நாய் ஞானம்
அன்பான அகத்தீசர் பாதம் பார்த்தேன்,
வம்பான வினை எல்லாம் பறந்து போச்சு.
விசுவாசம் மேலோங்கி நாயாய் ஆச்சு,
பொதிகை முனி பாதத்தை நாவால் நக்கு.
புகழான அபிஷேகம் மனதால் பண்ணு, கும்பமுனி கூட்டத்தோர் பாதம் நக்கு.
பரிதாயின் பாதத்தைப் பாய்ந்து நக்கு,
பக்குவமாய் பாய்வதற்கே பழக்கம் பண்ணு.
நக்கியதால் நாயன் என்ற நாமம் ஆச்சு,
ஞாயிறைப் பணிந்ததாலே ஞமலியாச்சு.
நாய் என்றால் மலைநாயாம் சதுரகிரியிலே,
மலையேறும் உயிர்களுக்கு துணையாய் வருவேன்.
புறத்தினிலே கும்பம் வைத்து பூசிப்போர்க்கு,
புகழான செல்வங்கள் வந்து சேரும்.
அகத்தினிலே கும்பம் வைத்து பூசிப்போர்க்கு,
அண்டத்தில் ஆட்சிதனை செய்யலாமே.
கும்ப பானம் பணிந்து அருந்த குறைவே இல்லை,
அகம் தனிலே தீ தானே வளர்ந்து நிற்கும்.
ஈரடியின் முதல் சொல்லை இணைத்துப் பாரு,
கும்பித்த அகத்தினிலே சிகார வன்னி.
விந்தைமிகு ஓசை ஒன்று எட்டிப்பார்க்கும்,
பொங்கிவரும் நாதம் என்று சொல்லுவார்கள்.
வணங்கியே எப்போதும் கேட்டாயானால்,
சுகமான சுருதி தானே மாற்றிக்காட்டும்.
மேன்மைமிகு மானிடருக்கு வேண்டாமைய்யா,
விண்ணோக்கி ஊளையிடும் நாய்க்கு மட்டும்.
நெருப்பான பைரவருக்கு வாகனம் ஆனேன்,
இராமநேசன் எனக்களித்த வாயுவாலே.
வகாரம் என்ற வாயுதனை வாகாய் வாங்கி,
சிகரம் என்ற நெருப்பதனை மூட்டிச் சேர்த்தேன்.
வன்மைமிகு வாசி என்ற வாளைச் செய்தேன்,
குவலயத்தில் கலியவனை வெல்வதற்கே.
கெடிதான வாள்ப்பயிற்சி விண்முகடு மட்டும்,
பிறகென்ன வாளதனை உரையில் போடு.
அழகியதோர் அன்னம் போல் பறந்து போனேன்,
அன்னமே ஆனாலும் கள்ளம் பறையேன்.
இருள் வெளியில் ஈசனை தான் தேடி வந்தேன்,
கனத்ததோர் நந்தியாகக் காத்திருந்தேனே.
குறிப்பு :-
வாளேந்தும் விதி உள்ளோர் கேளார் கேள்வி,
கேட்டாக்கால் வாளேந்தும் விதி இல்லையே.
பிராணாயாமம் பற்றிய அடியேனின் பழைய பதிவு கீழே.
https://fireprem.blogspot.com/2017/03/blog-post.html?m=1
உங்கள்
அகத்திய பக்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக