கிராமத்து நம்பிக்கைகளின் பராசக்தி மூலம்
நம் குருநாதர் அகத்திசரின் பாதம் பணிந்து இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.
ஓம் அகத்தீசாய நமஹ.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அடியேன் நான் பிறந்தேன். எனது குழந்தை பருவத்தில் கிராமத்து மக்களிடம் இயல்பாகவே தெய்வ நம்பிக்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திலும் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுவேன். ஏன் இந்த மக்களிடம் இவ்வாறான தெய்வ நம்பிக்கை சார்ந்த பழக்கங்கள்? இவை மூடநம்பிக்கைகளா? என எனக்கு நீண்ட வருடங்களாக சந்தேகம் இருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு குருநாதரின் அருளால் பல கேள்விகளுக்கான அதிசயமான விடைகள் கிடைத்தது. ஒவ்வொரு நம்பிக்கைக்கு பின்பக்கமாக ஒரு மனோதத்துவ அறிவியலாக பராசக்தி நிற்பதை குருநாதரின் அருளால் புரிந்து கொண்டேன். அவற்றில் சில நம்பிக்கைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். இந்த நம்பிக்கைகள் இன்றோ சமீப காலத்திலோ வந்ததில்லை, இது பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் நம்பிக்கைகள்.
அன்றாட வாழ்க்கையில் இந்த மக்களின் மனம் உருகிய தெய்வபக்தியே, அடுத்து வரப்போகும் மிகப்பெரிய கர்ம வினைகளை சமாதானப்படுத்தக்கூடிய மனோ தத்துவ சூட்சுமங்களை, இவர்களின் மனதின் வாயிலாகவே தோன்ற வைத்து அடுத்து வரும் அந்த கர்ம வினையை சமாதானப்படுத்தி விடுகிறது.
1) கூர்மையான ஊசி போன்ற நீண்ட வேல் ஆயுதத்தால் உடல் முழுவதும் அழகு குத்திக் கொள்வது.
இது பெரும்பாலும் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக. இதை நான் இப்போதும் ஒவ்வொரு வருடமும் நேரடியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் முருகப்பெருமானின் விசேஷ காலங்களில் பார்த்து அதிசயத்திருக்கிறேன். இதில் பறவை காவடி எடுத்து வருவது பார்ப்பதற்கு மிகவும் பயமாகவும் அதிசயமாகவும் இருக்கும். முற்பிறவியில் போர் குற்றங்களை அதிகமாக செய்தவர்கள், தன்னிடம் சரணடைந்த போர் கைதிகளை ஆயுதங்களால் தாக்கி சித்திரவதை செய்தவர்கள், இந்தப் பிறவியில் தானாகவே அதேபோல கூர்மையான ஆயுதங்களை தன் உடலில் சொருகி முருகப்பெருமானுக்கு வேண்டுதல் வைத்து விடுவார்கள். இது மிக மிக அபூர்வமான மனோதத்துவ அறிவியல். இது போன்ற பக்தி ரீதியான வேண்டுதல் இல்லாவிடில் அவர்கள் விபத்து மூலமாக மிகப்பெரிய துன்பத்தை சந்திக்க வேண்டி வரும். இங்கே பக்தியினால் செய்யப்படும் பொழுது அவர்களுக்கு அந்த கூர்மையான வேலை உடலில் சொருகுவது அதிக துன்பத்தை தராது. அந்த இறை நம்பிக்கை அவர்களுக்கு வரும் வலியை குறைத்து விடும் அல்லது மறைத்து விடும். அதே சமயத்தில் இந்த போர் குற்ற கர்ம வினையும் சமாதானம் ஆகிவிடும்.
2) மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்குவது மற்றும் தீச்சட்டி எடுப்பது.
முற்பிறவியின் பாவச் செயலால், இந்தப் பிறவியில் நெருப்பு விபத்தினால் அதிகமாக பாதிக்கப்பட வேண்டும் என்ற கர்மவினை உள்ளவருக்கு இயல்பாகவே அவர்களின் இஷ்ட தெய்வத்திற்கு பூக்குழி இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் போன்ற வேண்டுதல்களை இயல்பாகவே வேண்டி ,அதை செய்து விடுவார்கள். இதனால் அவர்களின் ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் தீ விபத்திற்கான கர்ம வினைகள் இயல்பாகவே சமாதானமாகி வீரியம் குறைந்து விடும்.
3) நீண்ட தொலைவு கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது.
முற்பிறவியில் தன்னிடம் பணி செய்தவர்களை அதிகமாக அலைய வைத்த கர்ம வினையை சமாதானம் செய்ய இந்த பிறவியில் அவர்கள் தானாகவே வெகு தொலைவு பாதயாத்திரை செல்ல வேண்டி விடுவார்கள்.
இவ்வாறு செய்யவிடில் அந்த கர்ம வினையை சமாதானப்படுத்துவதற்காக சிறிதும் லாபம் இல்லாத உபயோகம் அற்ற அலைச்சல் பயணங்களை, தொழில் நிமித்தமாக அலைந்து சோர்ந்து நஷ்டப்படுவார்கள்.
4) கோவிலுக்கு மொட்டை எடுக்கும் நேர்த்திக்கடன்.
இது பெரும்பாலும் முருகப்பெருமான் அல்லது திருப்பதி பெருமாளுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் கூட மொட்டை எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை இன்றும் பார்க்கலாம்.
அறுவை சிகிச்சைக்காக கத்தி உடலில் பட வேண்டும் என்ற கர்ம வினையை சமாதானப்படுத்துவதற்காக அவர்களை அறியாமலேயே அவர்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டி விடுவார்கள். எவ்வளவு ஜாக்கிரதையாக மொட்டை அடித்தாலும் ஒரு சிறு கீறல் பட்டு ஒரு துளி ரத்தம் வேணும் வந்துவிடும். இது அந்த முந்தைய பிறவியின் கர்ம வினையை சுலபமாக தீர்ப்பதற்கான அற்புதமான மனோதத்துவ வழிமுறை.
5) குழந்தையை கோவில் தெய்வத்திற்கு தத்து கொடுத்துவிட்டு பிறகு தெய்வத்தின் குழந்தையாக தனது வீட்டிலேயே வளர்ப்பது.
இங்கு தாய் தந்தை என்ற "உறவை" தெய்வத்திற்கு தத்து கொடுப்பதை கவனிக்க வேண்டும். தன் குழந்தையின் மூலம் தான் துன்பப்பட வேண்டும் அல்லது தன்னால் தன் குழந்தை துன்பப்பட வேண்டும் என்ற முற்பிறவி கர்மவினை சமாதானம் ஆகுவதற்கான ஒரு மனோதத்துவ சூட்சுமம்.
6) கடவுளுக்கு விரதம் இருப்பதாக பட்டினி கிடப்பது. முற்பிறவியில் தன்னிடம் உணவு மற்றும் செல்வம் இருந்தும், பசியால் வாடிய தன் பணியாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு உணவு கொடுக்காமல் இருந்தது. பசியோடு இருக்கும் அவர்கள் முன் தான் மட்டும் உணவு உண்டு அவர்களுக்கு மன வேதனையை கொடுத்தது. இவ்வாறானது வேண்டுதலை செய்யாவிடில், வினோதமான அல்லது சர்க்கரை நோயினால் பட்டினி கிடக்க வேண்டும் என்ற விதி வந்துவிடும். சிலருக்கு தனது செல்வத்தை இப்பிறவிலே இழந்து பட்டினியோடு பிச்சைக்காரனாகும் நிலை வந்துவிடும்.
7) பழமையான கோயில்களின் வாயிலில், தனக்கு எந்த உடல் பாகத்தில் நோய் உள்ளதோ, அந்த உடல் பாகத்தை வெள்ளியிலே வாங்கி, உண்டியலில் காணிக்கை செலுத்தும் பழக்கம்.
அந்த குறிப்பிட்ட உடல் பகுதிக்கான முற்பிறவி கர்ம வினைகளை மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டி அந்த உடல் பாகத்தையே மனோதத்துவ ரீதியாக சரணாகதம் செய்வது.
உங்கள் மனதில் ஓடும் கேள்விகள் :-
ஆழ்மனதில் இப்படித்தான் கர்ம வினை பதிந்திருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இந்த கர்ம வினைகளை நமக்குள்ளேயே கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் யார்? இந்த கர்ம வினைக்கு மாற்றாக தெய்வ நம்பிக்கை சார்ந்த வேண்டுதல் அல்லது யோசனை நமது வெளிமனதிற்கு எப்படி வந்தது ?
நமது ஆழ்மனத்தில் என்னென்ன கர்மவினைகள் பதிந்திருக்கிறது என்பதை நமது வெளி மனத்தாலோ, அறிவாளோ அல்லது வேறு யாராலும் கண்டுபிடிக்க இயலாது. இதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நமக்குள் உயிராய் இருக்கும் பராசக்தியே. இவள் நமது புருவ மத்திக்கு உள்ளே அண்ணாக்கிற்கு மேலே நமது உயிர் இருக்கிறாள். இந்த "உயிரே" நமது இயங்கு சக்திக்கு ஆதாரமாக உள்ளது.
நம் உயிரான பராசக்தி வீரியமாய் செயல்படுவதற்கான ஆற்றலைப் பெற வேண்டுமெனில், நாம் "இறைஞ்ச" வேண்டும். அதாவது இறைவனை பணிந்து வணங்க வேண்டும். அவ்வாறு பணிந்து வணங்கும் பொழுது விண் ஆற்றல் இந்த பராசக்திக்கு அதிகமாய் கிடைக்கும். அடியேன் எனது அனுபவம் மற்றும் புரிதலின்படி கடுமையான கர்மாக்கள், நாம் விரும்பத்தகாத கனவுகளாகவும் வெளிப்படுவதும் உண்டு.
உதாரணமாக ஒருவர் பலரோடு திருமணபந்தம் மூலமோ அல்லது வேறு மார்க்கத்திலோ உறவு கொள்ள வேண்டும் என்ற தலைவிதி இருந்தால், அந்த விதியை ஒற்றை அணுவால் கனவுகளாக வெளிப்படுத்தி சாமாதானம் செய்து சிறைப்பட்ட ஆன்மத்துகள்களை விடுதலை செய்யமுடியும். முக்கியமாக ஆழ்ந்த பக்தி வழிபாட்டிலோ அல்லது சக்திவாய்ந்த ஆலயங்களுக்கு யாத்திரை செய்து விட்டு வந்த பிறகோ, அதிகமான விரும்பத்தகாத கனவுகள் ஏற்படுகிறது எனில், அவரது சிறைப்பட்ட ஆன்மத்துகள்கள் விடுபடுகிறது என்று பொருள். இதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை, இறைவன் உங்களை வழி நடத்துகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
வீடியோ சுருக்கம்.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக