ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

நாதம் என் வேதமே

 நாதம் என் வேதமே

ஓம் அகத்தீசாய நமஹ.


 இந்த பதிவு உங்களுக்கோ அல்லது உங்கள் குழுவுக்கோ எந்த அளவுக்கு பொருந்தும் என்று எனக்கு தெரியவில்லை. எனினும் யாரோ ஒருவருக்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பது குருநாதரின் விருப்பமாக இருக்கலாம்.  இப்பதிவில் குறிப்பிட்ட ஏதாவது ஒரு சிறு குறிப்பு அல்லது சிறிய அனுபவமோ உங்களுக்கு உபயோகமாக இருப்பின் அது குரு நாதரின் அருளாகவே இருக்கும்.















கடந்த 2015ஆம் வருடம் மே மாதம், குருநாதர் அருளால் எனக்குக் கிடைத்த அனுபவத்தை முந்தைய பதிவில் எழுதினேன்.  ஆனால் அதில் எழுதாமல் விடுபட்ட "நாதம்" என்ற பகுதியை இங்கு எழுதுகிறேன்.   பொதுவாக இது போன்ற யோக அனுபவங்களை பதிவாக எழுதும் பொழுது, எனக்கு ஏதோ நிறைய சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது போல் குற்ற உணர்வாய் தோன்றும். அதனால் இயன்றவரை எழுதாமல் காலம் தாழ்த்தி கொண்டே இருப்பேன். எனினும் குருநாதர் ஆழ்மனதில் இருந்து இதற்கான தூண்டுதலை கொடுத்துக்கொண்டே இருப்பார். ஒரு வேளை யாரோ ஒருவருக்கு இந்த தகவல் தேவைப்படலாம் என்று கருதியே இப்பதிவை இங்கு எழுதுகிறேன்.

















 அந்த விந்தையான யோக அனுபவத்திற்கு பின் எனக்கு சிரசில் ஒரு ரீங்கார ஒலி கேட்க ஆரம்பித்தது.  அது சில நேரங்களில் வீரியமாக கேட்டது, சில நேரங்களில் மிதமாக கேட்டது.  ஆரம்பத்தில் நான் அதை, அறையை சூடேற்றும் கருவியின் ஓசை என்று நினைத்தேன்.  ஏனெனில் ஜெர்மனியில் வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்து இடங்களிலும் சூடேற்றும் கருவி இயங்கிக் கொண்டே இருக்கும். சில தினங்கள் கழித்து அந்த வினோத ஒலி எனக்கு மட்டும் கேட்கிறது என தோன்றியது.  இதை உறுதிப்படுத்த ஜெர்மனில் என்னுடன் பணிபுரியும் பிரசன்னாவிடம் லேசாக தயக்கத்தோடு கேட்டேன். அவர் தனக்கு அப்படி ஏதும் ஒரு வினோத ஒலி கேட்கவில்லையே என்றார்.  அதற்கு பிறகுதான் எனக்கு சிறிது குழப்பமாக இருந்தது. ஏன் இந்த ஓசை எனக்கு மட்டும் கேட்கிறது?  குடும்ப வாழ்க்கையில் இருக்கும் நான் ஏதோ செய்யக் கூடாத யோகப் பயிற்சியை செய்து விட்டோமோ என சிறிது கவலை வந்தது.  எனினும் யோகப் பயிற்சியை தினமும் கடைப்பிடித்தேன்.  அவ்வாறு பயிற்சி செய்வது எனக்கு மிகுந்த உற்சாகமாக இருந்தது. மேலும் அந்த கடும் குளிருக்கு மிகவும் இதமாக இருந்தது யாரிடம் இதைப்பற்றி கேட்கலாம் என யோசித்தேன்.  நமது குரு நாதரின் அருள் பெற்ற தவயோகி தங்கராசன் அடிகளாரிடம் கேட்கலாம் என தோன்றியது. ஆனால் அவர் பயிற்சியின் முழு விவரத்தையும் கேட்பாரே ? என்ன பதில் சொல்வது, என கவலைப்பட்டேன்.  நான் விரும்பி யோகப் பயிற்சி செய்யவில்லை, எனக்கு எந்த மனிதகுருவும் இல்லை, என்பதை அவர் எப்படி நம்புவார்? நான் பயிற்சி செய்யவில்லை, மாறாக பயிற்சி செய்ய பணிக்கப்பட்டேன்.   எனினும் அவரிடம் மின்னஞ்சல் மூலமாக கீழ்க்கண்டவாறு கேட்டேன் நான் எதிர்பார்த்தது போல் அவரும் மேலும் அதிக விவரங்களை கேட்டார். என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே பதில் சொல்லாமல் விட்டு விட்டேன்.



கூகுள் தேடலில் இதன் பெயர் Tinnitus என்ற காது நரம்பு பாதிப்பு என பயமுறுத்தியது.  எனினும் பயிற்சியை நிறுத்த மனமில்லை, வருவது வரட்டும், ஆறிலும் சாவு நூறிலும் சாவு தான்.  மரணமே வந்தாலும் குருநாதரின் பாதத்தை தானே அடையப் போகிறேன், என தொடர்ந்து பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.  எப்போதும் நீங்காத ஒலி எனக்கு மட்டும் கேட்டு கொண்டே இருந்தது.  கடந்த 2018ம் ஆண்டின் இறுதியில் "பாண்டிச்சேரி ஞானாலயம்"  உயர் ஆன்மாக்களின் நூல்களை படிக்க ஆரம்பித்த பிறகுதான் இந்த வினோத ஒலியின் பெயர் "நாதம்" என்று தெரிந்து கொண்டேன். எங்கு செல்கிறோம், எப்படி செல்கிறோம் என்ற சரியான தெளிவு இல்லாத எனக்கு பாண்டிச்சேரி அன்பாலயம் நூல்களை  காட்டிக்கொடுத்த நம் குருநாதரின் பாதங்களை பணிந்து நன்றி தெரிவித்தேன்.  

நான் மந்திர தீட்சை பெற்ற பின் அந்த மந்திரத்தை எனது முந்தைய பதிவான "அனுபவ ஞானம் - மந்திரம்" என்ற பதிவில் உள்ளபடி கும்பகப் பிராணாயாமத்தை சேர்த்து சிறிது சிறிதாக பயிற்சி செய்ய ஆரம்பித்தேன் இது எனக்கு ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்த நாதத்தை நன்கு வீரியமான ஓங்கிய ஒலியாக செவிமடுக்கச் செய்தது.  இது என் தனிப்பட்ட சுய முயற்சிதான். இதை யார் செய்யலாம் யார் செய்யக்கூடாது என்பதை நீங்களே குருநாதரை தியானம் செய்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்தவரை அதற்கான ஆன்ம தகுதிகளை அதே பதிவில் எழுதியுள்ளேன். இறைவனின் அருளை பெறுவதற்கு நிபந்தனையற்ற அன்பு மட்டுமே மட்டுமே போதுமானது. கடுமையான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

 கும்பக பிராணாயாமத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் கீழ்கண்ட எனது அனுபவ முறைகளை முயற்சி செய்யலாம். இது நாதத்தை மேலும் மெருகேற்றும். இப்பயிற்சியின் விளைவுகளையும் நீங்கள் தாங்கிக் கொள்ளத் தான் வேண்டும். உங்கள் உடலுக்கு ஒத்து வருமா என்பதை யோசித்து முடிவு எடுங்கள்.
ரேசகம் - ஒரு மந்திரம் அளவு
 பூரகம் - இரண்டு மந்திரங்களின் அளவு 
கும்பகம் - நான்கு மந்திரங்களின் அளவு

 மேலே உள்ள பயிற்சியில் நன்கு தேறியவர்கள் ( குறைந்தது ஒரு மண்டல காலம்)  மேலும் முன்னேற விரும்புபவர்கள் கீழ்கண்ட அடுத்த பயிற்சி முறையையும் செய்து பார்க்கலாம்.
 ரேசகம் - ஒரு மந்திர அளவு
 பாஹ்ய கும்பகம் - ஒன்று அல்லது இரண்டு மந்திரங்களின் அளவு
 பூரகம் - இரண்டு மந்திரங்களின் அளவு
 கும்பகம் - நான்கு மந்திரங்களின் அளவு

 இவ்வித பயிற்சிகளின் விளைவாக அடிவயிற்றில் நாய்க்குட்டி ஒன்று  முனங்கும் ஓசை கேட்கும். மேலும் வயிற்றில் இரைச்சல்,  வீரியமான எண்ணங்களின் வெளிப்பாடு பிறகு எண்ணங்கள் மெல்ல மெல்ல அடங்கும். சிறிது சிறிதாக உலக வாழ்க்கை வெறுக்க ஆரம்பிக்கும். இந்த பயிற்சியின் பின் சுழுமுனை தியானம் செய்யும்போது நாசியில் சுவாசம் சிறிது சிறிதாக ஸ்தம்பிப்பதையும், நாதத்தில் சில மாற்று சுருதிகள் மற்றும் ஓசை வேறுபடுவதையும் நன்கு உணரலாம். உள்ளாடைக்குள்ளிருந்து பஞ்சுகள் உட்புறமாக உறிஞ்சப்பட்டு உடலில் ஒட்டியிருக்கும். உடல் உருகி கிட்டத்தட்ட மரணத்தை நோக்கிய பாதைதான். அதனாலேயே பல ஞானிகளும் சித்தர்களும் இதை வேண்டாம் என அறிவுறுத்தினார்கள்.
 மேற்கண்ட பயிற்சியில் நன்கு தேறியபின், சில யோகிகள், குருநாதர் அருளால் உச்சிஷ்ட கணபதி நுணுக்கங்கத்தோடு ஹடயோகம் முத்திரைகளும் சேர்ந்த பயிற்சிகளை செய்வார்கள். இதை மனிதர்கள் சொல்வது நிச்சயம் சாபத்தை கொடுக்கும் இதை சுழுமுனை நாடியில் குருநாதரே நின்று உபதேசிப்பார்.  இன்னும் சில யோகிகள் இந்த யோகப் பயிற்சிகளோடு பாதரசத்தையும் உபயோகம் செய்வார்கள். பாதரசம் என்பது ஒரு விஷம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். எனினும் அந்த யோகியர்கள் இது போன்ற பயிற்சிகளை ஆபத்து என நன்கு தெரிந்தும் செய்வார்கள்.

 சரி, மீண்டும் எனது அனுபவத்திற்கு வருவோம். எப்போதும் எனக்கு கேட்டுக் கொண்டிருந்தத ரீங்கார நாதம்,  சில ஆண்டுகளில் மாற்றத்தை உணர முடிந்தது. ஒரு முறை மானாமதுரை பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி ஆலயத்திற்கு மகா சண்டி யாகத்திற்காக சென்றபோது, இறுதி நாள் மாலை அமைதியாக யாக சாலைக்கு அருகே அமர்ந்து நாதத்தோடு தியானம் செய்து கொண்டிருந்தேன். வழக்கமான நாதத்தில் ஆச்சர்யமான மாற்றம் இருந்தது. அப்போது குழம்பு கொதிக்கும் தலபுல சத்தம் கேட்க ஆரம்பித்தது.  இன்னும் உன்னிப்பாக கவனித்ததில் அது மத்தள நாதமாக கேட்டது. இது சில சமயம் டம்டம் என வீரியமாகவும் கேட்கும்.  அதே ஆலயத்தின் ஸ்தல விருட்சமான தான்றி மரத்திற்கு அடியில் பகல்பொழுதில் தியானம் செய்யும் பொழுது வழக்கமான ரீங்கார நாதம், வீணை நாதமாக மாற்றமடைவதை கவனிக்க முடிந்தது.

நாதத்தில் இன்னும் பல படிநிலைகள் கடக்கவேண்டி உள்ளது. குருநாதர் பாதம் போற்றி.  என்னைப் போன்று பல விதமான வேறுபட்ட மார்க்கங்களை சார்ந்தவர்களும், பாண்டிச்சேரி ஞானாலயத்தில் தீட்சைகளைப் பெற்று ஆன்ம முன்னேற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  

 மேலும் சில கேள்வி பதில்களையும் இங்கு பார்ப்போம். நானே எனது அனுபவத்தை, சுய புராணமாய் பாடிக் கொண்டே இருப்பதில் என்ன பலன் ?  உங்களுக்கும் ஏதாவது ஒரு சிறு குறிப்பாவது இங்கே உபயோகமாகும் என்று நம்புகிறேன். நீங்களும் குருநாதர் அருளால் நாதத்தை செவிமடுக்க வேண்டும், என்பதே எனது விருப்பம்.

கேள்வி பதில்.

1) மேற்கண்ட பயிற்சி செய்பவரின் உணர்வுநிலை என்ன?

பாடல் பதிவாக.

http://fireprem.blogspot.com/2021/07/blog-post.html?m=1


2) உச்சிஷ்ட கணபதி நுணுக்கம் என்றால் என்ன?

http://fireprem.blogspot.com/2022/03/blog-post.html?m=1


3) ஞானம் பெறுவதற்க்கு இவ்வளவு கஷ்டமான பயிற்சிகள் அவசியமா?

 அவசியம் இல்லை. எளிதாகவே ஞானத்தை பெறலாம். அடியேன் நான் இந்த இந்த பயிற்சிகளை செய்வேன் என்று ஆன்ம நிர்ணயம் கொண்டு பிறவி எடுத்தால் அதை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

http://fireprem.blogspot.com/2018/10/blog-post.html?m=1


4) 2015 ஆம் ஆண்டில் கிடைத்த யோக அனுபவம் என்ன?

http://fireprem.blogspot.com/2018/11/blog-post_29.html?m=1


http://fireprem.blogspot.com/2017/03/2017.html?m=1


5) அனுபவ ஞானம் - மந்திரம். பதிவில் என்ன உள்ளது?

http://fireprem.blogspot.com/2021/10/2.html?m=1


6) கும்பக பிராணாயமத்திற்கான ஆன்ம தகுதி என்ன?

http://fireprem.blogspot.com/2021/08/?m=1


7) கும்பகம் பற்றி சித்தர்களின் கருத்து என்ன? செய்யலாமா   கூடாதா?

https://fireprem.blogspot.com/2017/03/blog-post.html?m=1


8) நாதம் செவிமடுக்க, மற்ற யோகிகள் எழுதிய எளிய நுணுக்கங்கள்.

http://tamilmarmayogam.blogspot.com/2015/06/blog-post_25.html


https://psychologicallyastrology.com/2020/03/09/sounds-heard-during-mediation/


https://www.yogameditation.com/reading-room/nada-yoga/


http://www.ipn.at/ipn.asp?BJE


https://auromere.wordpress.com/2010/02/12/the-subtle-sounds-which-indicate-progress-in-yoga/


https://medium.com/@anamcaramanila/the-subtle-sounds-which-indicate-progress-in-yoga-d13a599c8dc0


9) உயர்ந்தது எது? குருநாதரா? நுணுக்கங்களா?

http://fireprem.blogspot.com/2018/08/blog-post.html?m=1


10) ஒருவர் பொதுவாக, எந்தக் காலகட்டத்தில் ஞானத்தைத் தேடுவார்?























http://fireprem.blogspot.com/2017/09/blog-post.html?m=1



இப்படிக்கு,

அன்புடன்

அகத்திய பக்தன்.



2 கருத்துகள்:

Sailaja சொன்னது…

Om Agateesaya Namaha! Namaskaram Prem Aiya, is there an email I can reach you? Thank you, Sailaja

Agathiya Bakthan சொன்னது…

amma, my mail is vsmprem@gmail.com