குருநாதர் அருளால் பாண்டிச்சேரி ஞான ஆலயத்தில் குரு அம்மாவிடம் நான்கு முறை ஆறுமுக தீட்சை அடியேனுக்கு கிடைத்தது. அதில் கடைசியாக கடந்த 8 மார்ச் 2020ல் தீட்சை எடுத்துக் கொண்டேன். ஆணவ அணுக்களை அன்று மட்டும் முழுமையாக முருகப்பெருமானே ஏற்றுக்கொள்ள சம்மதிப்பதாக குரு அம்மா அறிவித்தார். இது எனக்கு ஒரு வித ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் கிளறியது. ஏன் நம் குருநாதரே நம் ஆணவ அணுக்களை ஏற்று அழிக்க மாட்டாரா?, இதற்கு ஏன் முருகப்பெருமான் வரவேண்டும்? என தோன்றியது. நம் குருநாதரிடமே இந்த கேள்வியை அடியேன் சமர்ப்பித்தேன்.
இந்தப் பிரபஞ்சத்தையே தன் அறிவாக கொண்ட நம் குருநாதர் என் கேள்விக்கு பதிலாக காட்டியது, சுப்பிரமணியர் ஞானம் 32 என்ற நூலில் உள்ள பாடல்களை தான். நம் குருநாதர் திரேதாயுகத்தில் அவர் இமயமலையில் வடபாகத்தில் தவம் செய்யும்போது முருகப்பெருமானை முதன் முதலாக சந்தித்திருக்கிறார். இந்த பாடலில் நம் குருநாதர் ஆணவத்தை அசுரர்கள் என்கிறார். இந்த ஆணவ அசுரர்கள், திரேதாயுகத்திலேயே உயர் ஆற்றல் கொண்ட தவத்தில் சிறந்த ரிஷி முனிவர்களைக்கூட பாடாய்படுத்தி கொடுமையான துன்பங்களை கொடுத்து முனிவர்களின் தவத்தை தொடர்ச்சியாக தொந்தரவு செய்திருக்கிறார்கள்.
இந்த ஆணவ அசுரர்களின் கொடுமையான துன்பத்திலிருந்து தங்கள் தவத்தை காக்க அனைத்து ரிஷி முனிவர்களும் முருகப் பெருமானையே பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். வேலவனே அந்த கொடிய ஆணவ அசுரர்களை கொன்று முனிவர்களின் தவத்தை காத்து அருளியிருக்கிறார். ஆணவ அசுரர்களால் திரேதா யுக ரிஷி முனிவர்களுக்கே இந்த நிலை என்றால் கலியுக எல்லையில் வாழும் நம் நிலையை சொல்லவா வேண்டும்? இன்றைக்கும் பல உயர் ஆன்மாக்களான ஞானிகள் மற்றும் தர்ம சீலர்களை, கலிபுருஷ பகவான் தனது ஆணவ அசுரப் படையை நயவஞ்சகமாக ஏவிவிட்டு அந்த ஞானிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கொடுமையை பலமுறை நானே பார்த்து மனம் நொந்து போயிருக்கிறேன்.
சுப்பிரமணியர் ஞானம் 32 என்ற குருநாதரின் நூலில், இந்த குறிப்பிட்ட வரிகளை மட்டும் உங்களுக்காக ஒலித்துணுக்காக இணைத்திருக்கிறேன். இதை கேட்டு மகிழுங்கள். மேலும் இந்த பாடல் வரிகளையும் இணைத்திருக்கிறேன் படித்துப் பாருங்கள்.
https://drive.google.com/file/d/11xwulAXRFdnW1HMEr7KufTM1RjdzwxrU/view?usp=drivesdk
{{
6. வாழென்று சொன்னவுடன் மயில்வீ ரன்தான் மகத்தான சிவசத்திபத மேற்கொண்டே
ஆவென்று மயிலேறிக் கயிலா சத்தை ஆவலுடன் சுற்றிவரும் போதி லேதான்
சூழென்றே இமயகிரி வடபா கத்திற் சுத்த சித்த மானதபோதனர்கள் கண்டு
தாள்பணிந்து வணக்கமதாய் நிற்கும் போது தபோதனர்கள் ரிடிகளுமே தாம்வந் தாரே.
7. வந்தவரைத் தான்பார்த்து வரையில் நிற்க மகத்தான சற்குருவென் றடிபணிந்தே
இந்தமலைச் சாரலிலே வெகுநா ளாக இன்பமுடன் தவஞ்செய்து வாழ்ந்தோமையா!
அந்தரமாய் ராட்சதர்கள் அண்டி வந்தே அலங்கோலஞ் செய்துமே துரத்துகின்றார்!
சுந்தரமாயிருந்து தவங் காவாய்! என்று சுத்த சித்தமாய்த் தவத்தைக் தொடங்கி னாரே.
8. தொடங்கிமன மடங்கிநிலை தன்னைக் காத்துச் சுத்தமுடன் நின்றுவிளை யாடும் போதில்
அடங்கிமன மடங்காத அசுரர் தாமும் அஞ்சாமல் அழும்புசெய்யு மகத்தைப் பார்த்துத்
திடங்கொண்டு மயிலேறிச் செவ்வேல் கொண்டு சிவந்துவரும் அசுரர்கிளை மாளவென்று
படங்குவித்து வேல்முனையைத் தியானம் பண்ணிப் பாயவிட அசுரர்கிளை பறந்து போச்சே!
9. பறந்துபோய்ப் பலவிதமாய் ரூபங் கொண்டு பந்திபந்தி யாங் அசுரர் பறந்து வந்தார்;
சிறந்துவந்த சேனைகளை நன்றாய்ப் பார்த்துத் தீர்க்கமுள்ள மயிலேறித் தெளிந்து நின்றே
அறந்தழைக்க வேணுமென்று தூல சூட்சம் அரூபமெனுங் காரணமாய் ரூபங் கொண்டு
நிரந்தரமாய் வந்தபொலா அசுரர் தம்மை நிர்த்தூளி செய்துதவம் நிலைகொண்டானே.
10. நிலைகொண்டு நின்றசெயங் கொண்டு சிந்தை நேர்மையுடன் தவஞ்செய்யு முனிவர் கண்டு
கலைகொண்டு மனந்தெளிந்து மகிழ்ச்சி யாகிக் கானமயில் வீரனடி கருதிப் போற்றித்
தலைகொண்டு தாள்பணிந்தே அருட்கண் பெற்றுத் தபோதனரும் ரிடிகளுமே தாம் பணிந்து
சிலைகொண்டு நின்றவடி வேலன் தன்னைத் தெரிசித்தே அவரவர்கள் பதிசென் றாரே.
11. பதிதேடி யவரர்கள் செல்லும் போது பத்தியுள்ள அகத்தியமா முனிவன் வந்து
விதியறிந்தே அசுரர்கிளை மாள வென்று வெற்றியுள்ள வடிவேலைத் தியானம் பண்ணிக்
கெதியறிந்து தூலமுடன் சூட்சமாகிக் கிருபையுள்ள காரணமாம் ரூபங் கொண்டு
சதியறிந்து சங்காரஞ் செய்தா யையா சண்முகமே என்குருவே! சரணந்தானே
12. சரணமென்றே அகத்தியமா முனியைப் பார்த்துச் சண்முகமாய் நின்றவடி வேலன் தானும்
திரணமதாய்த் தானறிந்து, நீ யார்? என்னைத் திருவடியைப் பூசை செய்யுஞ் சேயன் என்றார்:
}}
எல்லாம் சரிதான்! இந்த கொடிய ஆணவத்தை நீக்க ஏதாவது நுணுக்கம் உள்ளதா? என நீங்கள் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒன்றும் கடினமல்ல, சுலபமான நுணுக்கம்தான். கீழ்க்கண்ட மூன்று வழிமுறைகளையும் பின்பற்றி உங்கள் ஆணவ அணுக்களை எளிதில் நீங்கள் நீக்கலாம்.
(1) பாவனை நுணுக்கம் - இதை பரத்வாஜ மகரிஷி அதாவது பரதவசி மகரிஷி தனது ஆகம வேதம் என்ற நூலில் தெளிவாக விவரித்துள்ளார். ஞான ஆலயத்தில் யூடியூப் லிங்கில் இதை எளிதாக புரியும்படி விளக்கி சொல்லி இருக்கிறார்கள். கீழ்க்கண்ட யூடியூப் லிங்கை அழுத்தி கேட்டுப்பாருங்கள்.
இந்த யூடியுப் வீடியோவில் 6.25 நிமிடத்திலிருந்து கேட்க ஆரம்பியுங்கள், முழுவதுமாக கேட்பது மிக மிக சிறப்பானது.
https://enlightenedbeings.org/books
(2) இயன்றவரை ஆதரவற்றோருக்கு தர்மம் செய்து அன்பு அணுக்களை பெருக்குதல். காக்கை குருவி போன்ற சிறிய உயிர்களுக்கு தினமும் சிறிது அரிசி அல்லது சாதம் வைத்து குடிக்க தண்ணீர் வையுங்கள். சிறிய உயிர் தானே என ஏளனமாய் எண்ணாமல் அவற்றிற்குள்ளும் ஈசனின் ஆன்மா உள்ளது, என பணிந்து வணங்குங்கள். இந்த பணிவு அன்பு அணுக்களை பெருக்கும்.
(3) மயில் வீரன் ஆறுமுகப் பெருமானை சிரம்தாழ்த்தி சரணாகதமாக வணங்குங்கள். மேலே குறிப்பிட்ட இரண்டு நுணுக்கங்களும் முருகப்பெருமான் உங்கள் சிரசில் வருவதற்கான தடைகளை நீக்கி நல்ல வழிவகை செய்யும்.
முருகப்பெருமானின் போற்றி சரணங்களை கீழே உள்ள பதிவில் அடியேன் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள்.
https://fireprem.blogspot.com/2019/01/blog-post_29.html?m=0
முருகப் பெருமான் மரமாய் நிற்கும் ஆணவத்தை தனது கூரான வேல் கொண்டு இரண்டாகப் பிளந்து ஒன்றை மயிலாகவும் மற்றொன்று சேவலாகவும் மாற்றுகிறார் . மயில் என்பது பஞ்சபட்சி சாஸ்திரப்படி வான் தத்துவத்தை குறிக்கும் அதாவது ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும், சேவல் என்பது மண் தத்துவத்தை குறிக்கும். அதாவது பஞ்சாட்சரம் நமச்சிவாய இதில் ந என்பது மண் தத்துவத்தை சேவலை குறிக்கும். ய என்பது வான் தத்துவத்தை அதாவது மயிலை குறிக்கும்.
ஓம் சரவணபவ.
இப்படிக்கு
அகத்திய பக்தன்
https://fireprem.blogspot.com/2019/01/blog-post_29.html?m=0
1 கருத்து:
Super
கருத்துரையிடுக