வெள்ளி, 5 ஜனவரி, 2018

சூப்பர் ஹீரோ... சூப்பர் ஹீரோ...

சூப்பர் ஹீரோ... சூப்பர் ஹீரோ..


கடந்த வாரம், எனக்கு தெரிந்தவரின் மகனை எதேச்சையாக காண நேர்ந்தது. அவன் பள்ளி முடித்து சமீபத்தில் கல்லூரி சேர்த்திருக்கிறான். முன்பு மிகவும் ஒல்லியாக இருந்தவன் திடீரேன சதைபிடிப்பாக இருந்தான். நேர்மையாக வளர்ந்த உடலாக தெரியவில்லை. பீர் மற்றும் சாராய பானங்கள் குடித்து, அதன் ஆரம்ப கட்ட விளைவாக ஒரு வாலிபனின் உடல் பளபளப்பாக நன்கு சதை ஏறியதுபோல் நமக்கு தெரியும். பையன் அடிக்கடி மாலை இரவு நேரங்களில் வீட்டிற்கு வரமாட்டான். ஜிம் செல்கிறேன் என்பான். பீர் குடித்தால் நல்ல சதைபிடிப்பாக அழகாக மாறலாம் என அவனது சக நண்பர்கள் மூளைச்சலவை செய்திருப்பார்கள். எனது கல்லூரி காலத்தில் இப்படி மது அருந்த ஆரம்பித்தவர்கள், இப்போது குடிகாரர்களாக மாறியிருக்கிறார்கள்.  இவர்களை எப்படி திருத்துவது என தெரியாமல் அவர் சொந்தங்கள் புலம்புவது மிகவும் பரிதாபத்திற்குரியது. இதற்கு ஒரு நல்ல எளிய மருந்து இல்லையா ? என நான் பலமுறை என்குருவை வணங்கி பிராத்தித்திருக்கிறேன். குரு அருளால் இரண்டு நல்ல எளிய மருத்துவ குறிப்புகள் கிடைத்திருக்கிறது. அதை தெரிவிக்கவே இந்த பதிவு. உங்களுக்கு வேண்டியவர் யாரேனையும் காப்பாற்ற விரும்பினால், உங்கள் இஷ்ட்ட தெய்வத்தை அல்லது குருவை வணங்கி இந்த மருந்தை கொடுங்கள். இறைவன் அருளால் அவர் குடும்பம் காப்பாற்றப்படும்.

எல்லாம் சரிதான்! ஆனால், இதில் எனக்கு என்ன பாதிப்பு அல்லது தொடர்பு ? என நீங்கள் யோசிப்பது தெரிகிறது.

எனது சிறுவயதில், கோவை மாவட்டம் சூலூரில் கழிந்தது. அப்போது, எனது தந்தை சூலூர் விமான படை நிலையத்தில் பணிசெய்தார். என் தந்தைக்கு இரண்டு மனைவிகள். இரண்டு தாயாருக்கும் சேர்த்து அப்போது ஆறு குழந்தைகள். அடியேன் நான்தான் மூத்தவன். எனது கொள்ளு பாட்டி கோட்டையம்மாளும், அப்பத்தா மீனாக்ஷி அம்மாளும் எனக்கு ஆன்மிகத்தையும் அன்பையும் புகட்டி வளர்த்தார்கள். அவர்கள் என் சிறு வயதிலேயே,  இரண்டு குடும்பத்தையும், இரண்டு தாய் குழந்தைகளிடமும் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என சொல்லி சொல்லி வளர்த்தார்கள். இரண்டு குடும்பத்துக்கும் தேவையான அரிசி, பருப்பு, மளிகை, மாமிசம் மற்றும் எரிபொருள் என அணைத்து பொருட்களையும் மூத்தவன் என்ற பொறுப்பில் நானே அளந்து பிரித்து கொடுக்கும் பொறுப்பை தந்தை எனக்கு கொடுத்தார். எனது சிறிய அன்னை தன் மகன்களை விட அதிக அன்பை என்மீதே வைத்திருந்தாள்.

என் தந்தை சராசரி மனிதனுக்கும் மேலான அதீத புத்திசாலி, திறமைசாலி, பலசாலி, பல மொழிகள் அறிந்தவர், கவிஞர், தத்துவவாதி, ஆன்மிக நம்பிக்கையாளர், எழுத்து மற்றும் பேச்சாற்றல் நிறைந்தவர். எனக்கு அவரைப்போல் பத்தில் ஒரு பங்கு திறமைகூட கிடையாது. எனது தாயாருக்கு ஒரு தையல் நிலையம், எனது சிறிய தாயாருக்கு ஒரு செருப்பு கடை மற்றும் அவர் கூடுதலாக தனக்கு ஒரு மெக்கானிக்கல் ஒர்க் ஷாப் வைத்து நடத்தினார். இது போக, அவ்வப்போது டெல்லி சென்று நெறைய எந்திரங்கள் வாங்கி வந்து விற்பார். "ஓங்கி அடிட்ச்சா ஒன்றை டன் வெயிட்டுடா!" என சினிமா வசனம் கேள்விபட்டிருப்போம், ஆனால் உண்மையில் அப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா என்ற கேள்வி எழும். ஒரே சமயத்தில் பத்து ஆண்களை தூக்கி வீசும் மனோபலமும் உடல்பலமும் தந்தைக்கு இருந்தது.

அவ்வப்போது இரண்டு பொண்டாட்டி பிரச்சனை சிறிது வரும், மற்றபடி வாழ்க்கை பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லாமல் சென்றது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில், தந்தையருக்கு வாரக்கடைசியில் மட்டும் (வெள்ளிக்கிழமை ராமசாமி ) நண்பர்களுடன் மது அருந்தும் பழக்கம் ஆரம்பித்தது. ஆறு மாதகாலங்களில் தினசரி மாலைநேரம் மட்டும் மது அருந்தும் பழக்கம் வந்தது. சில மாதங்களில், பகல் குடிகாரனாகவும் ஆனார். மேலும் சில மாதங்களில் அவர் ஒரு முழுமையான இந்திய “குடிமகனாக” மாறிவிட்டார். ஆரம்பத்தில் குடித்துவிட்டு அமைதியாக இருந்தவர், பிறகு தினசரி வீட்டில் ரகளை கலாட்டா கச்சேரியானது.

குடிபோதையில் எப்போது என்ன செய்வர், எப்படி சண்டை வரும், என அனுமானிக்கமுடியாமல் பயத்திலும் வெறுப்பிலும் வாழவேண்டியிருந்தது. தலையணைக்கடியில் கத்தி அருவாளை வைத்து அவர் தூங்கினால், நாங்கள் எப்படி நிம்மதியாக உறங்குவது? அவ்வப்போது இரண்டு நாட்களுக்கும் மேலாக அவர் வீடு திரும்பவில்லையெனில், எனது தாயார்  என்னை எங்கேனும் அவரை தேடிவர சொல்லுவார். சிறுவன் நானும் ஒவ்வொரு ஒயின் ஷாப், சாகனா கடைக்காரிகளின் வீடுகள்,  மேற்படி வீடுகள் என சென்று, 'என் அப்பா வந்தாரா?' என கேட்டு தேடி வரவேண்டும். என்ன செய்ய? இரண்டு குடும்பமும் தவிக்கிறதே?

எனக்கு பள்ளி படிப்பு முடியும்வரை எப்படியோ சமாளித்துவிட்டு, பின்பு தாய்மாமா தயவை நாடிசென்றுவிட்டோம்.

பின்பு, அவர் யாருக்கும் பிரயோஜனம் பொறுப்பு இல்லாமல் குடித்து குடித்து, கடந்த 2012 ஆம் வருடம் இறந்துபோனார். இங்கு மூன்று முக்கிய விஷயங்கள் உள்ளது. ஒன்று-, சிறிதாக ஆரம்பிக்கும் குடிப்பழக்கம் எவ்வளவு திறமையானவனையும் அழித்துவிடும். இரண்டு-, ஒருவன் நிறைய திறமைகளோடு சூப்பர் ஹீரோவாக இருக்கிறான் என்றால், எங்கோ "ஆப்பு" இருக்கிறது என்று அர்த்தம். மூன்று-, ஒருவன் சராசரிக்கும் குறைவான மனிதனாக இருந்தாலும் இறைவனை வணங்கி ஒழுக்கமான வழியில் இறுதிவரை வாழ்ந்தால், அதுவே மிக மிக பெரிய சாதனையாகும். அந்த ஒழுக்கமுள்ள மனிதனே மிகவும் உயர்ந்தவன் சாதனையாளன்.

ஒரு சாப்ட்வேர் அனலிஸ்ட்டாக, வாழ்வின் இந்த கொடிய பக்கங்களில் பின்னே ஓடிய "லாஜிக்" (சூட்சமம்) என்ன ? என நான் என் ஜாதகத்தை சமீபத்தில் புரட்டினேன். இது சனி திசையின் பத்தொன்பது வருடங்கள் என பார்த்து ஆச்சர்யப்பட்டேன். எது எல்லோர்க்கும் இந்த அளவு வீரியமாக இருக்குமா? இல்லை இல்லை.   இது அவரவர் ஜாதகத்தில் இருக்கும் சுப கிரகங்களின் நல்ல பார்வையை பொறுத்து வீரியம் குறையும். அடியேன் எனக்கு எந்த சுப கிரகமும் அருள்செய்யாததால், பாவ கிரஹங்கள் எல்லாம் கூடி குத்தாட்டம்போட்டுவிட்டது. இதை படித்துவிட்டு, எனக்கு ஜோசியம் தெரியும் என நம்பவேண்டாம். இது அனைத்தும் என் அருமை நண்பர் சேதுபதி எனக்காக அலைந்து திரிந்து கொடுத்த விஷயங்கள்.

ஏதோ மருந்து சொல்கிறேன் என்றுவிட்டு, சொந்தக்கதையை சொல்லுகிறானே! என நீங்கள் யோசிப்பது புரிகிறது. வெறுமனே அறிவுரை சொல்வது வீண்தான், சொந்த அனுபவத்தை சொல்லிவிட்டால் உங்கள் ஆழ்மனதில் பதிந்துவிடும் என்ற நம்பிக்கை தான். சரி விசயத்திற்கு வருவோம்.

குருவருளால், ஒரு அற்புதமான சித்த வைத்திய மருந்து உள்ளது. "கேழ்விரகு பற்பம்". இதன் செய்முறை சிறிது சிக்கலானது. ஆனால் மிகக்குறைந்த விலையில் நல்லெண்ணத்தோடு திரு. சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்கள் இதை தயார் செய்து விற்கிறார். கீழே உள்ள இணைய இணைப்பில் மேலும் அதிக விபரங்கள் உள்ளது. இதன் செய்முறையை பார்த்து கலங்கவேண்டாம், கண்ட சாக்கடை தண்ணிக்கு அடிமையானவருக்கு இந்த மருந்தை, இறைவன் கருணையோடு கொடுத்திருக்கிறார். உங்களுக்கு வேண்டியவரை காப்பாற்ற நினைத்தால், உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி மருந்தை கொடுக்க சொல்லுங்கள். திரு. சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்கள் மிகவும் பிஸியானவர். போனில் காத்துக்கிடப்பதை விட, சதுரகிரி சென்று "சுந்தர மகாலிங்க" தரிசனமும் செய்துவிட்டு, மருந்தையும் வாங்கி வருவது சிறப்பானது. இதில் மதச்சார்பு என்று எதுவும் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் எல்லோரையும் கருணையோடு பார்க்கிறான்.

http://blog.sathuragiriherbals.com/2016/10/blog-post_21.html

   அகத்திலே தீயாக வந்து, கொடிய பாவங்களை போக்கி அருளும் என் ஞானத்தந்தை மகத்துவம் பொருந்திய அகத்திய மகாமுனி உங்கள் அனைவரையும் நல்வழியில் அருள் செய்வார், என வணங்கி அடுத்து ஒரு வித்தியாசமான பதிவில் சந்திபோம் என விடை பெறுகிறேன்.



இவன்,

அகத்திய பக்தன்,

பிரம்மேந்திரன் கலைச்செல்வி

1 கருத்து:

கூடுதுறை சொன்னது…

நல்ல விளக்கம்...ஐயா

மருந்து விவரம் கொடுத்திமைக்கு மிக்க நன்றி