சனி, 1 ஜூன், 2019

பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - 3

பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - பகுதி 3

*இதற்கு முன்பு உள்ள முதல் பகுதியை படித்துவிட்டு இந்த பதிவை படியுங்கள்*.




அடுத்ததாக எந்தப் பெண்ணை முதலில் பார்ப்பது? என யோசித்தோம். உடனே அடியேன் மனதிற்குள் வேகமாய் ஒரு கணக்குப் போட்டேன். தொலைதூரம் என்றால் பேரூந்துக் கட்டணம் அதிகமாய் இருக்கும் என்பதை யோசித்து, அதை வெளியே சொல்லாமல், "அருகில் உள்ள ஊர் பெண்ணை முதலில் பார்த்து அதுவே அமைந்துவிட்டால் தொலைதூர அலைச்சல் வேண்டாமே.." என்றேன். ஆனால் மாசிலா பெரியம்மா அந்தத் திட்டத்தை அப்படியே திருப்பிப் போட்டார். "முதலில் தொலைதூர இராம்நாடு பெண்ணை பார்த்தபின் மற்ற பெண்களைப் பார்த்தால், எளிதாக ஒப்பீடு செய்து தேர்ந்தெடுக்கலாம்" என்றார். இறைவன் விளையாட களமிறங்கிவிட்டார் என்பது புரியாமல் நானும் "சரி. அப்படியே செய்யலாம்" என்று ராம்நாடு கிளம்பினோம்.  மதுரையை தாண்டிப்போகாத நான் முதன்முதலாக ராம்நாடு வந்து பெண் பார்த்தோம். அப்போது பெண்ணின் தாயார், மிகவும் தயங்கி பெண்ணின் கையை எடுத்து காண்பித்து, "பெண்ணின் மணிக்கட்டில் ஒரு சிறு குறை உள்ளது" என்றார். அங்கே ஒரு சிறு நிசப்தம் நிலவியது. ஆனால் அடியேன் என் மனதில் மட்டும் ஆகாவென்று பட்டாம்பூச்சி பறந்தது. "என் மகனே! உனக்காக குறிப்புகளை காட்டிவிட்டோம். இனி சமர்த்தாகப் பிடித்துக்கொள்ளடா" என்று இறைவன் உணர்த்தினார். இன்று வரை அன்னவள், அடியேன் நான் தான் பெரிய தியாகி மிகவும் உயர்ந்தவன்... என்று பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அனைத்தும் "இறைவன் கணக்கின் அடையாளம்" என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.



நான் “இந்தப் பெண்ணே சம்மதம்” என்றவுடன், பெண்வீட்டார் உடனே மறுநாளே திண்டுக்கல் வந்து பார்க்கிறோம் என்றார்கள். பிறகென்ன? மற்ற இரண்டு பெண்களை பார்ப்பதை கைவிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். மாப்பிள்ளை தனியார் கம்பெனியில் மிக மிகக் குறைந்த சம்பளம் வாங்குகிறார், மேலும் தொலைதூரத்தில் இருப்பதால் குடும்ப பின்னணியும் முழுதாக தெரியாது, போக்குவரத்தும் கடினம்.. என்ற காரணங்களால் பெண்ணின் உறவுக்காரர்கள் இந்த மாப்பிள்ளை வேண்டாமே! என வாதித்திருக்கிறார்கள். ஆனால் பெண்ணின் தாயார் "முருகப்பெருமான் அருளால் இந்த மாப்பிள்ளைதான்" என்றும், பெண்ணின் சகோதரர் "நாராயண பெருமாள் அருளால் இந்த மாப்பிள்ளைதான்" என்றும் சேர்ந்து ஒரு மனதாக உறுதியாக நின்றுவிட்டார்கள்.  ஹ்ம்ம்... இந்த முருகப்பெருமானும் எம்பெருமான் நாராயணனும் எங்கிருந்து எங்கு வந்து எனக்காக அடித்து விளையாடுகிறார்கள் என்று பாருங்கள். ஓம் நமோ நாராயணாய. ஓம் முருகா போற்றி.



ஒருவழியாக திருமணம் நிச்சயம் ஆனபின், எங்கள் குடும்ப நண்பர் ஒருவரும், என் உடன் பணிபுரியும் ஒருவரும் தானாகவே முன்வந்து குறைந்த வட்டிக்கு கடனாக திருமண செலவிற்கு பணம் தந்தார்கள். திருமண நாள் நெருங்க நெருங்க, எந்த நேரத்திலும் எதிர்பாராமல் திருமணம் நின்றுவிடலாம் என்ற பயம் எனக்கு கூடிக்கொண்டே இருந்தது. காரணம், என் தந்தையார் மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தைவிட்டு பிரிந்து கோவையில் கர்மவினையால், எங்கு எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. எப்போதும் மது மயக்கத்தில் இருப்பவரை, நெடுந்தொலைவு திருமணத்திற்கு யாரால் எப்படி கூட்டி வரமுடியும்? தாலிகட்டும்வரை யார் அவரை சமாளிப்பது? என்பது பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால் அனைத்து உறவுகளும் பக்கபலமாக இருந்தார்கள். இறைவன் அருளால் அவரும் வந்துவிட்டார். எப்படியோ திருமணம் நடந்தால் சரிதான், என்று நினைத்த எனக்கு ராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மகாராஜா தலைமையில் ஜாம்ஜாம் தடபுடலாக திருமணம் நடந்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது. அன்னவளின் கழுத்தில் தாலியை கட்டிய மறுநிமிடம் தான் அடியேன் என் முதுகுத்தண்டை நிமிர்த்தி "அப்பாடி, இறைவன் நடத்தி விட்டாரடா" என நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

            திருமணம் நல்லபடியாக இறையருளால் நடந்தது. இனி வசந்த காலம்தான் என்று பெரிதாக மகிழ முடியவில்லை. ஏனெனில், திருமண கடனுக்கான வட்டி போக மீத சொற்ப வருமானத்தில் எப்படி குடும்ப செலவுகளை பார்ப்பது என்ற கவலை சிறுது எட்டிப் பார்த்தது. திருமணமான நாளிலிருந்து சரியாக தொண்ணூறு நாட்களில் கோவையிலுள்ள ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பிடித்தம் போக மாதம் ரூபாய் 6500, அதுவும் மென்பொருளின் நவீன தொழில்நுட்பத்தில். சில போராட்டங்களுக்குப் பின், பழைய நிறுவனத்திலிருந்து இறையருளால் கோவையிலுள்ள நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். வீடு வாடகை மற்றும் குடும்ப செலவிற்கு (நான், அம்மா மற்றும் மனைவி) இந்த புதிய சம்பளம் அன்றைய 2004 கால கட்டத்தில் மிகச்சரியாக இருந்தது. சிக்கனமாகத்தான் வாழவேண்டும் என்ற கட்டாயம். பழைய நிறுவனத்தின் Provident Fund பணத்தை வைத்து திருமணக் கடனை அடைந்துவிட்டேன். நவீன தொழில்நுட்பத்தில் புதிய வேலை ஆர்வமாக சென்றது. இந்நிலையில் சிலமாதங்களில் அன்னவள் கருத்தரிக்கும் போதுதான் அடுத்தகட்ட வாழ்க்கைக்கான பணத் தேவைக்கு என்ன செய்வது என்ற கவலை வந்தது. அடிக்கடி மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்வதற்கும் மருந்து செலவிற்கும் மிகவும் சிரமமாக இருந்தது.  சத்து மாத்திரை வாங்கவே சிரமப்பட்டேன். மருத்துவர் முக்கிய பரிசோதனையை தம்பதியர்கள் எடுக்க வேண்டும் என்று சொல்லியும், அதற்க்கு செலவாகுமே, என்று கடைசி வரை எடுக்கவில்லை. வழக்கம்போல் எம்பெருமான் நாராயணனிடம் மனமுருகி பிராத்தனை செய்தோம் ( இந்த முறையிலிருந்து பிராத்தனை செய்ய அடியேனுக்கு இன்னும் இரண்டு கரங்கள் கிடைத்துவிட்டது ( மனைவியின் கரங்களையும் சேர்த்து )  .  இப்படித்தான் நம் கடவுள்களுக்கு பெரும்பாலும் நான்கு கரங்கள் போலும்).


            ராம்நாட்டில் குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது. உடனே பணிவிடுப்பு எடுத்து ராம்நாட்டிற்கு வந்துவிட்டேன். உறவுகளின் வாழ்த்துக்கள் ஒருபக்கம், எப்பெருமானே! இனி செலவை சமாளிப்பது எப்படி என்ற யோசனை மறுபக்கம். 




அன்றைய தினம் ஞாயிறு காலை பிராத்தனை முடித்துவிட்டு, ராம்நாடு அரண்மனை வாசலில் உள்ள மைத்துனர் உணவு விடுதியை பார்வையிட்டுவிட்டு, எதிரில் உள்ள சந்தை சாலையில் நிதானமாக நடந்தேன். இதுவரை என்னை தன் தோள் மேல் வைத்து கூட்டிவந்த இறைவன் இனியும் வருவார், என்ற நம்பிக்கை. சிறிது தூரத்தில் "அருணா புத்தக நிலையம்" என் கண்ணையுறுத்தி, வாவா என்றது. அந்த புத்தக நிலையத்தில் ஒரு நியூமெராலஜி புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது



பண்டிட் சேதுராமன் எழுதிய "அதிஷ்ட விஞ்ஞானம்" என்ற அந்த ஒரு புத்தகம் மட்டும் எனக்கென்றே காத்திருந்ததாக உணர்ந்தேன். திருமணத்திற்கு முன் பல நியூமெராலஜி புத்தகங்களை படித்திருந்தாலும், இந்த புத்தகம் எனக்கு தெய்வீகமாக இருந்தது. நமது பெயரை ஆங்கில எழுத்தில் சரியான அதிர்வுடன் அமையும் போது அது எப்படி நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும், என்று நிறைய ஆராய்ச்சி அனுபவத்துடன் அந்த புத்தகம் இருந்தது. முக்கியமாக என் மகளுக்கு உடனே பெயர் வைக்கவேண்டும் என்ற காரணத்தால் அந்த புத்தகத்தை பெரிய மனதுபண்ணி பணம் கொடுத்து வாங்கினேன். என்ன தான் மகளுக்கு நியூமெராலஜிபடி பெயர் வைத்தாலும், நானும் அதை நேரடியாக அதற்குரிய தெய்வீக முறைப்படி பரிசோதித்து அனுபவிக்க முடிவு செய்தேன். ஆரம்பகட்ட குழந்தை வளர்ப்பிற்காக அன்னவள் அவள் தாய்வீடான ராம்நாட்டில் இருந்தது, என் பரிசோதனைக்கு மிகவும் வசதியாக இருந்தது. எனது பிறந்த ஆங்கில தேதி எண்கள் மற்றும் என் ஜாதகப்படி ஓரளவிற்கு சாதகமான கிரகங்களை கேட்டறிந்துவிட்டு, எனக்குரிய அதிஷ்ட எண் சூரியனுக்கானது "ஒன்று" எனப் புரிந்துகொண்டேன். 




எம்பெருமானே சூரிய நாராயணனாக இருப்பதால், மனமுறுகிய பிராத்தனைக்கும் இணக்கமாக இருப்பது ஆத்ம மகிழ்ச்சியாக இருந்தது. சூரியனுக்கான எண்ணில் அதிக சக்தி வாய்ந்த "நாற்பத்தியாராம்" எண்ணிற்கேற்றபடி என் பெயரில் ஆங்கில எழுத்துக்களை சிறிது மாற்றி குறித்து எடுத்துக் கொண்டேன்.


தொடரும்...

இப்படிக்கு,
 அகத்திய பக்தன்.

கருத்துகள் இல்லை: