ஞாயிறு, 20 அக்டோபர், 2024

மோட்ச தீப ஞானம் - துன்பங்களை நீக்கும்

 மோட்ச தீப ஞானம்


அருட்பெருஞ்ஜோதியே போற்றி.

ஆன்ம ஜோதியே போற்றி.


கர்ம வினைகளால் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாவோருக்கு இந்த மோட்ச தீப வழிபாடு மிகச் சிறந்த தீர்வு. இதை நானும் எனது குடும்பத்தாரும், குருநாதரின் அருளால் பயிற்சி செய்து, அனுபவப்பட்டு, பலன்களை அடைந்த பின் எழுதுகிறேன். தனது வாழ்க்கைத் துணைவரால் துன்பப்படுபவர்கள், தனது குழந்தைகளால் மன உளைச்சலும் துன்பத்தையும் அனுபவிப்பவர்கள், கடன் தொல்லையால் மிகுந்த துன்பத்திற்கு ஆளானவர்கள் மற்றும் அனைத்து விதமான துன்பங்களுக்கும் இதுவே மிகச்சிறந்த குருநாதர் அருளிய தீர்வு.

முன்பு மோட்ச தீபத்தை  காலமானவர்களுக்கு மட்டுமே ஏற்றி அவர்கள் ஆன்மா மோட்சம் அடைய வேண்டும் என வேண்டுவார்கள். இது கலியுக எல்லைக் காலமாகையால் இனி பிறக்கும் ஆன்மாக்கள் மிகுந்த சிரமத்திற்கு உட்பட வேண்டியிருக்கும். எனவே பிறவாமை வேண்டும் என குருநாதரை வேண்டி தனக்காகவும் தானே ஒருமுறை மோச்சதீபம் ஏற்றிக் கொள்ளலாம்.  தனக்குத் தானே ஏற்றிக் கொள்ளும் இந்த மோட்ச தீப வழிபாடு, நமது உயிரை சூழ்ந்திருக்கும் மாய கர்ம ஆணவ அணுக்களை நீக்கி, குருநாதரின் அருளால் ஒரு தெளிவான மனிதராக எஞ்சிய காலம் வரை வாழச் செய்யும். 


இடம் :- அருகில் உள்ள  கால பைரவர் இருக்கும் சிவாலயம்.




தேவையான பொருட்கள்  :-

சிறிய மண் விளக்கு.
 வெள்ளை நூல்.
 சாயமிடாத வெள்ளை பருத்தி துணி.
 கருப்பு எள் சிறிய பாக்கெட்.
 நல்லெண்ணெய் சிறிய  பாக்கெட் 50 கிராம்.
 விளக்கு வைக்கும் சிறிய தட்டு.
 அலங்காரத்திற்கான பூக்கள் மற்றும் மூலிகைகள்.




செய்முறை :-

 கீழ்க்கண்டவாறு பருத்தித் துணியில் சிறிதளவு கருப்பு எள்ளை  கோடு போல் தூவி சுருட்ட வேண்டும். ஒவ்வொரு முறை சுருட்டும்பொழுதும் சிறிதளவு சிறிதளவு எள்ளை, கோடு போல் துவ வேண்டும். முழுமையாக சுருட்டிய பின் வெள்ளை நூலால் சுற்றி, கீழ்க்கண்டவாறு ஒரு திரி போல் உருவாக்க வேண்டும். இந்தத் திரி தான் மோட்சத்திற்குரிய ஆன்மா என  மனதில் எடுத்துக் கொள்ளவும். பின்னர் எஞ்சிய எள்ளை மண் விளக்கில் தூவி அதன்மேல் இந்த திரியையும் வைத்து விடவும். ஒரு சிறிய காகிதத் தட்டு அல்லது  ஏதாவது ஒரு தட்டில் அந்த விளக்கை வைத்து அதை சுற்றி, மலர்களாலும் மூலிகைகளாலும் அலங்காரம் செய்யவும்.











வேண்டுதல் :-

 நமது ஆன்ம குருநாதரின் முன்  மானசீகமாய் இந்த விளக்கை வைத்து, இந்த ஆன்மாவை நான் முழு மனதோடு கால பைரவரிடம் சமர்ப்பிக்கிறேன். எனது இந்த ஆன்மாவிற்கு பிறவா வரம் கொடுத்து மோட்சம் அருள வேண்டும் குருநாதா. 

 பின்னர் இந்த விளக்கை காலபைரவர் சன்னதிக்கு எடுத்துச் சென்று அவர் முன் வைத்து, எனது ஆன்மாவை சூழ்ந்துள்ள அனைத்து மாய கர்ம ஆணவங்களை கருணையோடு நீக்கி மோட்சம் அருள வேண்டும் காலபைரவரே!,  என  மனம் உருகிய வேண்டுதல் வைக்கவும். வேண்டுதலுக்குப் பின்னர் காலபைரவருக்கு அருகிலேயே விளக்கு ஏற்றும் ஒரு இடம் தனியாக இருக்கும். அங்கே அதற்குரிய மேடையில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். மீண்டும் தீபத்தை பார்த்து இந்த எனது ஆன்மா முழுமையாக மோட்சம் அடைய வேண்டும் என வேண்டி உங்களுக்குத் தெரிந்த மந்திரங்களை சிறிது நேரம் ஜெபம் செய்யலாம். பின்னர் மன நிறைவோடு வீட்டிற்கு  வந்து உங்கள் அன்றாட கடமைகளை,  ஆன்மா விடுபட்ட உணர்வோடும் அன்போடும் தொடர்ந்து செய்யுங்கள்.




தனக்குத் தானே மோட்ச தீபம் ஏற்றிக் கொண்டவர்கள், சில நாட்களுக்குப் ( குறைந்தபட்சம் ஒரு வாரம் ) பிறகு தன் ஆன்மாவோடு தொடர்பு கொண்டவர்கள் மற்றும் தனக்கு மிகவும் பிரியமானவர்களுக்கும் மோட்சம் பெற வேண்டும் என  அவர்களுக்கான மோட்ச தீபத்தையும் ஏற்றி, காலபைரவரிடம் சரணாகதமாய் சமர்ப்பிக்கலாம்.  ஒரு முறை ஒருவருக்கு மட்டும் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும், அதன் பிறகு சில நாட்கள் கழித்து ( குறைந்தபட்சம் ஒரு வாரம் )  மற்றவருக்கும்  ஏற்றலாம். இந்த கால இடைவெளி, ஆத்மார்த்தமான விடுபட்ட நிலையை உணர்வதற்கே.

பிறருக்காக மோட்ச தீபம் ஏற்றும் போது, கூடுதலாக கீழ்க்கண்ட வேண்டுதலையும் அன்போடு வைக்க வேண்டும். அந்த மோட்சத்திற்குரிய  நபரை உருவமாக மனக்கண் முன் நிறுத்தி வேண்டுதலை வைக்க வேண்டும்.




 அன்பான ஆன்மாவே, உனக்கு இந்தப் பிறவியிலும் இதற்கு முந்திய பிறவியிலும் நான் எனது எண்ணம் சொல் செயலால், எந்த வகையில் துன்பத்தை கொடுத்திருந்தாலும், அதற்காக உனது பாதத்தில் என் தலையை வைத்து சரணாகதமாய் மன்னிப்பு கேட்கிறேன். கருணையோடு தாய் போல் என்னை நீ  மன்னிக்க வேண்டுகிறேன். அதுபோல் நீ எனக்கு எந்த வகையில் துன்பத்தை கொடுத்திருந்தாலும் அதற்காக நான் உன்னை முழு மனதோடு மன்னிக்கிறேன். ஆன்மவே நீ எனக்கு இந்த பிறவியிலும் இதற்கு முந்தைய பிறவியிலும் செய்த நல்ல விஷயங்களுக்காக நான்  ஆத்மார்த்தமாக நன்றி செலுத்துகிறேன்.  மோட்சத்திற்குரிய ஆன்மாவே, எனது ஆன்மாவும் விரைந்து மோட்சம் பெற வேண்டும் என அன்போடு ஆசீர்வதிப்பாயாக.

சுருக்கம்:-  மன்னிப்பு கேட்டல்,  மன்னித்து விடுதல், நன்றி  உணர்தல், சமர்ப்பித்தல்.




மோட்ச தீப வழிபாட்டிற்காக கோவிலுக்கு செல்வதற்கு முன் வீட்டில் இருந்தபடியே, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு இதை மனதிலேயே செய்து பாருங்கள். அவ்வாறு மனதிலேயே  கற்பனையாக கோவிலுக்கு சென்று மோட்ச தீப வழிபாடு செய்யும் பொழுது, உங்களுக்கு என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும், எப்படி இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்ற சந்தேகங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும். பின்னர் உண்மையிலேயே நீங்கள் கோவிலுக்கு சென்று அந்த வழிபாடு செய்யும்பொழுது மிகவும் எளிதாக செய்து விட முடியும்.

கேள்விகள் :-

1) எப்போது :-

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அஷ்டமி நாட்கள் மாலை நேரம் மிகவும் சிறந்தது.

இந்த நாட்கள் ஒத்துவரவில்லை என்றால் உங்களுக்கு ஒத்துவரும் எந்த நாட்களின் மாலை நேரத்திலும் செய்யலாம். சூரியன் மறையும் நேரத்தில் செய்வதே சிறப்பு.  இந்த நேரத்தில் தான் காலபைரவர் அருள் வீரியமாக ஆரம்பிக்கும். உங்களின் எப்பேர்பட்ட கர்ம வினைகளும்  காலபைரவரின் அருளால் நீங்கிவிடும்.



2) எத்தனை :-

ஒருவர் ஒரு ஆன்மாவிற்கு ஒருமுறை மட்டும் மோட்ச தீபம் ஏற்றினாலே போதுமானது.

உங்கள் கர்மவினை மிகவும் அதிகமாக உள்ளதாக நீங்கள் உணர்ந்தால், மேலும் ஒருமுறை மோட்ச தீபம் தனக்குத் தானே ஏற்றி வழிபடலாம். ஒரு ஆன்மாவிற்கு பலமுறை மோட்ச தீபம் ஏற்றுவது, மேலும் மேலும் அந்த ஆன்மாவை தூய்மைப்படுத்தி உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும். உயர்ந்த நிலை என்பது மரணம் என தவறாக எண்ணக்கூடாது. உயர்ந்த நிலை என்பது  மனிதராய் வாழும் நிலையிலேயே தெய்வ உணர்வோடும் சாந்தத்தோடும் நிறைவோடும் வாழ்வது ஆகும்.


3) அதே ஆன்மாவிற்கு வேறு ஒருவரும் மோட்ச தீபம் ஏற்றலாமா?

 ஏற்றலாம் தவறில்லை.

உதாரணமாக, வாழ்ந்து கொண்டிருக்கும் தன் தாய்க்காக தனது குழந்தைகள் அனைவரும் தனித் தனியாக மோட்ச தீபம் ஏற்றலாம். இவ்வாறு பிறருக்காக மோட்ச தீபம் ஏற்றும் பொழுது அதன் எதிர்வினையாக தனது ஆன்மாவும்  தூய்மையும் மேன்மையும் அடையும். ஆனால் ஒவ்வொரு முறை மோட்ச தீபம் ஏற்றும் பொழுதும் முழு அன்பு மனநிலையிலேயே ஏற்றி வழிபட வேண்டும். மாறாக ஆணவத்தாலோ பழிவாங்கும் நடவடிக்கையாகவோ விரத்தியினாலோ மோட்ச தீபம் ஏற்றினால் அது தனது ஆன்மாவையும் பாதிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். அன்பே சிவம்.


 4) ஒருவர் உயிரோடு இருக்கும் பொழுதே மோட்ச தீபம் ஏற்றிக் கொண்டால் அவர் விரைந்து மரணித்து விடுவாரா?

 இல்லை. மரணம் என்பது மாய கர்ம ஆணவத்திற்குத் தான். இவை மூன்றும் நீங்கினால் தான் தெய்வீக அருளைப் பெற முடியும். அவரின் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும். இதுவே  மீண்டும் பிறக்காத தெய்வீக மகிழ்வான வாழ்வு. பிறவியில்லா பெருவாழ்வு.


5) மோட்ச தீபம் ஏற்றுவதற்கு வயது வரம்பு உண்டா?

 இல்லை. ஆனால் அன்போடும்  மனம் உருகிய வேண்டுதலோடும் ஏற்ற வேண்டும்.


6) தன்னை எதிரியாக நினைப்போருக்கு அல்லது தான் எதிரியாக நினைப்போருக்கு மோட்ச தீபம் ஏற்றலாமா ?
தாராளமாக ஏற்றலாம். இது மிகவும் சிறப்பானது. ஆனால் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எதிரியாக நினைப்போரின் தலைக்குள்ளே இருக்கும் உயிரான பராசக்தி கருணை மிகுந்தவள், ஆற்றல் மிகுந்தவள் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எனவே உங்கள் வேண்டுதல் அன்பு நிலையிலேயே இருக்க வேண்டும். விரோதமோ பழிவாங்கும் நடவடிக்கையாகவோ நிச்சயம் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அது உங்களையே திரும்பி சுவற்றில் அடித்த பந்து போல் வந்து தாக்கும். அல்லது உங்கள் சந்ததியை பாதிக்கும்படியான எதிரியாக மீண்டும் பிறந்து பழிவாங்கவே முயற்சிப்பார்.


7) ஒரு நபர் தனது மோட்ச தீப வழிபாடு செய்தபின், வேறு யார் யாருக்கு மோட்ச தீபம் வழிபடலாம் ?
அந்த நபர் யார் யாரோடு கர்ம தொடர்பு ( நெருங்கிய ஆன்ம / மரபணு தொடர்பு ) உள்ளவர்கள். கீழ்கண்ட அட்டவணையைப் பாருங்கள். இதில் கர்ம தொடர்பும், அதன் கர்ம அளவுகளும் புரியும். இது உதாரணத்திற்கு தான்.


8) ஒருவர் தனக்கான மோட்ச தீப வழிபாடு செய்யாமல் மற்றவருக்கு நேரடியாக தீப வழிபாடு செய்யலாமா? 
பலன் இல்லை. தனக்கான மோட்ச தீப வழிபாட்டை ஒரு முறையாவது செய்த பிறகுதான் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.

9) மோட்ச தீபம் ஏற்றிய ஒருவர் அடுத்த தீபத்தை எத்தனை நாட்கள் கழித்து ஏற்றலாம்?
குறைந்தது ஒரு வாரம் இடைவெளி இருக்க வேண்டும். இந்த ஒரு வார கால அவகாசம் அவரது ஆழ்மனத்திற்கு, வழிபாட்டின் பலனை கொண்டு செல்வதற்கு தேவையானது.

10) இந்த வழிபாடு உண்மையிலேயே பலன் அளித்த அனுபவம் உண்டா? 
பலமுறை பலன் அளித்து உள்ளது குருநாதரின் அருளால். இப்போதும் பலன் அளித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பதிவை எழுதும் அடியவர், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பலருக்கும் இது நிறைய பலன்களை அளித்தது, அளித்துக் கொண்டிருக்கிறது. குருநாதனின் அருளால் உங்களுக்கும் இது பலன் தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே பகிரப்படுகிறது.

11) இந்த வழிபாட்டை செய்பவர் குடும்ப வாழ்க்கையைத் துறந்து சாமியார் ஆகி விடுவாரோ ?
இல்லை. குடும்ப வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும். தம்பதியர் மற்றும் குடும்பத்தார்களிடம் நல்ல ஒற்றுமை இருக்கும். ஏனெனில் முந்தைய பிறவியின்  கர்ம வினைகளை நமது உயிரான பராசக்தி மன்னித்து  நீக்கிவிடுவதால், அன்பு மேலோங்கும் அன்னியோன்யம் மேலோங்கும். அனுபவத்தில் கண்ட உண்மை.

12) இந்தப் பிரார்த்தனையை இயந்திரத்தனமாகவோ அல்லது அவசரகதியிலோ செய்தால் பலன் உண்டா ?
பலன் இல்லை. இந்தப் பிரார்த்தனையை மனமுருகிய நிலையில் சிரத்தையோடு செய்ய வேண்டும். பிரார்த்தனை முடியும் வரை அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து விட வேண்டும். உங்களுடன் கோவிலுக்கு உங்கள் வாழ்க்கைத் துணைவர் அல்லது நண்பர் அல்லது குடும்பத்தார் யாரேனும் வந்திருந்தால், அவர்கள் அமைதியாக இருந்து உங்களது பிரார்த்தனைக்கு ஆதரவான மனநிலையோடு இருக்க வேண்டும். பிரார்த்தனை முடியும் வரை தேவையற்ற பேச்சுக்களை பேசாதிருக்கச் சொல்லுங்கள்.

13 ) எதன் அடிப்படையில் இந்த வழிபாடு வடிவமைக்கப்பட்டது ?
குருநாதரின் அருளால் கீழே குறிப்பிட்டுள்ள நூலின் சாராம்சத்திலேயே  இந்த வழிபாட்டு நுணுக்கம் வடிவமைக்கப்பட்டது.
நூல் : கலியுக காவியம் ஆன்மாவின் சுயசரிதை

14) இந்த வழிபாட்டை பற்றி யாரேனும் கேட்டால் என்ன சொல்வது ?
முன்னோர்களுக்கான மோட்ச தீபம் என்று சுருக்கமாய் சொல்லி முடித்துக் கொள்ளுங்கள். உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கு சில நாட்கள் தேவைப்படும், உடனே புரியாது.


       சரணாகத அன்பு.

      ஆன்ம சுதந்திர அன்பு.

      பற்றற்ற அன்பு.


ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும். கீழே உள்ள அட்டவணையில் எந்தெந்த ராசி கட்டம் எந்த உறவோடு தொடர்புடையது என்பதை விளக்கும்.




உங்கள் ஜாதகத்தில் அந்த குறிப்பிட்ட உறவுக்குரிய ராசிக் கட்டத்தில் இருப்பது, நேர்மறை ஆற்றலா அல்லது எதிர்மறை ஆற்றலா என்பதைப் பொறுத்து, அந்த உறவிற்கு, நீங்கள் உங்களின் முந்தைய பிறவியில் நன்மையோ தீமையோ செய்து, அதன் தாக்கத்தை இந்தப் பிறவியில் அனுபவிக்கப் போகிறீர்கள் அல்லது ஏற்கனவே அனுபவித்தீர்கள் என்று அர்த்தம். ஆன்மா எனும் இறைவன் போட்டு வைத்த சூட்சுமக் கணக்கின் ஒவ்வொரு சூத்திரமும் பிரமிப்பின் உச்சம்.


சிறிது மனோதத்துவ அறிவியலை சேர்க்க முயற்சி செய்யலாமா?

இந்த உலகில் எனக்குரிய தேவைகள் மற்றும் துன்பங்கள் எனது மனதில் இயல்பாகவே இருக்கிறது. ஆனால் இதற்கு நான் எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கப் போவதில்லை, அதாவது இதற்காக எந்த பிரார்த்தனையும் செய்யப் போவது இல்லை. மாறாக  மோட்ச தீபம் அல்லது ஆன்ம விடுதலை என்ற மனோதத்துவ கோட்பாட்டின் மூலமாக ஒரு "ஆழ்ந்த வெற்றிடத்தை" எனது மனதிலே உருவாக்க முயற்சி செய்கிறேன். ஒரு ஆழ்ந்த வெற்றிடம் உருவாகும் பொழுது அது தானாகவே அந்த வெற்றிடத்தைச் சூழ்ந்து இருக்கும் கோரிக்கைத் துகள்களை உள்ளீர்த்து தானாகவே நிறைவேற்ற முயற்சி செய்து விடும்.



 ஏனெனில் நமது மூளையில் இருக்கும் வெற்றிடத்திற்கும், இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி மூலமான வெற்றிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ( அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் ). இத்தனை கோள்களையும் சூரியன்களையும் உயிர்களையும் படைத்துக் கொண்டிருக்கும் அந்த பிரபஞ்ச வெற்றிடத்திற்கு நமது  நியாயமான நிலுவையில் இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதா என்ன? இந்த பிரபஞ்ச வெற்றிடத்தைத் தான் சூனிய பிரம்மம் என்றும் பரப்பிரம்மம் என்றும்  நமது சித்தர்கள் சொல்லுகிறார்கள்.  யோசித்துப் பாருங்கள்.


பக்தியுடன்,
அகத்திய பக்தன்.
சிவாயநம.


உங்கள் ஆன்மாவை சிறைப்படுத்தும் அனைத்து கர்ம வினைகளிலிருந்தும் விடுபடுவது உங்கள் உரிமை மற்றும் கடமை. இதை நீங்கள் சுயமாக சிந்தித்து புரிந்து தனிப்பட்ட முறையில்  முடிவு செய்து கொள்ள வேண்டும்.  உங்கள் வாழ்க்கை  துணைவருக்கோ அல்லது உங்கள் பெற்றோருக்கோ இதை புரிந்து கொள்வதற்கு சில காலம் ஆகலாம். ஆகையினால் அவர்களின் அனுமதி பெற்று இந்த வழிபாடை செய்வது சிறிது சவாலான காரியம். இந்த வழிபாடை உங்களுக்காகவும் உங்கள் வாழ்க்கை துணைவர் அல்லது சார்ந்தவர்க்காக நீங்களே முடிவு எடுத்து எப்படியாவது செய்து விடுங்கள். அனுமதிக்காகவோ புரிதலுக்காகவோ காத்திருக்காதீர்கள். இது இறைவன் உங்களுக்கு கொடுத்த வாய்ப்பு.  காலம் தாழ்த்தாதீர்கள் தவற விடாதீர்கள்.


மோட்ச தீபத்தின் விடுபட்ட மனநிலை நமது மூளை நரம்பணுக்களில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன ? ஆங்கிலத்தில் AI பதில்.





கருத்துகள் இல்லை: