.

 இந்தப் பாடலை அபத்தமான பொருளில் புரிந்து கொண்டவர்கள் பல ஆயிரம் பேர்கள். இப்படி எல்லா பாடலுக்கும் ஒவ்வொரு வரிக்கும் உள்ள பொருளை எதிர்பார்க்காதீர்கள். அது மிகவும் கடினம், மேலும் குருநாதர் வராமல் அதனால் ஒரு பயனும் இல்லை. சுலபமான வழி யாதெனில் நம் குருநாதர் அகத்தீசரின் பாதத்தை உங்கள் உயிரில் பணிவை வைத்து முழுமையாக சரணடைவது மட்டுமே. அடியேன் நான் "குருநாதர்" என்று எப்போது குறிப்பிட்டாலும் அது "அகத்தீசரை" மட்டுமே, மனித குருமார்களைக் குறிப்பிடுவது அல்ல.  



சிதம்பர ஞானம் மேலும் தொடரும்.....



 இப்படிக்கு,
 அகத்திய பக்தன்.

கருத்துகள் இல்லை: