புதன், 6 செப்டம்பர், 2023

வைணவ ஞானம்

 

வைணவ ஞானம்


 ஹரி ஓம் அகத்தீசாய நமஹ.


ஸ ஏவாயம் மயா தே1த்3ய யோக3: ப்1ரோக்11: பு1ராத1ன: |

4க்தோ1‌ஸி மே ஸகா2 சே1தி1 ரஹஸ்யம் ஹ்யேத1து3த்11மம் ||3||

பொருள் :-

BG 4.3: யோகத்தைப் பற்றிய அதே மிக உயர்ந்த ரகசியமான பண்டைய அறிவை இன்று நான் உனக்கு வெளிப்படுத்துகிறேன், ஏனென்றால் எனது நண்பன் மற்றும் பக்தனான உன்னால் இந்த ஆழ்நிலை ஞானத்தை புரிந்துகொள்ள முடியும்.

*** ஸ்ரீமத் பகவத் கீதை. 4-3 ஞான யோகம்.


  குருநாதர் அருளால் இந்த அரிதான ஞானப்பதிவு இன்று கிருஷ்ண ஜெயந்தி அன்று வெளியிடப்படுகிறது. வைணவ மார்க்கத்தில் யோக ஞானத்தை, எப்படி புரிந்து பயிற்சி செய்வது, என்பதை குருநாதரின் கருணையினால் இப்பதிவில் நாம் பார்க்கலாம்.  அடியேன் நான், நம் குருநாதர் அருளியதை, இயன்றவரை மிகவும் சுருக்கமாகவே எழுதி இருக்கிறேன். எனினும் சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம்.


 வெங்கடாஜலபதி :-

வேங்கடம் + ஜலம் + அதிபதி.

* வேங்கடம் எனும் தமிழ்ச் சொல் வேம் + கடம் = வெப்பமான காடு. இது யோகியின் சிரசைக் குறிக்கும்.

* ஜலம் - சிரசில் யோகத்தால் கிடைக்கும் அமிர்தம்.  இதையே அப்பு என்றும், அகாரம் என்றும்,  கங்கை என்றும் சொல்லுவார்கள்.

அதாவது யோக-அக்கினியால் சிரசில் உருவாகும் அமிர்தத்திற்கு அதிபதியானவரே, வெங்கடாஜலபதி என்று ஞானப் பொருள்படும்.


      எம்பெருமானின் கையில் இருக்கும் சக்கரம்,  யோகி தவம் செய்யும் ஆதார சக்கரத்தைக் குறிக்கிறது. பிரயோகத்தைப் பொருத்து இதன் கலைகள் மாறுபடும் ( பொதுவாக 16 கலைகள் ).  எம்பெருமானின் மற்றொரு கையில் இருக்கும் சங்கு, யோகிக்கு மட்டும் கேட்கும் நாதத்தை குறிக்கிறது. ஆதிசேஷன், ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் இந்த மூவரும், பிராணாயாமத்தின் மூன்று நிலைகளை குறிக்கிறது. இது முறையே ரேசகம், பூரகம் மற்றும் கும்பகம் எனப்படும். யோகியின் வாகனங்கள் இதுவே.


 ஆதிசேஷன் - ரேசகம் - சீறி வெளிவரும் வெப்பக் காற்று.

 ஆஞ்சநேயர் - பூரகம் -  உள்ளே இழுத்து, பெரிதாகும் காற்று.

 கருடன் - கும்பகம் - கும்பித்து நிலைக்கும் அல்லது பறக்கும் காற்று.


 யோக நரசிம்மர் :-

 வைணவத் திருத்தலத்தில் யோகநரசிம்மரின் சிலையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிங்கமுகத்துடன் நரசிம்மர் யோகநிலையில் மௌனமாக அமர்ந்திருப்பார். அவருக்கு பின்னே சக்கரத்தாழ்வார் நின்று இருப்பார். வைணவத்தின் மிகவும் ரகசியமான யோகஞானம் இங்குதான் உள்ளது. பல காலம் மறைக்கப்பட்ட யோக ரகசியம் இன்று எம்பெருமானின் கருணையினால் வெளிப்படுகிறது. 

ஹரி ஓம் அகத்திசாய நமஹ.


 கேசரி என்றால் சிங்கம் என்று பொருள்படும் நரசிம்மரின் சிங்க முகம், கேசரி முத்திரையைக் குறிக்கிறது. அவரின் அமர்ந்த நிலை, யோகம் செய்வதை குறிக்கிறது. யோகியானவர் கேசரி முத்திரையின் மூலம் யோகம் செய்யவேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம். அதாவது யோகியானவர் அண்ணாக்கிற்கு மேலே, புருவமத்திக்கு உள்ளே உள்ள சுழுமுனை நாடியில் கவனம் வைத்து, அதன் மூலம் தனது உயிரையும், அதற்கு மேலே பூரணத்தையும் உணர்வது. கேசரி முத்திரையைப் பற்றிய மேலும் பல அபூர்வ தகவல்களை இப்பக்கத்தின் கடைசியில் உள்ள "சாக்த ஞானம்" ( #1 ) என்ற பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

யோகியானவர் இப்படி கேசரி முத்திரையால் யோகம் செய்வதன் உச்சக்கட்ட நோக்கம் என்ன?  இதற்கான பதிலை தெரிந்து கொள்ள நாம் யோகநரசிம்மருக்கு பின்பக்கம் செல்ல வேண்டும்.



  யோகநரசிம்மருக்கு பின்னே இருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு 16 கைகள் இருக்கும். இது 16 கலை என்ற குறியீடு. இந்தக் குறியீட்டை நம் குருநாதர், "பூரணம்" என்று அழைக்கிறார்.  பரப்பிரம்மம் என்றும் கூறலாம். அகத்தியர் ஞானம் 16 என்ற ஞானப் பாடலில் நமது குருநாதர் இந்த குறியீட்டை தெளிவாக சொல்லியுள்ளார். அந்தப் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 16 - பூரணம் 

   8 - உயிர் 

   4 - மனம்


 இந்தக் குறியீட்டை நாம் வைணவத்தில் கீழ்கண்டவாறு புரிந்து கொள்ளலாம்.

 16 - சக்கரத்தாழ்வார் - யோகியின் இலக்கான பூரணம்.

  4 - யோக நரசிம்மரின் நான்கு கைகள்-  மனம் புத்தி சித்தம் அகங்காரம் இவை நான்கும் ஒடுங்கி கேசரியின் மூலம் யோகம் செய்தல்.

 8 -  பயிற்சிக்கான எட்டெழுத்து மந்திரம் ( ஓம் நமோ நாராயணா ).


கஜேந்திர மோட்சம் :-

 யோகத்தின் முக்கிய கதாபாத்திரம் சுழுமுனை நாடிதான்.  சித்தர்களும் ரிஷிகளும் சுழுமுனை நாடியை விநாயகரோடு அல்லது யானையின் தும்பிக்கையோடு ஒப்பிடுகிறார்கள். இந்தியாவில் இருக்கும் ஆறு சமய வழிபாட்டிலும், விநாயகர் இல்லாமல் எந்த வழிபாடும் நடைபெறுவதில்லை. எனில், சுழுமுனை நாடியின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். கஜேந்திர மோட்சத்தில் கஜேந்திரனாக காட்டப்படும் யோகியானவர் தன் சுழுமுனை நாடியில் மனம் வைத்து, இறைவனோடு சேர வேண்டி யோகம் செய்கிறார். அப்போது ஆணவம் என்ற "முதலை" யோகியின் காலை கவ்வி கீழ்நோக்கி இழுக்கிறது. ( சித்தர்கள் மூச்சுக் காற்றை "கால்" என்று பரிபாஷையாக குறிப்பிடுவார்கள் ).



 ஐயோ இந்த கொடூர அசுரனான "ஆணவ முதலை" என்னை இறைவனோடு சேரவிடாமல் தடுத்து கீழ்நோக்கி இழுக்கிறதே!! என்ற வேதனையோடு யோகி துடித்து துன்பப்படுகிறார்.  சிரமப்பட்டு தன் சுழுமுனை நாடியான தும்பிக்கையை தன் சகஸ்ர தளத்திற்கு மேலே யோகசூட்சுமத்தால் நீட்டி உயர்த்தி,  "ஆதிமூலமே என்னை காப்பாற்று" என எம்பெருமானை வேண்டி அழைக்கிறார். பிராணயாமத்தில் கும்பகத்தைக் குறிக்கும் கருட பகவான் உடனே எம்பெருமானை சுமந்துகொண்டு யோகியைக் காப்பாற்ற வருகிறார். எம்பெருமான் தன் சக்கரத்தை சுழற்றி வீச ஆணவ முதலை அழிகிறது. சுழுமுனை நாடி, ஏன் விநாயகர் அல்லது தும்பிக்கையோடு ஒப்பிடப்படுகிறது? என்பதனை பற்றிய பல சுவராசியமான தகவல்களை கீழே தனிப் பதிவாக "கணாபத்திய ஞானம்" ( #2 ) என்ற தலைப்பில் உள்ளது. படித்து புரிந்து கொள்ளுங்கள்.


 வைணவ யோகஞானப் பயிற்சி :-

 நினைக்கும் போதே துன்பம் நீக்கும், எம்பெருமானின் எட்டு எழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணா" என்பதை மூன்று பகுதியாக பிரிக்க வேண்டும்.

 ஓம் + நமோ + நாராயணா

 இவ்வாறு பிரித்ததை முறையே ரேசகம் பூரகம் மற்றும் கும்பகத்தோடு பொருத்தி, சுழுமுனையில் கவனம் வைத்து பயிற்சி செய்ய வேண்டும்.  இந்தப் பயிற்சியை தனிப் பதிவாக  "அனுபவ ஞானம் 2 - மந்திரம்" ( #3 ) என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். இப்பதிவின் கீழே அதன் இணைப்பு உள்ளது.


கஜகேசரி யோகம் :-

 ஜோதிட சாஸ்திரத்தில் இந்த யோகம் மிகவும் பலமானதாகவும் அதிர்ஷ்டகரமானதாகவும் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பதிவில் எம்பெருமான் அருளால் இதன் யோகஞான நுணுக்கத்தை நாம் பார்க்க போகிறோம். மேலே கேசரியின் நுணுக்கத்தை "யோகநரசிம்மர்" மூலம் பார்த்தோம். அதற்குப் பிறகு கஜேந்திரன் நுணுக்கத்தில் "கஜேந்திர மோட்சம்" மூலம் பார்த்தோம். யோகியானவர் இந்த இரண்டு நுணுக்கங்களையும் இணைத்து இறைவனை வணங்கினால் அதுவே கஜகேசரி யோகம் எனப்படும்.

 இந்த யோகத்தை பயின்று சித்தியான நபரை யாரும் எளிதில் வெல்லவே முடியாது. ராவணேஸ்வரன் இந்த கஜகேசரி யோக நுணுக்கத்தின் மூலம் சிவனை வழிபட்டு, யாரும் வெல்லவே முடியாத ஆற்றலோடு இருந்தான்.   ஸ்ரீராமர், ராவணனை எப்படி வெல்வது என அறியாமல் மிகவும் சோர்ந்து போயிருந்தார். அப்போது நம் குருநாதர், ராவணனை வெல்ல ஒரே வழி "ஆதித்ய யோகஞானம்" மட்டுமே! என ஸ்ரீராமருக்கு அறிவுறுத்தி "ஆதித்ய ஹிருதயத்தை" சொல்லிக் கொடுத்தார்.  ஓம் ஸ்ரீ ராம அகத்தீசாய நமஹ.



ஸ்ரீராமர் நம் குருநாதரின் ஆசிரமத்திலேயே தங்கி சூரியயோக ஞானத்தை (ஆதித்ய ஞானம்) பயின்று, ராவணனை வென்றார். ஸ்ரீராமர் "ஆதித்ய ஞானம்" பயின்ற இந்த குருநாதரின் ஆசிரமத்தில் இப்போது "பஞ்சமுக பிரத்தியங்காரா தேவி" ஆலயம் உள்ளது. உலகில் யாரும் செய்ய தயங்கும் பல அறிய யாகங்களும் தர்மங்களும் இங்கு இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. நம் குருநாதரும், ஸ்ரீ ராமரும் தவம் செய்த தெய்வீகத் தாக்கம், இப்போதும் இந்த ஆலயத்தில் வலிமையோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தோடு இந்த ஆலயத்திற்கு சென்று   அருள் பெற வேண்டும் என அடியேன் வேண்டுகிறேன். நான் இந்த ஆலயத்தில் தியானம் செய்யும்போது, பலமுறை அபூர்வமான நாதங்களைக் கேட்டு உணர்ந்திருக்கிறேன்.
 ஆலயம் உள்ள இடம் : ராமேஸ்வரம் போகும் வழியில் மானாமதுரையில் வேதியநேந்தல் பஞ்சபூதேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது.



 அடியேன் "ஆதித்ய ஞானம்" என்ற அடுத்த பதிவை விரைவில் எழுதலாம் என நினைக்கிறேன். ஆனால் அடியேன் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் குறைந்தது 10 பேர்களாவது கேட்டுக் கொண்ட பின் எழுத ஆரம்பிக்கலாம் என காத்திருக்கிறேன். இனி குருநாதரின் சித்தம். 


கேள்வி :-
தெய்வச்சிலை என்பது யோக நுணுக்கம் தான் எனில், பக்தி வழிபாடு தேவையா?
பதில் : சரணாகதமான பக்தி வழிபாடு கண்டிப்பாகத் தேவை. இதுவே மனதை ஒருமுகமாக்கி, பின் மனமுருகும்போது நம் உயிரை உணரலாம், இறைவனின் தொடர்பைப் பெறலாம். ஆனால் உங்கள் உயிரின் இருப்பிடத்தை நீங்கள் கண்டிப்பாய்த் தெரிந்திருக்கவேண்டும்.

 மேலே குறிப்பிட்ட இணைப்பு பதிவுகள்.:-

 #1) சாக்த ஞானம்.


 #2) கணாபத்திய ஞானம்.


 #3) அனுபவ ஞானம் 2 -  மந்திரம்.


 #4) சைவ ஞானத்தையும் அறிய விரும்பினால், கீழே உள்ள நான்கு பதிவுகள்.






இப்படிக்கு,
அகத்திய பக்தன்.

கருத்துகள் இல்லை: