சிதம்பர ஞானம் / சைவ ஞானம் - பகுதி 2
ஓம் அகத்தீசாய நமஹ.
இதற்க்கு முந்தைய பகுதியை படித்துவிட்டு இதைத் தொடரவும்.
கால சம்ஹார மூர்த்தி :-
வெளிப்பிரகாரத்தில் உள்ள தூணில் மேற்கு பார்த்தபடி இவர் சிலை இருக்கும். சிவபெருமான் தனது வலது காலை சற்றே உயர்த்தி, காலன் என்ற எமனின் மேல் வைத்து, மார்க்கண்டேயனை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.
யோகியானவர் தனது பின்கலையை சற்றே உயர்த்தி, யோக நுணுக்கத்தால் தனக்கு வரும் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்.
மார்+கண்+டேயர் => மார்பில் உள்ள யோக கண் என்பது அனாத சக்கரம் அல்லது இருதய சக்கரம் ஆகும். அனாகதம் என்றால் சமஸ்கிருதத்தில் "தாக்கப்படாதது" என்று பொருள். இந்த சக்கரம் பிராணனை சேமித்து விநியோகிக்க பயன்படுகிறது. தவத்தில் இருக்கும் யோகி தன் இருதயத்துடிப்பை நிறுத்தினாலும், ஏற்கனவே சேமித்த பிராண சக்தியை பின்கலை வழியாக உபயோகித்து தனக்கு வரும் மரணத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறார்.
சோம ஸ்கந்தர் :-
மேற்கண்ட அதே தூணில் வடக்கு பக்கம் சோமஸ்கந்தர் சிலை இருக்கும். இதில் சிவபெருமான் தன் மனைவி குழந்தை என குடும்பம் சகீதமாக, சாந்த சுரூப சம்சாரியாக அமர்ந்திருப்பார். அவரின் தலைக்கு மேல் மற்றொரு பெண் அமிர்தத்தை கொட்டிக் கொண்டிருப்பாள். சிவபெருமானிடம் வழக்கமாக இருக்கும் அக்கினியும் உடுக்கையும் சம்சாரி கோலத்தில் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக மாய மனதிற்கான மானை இடது கையிலும், கோபத்தை ஒழிக்கும் கோடரியை வலது கையிலும் வைத்திருப்பார். சிவபெருமான் அமர்ந்த நிலையில் தனது இடது காலை சரிபாதியாக மடித்து, தனது வலது காலுக்கு அருகில் வைத்திருப்பார். அதாவது மடித்த இடது கால், வலது காலில் படாதவாறு வைத்திருப்பது முக்கியமானது. இந்த நுணுக்கம்தான் அவர் தலையின் மேல் இருக்கும் பெண்ணை அமிர்தம் கொட்டச் செய்ய வைக்கிறது. கோபம் வரும்போதெல்லாம் வலது கண்ணில் கவனத்தை செலுத்தி அதை கையாளுகிறார், மனம் மயங்கும் போதெல்லாம் இடது கண்ணில் கவனத்தை செலுத்தி அதையும் கையாளுகிறார். அப்போது தானே இரண்டு பெண்களிடம் ஒழுங்காய் குடும்பம் நடத்த முடியும்!
யோகியானவர் இடகலையை சரியாக மடக்கிய நுணுக்கத்தால், இல்லற வாழ்வு பாதிக்காத வகையில், ஒரு பக்கம் தன் மனைவிக்கு அன்புக் கணவனாகவும், குழந்தைகளுக்கு தகப்பனாகவும் வாழ்ந்து கொண்டு, மறுபக்கம் தன் தலைக்குள் இருக்கும் தன் உயிர் என்ற வாலைப் பெண்ணோடும் ரகசியமாய் சரசமாய் ( சரம் அம்சமாய் ) வாழ்ந்து கொண்டிருக்கிறார். சிரசுக்குள் இருக்கும் சீமாட்டியும் அன்பிற்க்குப் பிரதிபலனாய் அமிர்தத்தைப் பொழிகிறாள். ஒருவர் இரண்டு பெண்களிடம் வாழ்க்கை நடத்துவது மிகவும் கஷ்டமான காரியம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு குருநாதர் எனக்கு உயிர் தீட்சை தந்த பின், நான் தினசரி காலையும் மாலையும் தவறாமல் தியானம் செய்யும் பழக்கத்தில் இருந்தேன். இந்த தினசரி பழக்கம், எனது மனைவிக்கு பெரும் குழப்பத்தையும் வருத்தத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. எங்கே தன் கணவன் இப்படியே சாமியாராக மாறி விடுவானோ என்ற பயமும் கோபமும் அன்னவளை ஆட்கொண்டது. நிலைமை விபரீதமாவதற்குள் குருநாதர் அருளால் சமாதானம் செய்து விட்டேன். நான் தினசரி தியானம் செய்வதால், எந்த வகையிலும் சாமியாரோ பிரம்மச்சாரியோ அல்ல, என்பதை சரியாக விளக்கிப் புரிய வைத்தேன். இப்படி உள்ளேயும் வெளியேயும் இரண்டு பெண்களை சமாளித்து குடும்பம் நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை கீழே உள்ள பாடலின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
"ஒரு தாரம் தலையில் வெச்சு
மறு தாரம் பக்கம் வெச்ச
சிவனே சிவனே சிவனே
ஒரு போதும் மறவாதுன்னை
தெரு ஓரம் பாடும் இந்த
மகனே மகனே மகனே
கண் கொண்டு பாரும் அய்யா
வரம் ஒன்று தாரும் அய்யா
ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா
அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா
ஆற்றில் ஒரு காலை வைத்தான்
சேற்றில் ஒரு காலை வைத்தான்
சிவனே சிவனே சிவனே
கூழுக்கும் ஆசைப் பட்டான்
மீசைக்கும் ஆசைப் பட்டான்
மகனே மகனே மகனே
பறந்தோடி வாரும் அய்யா
பாவத்தைத் தீரும் அய்யா
ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா
அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா
பாடலையும் கீழே கேளுங்கள்.
சிதம்பர ஞானம் மேலும் தொடரும்.....
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக