உத்யோகம் புருஷ லட்சணம். இன்றைய காலகட்டத்தில் அன்றாட உத்யோகத்திற்காக தன்னை தயார்படுத்துவது, குடும்ப தேவைகளை கவனிப்பது மற்றும் தனது உடல் / மனம் சீர்படுத்துவதற்கான அன்றாட பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்வது என்பது ஒவ்வொருவருக்கும் பெரும் சவாலான விஷயமாக உள்ளது. இதில் ஒன்றுக்காக மற்றொண்டை தியாகம் செய்வது இயலாத காரியம். அனைத்தையும் சமம் செய்து வாழ்க்கையை கடந்து செல்லவேண்டும். இதில் பெரும்பாலானோர் தனது கோபத்தை வெளிப்படுத்தி, தன்னையும் தன் குடும்பத்தையும் காயப்படுத்திவிடுவார்கள். இந்த சூழ்நிலைகளில் ஒரு பக்குவப்பட்ட பெரியவர் வீட்டிலிருந்தால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து குடும்பத்தினரை நல்வழியில் கொண்டுசெல்வார். என் வீட்டு அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.
எங்கள் வீட்டில், அவரவர்க்கான தனிப்பட்ட வருத்தம் மற்றும் மகிழ்வை எங்கள் வீட்டு பெரியவர் அகத்திய மஹாமுனியிடம் அவ்வப்போது சமர்பித்துவிட்டு எங்கள் அன்றாட வேலைகளை தொடர்வது வழக்கம். நான் தினமும் யோகா, மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் செய்ய குறைந்தது முப்பது நிமிடங்கள் ஆகும். சில நேரம் இது கூடுவதும் உண்டு. அன்னவளுக்கு சமையல், வீட்டு வேலை, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் அவர்கள் படிப்பு என வேலை நாள் முழுக்க சரியாக இருக்கும். அன்னவளின் தினசரி இறைவழிபாடு மிகவும் எளியது. எங்கள் வீட்டில் பூக்கும் முல்லைப்பூவை பறித்து, ஒரு முழம்வரை பூக்கட்டி, அதில் பாதியை குருநாதருக்கும் மீதியை தனக்கும் வைத்துக் கொள்வாள்.
இதில் என்ன பெரிய விசேஷம் என்கிறீர்களா ? நான் மூச்சை அடக்கி நிறைய பாவ்லா காட்டி என்ன தான் குருநாதரை பூஜித்தாலும், அதை அவர் பெரிதாக கண்டுகொள்வது கிடையாது. ஆனால் அன்னவள் வைக்கும் சிறிய பிராத்தனைக்கும் அய்யா உடனே செவிசாய்த்து கண்டுகொள்வார். எல்லா அப்பாக்களுக்கும் தன் மகனைவிட தன் மகளின் மீதே அதிக பாசம் இருக்கும். மஹாசித்தரானாலும் குருநாதரும் இதற்கு விதிவிலக்கில்லை போலும். இது என்ன ஒரவஞ்சனையோ தெரியவில்லை.... இவன் இஷ்டத்திற்கு அள்ளி விடுகிறான், நாமும் வேறுவ்வேலையில்லாமல் இதை படிப்பதா ? என நீங்கள் யோசிப்பது எனக்குப் புரிகிறது. மேற்க்கொண்டு படித்துவிட்டு பிறகு யோசிக்கலாம்.
கடந்த சில மாதங்களாக, அடியவன் நான் யோக மார்க்கத்தைப் பற்றி அதிகம் படிப்பது, பயிற்சி என அதிக ஆர்வத்தில் குழந்தைகளைப் பற்றி சிறிதும் கவனம் இல்லாமல் எனது ஆராய்ச்சி மற்றும் பயிற்சி என இருந்துவிட்டேன். எல்லாவற்றையும் அன்னவள் பார்த்துக் கொள்வாள், என் வேலை சம்பாதிப்பதுடன் முடிந்தது என எடுத்தெறிந்து இருந்துவிட்டேன். அன்னவள் அனைத்து வேலைகளையும் இயன்றவரை செய்து துவண்டு விட்டாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, அய்யாவிடம் வத்தி வைத்துவிட்டாள். இதை நானும் அப்போது அறியவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக எனக்குள் ஏதோ ஒரு மனக்குழப்பம், உடல் நிலையும் சரியில்லை. பகல் இரவு என எப்போதும் மூக்கடைத்து சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டேன். இது என்ன சோதனை அப்பா? என குருநாதரிடம் வேண்டி நின்றேன், அவர் நன்றாக முறைப்பதாவே தெரிகிறது ஆனால் அருள்பார்வை ஏதுமில்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்மேல் மிகவும் அக்கறையுள்ள யோகியிடம் கேட்டதில், அவர் சில ரத்த பரிசோதனைகளை செய்யுமாறு கூறினார். அருகில் உள்ள பரிசோதனை நிலையத்தில் விசாரித்ததில், இவைகள் மிகவும் ஆழமான பரிசோதனைகள், உங்களுக்கு இந்த பரிசோதனைகள் தேவையில்லையே என கூறிவிட்டார்கள். என் குழப்பம் அதிகமானது. நிதானமாக யோசித்ததில், அடியேனின் தவறு புரிந்தது. அன்னவளிடம் சமரசம் செய்துவிட்டு, அய்யாவிடம் மன்னித் தருளவேண்டும் என வேண்டினேன். அன்னவள் இந்த பரிசோதனைகளை செய்யும் முன்பு ஒருமுறை நம் பகுதியில் உள்ள குடும்ப வைத்தியரிடம் ஆலோசிக்குமாறு கூறினாள். அய்யாவை வணங்கி உடனே குடும்ப வைத்தியரிடம் சென்றேன். அவர் எனது நாடிகளை நிதானமாக பரிசோதித்துவிட்டு, "ஒரு வாத உடல், வலுக்கட்டாயமாக சிலேத்தும உடலாக மாற்றப்பட்டுள்ளது. பிறவி உடல் சமப்படுத்தப்பட வேண்டுமே தவிர முற்றிலுமாக மாற்றப்படக் கூடாது" என விளக்கிவிட்டு வைத்தியத்தை ஆரம்பித்தார். நீண்ட நாட்களாக இந்த செயல்முறை நடந்திருப்பதால், சகஜ நிலைக்கு வர சில நாட்கள் ஆகும் என கூறிவிட்டார். இப்போது முன்னேற்றம் உள்ளது. இந்த சிலேத்தும செயல்முறை காரணத்தை வேறு பதிவில் பார்க்கலாம்.
கடந்த வருடம் நிகழ்ந்த மற்றொரு அனுபவம் எனக்கு அய்யா தந்த ஒரு அதிர்ச்சி வைத்தியம். பணி நிமித்தமாக சீனா ப்ரொஜெக்ட்டின் இறுதிக் கட்டமாக இரண்டு வார பயணத்தில் சென்றிருந்தேன். சீனாவில் whatsapp , skype என்ற முக்கிய இணைய தொடர்பு மென்பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. வீட்டாரோடு பேசவேண்டு மெனில், அலுவலக லேப்டாப்பில் அலுவலக மென்பொருள் வழியாகத் தான் பேசமுடியும். லேப்டாப் சுவிட்ச் ஆன் செய்து மென்பொருளில் இணைப்பு பெற பத்து நிமிடங்கள் ஆகும். எனவே அன்னவளிடம் "என்னால் தினமும் பேசுவது சிறிது கடினம், வாரக் கடைசியில் பேசுகிறேன்" என்று சொல்லி விட்டேன். அன்னவளுக்கு இது மிகுந்த வருத்தத்தை கொடுக்கும் என நான் அப்போது அறியவில்லை. அத்தோடு வழமைபோல் அவள் அய்யாவிடம் சென்று ஒப்பிப்பாள் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
மறுநாள் காலை வழமைபோல் சீனா அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன். காலை முதல் வேலையாக ப்ராஜெக்ட் மீட்டிங் நடக்கும். எனது பொறுப்பிலிருக்கும் வேலைகளின் தற்போதைய நிலையை நான் சொல்லவேண்டும். மீட்டிங் சில நிமிடங்களில் ஆரம்பித்துவிடும். என் லேப்டாப் சுவிட்ச் ஆன் செய்தால், ஒரு சமிக்கையும் இல்லை. லேப்டாப் பேட்டரி நல்ல சார்ஜில் இருந்தும் ஒரு பயனும் இல்லை. இடைவெளி விட்டு பலமுறை சுவிட்ச் ஆன் செய்தும் பலனில்லை. பல லட்சங்கள் செலவு செய்து என் நிறுவனம் பணி செய்ய என்னை சீனா அனுப்பியுள்ளது, ஆனால் பிரயோஜனம் இல்லாமல் நான் அனைவர் மத்தியிலும் பரிதாபமாக அமர வேண்டியிருந்தது.
சீனா வல்லுநர்கள் ஆங்கிலம் பேச மாட்டார்கள், மேலும் என் லேப்டாப்ஐ format செய்தால் அனைத்து தகவலும் இழப்பத்துடன், தேவையான அனைத்து மென் பொருட்களையும் மீண்டும் நிறுவி பணியைத் தொடர சில நாட்கள் ஆகும். ஏதாவது ஈரப்பதம் சென்றிருக்கும் என நண்பர்கள் அறிவுரைப்படி முடி உலர்ப்பான் (Hair Drier ) உபயோகித்தும் பலனில்லை. அன்று மாலை வரை எப்படியோ சமாளிதாகிவிட்டது. ப்ராஜெக்ட் லீடரிடம் நிலைமையை சொல்லிவிட்டு, வேறு லேப்டாப் உடனே கொடுங்கள் அல்லது ஊர் திரும்ப வேண்டியதுதான் என முடிவெடுத்து விட்டேன். உறங்குவதுற்கு முன் அன்னவள் ஞாபகம் வரவே, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என சீனா விடுதியிலிருந்து தொலைபேசியில் அழைத்து, நடந்ததை கூறிவிட்டு, "இனி போன் செய்கிறேன் தாயே" என உறுதி சொல்லிவிட்டு குருநாதரை வணங்கி உறங்கிப் போனேன். மறுநாள் காலை அந்த ப்ராஜெக்ட் லீடரிடம் சென்று இனி ஆகவேண்டியது என்ன? என்று ஆலோசனை கேட்டேன். அவர் சிறிது யோசித்துவிட்டு, இப்போது ஒருமுறை சுவிட்ச் ஆன் செய்து பார், என சொன்னார். நூறுமுறை முயற்சி செய்தும் பலனில்லை, இப்போது மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது என நொந்துவிட்டு, அவர் கூறியதர்காக கடைசியாக சுவிட்ச் ஆன் செய்தேன்.
என்ன ஆச்சர்யம் ? லேப்டாப் எந்தக் குறையுமில்லாமல் வெகு சிறப்பாகச் செயல்பட்டது !!!! ஓம் அகத்தீசாய நமஹ என வணங்கிவிட்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் முதல் வேலையாக அன்னவளை தொடர்பு கொண்டு பேசிவிட்டு என் பணியைத் தொடர்ந்தேன்.
அன்னவள் பிராத்தனைக்கு மட்டும் அய்யா அப்படியென்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ? யோசித்துப் பார்த்ததில் ஒரே ஒரு விசயத்தில் மட்டும் தான் அன்னவள் உறுதியோடு இருக்கிறாள் என்று தெரிகிறது. அன்னவள் ராம்நாடு மாவட்டத்தில் ஒரு பிரபல அசைவ உணவகம் நடத்தும் குடும்பத்தில் பிறந்தவள். அவள் பிறந்ததிலிருந்தே தினமும் கறி, ஈரல் என அவளின் தந்தையார், இரவு பகல் பாராமல் ஊட்டி வளர்த்திருக்கிறார். ஆனால் இன்று அன்னவள், மஹாசித்தர் அகத்தியரை வணங்கும் காரணத்திற்காக அசைவ உணவை தியாகம் செய்துவிட்டாள். நான் பலமுறை அறிவுறுத்தியும் ஒரு கோழி முட்டை கூட சாப்பிடமாட்டேன் என உறுதியாகக் கூறிவிட்டாள். அவள் பிராத்தனை மிக எளிதாகினும் அது உள்ளப் பூர்வமானது. அதுவே அன்னவளை அய்யாவின் செல்ல மகளாக வைத்திருக்கிறதுபோலும்.
இதைப்படிக்கும் நண்பர்கள் பலருக்கும், இது நல்ல கற்பனை அல்லது எதேசையான மனோவியல் என்றே தோன்றும். அதில் தவறொன்றுமில்லை, எதையும் கட்டாயம் நம்பவேண்டும் என்ற அவசியம் யாருக்கும் இல்லை. ஆனால், சில நுட்ப்பமான இறைஅலைகளை பெண்கள் எளிதில் உணர்ந்து விடுகிறார்கள். இந்த பதிவை என் சகோதரியிடம் காட்டிவிடுங்கள் என உங்கள் மைத்துனன் என்ற உரிமையில் அடியவன் கேட்டுக் கொள்கிறேன். ஒரு புத்திசாலிப் பெண் எந்த சூழ்நிலையையும் நல்ல வழியில் அருளோடு சமாளித்து விடுவாள். நன்றி.
இவன்,
அகத்திய பக்தன்
5 கருத்துகள்:
மிகவும் உண்மையான பதிவு ஐயா...
தம் பதிவு மூலம் குருநாதர் அடியேனுக்கும் செய்தி கொடுத்து விட்டார் நன்றி ஐயா
மது, மாமிசம், பிற ஜீவன்களுக்கு வேதனை கொடுப்பவர்கள், "தயவு செய்து" சித்தர்கள் மார்க்கத்துக்கு வராதீர்கள் என அகத்தியர் அடிக்கடி உரைப்பார். இதன் அர்த்தத்தை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என்று புரியவில்லை. ஆமாம்! நீங்கள் மொத்தமாக அசைவத்தை விட்டுவிடீர்களா இல்லையா? - அக்னிலிங்கம்!
மிக்க நன்றி ஐயா. நாங்கள் குடும்பத்துடன் சைவ உணவுக்கு மாறி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. மற்ற பிந்தய பதிவுகளையும் படிக்கும்போது, மேலும் ஆச்சர்யப்படுவீர்கள். அகத்தீசர் பாதம் போற்றி. ஓம் அகத்தீசாயா நமஹ
Om agathisaya pottri
Om agathisaya pottri
Om agathisaya pottri
Iraivanin ovvoru asaivaiyum rasiththu chaareduttha brHmave umathu anubavangal arumai. Iraivanukkum namakkum ulla nija dhooram therinthu vittathu
கருத்துரையிடுக