சனி, 1 ஜூன், 2019

பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - 2

பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - பகுதி 2

*இதற்கு முன்பு உள்ள முதல் பகுதியை படித்துவிட்டு இந்த பதிவை படியுங்கள்*.


அப்படியே எந்திரம் போல் வேலை செய்வதும், எனக்கு தெரிந்தவாறு இறைவனை வணங்குவதுமாக நாட்கள் நகர்ந்தது. "முருகா நீ வரவேண்டும்..." என்ற பாடல் எங்கிருந்தோ ஒலித்து சிறிது நம்பிக்கை கொடுத்தது.  ஒரு நல்ல நண்பர் அமைவது இறைவன் கொடுத்த வரம். (இன்றைய வாலிபர்கள், குடிப்பழக்கத்தையும் பெண்களை சீண்டுவதையும் ஊக்கப்படுத்துபவனையே “நல்ல நண்பன்” என்கிறார்கள்.  என்ன? உங்கள் நண்பரும் இப்படியா??).  ஒரு நாள் என் அருமை நண்பர் சேதுபதி, "நண்பரே, உங்களிடம் தனியாக சிறிது பேசவேண்டும். மதிய இடைவேளையில் எனது பணி அறைக்கு வாரும்" என்று அழைத்தார். நான் சில நாட்களாக ஏதோ ஒரு கவலையிலும் குழப்பத்திலும் இருப்பதை, நான் எதுவும் சொல்லாமலேயே புரிந்துகொண்டு, "என்ன கவலை?" என நேரடியாக கேட்டார். நடந்ததை சொன்னேன். சிறிது மவுனத்திற்குப்பிறகு, சேதுபதி என்னிடம், "இறைவனை வணங்குவோர்க்கு கவலை தேவையில்லை. உங்கள் ஜாதகத்தை எடுத்து வாருங்கள். என் தந்தையிடமிருந்து நானும் சிறிது சோதிடம் கற்றுள்ளேன். அலசிப் பார்த்திடலாம்" என்றாரே பார்க்கலாம். 

எனக்கு சேதுபதியோடு பல வருடங்களாக அலுவலக பழக்கம் இருந்தாலும், அவருக்கும் சோதிடம் தெரியும் என்பது அன்றுதான் எனக்கு தெரிந்தது. மேலும் அவர், தான் யாருக்கும் சோதிடம் பார்ப்பதில்லை என்றும், ஏனோ எனக்குமட்டும் இறைவன் அருளால் இயன்றவரை தினமும் சிறிது சிறிதாக மதிய இடைவேளையில் ஆராய்ந்துபார்க்கலாம் என்றார். ஆகா! இறைவன் கருணையை என்னவென்று சொல்வது? அடியேன் எனக்கு பெரிதாக நண்பர்கள் கூட்டம் என்று சொல்வதற்கில்லை. விரல்விட்டு எண்ணும் அளவுதான். பன்றிக்கூட்டம்போல் பெரிய நண்பர்கள் கூட்டம் எதற்கு? சிங்கம்போல் ஒருவன் இருந்தால் போதுமே. ஒரு கிரக பலனும் இல்லாவிட்டால் என்ன? 


கூட்டம் கூட்டமாய் அசுரரைப்போல் கர்மவினைகள் வந்தால்தான் என்ன? ஒரு முருகவேல் எதிரில் வந்தால் அத்தனையும் தவிடுபொடி. ஓம் முருகா போற்றி.

மறுநாள் மதிய உணவை வேகமாக முடித்துக்கொண்டு என் ஜாதகத்தோடு நண்பரை சந்தித்தேன். அவர் நிறைய கணக்குகளை எழுதினார், எனக்கும் நிறைய ஜோதிட தத்துவங்களையும் பாவ புண்ணிய கணக்குகளையும் சொன்னார். அடியேனுக்கு ஓரளவுக்குத்தான் புரிந்தது, முழுவதுமாக புரியவில்லை. ஓம் அகத்தீசாய நம. அடுத்து வரும்போது, என் சகோதரி, தாய்மாமன் மற்றும் சகோதரியின் குழந்தைகளின் ஜாதகத்தையும் (நான் அவர்களுக்கு தாய்மாமன்) கொண்டுவரச்சொன்னார். இது அவர்களின் ஜாதகம் வழியாக என் ஜாதகத்திற்குள்ள தொடர்புகளை ஆராய்வதற்கு. இப்படியாக தினமும் மதியம் அரைமணி நேரம் சோதிட ஆராய்ச்சி மாதக்கணக்கில் நடந்தது! ஒருவனின் ஜாதகத்தின் மூலம் அறியும் பாவ புண்ணியங்கள், அவை முன் ஜென்மங்கள் மூலம் வருவது, என் ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் எப்படியெல்லாம் அடிபட்டு தன் பலத்தை இழந்தது, பாபகிரகங்களின் தாக்கம் என பல விஷயங்களை எனக்கு சொன்னார். இதில் என் மனைவி ஸ்தானம் மற்றும் அமைப்பை அதிக நாட்கள் எடுத்து பொறுமையாக சொன்னதுதான் இறைவன் அவர்மூலம் எனக்கு வழிகாட்டியதாக கருதுகிறேன். அவர் முதலில் கூறியது, "நண்பரே, உமது ஜாதகப்படி சுபக்கிரகங்கள் பலமில்லாததும், பாபகிரகங்கள் தாக்கம் இருப்பதும் உண்மைதான். இது முன்ஜென்ம கர்மங்கள் என எடுத்துக்கொள்ளலாம். எனினும், இறைவன் அருளால் ஒரு பொருத்தமான மனைவி உமக்கு அமைந்துவிட்டால் உங்கள் வாழ்க்கை நல்லநிலைக்கு வந்துவிடும். கவலை வேண்டாம். இறைவனை தினமும் நன்கு மனமுருகி வழிபடுங்கள். முக்கியமாக பிரதோஷ நாட்களில் சிவன் கோவிலுக்கு கண்டிப்பாக சென்று வழிபடுங்கள். அது உங்கள் பாவங்களை நிச்சயம் நீக்கும். பிரதோஷ நேரத்தில் செல்ல இயலாவிடினும், அன்று மாலை அலுவலக பணி முடிந்தபின் சென்று வழிபட சொன்னார். அத்துடன், நல்ல மனைவி அமைய எம்பெருமான் நாராயணனை வாரம் ஒருமுறையேனும் கோவிலுக்கு சென்று வணங்குமாறு அறிவுறுத்தினார். எனக்கு பொருத்தமான மனைவியை பற்றி சொன்ன விஷயங்கள் அப்போது ஆச்சர்யமாக இருந்தது.



அன்னவள் எந்த திசையில் வசிக்கிறாள். அவளின் குடும்பத்திற்கான சமூக அந்தஸ்து, அவளின் நடை, உடை, உடல் ஆரோக்கியம், ஆபரண விருப்பங்கள், நிறம், எங்களுக்குள் இருக்கப்போகும் ஈர்ப்பு, மணபொருத்தம், சண்டை சச்சரவு, யார் யாரை அதிகம் அனுசரிபார் (தினப்பொருத்தம், கணப்பொருத்தம், வசியம் மற்றவை...), முக்கியமாக எளிதில் காணும்படியாக ஒரு மிகச்சிறிய உடல்குறை இருக்கும் என்று சொன்னார். இறுதியாகவும் உறுதியாகவும் அவர் சொன்னது "இறைவனை சரணடைவதே ஒரே வழி". என்னிடமிருந்து ஒரு சிறு எதிர்பார்ப்பும் இல்லாமல் நையாபைசாவுக்கும் பிரயோசனமில்லாத என்னை அவர் மிகுந்த அக்கறையோடு பார்த்துக்கொண்டார். இறைவனே எனக்காக இவரை அனுப்பிவைத்தார் போலும்.

அவர் கூறும் ஜோதிட கணிதம் எனக்கு புரியவில்லையே என வருந்தினேன். அவர், "கவலை வேண்டாம். இந்த கலியுகத்தில் ‘நியூமராலஜி’ என்ற ஆங்கில எண்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நவீன சாஸ்திரம் உள்ளது. அது கலியுக மனிதர்களுக்கு பெரும்பாலும் பொருந்துகிறது. இந்த கலியுக பாஷையான ஆங்கிலம் கற்ற நம் பாரத தேசத்தார் நல்ல சம்பாத்தியம் செய்து, பொருளாதாரத்தில் உயர்ந்துவருகிறார்கள். இந்த சாஸ்திரத்தை புரிவதும் எளிது. நீங்கள் உங்கள் பிறந்த தேதியையே ஒரு மையமாக வைத்து நியூமராலஜி சாஸ்திரத்தை படித்துப்பாருங்கள்" என ஒரு குறிப்பு கொடுத்தார். அன்றுமுதல் தினமும் அலுவலகம் வரும்வழியில் உள்ள திண்டுக்கல் NGGO காலனி முருகன் கோவில் செல்வது, சனிக்கிழமை தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவில், பிரதோஷமன்று அபிராமி அம்மன் கோவிலில் உள்ள சிவன் மற்றும் பைரவர் வழிபாடு என்பது வாடிக்கையானது. மேலும் சகோதரன் சிவராம ராஜாவை சந்திக்க அடிக்கடி பழனி செல்லும்போது, பழனி முருகப்பெருமானை மலையேறி வழிபடுவது மிகுந்த ஆறுதலாக இருக்கும். தினமும் மாலை பணி முடிந்தவுடன் செயின்ட் மேரிஸ் ஸ்கூல் அருகிலிருக்கும் நண்பன் சுதாகர் கடைக்கு செல்வது வழக்கம். என்னால் அவனுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லாவிட்டாலும், ஓசியில் டீ வாங்கிக்கொடுத்து தினமும் அன்போடு வரச்சொல்பவன் அவன்தான். அவனது ரேடியோ கடையில் மாலைநேரம் தான் நல்ல வியாபாரம் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அவன் அதிகம் பேசி வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும். நான் அதிக நேரம் அவனுக்காக காத்திருக்கநேரிடும். அதனால், அவன் கடைக்கு அருகிலுள்ள "நியூ செஞ்சுரிஸ்" புத்தக நிலைய விற்பனையாளரிடம் என்னை அறிமுகப்படுத்தி, அங்குள்ள புத்தகங்களை ஓசியில் எவ்வளவு நேரம்வேண்டுமானாலும் நான் படித்துக்கொள்ளும்படி ஒரு அருமையான ஏற்பாடு செய்தான். இறைவனே எனக்கு ஆசிரியனாக இருந்து பாடம் கற்பிக்கும் அழகை என்னவென்று சொல்வது.


அன்று முதல் தினமும் ஒருமணி நேரம், அங்குள்ள அனைத்து நியூமராலஜி புத்தகங்களையும் எடுத்து, அதில் என் பிறந்த தேதிக்கான அமைப்பு மற்றும் எனக்கு பொருந்தும் மனைவி எண்களை ஆர்வமாய் படித்தேன்.  அதன்படி எனக்கு பொருந்தும் மனைவி எண்ணின் குணாதிசயங்களை கவனமாக படித்தேன். ஆச்சர்யமாக இருந்தது. நண்பர் சேதுபதி சொன்ன ஜாதக அம்ச குறிப்புகளோடு பெரும்பாலும் நன்கு பொருந்தி வந்தது. எனது எண்ணின் அமைப்பு, எனக்கு பொருந்தும் எண்ணின் அமைப்பு மற்றும் எனக்கு பொருந்தாத எண்ணின் அமைப்புகளை இறையருளால் புரிந்துகொண்டேன். எனது ஆங்கில பிறந்த தேதியிலிருந்து, ராகுவுக்கான எண் நான்கும் சனிக்கான எண் எட்டும் அடியேன் வாழ்கையில் சோதனைக்கான காரணம் என அறியும்போது அது ஜாதக பலனோடும் பொருந்தியது. மேலும், நான்கிற்கும் எட்டுக்கும் நன்கு பொருந்துவது எண் ஒன்றும் ஆறும் என ஆராய்ந்து குறிப்பெடுத்தேன்.  திருமணத்திற்கு ஏதோ ஒரு பெண் கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும்போது, எனக்கு இன்ன இன்ன அமைப்போடு பொருந்தும் வாழ்க்கைத் துணை வேண்டும் என்று நான் ஒருவேளை கேட்டிருந்தால், எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னை பின்னி பெடலெடுத்திருப்பார்கள். எனவே இறைவன் அருளால் கிடைத்த அத்தனை ஆராய்ச்சி முடிவுகளையும் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டேன். பதினாறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வெளிப்படுத்த குரு உத்தரவு கிடைத்தது.

சில மாதங்கள் கழித்து ஒருவழியாக என் தாய்மாமாவும் மாசிலா பெரியம்மாவும் கலந்துரையாடி மதுரையில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தில் எனக்காக பதிந்தார்கள். என்ன ஆச்சர்யம்!, உடனே இருபத்தியிரண்டு பெண்களின் ஜாதகங்கள் கிடைத்தது. அதில் அடியேன் குறித்துவைத்த நியூமெராலஜி குறிப்புகளை வைத்து மூன்று பெண்களின் ஜாதகங்ளை நானே தேர்வு செய்து, ஜாதகபொருத்தம் பார்க்க வீட்டாரிடம் கொடுத்தேன். அதில் ஒன்று வத்தலகுண்டு, இரண்டாவது நிலக்கோட்டை, மூன்றாவது ராம்நாடு. "ஜாதகங்களை தேர்வு செய்யும் அளவுக்கு இவனுக்கு என்ன பெரிய சாஸ்திரம் தெரியும்?" என என்னை கோவித்தார்கள். அவர்கள் அந்த இருபத்தியிரண்டு ஜாதகங்களையும், மாமாவிற்க்குத் தெரிந்த திண்டுக்கல் கோர்ட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஜோதிடரிடம் எடுத்துச் சென்று ஆராய்ந்தார்கள். அந்த ஜோதிடரும் அதே மூன்று ஜாதகங்களைத்தான் தேர்வு செய்தார்!  அடுத்ததாக, யார் யார் பெண் பார்க்க செல்வது? எந்த பெண்ணை முதலில் பார்ப்பது? என்ற கலந்துரையாடல் நடந்தது. மாசிலா பெரியம்மாவும், தண்டபாணி மாமாவும் என்னையும் கூட்டிக்கொண்டு பெண் பார்க்க செல்லும் பொறுப்பை மகிழ்வோடு ஏற்றார்கள். எனக்காக குடும்பத்தார்கள் பொறுப்பெடுத்துக்கொள்வது ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும் மறுபக்கம் சிறிது பயமாகவும் இருந்தது. ஏனெனில், அனைவரும் நான் சம்பளத்திலிருந்து திருமண செலவிற்காக நிறைய சேர்த்துவைத்துள்ளேன் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், MCA படிப்பிற்காக சேமிப்பினையெல்லாம் செலவு செய்வதால், அடியேனிடம் ஒரு நையா பைசா கூட கிடையாது என்பது யாருக்கும் தெரியாது.

தொடரும்...

இப்படிக்கு,
அகத்திய பக்தன்.

கருத்துகள் இல்லை: