ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

முதியோரை வணங்குவோம்

 முதியோரை வணங்குவோம்

ஓம் அகத்தீசாய நமஹ.


 60 வயது கடந்த முதியோருக்கான வாழ்வியல் வேண்டுகோள் :-



 1) ஒரு நாளைக்கு அலைபேசி அல்லது தொலைக்காட்சியில் நீங்கள் செலவிடும் நேரத்தை விட, அதிகமான நேரத்தை இறை பக்தியில் செலவிடுங்கள். உதாரணமாக, ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் அலைபேசி அல்லது தொலைக்காட்சியில் செலவிடுகிறீர்கள் எனில் ( மெகா சீரியல்கள், அரசியல் செய்திகள், சினிமா, முக்கிய பிரமுகர்களின் மரண நிகழ்ச்சிகள், youtube, whatsapp மற்றும் உறவினர் நண்பர்களிடம் அலைபேசியில் பேசுவது ),  உங்கள் தினசரி இறை பக்திக்கான நேரத்தை குறைந்தது 5 மணி நேரமாவது  ஒதுக்கி செலவிடுங்கள்.


2) மேற்கண்டவாறு உங்கள் தினசரி அலைபேசி தொலைக்காட்சி நேரத்தை விடவும் அதிகமான நேரத்தை இறை பக்தியில் செலவிட்டால்தான் உங்களுக்கான மரியாதையை உங்கள் குடும்பத்தாரிடமிருந்து பெறுவீர்கள். இல்லையெனில் உங்கள் குடும்பத்தில் முதியோருக்கான / பெற்றோர்கான மரியாதையை எதிர்பார்க்காதீர்கள். அதாவது முதியோருக்கான மதிப்பு மரியாதையை நீங்கள் முழுவதுமாக இழந்து விட்டீர்கள் என்று பொருள்.


3) ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் உங்களால் ஏன் வாரம் ஒரு முறையாவது மௌனம் இருக்க முடியவில்லை ?


4) 60 வயது வரை உங்கள் குடும்பக் கடமைக்காக ஓடிய உங்களால், ஏன் 60 வயதுக்கு மேல் இறைவனை நோக்கி முழுமையாக ஓட முடியவில்லை ?


5) உங்களின் இறைவனை நோக்கிய முழுமையான பயணத்தை தடுப்பது எவை எவை?

 அலைபேசி அல்லது தொலைக்காட்சி உபயோகம்,

 ருசியான உணவுகள், உடை, தோற்றத்தில் கவனம்,

 உறவினர்களின் வீடுகளில் நடக்கும் விஷயத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம்,

 வெளி உலக விஷயங்களில் ஆர்வம்,

 வெளிப்பொருட்களை அதிகம் சார்ந்து வாழ்வது.


6) தினசரி பகல் பொழுதில் 5 மணி நேரம் இறை வழிபாட்டில் எப்படி கவனம் செலுத்துவது?

 மந்திர ஜெபம் :  உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை தினமும்  காலையும் மாலையும் ஜெபம் செய்யலாம். ஆரம்பத்தில் 100 முறை ஜெபம் செய்கிறீர்கள் எனில், அதை அடுத்த நாள் 110 முறை, அதற்கடுத்த நாள் 120 முறை என அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். இதில் ஒரு கட்டத்தில் 1008 முறை மந்திர ஜெபம், அதாவது காலை 1008 முறை மாலை 1008 முறை ஜெபம் செய்தீர்களெனில், ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இதிலேயே செலவாகி விடும். தொடர்ச்சியாக உட்கார முடியவில்லை எனில், சிறிது சிறிது இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். அலைபேசியில் உட்காருவதற்கு மட்டும் உங்களால் முடிகிறது எனில் ஏன் இதை மட்டும் முடியாமல் போகிறது?

பூக்களால் அர்ச்சனை :-  உங்கள் வீட்டில் அல்லது அருகில் இருக்கும் இடத்தில் இயன்றவரை பூக்கள் அல்லது இலைகளை எடுத்துக்கொண்டு அதை வைத்து உங்கள் இஷ்ட தெய்வத்தை அர்ச்சனை செய்யலாம். இவ்வாறு செய்யும் பொழுது அதிக நேரம் செலவழிக்கலாம்.

அருகில் உள்ள கோவில் :-  உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகர் கோயில் அல்லது ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அங்கு அதிக நேரத்தை காலையிலும் மாலையிலும் செலவிடலாம். கோயில் அர்ச்சனை, கோயில் உழவாரப் பணிகள் அதாவது தூய்மை செய்யும் பணிகள் செய்யலாம். தியானம் செய்ய தெரிந்தால் தியானம் செய்யலாம், ஆனால் அங்கு போய் வீட்டு விஷயத்தை சொல்லி நேரத்தை வீணாக்கக்கூடாது. குடும்ப விஷயத்தை சொல்லி புலம்பி  தனது குடும்பத்தாருக்கு அவப்பெயர் கொடுக்கக் கூடாது.

வாசியோகம் :-  தனது உயிரின் இருப்பிடத்தை துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும். இது ஆரம்பத்தில் சிரமம் தான், ஆனால் தினசரி பயிற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். பின்பு தனது உயிரிலேயே கவனத்தை வைத்து, தனது உயிரையே இறைவனாக வணங்குவது. இந்தப் பயிற்சியில் இயன்றவரை அதிக நேரத்தை நீங்கள் செலவழிக்கலாம்.

புத்தக வாசிப்பு:-  ஆன்மீகம் மற்றும் தத்துவம் சார்ந்த புத்தகங்களை தினசரி வாசிப்பதில் அதிக நேரத்தை செலவிடலாம். தேவைப்பட்டால் இதற்காக அலைபேசியை நீங்கள் உபயோகிக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு அரை மணி நேரத்திற்கு மேல் அலைபேசியை உபயோகிக்காதீர்கள்.


இறைவன் தந்த வரங்கள்

 40 வயதில் இருந்து சாலேஸ்வரம் என்ற கண் பாதிப்பு:-  உன் அறிவை சிறிது தூரத்தில் வைத்து பழகு. ஆண்டவனை அருகில் வைத்து பழகு. ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாய் பழக்கத்தை அதிகப்படுத்து.

50 வயதிலிருந்து படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன உளைச்சல் :-  வெளி உணவு ருசியை கைவிடு,  உள் உணவான இறைவனை ருசிக்கப் பழகு. மருந்துக்கு அடிமையாவது தேவைதானா?

60 வயதில் கண்புரை நோய்  ( cataracts ):-  வெளிப்பார்வையின் கவனத்தை குறைத்து விடு.  உன் உள் பார்வையை ( உயிர் / இறைவன் ) கூட்டிவிடு. அறுவை சிகிச்சை தேவைதானா?

65 வயதில் இருந்து உடல் வலி, கை கால் வலி, வேகமாக இயங்க முடியவில்லை, நிதானம் தவறுகிறது.  வெளி இயக்கத்தை நிறுத்து, உள் இயக்கத்தை உயிரை நோக்கி செலுத்து. இறைவனை உணர்ந்து உணர்ந்து வழிபடு. மந்திர ஜெபம், பக்தி வழிபாடு, கோவில் பணி, பக்தி பாடல்கள், தியானம், இறைவன் இறைவன் முக்தி.

70 வயதிலிருந்து இருதய வலி, மரண பயம் :-  மரண தேவதையை விரும்பி வணங்கு. மரண தேவதையை காதலி. இதுவே ஞானத்தை பெருக்கும். உன் மரணத்தை விரும்பிக் கேள் தினமும் தினமும். இதுவே மரணம் இல்லா பெருவாழ்வு.



நாற்பது வயதிலிருந்து அறுபது வயதில் உள்ளவர்களுக்கான தனிப்பதிவு கீழே உள்ளது. இணைப்பை அழுத்தி படித்துக் கொள்ளவும்.

https://fireprem.blogspot.com/2022/10/blog-post.html?m=1


40 வயதில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் உங்கள் வாகனத்தை செலுத்தும் வல்லமை உங்களிடம் இருக்கிறது எனில். 41 வயதில் உங்கள் வேகத்தை 190 ஆக குறைத்துக் கொள்வது நல்லது. எஞ்சிய 10 கிலோமீட்டர் வேகத்தை இறைவனை நோக்கி செலுத்துங்கள். இப்படியே ஒவ்வொரு வயது ஏற ஏற பத்து கிலோமீட்டர் குறைத்துக் கொண்டே வரும் பட்சத்தில், 60 வயதில் நீங்கள் முழுமையாக இறைவனை நோக்கி ஓடும்  அற்புதமான ஞான வாழ்க்கையைப் பெறுவீர்கள். 

அதெல்லாம் முடியாது, 60 வயது வரைக்கும் 200 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்வேன், அதற்கு பிறகு சடன்பிரேக் அடிப்பேன் என்றால், வாகனமும் காலி நீங்களும் காலி. இதைப் புரிந்து கொண்டவர் ஞானி.



இப்படிக்கு,

 அகத்திய பக்தன்.

 சிவாயநம - திருச்சிற்றம்பலம்.


2 கருத்துகள்:

vanitha's Rain drops சொன்னது…

முதியவர்களுக்கு நல்ல அறிவுரை. ஆனால் நடைமுறையில் இதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. காரணம் முதிய வயதில் பல உடல்நலக்குறைவு கள். மரண பயம். தெளிவற்ற சிந்தனைகள். ஆன்மீக நாட்டம் என்பது அவரவர்க்கு தானே வரவேண்டும். தேடல் இன்றி எதனையும் கண்டடைய முடியாது. இளையவர்கள் கூறும் பக்தி மார்க்கத்தை முதியவர்கள் ஏற்பதில்லை. அடுத்தவர் உதவியை எதிர்பார்த்து கட்டிலோடு இருக்கும் பெண்மமணிகளின் நிலை அதைவிட பரிதாபம். மனதால் வெந்து, தன்னம்பிக்கை இழந்து இல்லத்தில் தேவையற்ற பேச்சுக்களை வாங்கி... ஆனாலும் பக்தி வருவதில்லை. காரணம் பக்தி என்பது ஒரு உணர்வு. அது உள்ளிருந்து தக்ககாலத்தில் தானே வெளித்தோன்றும். எப்பிறவியிலாவது

Agathiya Bakthan சொன்னது…

அம்மா, யதார்தமாய் சொல்லிவிட்டீர்கள்.
குருநாதர் கொடுத்த பணியை செய்கிறேன். நாளைய முதியவர்களாவது சுதாரித்து இறைவனுக்கான நேரத்தை சிறிது சிறிதாக கூட்டுவார்கள் என நம்புகிறேன்.
கடைசி வரை வெளியே ஓடிக் கொண்டே இருப்பது மட்டுமே வாழ்க்கை ஆகாது. உள்நோக்கி ஓடவும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் கடைசி இயங்க முடியாத முதிய காலத்தில் இறை லயத்திலேயே இருக்க முடியும். அறிவுரை சொல்லுவது சுலபம்தான். ஆனால் செயல்படுத்துவது கடினம் என்பதை அடியேன் புரிந்து கொள்கிறேன் தாயே.