நினைக்கும்போதே புண்ணியம் பெருகும் குருநாதரின் பாதம் பொற்றி.
அடியேன் போடிநாயக்கனூரில் பிறந்து மூன்று வயதில் விபரம் தெரிய ஆரம்பிக்கும்போதே, "நான் யார்? இதுவரை எங்கிருந்தேன்?" என்ற கேள்விகள் என்னை எப்போதும் சிந்தனையில் ஆழ்தியது. சிறிய குழந்தைக்கு சிறிதும் பொருந்தாத ஒரு ஆழ்ந்த சிந்தனை கொண்ட முகத்தில் இருக்கும் நான், எனது குடும்பத்தாருக்கு ஒரு புரியாத ஜந்துவாகவே இருந்தேன். சதா சர்வ காலமும் ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு முக்கிய சாலையைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன், சிறையில் அடைக்கப்பட்ட வேற்று கிரகவாசியாய்...
எனது குழந்தைப் பருவத்தில், எனது முதல் ஆன்மீக குருவான எனது கொள்ளு பாட்டி, விநாயகர் முருகன் சிவன் என பக்தி வழிபாட்டை சொல்லித்தந்தாள். தர்மம் செய்தால்மட்டுமே இறைவனை நெருங்கமுடியும் என்று என்னைப் பக்குவப்படுத்தினாள். கொள்ளு பாட்டி, காதில் தண்டட்டி அணிந்த ஒரு தங்க தேவதை. போடி உலவம்பஞ்சு போன்ற மென்மையான கைகளை எனது சிரசில் வைத்து, அவள் ஆன்ம மின்சாரத்தை என்னுள் பாய்ச்சி, எனக்கு முதல் ஆன்மீக தீட்சையை அளித்தாள். இதுவே அடியேன் என்னை இன்றுவரை காத்து இரட்சிக்கிறது. உலகம் அறியாத பாலகனாய் என் பாட்டியிடம் கேட்ட முதல் கேள்வி, "பாட்டி! கடவுள் இருக்கிறாரா? இல்லையா?" பாட்டி சொன்ன பதில், "இருக்கிறார் என்றால் இருக்கிறார், இல்லை என்றால் இல்லவே இல்லை". அவ்வளவு சிறிய வயதில் இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப் புரிந்து கொள்ள வெகுகாலம் ஆனது. இந்த பக்தி மார்க்கத்தில் நான் எனது பதினைந்து வயது வரை எல்லோரையும் போல் சென்றேன்.
எனது பதினைந்தாவது வயதில், வேதாத்திரி மஹரிஷியின் ( அறிவு திருக்கோவில் ) மனவளக்கலை மன்றத்தில் சேர்த்து யோகா மற்றும் தியானம் கற்றுக்கொண்டேன். கடவுளுக்கான ஒரு புதிய விளக்கம் அங்கு எனக்கு கிடைத்தது. அறிவுத் திருக்கோவிலின் யோகா, அகத்தாய்வு, புறத்தாய்வு மற்றும் காயகல்ப பயிற்சிகள் கற்று "அருட்செல்வர்" என்ற சான்றிதழ் கிடைத்தது. இந்த மகரிஷி யோக மார்க்கத்தில் பத்து ஆண்டுகள் ( எனது இருபத்தி ஐந்து வயது வரை ) இருந்தேன். ஆனாலும் எனக்குள் முழு தெளிவு இல்லை. இன்னும் ஏதோ ஒரு விஷயம் குறைவாக இருப்பதாக உணர்ந்தேன். மெய்ஞான தத்துவத்திற்கும் நிதர்சனத்திற்கும் இடையே ஒரு மெல்லிய இடைவெளியை கண்டேன். வேதாத்திரி மகரிஷி இந்த இடைவெளியை வேண்டுமென்றே ஆரம்ப காலத்தில் ஏற்படுத்தியதை பின் நாளில் நான் உணர்ந்தேன். இந்த மெல்லிய இடைவெளியால் தான் இந்த ஞான அமைப்பு, உலக அளவில் பெரிதும் பரவி இருக்கிறது. கசப்பான சத்தியத்தை அவர் ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தால், இந்த அளவிற்கு பெருவாரியான மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள்.
எனது இருபத்தி ஆறாவது வயதில், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஒரு விபத்து ஏற்பட்டு பத்து நாட்கள் படுக்கையில் கிடந்தேன். இந்த காலத்தில் ஒரு மனமாற்றம் என்னுள் ஏற்பட்டது. ஒரு மனிதனுக்கு மனமகிழ்வு மிகவும் முக்கியம். வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடையாளப்படுத்தும் கடவுள் மஹாவிஷ்ணுதான் என்று என் மனதில் ஆழமாக தோன்றியது. எனது சகோதரனும் ஆருயிர் தோழனுமான பழனி சிவராமராஜா என்னை முதன்முதலாக திருப்பதி அழைத்துச் சென்றான். திருப்பதி பெருமாளை நெருங்கும்போது பெற்றதாயை வெகுகாலம் பிரிந்துசேர்வதுபோல் அழுகை பீறிட்டது. இரண்டுமணிநேரம் தொடர்ந்து விம்மி அழுதேன்.
நான் தீவிர விஷ்ணு பக்தனாக ஆனேன். இது என் மனதை மிகவும் மகிழ்வாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்தது. பல விஷ்ணு கோவில்களுக்கு சென்று வணங்கினேன். விஷ்ணுவின் நூற்றியெட்டு நாமம், ஆயிரத்தியெட்டு நாமம், ஜெப மாலை வைத்து ஓம் நமோ நாராயணா என ஜெபித்தல் என்று வாழ்க்கை சிறப்பாக சென்றது. இந்த காலகட்டத்தில் திருமணம், குழந்தைகள், பொருளாதார மேம்பாடு, தொழில் மேம்பாடு, மேற்படிப்பு (MCA ) மற்றும் பல அயல்நாட்டு பயணங்கள் என அனைத்தும் சிறப்பாக சென்றது.
கடந்த 2007 ஆம் வருடம் நான் பெங்களூரில் பணி செய்துகொண்டிருந்தபோது பெற்ற விசித்திர அனுபவம் இது. நான் அப்போது தீவிர பெருமாள் பக்தனாக இருந்தேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாமிசம் தவிர்த்துவிட்டு, குடும்பத்துடன் பெருமாள் கோவில் செல்வது வழக்கம். (குருவருளால் கடந்த 2012 முதல் முழுமையான சைவ உணவுக்கு குடும்பத்தோடு மாறிவிட்டோம்.) எம்பெருமாள் மேல்கொண்ட காதலால் நாலாயிரத்திவ்ய பிரபந்த பாடல்களில் பலவற்றை மனனம் செய்வது, பெருமாளின் ஆயிரெத்தெட்டு நாமங்களை ஜெபித்து வணங்குவதும், எம்பெருமாளின் மேல் கவிதைகள் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.
அந்த தேடல் என்னை பிராணாயாமத்திற்கு கொண்டுசென்றது. முதல் தேடல் பதிவாக, எழுத்து சித்தர் பாலகுமாரனின் சிங்கப்பூர் மேடைபேச்சு பிராணாயாமம் பற்றியது வந்ததை கேட்டேன் ( இணைப்பு https://youtu.be/BOq8eWcaEl4 ) . உடனே அகத்தியரை வணங்கி என் மூச்சை 10 வினாடிகள் பிடிக்க முயற்சித்தேன். மூச்சை பிடிக்கும்போது என் மனதில் பெரிய பெரிய பேய் உருவங்கள் வந்து பயமுறுத்தியது. அகத்தியர் அருளிய ஆஞ்சநேயர் வசியக்கட்டு மந்திரம் தேவையற்ற பயத்தை போக்கியது. என் மூச்சை சிறிது சிறிதாக எண்பது வினாடிகள்வரை அடக்கிக்கொள்ள பயின்றேன். இது என்னை முழுதுமாக பக்தி மார்கத்திலிருந்து யோகமார்க்கத்துக்கு கொண்டுசென்றது. நான் ஆறு மாதத்தில் பன்னிரண்டு கிலோ எடை குறைந்தேன். தினமும் நல்ல சுறுசுறுப்பு, மைனஸிலுள்ள கடும்குளிரை எளிதாக தாங்கினேன். கடந்த 2015 ஆம் வருடம் மே மாதம் ஒரு மாலை வேளையில் எனக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. எனது முறையில்லாத பிராணாயாமத்தோடு, ஹடயோகத்தின் சில விபரீதமான யோகா அப்பியாசத்தையும் இணைத்து செய்தேன் (இதன் ஆபத்து கருதி மேலும் விளக்க எனக்கு அனுமதி இல்லை). ஆபத்தான ஹடயோக ஆசன பயிற்சியோடு மூச்சையடைக்கி வெளியிடும்போது, சட்டெனெ என் உயிர் எனது உடலிலிருந்து பிரிந்து ஏதோ ஒரு பிரகாசமான ஒளிக்கூட்டத்திற்குள் சென்றுவிட்டேன். என்ன நடந்தது? என என்னால் சில நிமிடங்களுக்கு யூகிக்கமுடியாமல், அந்த ஒளிகூட்டத்திற்குள் நான் கலந்து இருப்பது மிகுந்த ஆச்சர்ய ஆனந்தமாக இருந்தது. ஆனால், இந்த முறை நல்ல சுயநினைவுடன் என்னால் நன்றாக யோசிக்க முடிந்தது. திடீரெனெ எனது அறையும் அங்கிருந்த நாற்காலி மேசை கட்டில் எல்லாம் எங்கே போனது? என தேடிப்பார்த்தேன். அங்கு பரந்த ஒளியைத்தவிர எதுவுமே இல்லை. எனக்கும் எந்த உருவமும் இல்லை, ஆனால் யோசிக்க முடிகிறது. சில நிமிடங்கள் என்ன செய்வது என புரியாமல் இருந்துவிட்டு, மீண்டும் என் உடலுக்குள் போகவேண்டும் என்று விரும்பினேன், எப்படி போவது என்று புரியாமல் கவலை கொண்டேன். ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோமே, இனி எனது உடலுக்குள் எப்படி செல்வது? என்று தெரியவில்லையே என யோசித்தேன். இதற்க்கு முந்தய வருடம் பக்திமார்க்கமாக அகத்திய மகாமுனி அய்யாவை வணங்கி, அவர் குருமந்திரத்தை பலமுறை பலநாட்கள் ஜெபித்து சித்திசெய்தது ஞாபகம் வந்தது. இனி அகத்தியர் தான் என்னை இங்கிருந்து காப்பாற்றவேண்டும் என்று முடிவுசெய்து, நான் ஏற்கனவே சித்திசெய்த குருமந்திரைத்தை தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தேன். சிலநிமிடங்களில் யாரோ மேலிருந்து கீழ்நோக்கி அழுத்துவதுபோல் இருந்தது. சட்டெனெ நான் என் உடலுக்குள் வந்துவிட்டேன். நான் அதே அமர்ந்த நிலையில் என் அறைக்குள் இருந்தேன். அப்பாடா தப்பித்துவிட்டோம் என நிம்மதி வந்தது. நான் என் இஷ்டத்திற்கு விளையாட்டாய் செய்த தவறை தாயின் கருணையோடு மன்னித்து, என்னை புதிதாய் பெற்றெடுத்த என் குருபாதம் போற்றி போற்றி. கருணைமிகு பொதிகைமுனி பொற்பாதம் போற்றி போற்றி. இந்த நிகழ்விற்குப் பிறகு பலநாட்கள் உடல்ரீதியான சில தொந்தரவுகளும் வலியும் இருந்தது.
***எச்சரிக்கை: இதைப் படிக்கும் நீங்களும் வழிகாட்டுதல் இல்லாமல் முயற்சிக்க வேண்டாம். இது உங்கள் உயிருக்கு ஆபத்தானது. இருப்பினும் என் இஷடத்துக்கு மூச்சை அடக்குவது சரியா? என தெரியாமல் சிறிது வருந்தினேன். பக்கவிளைவாக எனக்கு அடிக்கடி வயிற்றில் ஊசியால் குத்துவதுபோன்ற வலி ( குன்ம நோய் ) ஏற்பட்டது.
இந்த நோய்க்கு தீர்வு என்னவென்று குரு அகத்தியரை தியானம் செய்தேன். இரவு உறங்குமுன் திரிபலா சூரணம், காலையில் ஒரு கட்டி வெண்ணை உண்டேன். ஒரு மாதத்தில் நல்ல பலன்கிடைத்தது, வயிற்று வலி குருவருளால் குறைந்தது.
( வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ஜெர்மனி தங்குமிடம் )
எனது பிராணாயாமத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டியை காண்பிக்குமாறு குரு அகத்தியரை தினமும் வேண்டினேன். குருவருளால் மதுரையில் உள்ள ஒரு பேராசிரியரின் தொடர்பு கிடைத்தது. அவர் தனது இணையதளத்தில் உள்ள "வீட்டில் வாசியோகம்" படித்து பயில சொன்னார். மேலும் அவர் வாசி பிராணாயாமத்தை மூலாதாரத்தில் மட்டும் செய்து இல்லற வாழ்வை நன்கு முழுமையாக அனுபவிக்க அறிவுறுத்தினார். இது எனக்கு மிகுந்த புத்துணர்வையும் நிம்மதியையும் தந்தது. எனது அனுபவத்தில், இறைவன் அருளைப் பெற்று வாழவும், இறுதியில் இறைவனை சேரவும், முக்தி பெறவும் கடுமையான பயிற்சிகள்தான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் அனைவரும் நமது உலக வாழ்வை இனிதாக அனுபவித்துக் கொண்டே அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கி எளிதாக இறைவன் அருளை பெற்று வாழ்ந்து, இறைவனோடு எளிதாக சேர வழிகள் உண்டு.
மிகவும் அனுபவம் வாய்ந்த யோகா ஆசிரியர்களும் கற்றுத்தர பயப்படும் சூட்சுமத்தை என்னையும் அறியாமல் என்னை ஏன் 2015 ஆம் ஆண்டில் செய்யவைத்தார் ? என பலமுறை நான் யோசித்திருக்கிறேன்.
சில நாட்களுக்குமுன் எதேட்சையாக என் ஜாதக நோட்டை எடுத்துப்பார்க்கும் போது, ஒரு விஷயம் பளிச்சிட்டது. 2015 ஆம் ஆண்டில்தான் எனக்கு ஞானகாரகனான கேதுவின் திசை ஆரம்பித்திருக்கிறது !!! கிராமங்களில் பேச்சு வழக்கில் சொல்வார்கள் "எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வர வேண்டும்" என்று. என்னை ஈன்ற பரம்பொருளை சரணடைய இத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டி உள்ளது. மேலும் கொஞ்சம் கர்மவினையும் வேண்டும். அதற்குத்தான், பெரியோர்கள் அடிக்கடி தர்மம் செய், ஆலயம் தொழு என்று கூறுகிறார்கள். இதே கேது திசையில் தான் பைத்தியம் என்ற பெயரும் கிடைக்கும். பிறகென்ன? மெத்தப்படித்த மேதாவிகள் நிறைந்த இவ்வுலகில் ஞானம், சித்தர்கள் , கடவுள் என்றால், அவன் பைத்தியம் தானே ?
மேலே உள்ள பகுதியில் அடியேன் குறிப்பிட்ட பயம், அக்னி, உடல் இளைத்தல் அனைத்தும் இந்த திசைக் காலத்திற்கு பொருந்துகிறது, ஆனால் நம் தந்தை அகத்தியர் அருளோடு அரவணைப்போடு கடக்கப்பட்டது.
உங்கள் ஒவ்வொருவர் ஜாதகத்திலும் கேதுதிசை ஏழு வருடங்கள் வரும். கேது ஞான காரகன் மோட்சகாரகன். ஒவ்வொரு கிரகத்திற்கும் நல்ல பலனும் உண்டு, சில கெட்ட பலனும் உண்டு. நல்ல இறைவழிபடும், ஒரு சித்த ஞான குருவின் அருளோடும் வாழ்க்கையை நாம் நல்ல வழியில் கடந்து செல்லலாம். சாமியாவது, சித்தராவது... அட! வாழ்க்கையை நல்ல enjoy பண்ணலாம் என்று கர்மா சூட்சுமத்தை உதாசீனம் செய்தால், படுபாதாளத்தில் விழுந்து அழ வேண்டியதுதான். உதாரணமாக, கேதுவின் காலத்தில் தீய தாக்கம் இருந்தால், கெட்ட சகவாசத்தால் அவமானம், பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும்.
மனித ஜென்மம் எடுத்துவிட்டால் குழந்தைப் பருவம், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பெற்று வளர்ப்பது, பாசம், ஆசை, இன்னும் வாழவேண்டும் என்ற ஏக்கம், இறுதியில் மரணம். இப்படித்தான் பிறந்து பிறந்து மரணிக்கிறோம். இந்த கர்மாவின் சுழற்சியில், தான் யார், இறைவன் யார், தான் எந்த வகையில் இறைவனோடு சம்பந்தப்பட்டோம் என்பதை சிந்திக்க இறைவன் நம் அனைவருக்கும் வாய்ப்பு தரத்தான் செய்கிறார். நாம் தாம் அதை பெரும்பாலும் உதாசீனம் செய்கிறோம். (நான் தட்டச்ச்சு செய்யும் மென்பொருள் அதிக எழுத்துப் பிழை செய்கிறது. அருள்கூர்ந்து பொறுத்தருள்க.).
ஞானம் தேடுவதைப்பற்றி எழுதுவதும், படிப்பதும் நன்றாகத்தான் உள்ளது! ஆனால் நடைமுறையில் எளிதா வென்றால்... சிரமம்தான். ஒருவன் தன் பொறுப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல், சதா சாராயம் குடித்துக் கொண்டே இருப்பனாகில், அவனை இந்த சமூகம் "அவன் புத்தி கெட்டு விட்டான், இனியென்ன செய்வது? அடுத்து ஆகுற வேலைய பார்ப்போம்" என சகித்துக் கொண்டு அவரவர் வேலையை செய்வார்கள். அல்லது ஒருவன் அல்பாயுசு நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதில் இறந்து போனால், "அவன் விதி அவ்வளவுதான்" என்று சொல்லி ஒரு பதினாறு அல்லது முப்பது நாட்கள் துக்கப்பட்டுவிட்டு "அடுத்து ஆகுற வேலைய பார்ப்போம்" என்பார்கள். ஆனால், அதுவே ஒருவன் தன்னை அறியும் ஞானத்தில் ஒரு பத்து நிமிடம் மௌனமானாலும், அவனை கொதிக்கும் கல்லில் கிடத்தி கொத்து பரோட்டா போடுவார்கள். இதில் பெரிய சவால் என்னவென்றால், கருணையே வடிவான இறைவனை வணங்கிவிட்டு தன்னை வருத்தம் கொள்ளச் செய்யும் யாரையும் கோபப்படவும் கூடாது, சபிக்கவும் கூடாது. யேசுநாதரைபோல் மறு கன்னத்தையும் காட்டவேண்டியது தான். கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க விரும்பினால், நாம் கோவில் திறந்த நேரம் தான் செல்லமுடியும். நம் இஷ்டப்பட்ட நேரத்திற்கு சென்றால், கோவில் நடை சாற்றப்பட்டிருக்கும். ஒவ்வொரு கிரஹ திசை மற்றும் கிரஹ பெயர்ச்சி காலத்திலும், இறைவன் நமக்கு காட்டும் நல்ல விஷயங்களை கவனமாக எடுத்துக்கொண்டு நமது அன்றாட வாழ்க்கையை சிறப்பொடு எடுத்துச் செல்வோமாக.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் குருவருளால் யோகமார்கத்தின் பல சித்தர்களின் நூல்கள் படிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. மேலும் அனுபவத்தை இனி வரும் பதிவுகளில் பதிவிடுகிறேன்.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.
வாழ்த்துக்கள் ஐய....
பதிலளிநீக்குஇறை அருள் பெறுக!!! தான் அவன் ஆகுக!!!
பதிலளிநீக்கு