சித்தர்களின் கிரிப்டோகிராபி
பரிபாஷை : கன்னிப் பெண்ணைப் புணர்தல் அல்லது போகம் செய்தல்.
சித்தர்கள் யோக மார்க்கத்திற்காக சொன்ன பரிபாஷையை மேலோட்டமாக படிக்கும் பொழுது தவறான விளக்கத்தைத் தந்துவிடும். சித்தர்கள் பரிபாசை புரியாவிட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால் தவறாகப் புரிந்து விட்டால் மிகவும் ஆபத்து.
சித்தர்களின் பொருள் :-
நமது மனதை ( வெளிமனம் ) வகாரம் அல்லது வாயு மூலக்கூறு என்று சித்தர்கள் கூறுவார்கள். இதற்கான குறியீடு "வா".
நமது உயிர், வெப்பத்தன்மை கொண்டது. இயங்கு சக்திக்கு ஆதாரமானது. ஆழ்மனத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டது. சித்தர்கள் நமது உயிரை பல பெயர்களில் அழைப்பார்கள். கன்னிப் பெண், உகாரம், வாலை, சிகாரம், வன்னி என்ற பல பெயர்கள் உண்டு. இதற்கான குறியீடு "சி".
இங்கே "வா" என்ற வெளிமனத்தை "சி" என்ற உயிர் அல்லது ஆழ்மனத்தோடு இணைப்பதையே, "வாசி"யோகம் என்று அழைக்கிறார்கள்.
தன் மனதை, தன் உயிரை நோக்கி செலுத்தும் பொழுது உடனே பலவிதமான எண்ணங்கள் குறுக்கீடு செய்து தடை செய்து விடும். அது அவ்வளவு சுலபம் அல்ல. நீண்ட காலம் தொடர்ந்து பயிற்சிகள் செய்ய வேண்டும். கர்மாவை நீக்கிக் கொள்ள வேண்டும். மாயா மற்றும் ஆணவத்தில் நல்ல தெளிவு இருக்க வேண்டும்.
போகநாதர் என்ற சித்தர் இந்த வாசியோகத்தின் மூலம், கன்னிப் பெண்ணான உயிரை தன் மனதோடு இணைத்து அல்லது புணர்ந்து அல்லது போகத்திலேயே இருந்ததால் அவருக்கு "போகர்" என்ற பெயர் உண்டாச்சு. இப்போது உங்களுக்கு புரிகிறதா? ஒருவர் தன் தமிழறிவை மட்டும் வைத்துக்கொண்டு, இந்த பாடல்களைப் புரிய முயற்சி செய்யும் பொழுது, என்ன ஆபத்து வரும் என்று புரிகிறதா?
அடியேன் எனக்கு இந்த சிறிய சூட்சுமம் புரிந்து கொள்வதற்கு ஆறு வருடங்களுக்கு மேல் ஆனது. பல ஆயிரக்கணக்கான சித்தர் பாடல்களைப் படித்தும், யோகப் பயிற்சி செய்தும், ஓரளவிற்கு தான் புரிந்தது. பாண்டிச்சேரி ஞானாலயத்தின் முக்கியமான நூலான "கலியுக காவியம் ஆன்மாவின் சுயசரிதை" என்ற நூலை படித்தபின் குருநாதர் அருளால் நன்றாகப் புரிய ஆரம்பித்தது.
அதிகாரம் உள்ளோர் தவறாகப் புரிந்து கொண்டால் வரும் விளைவு :-
சித்தர் பாடல்களைப் புரிந்து கொள்வதற்கு எவ்வளவு பெரிய தமிழ் அறிஞரானாலும் அல்லது தமிழ் பேராசிரியரானாலும் இயலாது. சித்தர்கள் தன் உயிரோடு தன் மனதை இணைப்பதை, கன்னிப் பெண்ணோடு புணர்ந்தேன், அதனால் ஆயுள் நீடிக்கும், ஆரோக்கியம் நீடிக்கும் என்றெல்லாம் பாடல்களில் சொல்லி இருப்பார்கள். இதை சிலர் தவறாக புரிந்து கொண்டு கன்னிப் பெண்களை ஏமாற்றியோ மிரட்டியோ புணர்ச்சி செய்வது மூடநம்பிக்கையானது சாபக்கேடானது. இதில் சிலர் எதேச்சையாகவே தன் விதிப்படிக்கு 90 வயதிற்கு மேல் நீண்ட காலம் வாழ்ந்து விடும்பொழுது, இந்த சாபக்கேடான செயலினால் தான் தன் ஆயுள் நீடித்ததாக அவரது வாரிசுகளும் நம்பி விடுவார்கள். இதனால் கன்னிப் பெண்களை மிரட்டி கற்பழிப்பதும், பிறகு அதை அதிகாரத்தால் மறைத்து விடுவதும் இந்த கலியுக எல்லைக்காலத்தின் கொடுமையான செயல்.
உங்கள் மனதின் கேள்வி :-
அனைத்தையும் வெளிப்படையாக எழுதுவதற்கு எனக்கு குருநாதரிடம் அனுமதி கிடைக்கவில்லை. இதையெல்லாம் கடவுளோ சித்தர்களோ கேட்க மாட்டார்களா தண்டிக்க மாட்டார்களா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அவ்வாறு கேட்க முடியாததற்கு காரணம் அந்த முந்தைய பிறவிகளின் கர்மா தான். யாருக்கு அப்படி அதிகப்படியான கர்மா சேர்ந்து உள்ளதோ அவர்களே இந்த கொடுமைக்கு பலியாகி விடுவார்கள்.
ஒரு பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கொடுமையான சம்பவம் நிகழ வேண்டும் என்று திட்டமிட்டது யார்?
இதற்கான மிகச் சரியான பதிலை நம்புவதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கலாம். அந்தப் பெண்ணின் "உயிர்" தான் இந்த கொடுமையான சம்பவத்திற்கு திட்டமிட்டு சிக்க வைத்தது. காரணம் -> பதிந்து வைக்கப்பட்ட முந்தைய கர்மா தான் அதற்குரிய தீயவர்களை ஈர்த்து கொடுமைகளை செய்யவும் வைத்தது!!!.
தீர்வு :-
எனில் இதற்கான தீர்வு தான் என்ன? குருநாதர் அளித்த ஒரே தீர்வு, "ஆன்ம விடுதலை" என்ற குறிப்பிட்ட மனப் பக்குவம் தான். இதனாலேயே கர்மாவின் வீரியம் குறைக்கப்படும் அழிக்கப்படும்.
நம் குருநாதர் அளித்த எளிய வழிமுறையை கீழ்க்கண்ட பதிவில் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள்.
மோட்ச தீப ஞானம் - துன்பங்களை நீக்கும்
http://fireprem.blogspot.com/2024/10/blog-post.html?m=1
(( இன்றைய யுகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கான வழி அவர்கள் தற்காப்புக்காக வைத்திருக்கும் சிறிய கத்தி மற்றும் மரண பயமற்ற மனநிலையில் தான் உள்ளது. . எனில், அந்த மரண பயமற்ற மனநிலை பெண்களுக்கு எப்படி கிடைக்கும் ? மேலே உள்ள பதிவு புரிவதற்கு உதவும். ))
குறிப்புகள் :-
1) நமது உயிரான பராசக்தி அல்லது கன்னிப் பெண்ணைப் பற்றிய மேலும் அற்புதமான குறிப்புகளை கீழே உள்ள பதிவில் எழுதியுள்ளேன்.
http://fireprem.blogspot.com/2022/11/blog-post.html?m=1
2) உயிரான பராசக்தி ( ஆழ்மனம் ) விரும்பினால் கர்மாவின் வீரியத்தைக் குறைக்க முடியும். உதாரண விளக்கம் கீழ்க்கண்ட பதிவில் உள்ளது.
http://fireprem.blogspot.com/2022/03/blog-post_12.html?m=0
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக