வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

முருகப்பெருமானின் மூளை

முருகப்பெருமானின் மூளை

முருகப்பெருமான் அருளிய "மூளை எனும் தலைமை சுரபி" என்னும் தெய்வீக நூல், பாண்டிச்சேரி ஞானாலயத்திலிருந்து வெளிவந்தபின் எனது வீட்டு முகவரிக்கு நூல் வரும்படி பதிவு செய்தேன்। கடந்த மாதம் ஒருநாள், வீட்டிற்கு வந்த நூலை என் மனைவி பெற்று, முருகப்பெருமானை வணங்கி பூஜை அறையில் வைத்துவிட்டாள்।  அடியேன் நான் அலுவலகம் முடிந்து வந்தபின், பணிவோடு முருகப்பெருமானையும் குருநாதரையும் வணங்கி படிக்க ஆரம்பித்தேன் । இந்நூலை 48 அத்தியாயங்களாக அருமையான வகையில் அறிவியல்  மற்றும் ஞான மணிகள் கோர்த்த வேத மாலையாக முருகப்பெருமான் தொடுத்திருக்கிறார் ।



            முதல் அத்தியாயத்தை படிக்கும்போது "அறிவுத்திருக்கோவில் வேதாத்திரி மஹரிஷியின்"  பிரபஞ்ச மற்றும் ஜீவ காந்த தத்துவங்களே எனக்கு ஞாபகம் வந்தது । அப்படியென்றால் முருகப்பெருமானின் இந்த "மூளை" புத்தகமும் வேதாத்திரி மஹரிஷியின் புத்தகங்களை போல்தான் இருக்குமோ? என்ற எண்ணம் வந்தது ।  ஆனால் அடுத்துவரும் அத்தியாயங்களை படிக்கும்போது இந்த "மூளை" நூல் முற்றிலும் வேறுபட்டது மிகவும் நுணுக்கமானது என்று புரிந்துகொண்டேன் ।

இந்த "மூளை" நூல் ஞானாலயத்தின் மற்ற வெளியீடுகளான "கலியுக கவியும் - ஆன்மாவின் சுயசரிதை" மற்றும் "வாழ்வியல்" நூல்களோடு சிறிது தொடர்பு உடையதாக இருக்கும்படி அமைத்திருக்கிறது। எனினும் "மூளை" நூலை ஒரு தனிப்பட்ட நூலாகவும் யாவரும் படிக்க மிகவும் பொருத்தமான நூலாகவும் உள்ளது । இந்த நூலை முழுமையாக படிக்கும்போது, சித்தர்கள் அனைவரும் பணிந்து வணங்கும் முருகப்பெருமானின் பார்வையில் நமது மனித மூளை எப்படி அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளும் ஒரு மாபெரும் மருத்துவ அறிவியல் நூலாகவே தோன்றும் । ஆனால் அடியேன் என் பார்வையில், ஆறுமுக தெய்வம் இந்நூலை குறைந்தது "ஆறு பரிணாமங்களில்" மிகவும் நுணுக்கமாக அருளியதாக தோன்றுகிறது । இதில் தமிழ் , மருத்துவ அறிவியல் , யோகஞானவியல் , பிரபஞ்ச இயற்பியல் , உயிர் கணிதவியல் மற்றும் உயிர் வேதியியல் போன்ற ஆறு பரிணாமங்களை அடியேன் உணர்ந்தேன் ।  இந்தப்பதிவை அடியேன் நான் எழுத ஆரம்பிக்கும்போது ஒரு தெய்வத்தின் நூலை விமர்சிக்க எனக்கு என்ன தகுதி உள்ளது? என்ற அச்சம் வந்தது । முருகப்பெருமான் நம் குருநாதருக்கு அப்பன் எனில், அடியேன் எனக்கு பாட்டன் என்ற உரிமை உள்ளது, என்று மனம் தெளிந்து இப்பதிவை தொடர்ந்து எழுதுகிறேன், பாட்டன் முருகப்பெருமான் கருணையோடு ஏற்றுக்கொள்வார்  என்று நம்புகிறேன் ।

            இந்நூலை படிக்கும் உங்களுக்கு உங்கள் விருப்ப பாடங்களைப்பொறுத்து பல நுணுக்கங்களை சூட்சுமமாக உணர்வீர்கள் । நீங்கள் இந்நூலை முழுமையாக படிக்கும்போது ஒரு பிரமாண்டத்தை உணர்வீர்கள் । பெருவாரியான கலியுக மனிதர்கள் நூலின் அனைத்து அத்தியாயங்களையும் ஒரே மூச்சில் படிக்கமாட்டார்கள் என்பதை முருகப்பெருமான் சரியாக கணக்கிட்டுள்ளார் । எனவேதான், ஒரு அத்தியாயம் முடிந்தபின் அதன் சாராம்சத்தை சுருக்கமாக அடுத்த அத்தியாயங்களில் மீண்டும் கூறியிருப்பார் ।  இது படிப்பவர் காலஅவகாசம் எடுத்து, சிறிது சிறிதாக படித்தாலும் நூலின் முழு தொடர்பு விடாமல் புரிந்துகொண்டு படிக்க ஏதுவாகும் । மேலும் ஒரே விஷத்தை மீண்டும் மீண்டும் சொல்கிறாரரெனில் அந்த விஷயமே முக்கிய கோட்பாடாக மனதில் ஆழமாக பதியவைக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் । எனது விருப்பப்பாடம் "யோகஞானவியல்" என்பதால் குருநாதர் அருளால் அடியேன் நான் உணர்ந்த சில குறிப்புகளை மட்டும் இங்கே காண்போம் । இந்த குறிப்புக்கள் இந்த நூலைப்பற்றி ஒரு குறிப்பிட்ட பரிணாமத்தில் தோன்றும் சிறிய உதாரணங்களே. நீங்கள் இந்நூலை முழுமையாகப் படிக்க இந்த பதிவு ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன் ।

பக்கம் 100 : உயிரின் உறைவிடம் => விழித்திரையின் மத்தியில் உள்ள கூடு என்பது உயிர்த்துகளின் உறைவிடமாக உள்ளது । நிர்மலம் என்றால் என்னவென்று முருகப்பெருமான் கூறுகிறார் ।

பக்கம் 169 : பரிபூரண ஞானத்தை பெற்று ஒளியுடல் பெரும் வழி।

பக்கம் 281 : மூலாதார சுரபியிலிருந்து பாதரச ஆற்றல் மீண்டும் மேலேறி புதன் சுரபியினை அடையும் । புதன் சுரபியின் உயரிய பாதரச எரிபொருளானது தலைமை சுரபியினை மீண்டும் அடைகிறது । தலைமை சுரபி உபரியான எரிபொருளினை மீண்டும் ஒற்றை அணுவிற்கு அனுப்பும் தருணத்தில், அந்த மனிதரை உயர்நிலைக்கு ஏற்றிடும் ।  அவர் ஓர் உயரிய குருவாகவும், தெய்வநிலையிலும் போற்றப்படுகிறார் ।

=> எனது புரிதலில் , குண்டலினி சக்தி மூலாதார சக்கரத்திலிருந்து மேலேறி ஆக்கினை சக்கரத்திற்கு வந்து ஒளியாய் ( வாலை) நிற்கும் ।

பக்கம் 201 : சிறு குழந்தைகளை காணும்போது ஏன் அன்பும் ஆனந்தமும் பெருகுகிறது ? உயரிய குருமார்கள் தனது உயர்ந்த எரிபொருளை சுற்றியுள்ள ஆன்மாக்களுக்கு பகிரும் நிலை ।

பக்கம் 235 : தலைமை சுரபியினை சீர்செய்யும் முக்கிய மூன்று வழிமுறைகள் யாது ?

பக்கம் 226  & 227  : பன்னிரெண்டு நரம்பிழைகளால் செயல்படும் சூரிய சூழலின் ஆற்றல் பெற்றது தலைமை சுரபி => எனது புரிதலில் இது பின்கலையை நினைவுபடுத்துகிறது ।
சந்திர சுரபி பதினாறு நரம்பிழை தடங்களை கொண்டிருக்கும் । அனைத்து சுரபிகளுடனும் தொடர்பு கொண்டிருக்கும் => எனது புரிதலில் இது இடகலையை நினைவுபடுத்துகிறது ।

பக்கம் 229 : தலைமை சுரபியோடு மற்ற ஆறு சுரபிகள் "சக்கர" வடிவில் உள்ளது । உயிர் கூடு கூம்பு வடிவுடன் , அதன் கீழ் அமைந்த ஒற்றை அணுவானது அகண்ட நிலையில் இணைந்திருப்பது "சங்கு" வடிவில் காட்சி தருகிறது ।

பக்கம் 291 & 292 :  சூட்சுமத்தின் சூட்சுமம் என்பது சந்திரசுரபியினை அறிவதே । மூளையின் ஆக்கத்திற்கு தலைமை சுரபியே பெரும் உதவி புரிகிறது । மூளையின் அடக்கம் எனும் செயலிழப்பிற்கும் மூலகாரணமாக அமைவது சந்திரசுரபியே என்றே உணர வேண்டும் ।
=> எனது புரிதலில், மனிதரின் ஆன்ம சக்தி இழப்பிற்கு காரணமானது இடகலை ( சந்திர சுரபி )।  ஆன்ம சக்தி கூடுவதற்கு காரணமானது பிங்கலை ( சூரியன் என்னும் தலைமை சுரபி )। மூளையின் இயக்கம் குன்றியவர் மனநிலை பாதித்தவரை "Lunatic" என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் । "Lunar" என்றல் சந்திரன் ( சந்திர சுரபி )।

பக்கம் 396 & 397 :  ஆன்ம விடுதலை அடைந்தால் உயிரின் கூடானது எளிதாய்க் கரைந்திடும் ।  உயிர்க்கூடு என்பது கரையத் துவங்கினாலும் , அதன் நஞ்சாற்றல் சிரசினில் கலப்பு கொண்டிடும் । உயிர்க்கூடு எனும் நஞ்சுப்படலமானது மிகவும் கொடிய நஞ்சினைத் தங்கியே செயல்புரியும் । உயர் ஆன்மாக்களின் ( அகத்தியர் , முருகப்பெருமான் , சப்த ரிஷி முனிகள் ) துணை கொண்டு முறையாக நீக்கப்பட்டால் மாத்திரமே மூளை எனும் உறுப்பிற்கு பாதகம் விளைவித்திடாது ।
=> எனது புரிதலில், முருகப்பெருமானின் இந்த குறிப்பு மிக மிக முக்கியமான குறிப்பு என்றே தோன்றுகிறது । நாம் ஏன் ஞானாலயம் சென்று தீட்சைகள் பெறவேண்டும் என்பதை உணர்த்துகிறது । மேலோட்டமாக பார்க்கும்போது ஞானாலய தீட்சைகள் உப்பு சப்பு இல்லாத வெறும் செயல்பாடாக தோன்றலாம் , ஆனால்  இந்த தீட்சைகள் மகா சித்த தெய்வங்களால் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்பதை நாம் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் । என்றோ திரேதா யுகம்  , துவாபர யுகம் மற்றும் கலியுக ஆரம்பத்தில் நமது சித்தர்கள் எழுதிய வாசியோக பாடல் நுணுக்கங்களை வைத்துக்கொண்டு இன்றைய கொடிய கலியுக கடைசியில் பலரும் வெறித்தனமாக பயிற்சி செய்கிறார்கள் । xyz வாசியோகம் , xyz ஹடயோகம் , xyz  சித்த வித்தைகள் , abc யோகக்கலை என பல பல யோகமுறைகளை மனித குருமார்கள் பயிற்சி கொடுக்கிறார்கள் ।  ஒருவேளை இந்த யோகமுறைகள் உயிர்க்கூடை கரைத்தாலும், நஞ்சு படலத்தின் நஞ்சு பாதிப்பை நாம் யோசிக்கவேண்டும் । பாண்டிச்சேரி ஞானாலயத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று எதுவென்றால் , இங்கு வெளியிடப்பட்ட சித்தர்களின் நூல்களே । இதை பொறுமையாக படித்தால் தான் புரியும் ।

பக்கம் 398 : உயிர்க் கூடு கரைந்து விட்டால் உயிரின் தரிசனம் கிட்டும் எனினும் , விடுதலை அடைந்த ஆன்மாக்களுக்கே இச்செயலானது சாத்தியமாகும் । சிரசில் உள்ள அனைத்து பாதரச துகள்களும் முழுமையாக வெளியேறினால் மாத்திரமே உயிர்க்கூடு கரைய வேண்டும் அன்றி , சில துகள்கள் பிரிபடாது நிலைத்துவிட்டாலும் உயிர்க்கூடு கரைவது பெரும் துன்பத்தை விளைவிக்கும் ।
=> எனது புரிதலில், இதற்க்கு மேலே சொன்ன அதே குறிப்பை ( பக்கம் 396 & 397 ) கவனமாக படிக்கவும் । எச்சரிக்கை ।

பக்கம் 403 to 405 : மூளைக்குள் கழிவுகள் தேங்காமல் காப்பது எப்படி ?

பக்கம் 420 : ஒளியுடல் சாத்தியமாகும் நிலை । சந்திர சுரபியினை கையாண்டிடும் கலைதனை அறிவதே ஞானமாகும் । சந்திர சுரபியினை செயலிழக்க செய்வதே பரிபூர்ண ஞானமாகும் ।  தலைமைசுரபி தனது ஆற்றலை கூட்டி , ஒற்றை அணுவோடு இணைத்து தனது செயலிழப்பினை ( தலைமை சுரபியின் ) உருவாக்கினால் , மானுடன் தெய்வ நிலைதனை எட்டிடலாம்
=> எனது புரிதலில், நாம் ஏற்கனவே சந்திர சுரபியை இடக்கலையோடும் , தலைமை சுரபியை சூர்யகலையோடும் ( பிங்கலை - சூரியன் )  ஒப்பிட்டுப்பார்த்தோம் ।  இந்த 48-ஆம் அத்தியாயத்தில் முருகப்பெருமான் கூறியபடி , இடகலை என்னும் சந்திரனை குறைத்து பரிபூரண ஞானத்தை பெறுவதை சுட்டிக்காட்டும் விதமாக, சிவபெருமான் குறைந்துபோன பிறைச்சந்திரனை தனது தலையில் சூடியுள்ளார் ।  சந்திரன் முழுமையாக செயலிழந்தபின் , ஒரு யோகிக்கு சூரியன் மட்டும் செயல்படுகிறது । பின்னர் வழிகாட்டும் உயர் ஆன்மாக்களின் ( மஹா சித்தர்கள் ) கருணையினால், அந்த சூரியனும் செயலிழந்து அந்த யோகி மூச்சற்ற நிலையில் தெய்வ நிலையோடு ( ஈஸ்வரனாக ) வாழ்வார் । மேலும் புரிந்துகொள்ள நீங்கள் "கலியுக காவியம் - ஆன்மாவின் சுயசரிதம் " என்ற நூலினையும் படிக்கவேண்டும் । அந்த நூலில் குறிப்பிட்டபடி , துவாபர யுக மூளை கிடைக்கும்போது ஒருவர் திட உணவை விடுத்து திரவ உணவை உண்பார் । பின்னர் திரேதா யுக மூளை கிடைக்கும்போது ஒருவர் திரவ உணவை விடுத்து காற்று உணவை ( சூரியனில் ) உண்பார் । பின்னர் சத்திய யுக மூளை கிடைக்கும்போது ஒருவர் காற்று உணவை விடுத்து ஒளி உணவை உண்பார் । ஹ்ம்ம் , ஞானாலயத்தின் நான்கு நூல்களையும் ( *கலி அணுக்களை நீக்கியபின்* ) நீங்கள் இணைத்துப்பார்த்தால் ஒரு ரஹஸ்ய வரைபடம் குருவருளால் தெரிய நல்ல வாய்ப்பு உண்டு । மேலும் சொல்ல எனக்கு உத்தரவு இல்லை ।

பக்கம் 426 : முத்தாய்ப்பாக முருகப்பெருமான், இந்நூலினை அறிந்து , புரிந்து , உணர்ந்து ஏற்பவர்கள் ஐவகைப் பலன்களை பெற்றிடுவர் என்கிறார் ।
அதை நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள் । இதற்கு மேல் எழுதினால், ஞானாலயத்தார் என்னை சும்மா விடமாட்டார்கள் । நிற்க ।

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புத்தக விபரங்களை பெறலாம்

http://www.enlightenedbeings.org/books.php


ஞானாலயத்தின் மற்ற நூல்களை பற்றிய பதிவுகளை கிழே உள்ள இணைப்புகளை அழுத்தி படிக்கலாம் ।



  • கலியுக காவியம் - ஆன்மாவின் சுயசரிதம்


  •   ஆகம வேதம்



  • வாழ்வியல்



  • ஓம் அகத்தீசாய நமஹ.
    இப்படிக்கு,
    அகத்திய பக்தன்.