வெள்ளி, 30 நவம்பர், 2018

மகத்தான மரண அனுபவங்கள் – தொடர்ச்சி



கடந்த 2014 -2015 ஆம் வருடம், நான் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக ஜெர்மனியில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போதைய எனது அனுபவத்தை என் முந்தைய பதிவில்சுருக்கமாக (லிங்க் பார்க்கலாம்)எழுதியிருக்கிறேன்.  அப்போது பிராணாயாமத்தை அதிக ஆர்வத்தோடு (ஆர்வ கோளாறு) என் இஷ்டத்திற்கு நாள்தவறாமல் காலையும் மாலையும் பயிற்சி செய்தேன்.  அப்போது, கடந்த 2015 ஆம் வருடம் மே மாதம் ஒரு மாலை வேளையில் எனக்கு திடீரென ஒரு யோசனை வந்தது.
எனது முறையில்லாத பிராணாயாமத்தோடு, ஹடயோகத்தின் சில விபரீதமான யோகாப்பியாசத்தையும் இணைத்து செய்தேன் (இதன் ஆபத்து கருதி மேலும் விளக்க எனக்கு அனுமதி இல்லை). ஆபத்தான ஹடயோக ஆசன பயிற்சியோடு மூச்சையடைக்கி வெளியிடும்போது, சட்டெனெ என் உயிர் எனது உடலிலிருந்து பிரிந்து ஏதோ ஒரு பிரகாசமான ஒளிக்கூட்டத்திற்குள் சென்றுவிட்டேன். என்ன நடந்தது? என என்னால் சில நிமிடங்களுக்கு யூகிக்கமுடியாமல், அந்த ஒளிகூட்டத்திற்குள் நான் கலந்து இருப்பது மிகுந்த ஆச்சர்ய ஆனந்தமாக இருந்தது. ஆனால், இந்தமுறை நல்ல சுயநினைவுடன் என்னால் நன்றாக யோசிக்கமுடிந்தது. திடீரெனெ எனது அறையும் அங்கிருந்த நாற்காலி மேசை கட்டில் எல்லாம் எங்கே போனது? என தேடிப்பார்த்தேன். அங்கு பரந்த ஒளியைத்தவிர எதுவுமே இல்லை. எனக்கும் எந்த உருவமும் இல்லை, ஆனால் யோசிக்க முடிகிறது. சிலநிமிடங்கள் என்ன செய்வது என புரியாமல் இருந்துவிட்டு, மீண்டும் என் உடலுக்குள் போகவேண்டும் என்று விரும்பினேன், எப்படி போவது என்று புரியாமல் கவலை கொண்டேன். ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோமே, இனி எனது உடலுக்குள் எப்படி செல்வது? என்று தெரியவில்லையே என யோசித்தேன். இதற்க்கு முந்தய வருடம் பக்திமார்க்கமாக அகத்திய மகாமுனி அய்யாவை வணங்கி, அவர் குருமந்திரத்தை பலமுறை பலநாட்கள் ஜெபித்து சித்திசெய்தது ஞாபகம் வந்தது. இனி அகத்தியர் தான் என்னை இங்கிருந்து காப்பாற்றவேண்டும் என்று முடிவுசெய்து, நான் ஏற்கனவே சித்திசெய்த குருமந்திரைத்தை தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தேன். சிலநிமிடங்களில் யாரோ மேலிருந்து கீழ்நோக்கி அழுத்துவதுபோல் இருந்தது. சட்டெனெ நான் என் உடலுக்குள் வந்துவிட்டேன். நான் அதே அமர்ந்த நிலையில் என் அறைக்குள் இருந்தேன். அப்பாடா தப்பித்துவிட்டோம் என நிம்மதி வந்தது. நான் என் இஷ்டத்திற்கு விளையாட்டாய் செய்த தவறை தாயின் கருணையோடு மன்னித்து, என்னை புதிதாய் பெற்றெடுத்த என் குருபாதம் போற்றி போற்றி. கருணைமிகு பொதிகைமுனி பொற்பாதம் போற்றி போற்றி.
          இந்த நிகழ்விற்குப்பிறகு பலநாட்கள் உடல்ரீதியான சில தொந்தரவுகளும் வலியும் இருந்தது. அகத்தியர் கருணையால் மீண்டுவர முடிந்தது. இதை மீண்டும் பரிசோதிக்க விருப்பமில்லை. அய்யாவும் அதை நிச்சயம் விரும்பமாட்டார்.  எனது அனுபவத்தில், இறைவன் அருளைப்பெற்று வாழவும், இறுதியில் இறைவனை சேரவும், முக்தி பெறவும் கடுமையான பயிற்சிகள்தான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை.
நாம் அனைவரும் நமது உலகவாழ்வை இனிதாக அனுபவித்துக்கொண்டே அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கி எளிதாக இறைவன் அருளை பெற்று வாழ்ந்து, இறைவனோடு எளிதாக சேர வழிகள் உண்டு. மேலும் இது தொடர்பான பதிவை"எங்கள் வீட்டில் எந்நாளும் ஆயில்யம்" (லிங்க் உள்ளது) என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். படித்து பயன் பெற வாழ்த்துக்கள்.


வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ஜெர்மனி தங்குமிடம்.





ஓம் அகத்தீசாய நமஹ.

இப்படிக்கு,
அகத்திய பக்தன்.

கருத்துகள் இல்லை: