சித்தர்கள் வெட்டிய குழிகள்.
நமது உடலில் நமது ஆன்மாவே சிவனாகவும், நமது உயிரே சக்தியாகவும், சுழுமுனை நாடியே விநாயகராகவும் உள்ளார்கள். இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து யோகப் பயிற்சிகளை செய்து பல அறிய சக்திகளை சித்தர்களும் முனிவர்களும் பெற்றார்கள். இதில் முக்கியமான யோகம் நுணுக்கம், சிவனையும் சக்தியையும் இணைப்பது. அதாவது யோகக்கலையின் மூலம் சிவனுக்கும் சக்திக்கும் திருமணம் செய்விப்பது. இதனால் அற்புதமான பிரபஞ்ச ஆற்றலை பெற்று ஒளியுடல் பெறுவது, உலக நன்மைக்காக பயன்படுத்துவது, தர்மத்தை நிலை நாட்டுவது போன்ற செயல்களை சித்தர்கள் செய்தார்கள்.
முந்தைய காலகட்டத்தில் இந்த அரிய யோக நுணுக்கத்தை அறிந்த சித்தர்களும் முனிவர்களும் இமயமலையில் மட்டுமே இருந்தார்கள். இதனால் இந்த இமயமலை பகுதியில் மட்டுமே பிரபஞ்ச மின்காந்த ஆற்றல் அதிகமாக பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பிரபஞ்ச ஆற்றல் தெற்கு பகுதியிலும் பாய வேண்டும் என்று முருகப்பெருமான் விரும்பினார். சிவ ஆற்றல் பெற்ற ரிஷிகள் மற்றும் முருகப்பெருமானின் விருப்பத்திற்கு இணங்க, நமது குருநாதர் சிவனுக்கு சமமான அகத்தீசர் தெற்கே பொதிகை நோக்கி வந்தடைந்தார். தமிழகத்தின் பல மலைப் பிரதேசங்களிலும் பல ஆசிரமங்களை அமைத்து தனது சித்த பரம்பரையை விரிவு படுத்தினார். குருநாதரின் வேண்டுதலை ஏற்ற 18 சித்தர்களும் அவர்களது நேரடி சீடர்களும் தமிழகத்தின் பல இடங்களில் தவங்களை செய்து பிரபஞ்ச சிவ சக்தி திருமண ஆற்றலை நமது தமிழகத்தில் அபரீதமாக பாயும் படி செய்தார்கள்.
சித்தர்களின் காலத்திற்குப் பிறகும் (அதாவது இந்த கலியுக எல்லைக்காலம் வரையிலும்) இந்த அரிய யோகக் கலையை பலரும் பயின்று நாம் வாழும் பகுதிக்கும், நமது மனித சமூகத்திற்கும் பிரபஞ்சத்தின் சிவசக்தி ஆற்றலை ஈர்த்துக் கொடுக்க வேண்டும் என சித்தர்கள் விரும்பினார்கள். இதற்காக இந்த யோகக்கலையை பல சித்த நூல்களில் எழுதினார்கள். ஆனால் இந்தக் யோகக்கலையில் முன்னேறுபவர்கள் கண்டிப்பாக சுயநலம், மாய கர்ம ஆணவத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது பாதிக்கக்கூடியவர்களாகவோ இருக்கக் கூடாது. ஏனெனில் இந்த உணர்வுகள் நமது மூளையில் எதிர்மறையான இரசாயனத்தை சுரந்து நமக்கும் நம்மை சூழ்ந்து இருப்பவருக்கும் தீங்கு விளைவிக்கும். இதற்காக நமது சித்தர்கள் அவர்களது யோக பாடல்களுக்கு நடுவே பல ரகசிய குழிகளை சாமர்த்தியமாக வெட்டி வைத்தார்கள். யோகத்தில் முன்னேறி பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கக் கூடிய வல்லமை கொண்டவர்கள் இந்த குழிகளில் எக்காரணத்தை கொண்டும் விழ மாட்டார்கள். அதாவது இந்தக் குழியில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கவே இருக்காது. ஒருவேளை ஒரு யோகிக்கு இந்த குழிகளில் ஏதேனும் ஒன்றில் ஆர்வம் ஏற்பட்டு விட்டால் அந்த யோகி மேலும் முன்னேற முடியாமல் அவர் அந்த குழியிலேயே விழுந்து முடங்கிப் போவார். சித்தர்களின் இந்த ரகசிய திட்டத்தை இப்போது உங்களால் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். இப்படி சித்தர்கள் வெட்டிய பல நூற்றுக்கணக்கான குழிகளில் சில குழிகளை மட்டும் இந்த பதிவில் காண்போம்.
1) பெண் வசிய குழிகள் :-
யோக பாடல்களுக்கு நடுவே சித்தர்கள் சில பாடல்களில், பெண்களை வசியப்படுத்துவது எப்படி, பெண்ணிடம் அதிக நேரம் புணர்ச்சி செய்வதற்கான வழிகள், அதற்குரிய மை தயாரிக்கும் முறை அல்லது தைலங்களை தயாரிக்கும் முறை என்று எழுதியிருப்பார்கள். உதாரணமாக கீழே உள்ள பாடலை பாருங்கள்.
நூல்: காகபுசுண்டர் ஞானம் 80.
பாடல் 77.
நேரடா திகைப்பூண்டு கொண்டு வந்து
நிச்சயமாய் முன்சொன்ன தயிலம் விட்டு
வீரடா அரைத்தபின்பு புருவத் திட்டால்
வேசையர்கள் வெகுபேர்கள் மயங்கு வாரே.
விளக்கம்: வேசையர் என்றால் பெண்கள் என்று அர்த்தம். பல பெண்களும் இவர் மேல் மயங்கி வருவார்கள் என்று பொருள். உண்மையில் அப்படி மையும் கிடையாது தைலமும் கிடையாது. உண்மையில் பெண்ணாசை கொண்டவர்கள் இந்த மையோ அல்லது தைலத்தை தயாரிப்பதிலேயே காலத்தை கடத்தி விட்டு யோகத்தில் முன்னேறாமலே போய்விடுவார்கள். போகநாதர் இதுபோன்ற குழிகளை அவரின் பாடல்களில் அதிகமாக வெட்டிவைத்தார். தன் பெயரிலேயே ஒரு குழியையும் வைத்தார் பாருங்கள்.
2) ஆணவ குழிகள் :-
ஆணவம் எனப்படுவது "தான்" செய்வது மட்டுமே சரி என வாதாடுவது அல்லது தற்பெருமை கொள்வது. அனைத்து சித்தர்களும் அவரவர் நூல்களில் ஆணவத்திற்கான குழிகளை அதிகமாக வெட்டி வைத்தார்கள். இதில் அதிகமான மற்றும் ஆழமான ஆணவக் குழிகளை வெட்டியவர் நமது சிவவாக்கிய சித்தரே ஆவார். யோக மார்க்கத்தில் முன்னேற கடுமையான பயிற்சிகள் எடுப்பவர்கள் அனைவரும் எளிதாக இந்த சித்தரின் ஆணவக் குழிவயில் விழுந்து விடுவார்கள். 18 சித்தர்களும் அவர்களின் பாடல்களில், பல பாடல்கள் பக்தி மார்க்கத்தில் வழிபடுவது முட்டாள்தனமானது, கோவில் வழிபாடு தேவையற்றது என எழுதி இருப்பார்கள். ஆனால் அனைத்து சித்தர்களும் ஜீவசமாதி ஆனது என்னவோ கோவில்களில்தான். இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம் நமது சித்தர்கள் ஏன் இவ்வாறு ஆணவக் குழிகளை வெட்டினார்கள் என்று. ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் யோக மார்க்கத்தில் எளிதாக முன்னேறுவதற்கு மனம் உருகிய பக்தி வழிபாடு அவசியம். இறையாற்றலை நாம் பெறுவதற்கான பயிற்சிகளை, நாம் உள்ளேயும் செய்ய வேண்டும், வெளியேயும் செய்ய வேண்டும். இந்த "உள்ளே வெளியே" தத்துவத்தை வெகு தெளிவாக சித்தர்கள் விளக்கி இருக்கிறார்கள். இந்த நூலின் பெயர் "கலியுக காவியம் - ஆன்மாவின் சுயசரிதம்". நூல் கிடைக்கும் இடம் பாண்டிச்சேரி ஞானாலயம்.
கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!
பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!
3) ரசவாத குழிகள் :-
சித்தர்கள் அவர்களின் ஞான பாடல்களில் தங்கம் செய்வதற்கான ரசவாத பாடல்களை நிறைய எழுதி இருக்கிறார்கள். அதாவது இரும்பு அல்லது செம்பு அல்லது ஏதேனும் விலை குறைவான தனிமத்தை தங்கமாக மாற்றுவது. இன்றைக்கும் இந்த ரசவாத குழியில் விழுந்து தங்கள் சம்பாத்தியம் சொத்துக்களை இழந்தோர் பல நூறு பேர்கள். எனக்கு நெருங்கிய நண்பர்கள் மூவர் இந்த ரசவாத குழியில் வீழ்ந்து பல லட்சம் ரூபாய்களை இழந்து அவமானப்பட்டு இருக்கிறார்கள் இத்தனைக்கும் இவர்கள் யோக மார்க்கத்தில் ஓரளவுக்கு முன்னேறியவர்கள். இன்னொரு வகை ரசவாத குழியையும் சித்தர்கள் வெட்டி வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட ரசவாத பானத்தை செய்து குடித்து விட்டால், மரணம் இல்லாமல் நோயில்லாமல் வாழலாம் என்பது. நீங்கள் ஒன்றை யோசித்துப் பாருங்கள், இறைவனோடு சேர வேண்டும் என யோகம் செய்பவனுக்கு ஏன் எப்போதும் சாகாமல் பூமியில் வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது? அப்படி அதிக காலம் பூமியில் நீங்கள் தவம் செய்ய வேண்டுமெனில் குருநாதரே அதிக காலம் உங்களை வாழ வைப்பார். இதற்கு ரசவாத பானம் தேவையில்லை. எனக்குத் தெரிந்த ஒரு ரசவாத குரு, மதுரையைச் சேர்ந்தவர், இப்போது போதை பானத்திற்கு அடிமையாகி கிடக்கிறார். இது உங்களுக்கு தேவைதானா?
கொங்கண சித்தர் பாடல் :
அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்ற நூலில் பித்தளையை தங்கமாக மாற்றும் இரசவாத முறையொன்றை அருளியிருக்கிறார்.
மொழி ஆணவம் :-
இன்று யோகமார்க்கத்தில் இருக்கும் பலரும், தமிழ் மொழி மட்டுமே சிறந்தது, மற்ற மொழிகள் அனைத்தும் தாழ்ந்தது, என்ற ஆணவத்தில் இருக்கிறார்கள். உண்மையில் தமிழை விட உயர்ந்த ஒரு மொழி உள்ளது, அது உங்களுக்கு தெரியுமா? அதுதான் "மௌனம்". மௌனமே அனைத்து மொழிகளிலும் உயர்வான மொழி. இதை சித்தர்கள் பல ஞான பாடல்களிலும் "மகாரம் என்ற மௌனமே சிறப்பு" என சொல்லி இருக்கிறார்கள்.
மாயாஜால குழிகள் :-
சில தைல வகைகளை செய்து பயன்படுத்தி, நாம் மாயமாய் மறைந்து விடுவது, எதிரிகளை தோற்கடிப்பது, பூமிக்குள் இருக்கும் புதையல்களை கண்டுபிடிப்பது போன்றவை மாயாஜால குழிகள் எனப்படும். இதில் காலத்தை வீணடித்து யோகத்தில் முன்னேறாமல் போனவர்கள் பலர். இன்றும் இது வியாபாரமாக உள்ளது. இணையதளத்தில் அதிகமாக விளம்பரம் ஆவது. கவனமாக இருங்கள்.
கீழே சில பாடல்கள்.
நூல்: காகபுசுண்டர் ஞானம் 80.
சீராக முன்சொன்ன கருவை விட்டுத்
திடமாக அரைத்திடுவாய் சாம மொன்று
நேராக அரைத்ததையு மெடுத்து மைந்தா
நிச்சயமாய்ப் புருவத்தி லிட்டுப் பார்க்க
வீராகப் பாதாளம் பிளந்தே யோடும்.