திங்கள், 18 அக்டோபர், 2021

அனுபவ ஞானம் - 2 - மந்திரம்

  அனுபவ ஞானம் - 2 - மந்திரம்

ஓம் அகத்தீசாய நமஹ


      பக்தி வழிபாடாயினும் யோகஞான பயிற்சி ஆயினும், பீஜாட்சர மந்திரத்திற்கான தனி மதிப்பு உண்டு. ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு விதமான பீஜாட்சர மந்திரங்கள் உண்டு.


     அடியேன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயிற்சி செய்து குருநாதரை வணங்கும் அனுபவ முறைதனை குருநாதர் அருளால் இங்கு பகிர்கிறேன். 



இது முழுக்க முழுக்க அடியேனின் அனுபவ குறிப்புகள் மட்டுமே. அடியேனின் புரிதலை பகிர்வதை ஒரு கடமையாக எண்ணியே பகிர்கிறேன், அவ்வளவுதான். இதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். இதற்கும் எந்த ஒரு ஆன்மீக ஸ்தாபனத்திற்கும் சம்பந்தம் இல்லை.


 பயிற்சி : பீஜாட்சர மந்திரத்தை, கும்பகப் பிராணாயாமத்தோடு இணைத்து வணங்குவது.


 நோக்கம் : வாலை எனும் ஒற்றை அணு, தன் வெப்ப ஆற்றலால் வீரியமாகி அதன் மூலம் பிரபஞ்ச காந்த ஆற்றலை ஈர்ப்பது.


 இலக்கு : பெறப்பட்ட காந்த ஆற்றலையும், வெப்ப ஆற்றலையும் சிரசின் அனைத்து நரம்பணுக்களுக்கும் பரப்புவது. 


 தகுதி : சிறிய அளவில் கும்பகம் பயிற்சி செய்யும்போது சௌகரியமாய் உணர்பவர்கள்.  வெப்ப ஆற்றலை தாங்கும் ஆன்ம பலம் கொண்டவர்கள்.

 பொதுவாக அனுதினமும் மனம் உருகிய பக்தி வழிபாடு செய்யும் பெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு இயல்பாகவே காந்த ஆற்றல் இருக்கும்.  இவர்கள் மிகக் குறைந்த அளவு கும்பகப் பிராணாயாமம் செய்து வழிபட்டாலே போதுமானது, அல்லது கும்பகம் செய்யாமல் பாவனை மட்டும் செய்து பயிற்சி செய்யலாம்.   கும்பகப் பிராணாயாமத்தின் தகுதி பற்றி அடியேன் பலமுறை தீவிரமாய் சிந்தித்திருக்கிறேன். 

 ஒரு ஆன்மா எந்தக் கோளிலிருந்து பிறந்தது என்பதை வைத்து அந்த ஆன்மாவிற்குள் இருக்கும் அந்தக் கோளுக்கான கனிம இழையின் உருகுநிலையை மையமாக வைத்து ஒரு அனுமான பதிவு எழுதி இருக்கிறேன். இந்த பதிவிற்கான பின்புல கருத்து,  முருகப்பெருமானின் "பிரம்மம் - கலியுக நான்காம் வேதம்"  என்ற நூலில் அத்தியாயம் 20 - பக்கம் 153ஐப் படிக்கும் பொழுது அனுமானமாய்க் கிடைத்தது.

 கீழ்கண்ட அந்தப் பதிவை நீங்கள் படித்தும் உங்கள் தகுதியை சரிபார்த்துக் கொள்ளலாம். 

http://fireprem.blogspot.com/2021/08/?m=1


 

 உதாரண மந்திரம்:  நம் குருநாதர்  அருளிய தியான மந்திரத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு பிரித்துப் பார்க்கலாம்.

 ஓம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ.


இளநிலைப் பயிற்சி :-

 பீஜாட்சர மந்திரத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டும் 

1) ஓம்கார பிரிவு - ஓம் - ரேசகம்

2) பீஜாட்சர பிரிவு - சிம் வம் அம் உம் மம் - பூரகம்

3) தேவதை சரணாகத நாமம் -  கும்பகம்.


 நாடி சுத்தி செய்பவராய் இருப்பின் அதை முடித்துவிட்டு இந்த பயிற்சியை செய்யலாம்.


 தீபச்சுடரின் முன்பு கண்கள் திறந்த நிலையில் பயில்வது சிறப்பு.

1)  சுழுமுனையில் கவனம் வைத்து ஓம்காரத்தை மனதில் சொல்லிக் கொண்டு ரேசகம் செய்ய வேண்டும்

2) தீபச்சுடரைப் பார்த்து, பீஜாட்சரத்தின் ஒவ்வொரு பீஐத்திற்கும் ஒவ்வொரு சிறிய மூச்சை தொடர்ந்து உள்வாங்கி பூரகம் செய்ய வேண்டும்.

3) சிரசின் ஒற்றை அணுவை நோக்கி கவனம் வைத்து மந்திரத்தின் மூன்றாம் பிரிவை கும்பகத்தில் சொல்லவேண்டும்.

4) கைகள் இரண்டும் சின்முத்திரையில் இருக்கலாம் 

5) குறைந்தது மூன்று முதல் ஒன்பது முறை வரை செய்யலாம்.

6) பயிற்சி செய்த பின் கண்களை மூடி ஒற்றை அணுவை நோக்கினால்,  பிரகாசம் சிறிது சிறிதாகக் கூடுவதை உணரலாம்.

7) சிரசின் உட்புறம் அனைத்து மூளை அணுக்களையும் பார்க்கும் பொழுது, மிகவும் பரவசமாக இருக்கும்.

8) சிறைப்பட்ட ஆன்மத் துகள்கள் விடுபடுவதாக உணரவேண்டும்.

9) ஒளி பாலத்தின் பயணத்திற்கு தயாராக வேண்டும்.

 ஒற்றை அணுவை வணங்கும் நுணுக்கமான முறைகளை, முருகப்பெருமான் தனது நூலான "ஒலி - கலியுகத்தின் மூன்றாம் வேதம்" நூலில் அத்தியாயம் 20 பக்கம் 133ல் குறிப்பிட்டுள்ளார். படித்து பயன் பெறுங்கள்.


     இதே ரேசக பூரக கும்பக முறையை பயன்படுத்தி ஒரு ஆதார தளத்திலிருந்து அடுத்த ஆதார தளத்திற்கு பாய்வதற்கும் பயன்படுத்தலாம். அதாவது ஒரு புலி சிறிது பின்வாங்கி பதுங்குவது ரேசகம்,  பாய்வது பூரகம்,  பாய்ந்த பின் தன் இலக்கில் தன்னை நிலை நிறுத்துவது கும்பகம். 

 

பயன்கள் : பிடிவாதமான கர்ம வினைப் பதிவுகள் விலகுவதை உணரலாம். இது பெரும்பாலும் கனவுகளாக வெளியேறும். தொடர்ந்த பயிற்சியில் நாதத்தை செவிமடுக்கும் பாக்கியம் கிடைக்கலாம்.


 இந்தப் பயிற்சியை தொடர்ந்து இரண்டு மண்டலம்  பயிற்சி செய்த பின், வேண்டுபவர்களுக்கு மட்டும், இதன் முதுநிலைப் பயிற்சியினை பகிரலாம் என யோசித்திருக்கிறேன்.

இப்படி மூன்றாகப் பிரிப்பதற்கான முறையை குருநாதர், "சௌமிய சாகரம்" என்ற நூலில் கீழ்க்கண்ட இணைப்பில் விளக்குகிறார்.

https://saumyasagaram.blogspot.com/2016/05/391-om-reeng-am-and-pranayama.html?m=1


மந்திரத்தால் மூச்சை நெறிப்படுத்துவதை "ஸௌ பீஜம்"  என குருநாதர் கீழ்க்கண்ட பாடலில் கூறுகிறார்.




https://saumyasagaram.blogspot.com/2015/11/251-pranayama-types.html?m=0



 ஒரு சுவாரசியமான அனுமானம் :

 ராமாயணம் மற்றும் மகாபாரதம் புராணக் கதையில் நிறைய அஸ்திரங்களை பயன்படுத்துவார்கள். பிரம்மாஸ்திரம், பாசுபதாஸ்திரம், நாராயண அஸ்திரம் என பல அஸ்திரங்களை வில்வீரர்கள் பிரயோகிப்பார்கள். இது எப்படி சாத்தியம்? இதில் என்ன சூட்சுமம் உள்ளது? என எனக்கு நீண்ட நாள் கேள்வி மனதில் இருந்தது. இந்த அஸ்திரங்களில், பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து, அம்பில் இணைத்து, அஸ்திரமாக எய்வதில் என்ன சூட்சமம் உள்ளது? என அனுமானித்தேன். 



எனக்கு அனுமானமாய் தோன்றுவது, இது சித்தி ஆக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பீஜாட்சர மந்திரத்தை, ரேசகம் பூரகம் கும்பகம் என மூன்றாகப் பிரித்து வில்வீரர் தன் சுழுமுனையில் ஜபித்து அஸ்திரமாக எய்கிறார். உதாரணமாக,  வில்வீரர் தனது அம்பை வில்லில் வைத்து "ஓம்" என்று ரேசிக்கிறார். பின்னர் பீஜாட்சர பூரகத்தில் அம்பை நாணில் ஏற்றி இழுக்கிறார் ( பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து ).  முடிவாக கும்பகத்தில் அஸ்திர தேவதைக்கான நாமத்தை சொல்லி இலக்கை நோக்கி எய்கிறார்.  என்ன சுவாரசியமான அனுமானமாக தெரிகிறதா?


 கும்பகப் பிராணாயாமத்தை பற்றிய அடியேனின் முந்திய பதிவுகளை கீழே கொடுத்துள்ளேன்.

1)

http://fireprem.blogspot.com/2021/07/blog-post.html?m=1

2)

https://fireprem.blogspot.com/2017/03/blog-post.html?m=1

3)

https://fireprem.blogspot.com/2018/11/blog-post_29.html?m=1


***


 இப்படிக்கு உங்கள்

 அகத்திய பக்தன்.

கருத்துகள் இல்லை: