திங்கள், 29 அக்டோபர், 2018

எங்கள் வீட்டில் எந்நாளும் ஆயில்யம்.

அகத்தியரை வழிபடும் முறைகள்



ஓம் அகத்தீசாய நமஹ.
குருநாதரை எனக்கு தெரிந்த எல்லா மார்க்கத்திலும் இடைவிடாது வழிபடுவது பேரானந்தமானது.  நானும் blog எழுதுகிறேன் பேர்வழி என்று எனக்கு தோன்றியதை வைத்தோ அல்லது எங்காவது படித்ததை மட்டும் வைத்தோ எழுதாமல், என் அனுபவத்தை வைத்து எழுதியிருக்கிறேன்.   இரண்டு வாரங்களுக்கு முன்பே இந்த பதிவை எழுதி முடித்துவிட்டேன். ஆனால், உடனே வெளியீடு செய்ய மனம் தயங்கியது. நான் ஒருவேளை டம்பம் என்னும் தம்பட்டதினால் இப்படி எழுதுகிறேனோ என்ற கவலை என்னை தாமதப்படுத்தியது. என் குருவை தொடர்ந்து வழிபட்டு என் மனக்குழப்பத்தை நீக்கி, நல்லோர்க்கு இந்த பதிவு போய்சேரட்டும், எல்லாம் குருவருள் என்று வெளியிட முடிவுசெய்தேன். இந்த தாமதமும் நன்மைக்கே, வரும் ஆயில்யத்தை ஒட்டி வெளிவருவதும் சிறப்பே.

எனது அனுபவத்தில் நான் குரு அகத்தியரை எப்படியெல்லாம் வழிபட்டு பேரானந்தம் அடைகிறேன் என்பதை இங்கு எழுதியுளேன். இந்த பதிவை படிப்போருக்கு அகத்தியரின் பரிபூரண அருள்கிட்ட வேண்டுகிறேன்.
யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.


பக்தி மார்க்கம் :-
  குரு அகத்தியரை உருவமாக பாவித்து மலர்கள் மூலிகைகள் படைத்து அர்ச்சனை செய்து வழிபடுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. எங்கள் பகுதியில் உள்ள தேனீஸ்வரர் கோவிலில் அகத்தியர் சிலை உள்ளது. வாரம் ஒருமுறையேனும் குடும்பத்துடன் சென்று அகத்தியரை வழிபடுவது எங்களுக்கு மிகுந்த மனநிம்மதியை தரும்.  இது அகத்தியரை விரும்பும் யாவருக்கும் எளிதில் சாத்தியமானது. பாசமுள்ள அகத்தியமாஹாமுனி இந்த மார்க்ககத்தில் யாவரும் வழிபடுவதை அவர் மிகவும் விரும்புவதை நான் சூச்சமமாக உணர்ந்தேன். நான் கடந்த வருடம் யோக மார்க்கத்தில் முழு ஈடுபாட்டோடு இருக்கும்போது பக்தி மார்க்கத்தை அடிக்கடி ஏளனம் செய்து, குருவிடம் நான் கடும் தண்டனை வாங்கியதுண்டு. இந்த கலியுகத்தில் பக்தி மார்க்கம் மிகவும் எளிதானது ஆற்றல் வாய்த்தது. எங்கள் வீட்டில் மூன்று அடிகள் உயரத்திற்கும் மேலான அகத்தியர் படம் வைத்து எங்கள் குடும்ப தலைவனாக தெய்வமாக வழிபடுகிறோம்.  குடும்பத்தார் அனைவருக்குமான ஆசைகள், மனவேதனை, முக்கிய முடிவுகள் மற்றும் அதன் பலன்கள் அனைத்தையும் அவர் திருவடிகளில் தினமும் சமர்ப்பிப்பது எங்கள் குடும்பத்தார் வழக்கம். அதே சமயத்தில் அகத்தியர் பேரைச் சொல்லிக் கொண்டு யாரேனும் எங்களை ஏமாற்ற நினைத்தாலே, அவர்களை கண்டுகொள்ளவும் எங்களுக்கு தெரியும். அவ்வாறு செய்து, பிறகு அகத்தியரின் தண்டனைக்கு ஆளாகி பலர் வருந்துவதை நாங்கள் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.


கர்மயோக மார்க்கம் :-
      அறவழியில் பொருளீட்டி, அன்பான இல்லறம் நடத்திக்கொண்டே இறைவனை வழிபடுதலே அனைத்து மார்க்கத்திலும் மிகவும் சிறந்தது. அகத்தியர் அருளால் எனக்கு ஒரு மாறுபட்ட பக்குவம் கிடைத்தது. உங்களுக்கும் கிடைக்கும்.

எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. ஒரு வியாழனன்று, அகத்தியரை வழிபட மலர்கள் இல்லாமல் சிறிது மனவருத்தமாக நின்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு விசித்திர யோசனை. என் இரு மகள்களையும் அழைத்து, அகத்தியர் முன்பு நிர்க்கட்செய்து, "மலர்ப்பாதம் உடைய மகாமுனி தெய்வமே! இன்று இந்த இரு மகள்களையும் உங்களுக்கே மகள்களாக முழுமனதுடன் நான் சமர்ப்பிக்கிறேன்.



 இன்றுமுதல் அடியவன் நான் உங்கள் வேலைக்காரனாக உங்கள் மகள்களை வளர்த்து கடமை செய்வேன் என் எஜமானானே! இவர்கள் சாதனை பதக்கங்கள் வாங்கினாலும் சரி, சோதனை நலனுபவங்கள் வாங்கினாலும் சரி! இரண்டுக்கும், நீங்களே இவர்கள் தந்தையாக பொறுப்பு. நான் என் கடமையை மட்டும் சிரத்தையோடும் விசுவாசத்தோடும் செய்வேன்" என்று வாக்குக் கொடுத்துவிட்டேன்.

     இறைவனை தேடுகிறேன் அல்லது வணங்குகிறேன் என்ற பெயரில், நம்மீது அன்புகொண்ட குடும்பத்தாரையும், நம் கடமைகளையும் புறக்கணிப்பதை அகத்தியர் விரும்புவதில்லை.


தான மார்க்கம் / தர்ம மார்க்கம் :-
     "தர்மம் செய்ய செய்ய, உன் கர்மம் குறையுமப்பா" என அகத்தியர் உரக்க வாக்கு சொல்லியிருக்கிறார். கர்ணனின் தர்மத்திற்கு முன் பகவான் கிருஷ்ணனே ஒரு பிச்சைக்காரனாக கெஞ்சி நின்றிருக்கிறார். இறைவனையே கட்டுப்படுத்தும் இரண்டு ஆயுதங்கள் - ஒன்று தர்மம் மற்றொன்று அன்பு.
    என் மாத வருமானத்தில் குறைந்தது இரண்டு முதல் ஐந்து சதவிகிதத்தை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மத வேறுபாடு இல்லாமல் ஆதரவற்றோர்க்கு நேரடியாக என் குடும்பத்துடன் சென்று தானம் செய்துவிட்டு, அதற்காக கிடைக்கும் புண்ணிய மலர்களை எங்கள் அகத்தியர் பாதத்தில் சமர்பித்து வணங்குவோம். இந்த அகத்தியர் வழிபாட்டை பல ஆண்டுகளாக நானும் என் மனைவியும் இறைவன் அருளால் தொடர்ந்து செய்கிறோம். பொதுவாக தான தர்மம் செய்வதை வெளியே சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால், இதை ஊக்கமாகவோ அல்லது போட்டியாகவோ பிறரும் செய்தால், அவர்களும் இறைவனால் அருளப்பட்டு, அவர்களும் அவர் சந்ததியும் உயர்நிலைக்கு வருவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

யோகஞான மார்க்கம் :-
      மேலே குறிப்பிட்ட மார்க்கங்களில் இறைவனை மனதார வழிபட்டோரை, சித்தர்கள் தாமாக தேடிவந்து மனமுவந்து பக்தனின் உடல் மற்றும் மனம் பக்குவமறிந்து காட்டும் அடுத்த நிலை யோகஞான மார்க்கம்.  இதற்க்கு சிறிது பரந்த மனப்பான்மை வேண்டும்.   சிவானந்த யோக வேதாந்த நிலையத்தின் சுவாமி விஷ்ணுதேவனந்தா கூறியபடி “ஞான யோகத்தை பயிற்சிக்கும் முன்னர், மற்ற யோக மார்க்கங்களின் பாடங்களை ஒருவன் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். தன்னலமின்மையும் கடவுளிடம் அன்பும் இல்லாமல், உடல் மற்றும் மனவலிமை இல்லாமல், தன்னை அறியும் தேடல் வெறும் சோம்பேறிக் கற்பனையாக மாறிவிடும் சாத்தியமுண்டு.”
      இன்றைக்கு எங்கு பார்த்தாலும் பத்து ரூபாய் முதல் பத்து லக்ஷம் ரூபாய் வரை விற்கப்படும் பரிதாபத்திற்குரிய சாதனம் தான் இந்த யோக ஞான மார்க்கம்.       தவ பயிற்சிகளின் மூலம் இறைவனை வழிபடுவது. இது சித்தர்கள் ( தன்னை xyz சித்தர் என பட்டமிட்ட மனிதர்கள் அல்ல ) கருணையினால் ஒரு நையா பைசா செலவில்லாமல் தாமாகவே தக்க சமயத்தில் கிடைக்கும். இதற்காக நீங்களாகவே விரும்பிச் சென்றால் ஏமாற்றப்படுவீர்கள்.   தாமாக எப்படி கிடைக்கும் என்கிறீர்களா ? நிச்சயம் கிடைக்கும். அதை என் முந்தய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். என்னை ஈன்ற அகத்தியரை என்னுள் வைத்து வழிபடும் ஆனந்தம். இப்படி சொன்னவுடன் 'இவன் ஏதோ சாமியார் போல' என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் :-)  :-).  அறவழியில் பொருளீட்டி அன்பான இல்லறம் நடத்திக் கொண்டு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்பதுதான் சித்தர்களின் விருப்பம். இல்லற வாழ்க்கை இன்னும் சிறக்கும். இந்த யோகஞான மார்க்கம் என்பது எட்டாக்கனியோ அல்லது விசித்திரமோ அல்ல. பக்தி மார்கத்திலேயே நமக்கு அனைத்து செல்வங்களும் இறைவன் அருளால் நிச்சயம் கிடைக்கும், முக்தியும் கிடைக்கும். ஒருநாளும் தவறாமல் உங்கள் இஷ்டதெய்வத்தை வணங்கி வாருங்கள்.

         மேலே சொன்ன அனைத்து மார்க்கங்களிலும் உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கும்போது, நீங்கள் தானாகவே இயம நியமத்தின் சிறப்பை பெறுவீர்கள். பின்பு தானாகவே யோகப்பாதையை சித்தர்கள் உங்கள் பக்குவமறிந்து, சரியான காலகட்டத்தில் அருள்வார்கள். இன்றைக்கு வாசியோகம் / யோகா பாதையில் இருப்போர், மற்றும் யோகம் பழக விரும்புவோர் உடனடியாகவும் நேரடியாகவும், வெறும் யோக நுணுக்கங்களை மட்டும் கேட்டோ படித்தோ வெற்றி பெற விரும்புகிறார்கள். இது எனக்கு சிறிது நகைச்சுவையாக உள்ளது. பசியோடு இருக்கும் ஒருவன் முதலில் ஒரு இட்லி சாப்பிடுகிறான். பின்பு இரண்டாம் இட்லி, மூன்றாம் இட்லி, நான்காம் இட்லி... ஐந்தாம் இட்லி சாப்பிட்டபின் அவன் பசி அடங்கிவிட்டது. இதைப் பார்த்த ஒரு புத்திசாலி தன் மனதில் "அப்படியானால், அந்த கடைசி ஐந்தாம் இட்லியில் தான் பசியடங்கும் சூட்சமம் உள்ளது, எனவே முதல் நான்கு இட்லியை உதாசீனம் செய்துவிட்டு, நேரடியாக “ஐந்தாம் இட்லியை மட்டும் சாப்பிட்டால் போதும்", என்ற முடிவுக்கு வந்தானாம்.
   
யோகமார்க்கத்தில் இருப்போர்க்கு கீழ்கண்ட என் வழிபாட்டுமுறை புரியும். குருவருளால் எனக்கு கிடைத்த "அகத்தியர் பரிபூரண ஞானம் 35 " என்னும் நூல் எனக்கு நல்ல தெளிவையும் மகிழ்வையும் தந்தது. சில பாடல்களை என் சிற்றறிவிற்கு எட்டிய விளக்கத்துடன் பார்ப்போம் வாருங்கள்.

பாடல் 7 :
"சேர்த்தாக்கள் மனமறிவில் சேர்க்கவேணும்,
    தீபவொளி ஒளிகான தெளிவுவேணும்
நூத்தக்கால் அம்பரநூல் நூற்கவேணும்
    நோய்யென்ற உயிரெல்லாம் நொறுக்கவேணும்
 மூத்தக்கால் இந்நூலில் ஊக்கவேணும்
    முனைமீதில் அகத்தியமா மூர்த்தியமே.


முக்கிய பொருள் : அகத்தியரை வணங்கி யோகமார்க்கத்தில் வாழ்வோருக்கு, அகத்தியரே சுழுமுனை மேல் நின்று அருள் புரிவார். 
audio1  https://drive.google.com/file/d/1jNCXiWInKWXat0Z57VaHidVAQJb_8dK3/view



பாடல் 8 :
"ஆமப்பா மூர்த்தியென்ற தேதினாலே
    அறிவாலேஅகத்தியனாய் நந்தியாகி
நாமப்பா இல்லாட்டால் உலகமில்லை
    நாதனெனக்கு இவ்வாறு அருளிச் செய்தார்
 ஏமப்பா நாமெச்சாய் பிறந்ததென்னே
    ஈனத்தில் யோகிகளே என்பாரப்பா
ஓமப்பா ஓராண்டு செபிக்க சித்தி
    உண்மையுடன் இந்த நூலை உகந்துபாரே."

முக்கிய பொருள் : அகத்தியரே “நந்தி என்ற யோகஒளியாக” உள்ளார். நம் அய்யாவுக்கு ஈஸ்வரன் உலகை காக்கும் பொறுப்பை கொடுத்துள்ளார். அய்யா இல்லையென்றால் இந்த உலகம் இல்லை. அய்யாவை அவரவர்க்கு உகந்த மார்க்கத்தில் (பக்தி மார்க்கத்திலிருப்போர்க்கும் சேர்த்து ) குறைந்தது ஓராண்டு உண்மையான பக்தியுடன் வணங்கினால் அய்யாவின் அருள் சித்திக்கும். இதைவிடுத்து யோகிகள் என்று சொல்லும் கண்ட கண்ட மனிதர்களிடம் போக வேண்டாம்.
    உங்களுக்கு இப்போது புரிகிறதா, ஏன் அகத்தியருக்கு "அகத்தீஸ்வரன்" அல்லது "அகத்தீசன்" அல்லது "அகஸ்தீஸ்வரன்" என்ற பேரில் உலகெங்கும் பலகோடி பக்தர்களும், வழிபாடுகளும் உள்ளதென்று....

பாடல் 24 :
"வாளப்பா விழியாள்தன் முலைமேல் நெஞ்சம்
    வைத்திருந்து அணைத்தாலும் மறவான் சிந்தை
நீளப்பா பராபரத்தில் நின்று வாழும்
    நேரறிந்தோர் எங்கிருந்தும் நிலை தப்பாரே."

audio   https://drive.google.com/file/d/1UdkpV4ci_I20co6NADf_QTV5xuYiCATt/view

முக்கிய பொருள் : யோகமார்க்கத்தில் உள்ளோர்கள் இல்லறத்தில் இன்பமாக இருந்தாலும், தன் மனதை பழுது படாமல் இறைவன் பாதத்தில் வைக்கும் நேக்கை பெற்றிருப்பார்கள் (சூச்சமத்தை ). 
சிலர் யோகமார்க்கத்தில் இருப்போரை, இல்லற இன்பத்தை அனுபவிக்காமல் விட்டேத்தியாக இருக்கிறாரே ! என தவறாகப் புரிந்துகொள்வார்கள். உண்மையில் சரியான யோக மார்கத்திலிருக்கும் இல்லறத்தில் இருப்போர்களே மிகச்சிறப்பான இல்லற வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால் டுபாக்கூர் குருமார்களிடம் போய் சிக்கிக் கொள்ளக் கூடாது. இதற்காகத் தான் இவ்வளவு பெரிய பதிவை குருவருளால் எழுதி மற்ற மார்க்கத்தின் சிறப்புகளை மேலே சொல்லியுள்ளேன். நீங்கள் கண்ட கண்ட குருமார்களிடம் போய் சிக்காமல் உங்கள் இஷ்ட தெய்வத்தையும் இஷ்ட சித்தரையும் ( மனிதர் அல்ல) பக்தி மார்க்கத்திலேயே வழிபடுவது சிறப்பு.

பாடல் 25 :
"நிலையேற தெரியாத உலக மாண்பார்
    நெடுந்தூரம் குருதேடி கங்கைதேடி
 மலையேறி சடைவளர்த்து சித்தர் அங்கே
    வாழுமிட மென்றுலகில் வந்து நெஞ்சம்
 தலைகெட்ட நூல்போலே பின்னலாகி
    தனிப்பார்கள் சித்தர்கண்டு நகைப்பாரப்பா"

முக்கிய பொருள் : முன்னர் சொன்ன பாடலில் உள்ள டுபாக்கூர் குருவை தேடி அலைவோரை இங்கு சொல்லி சிரிக்கின்றார் நம் அய்யா.

கடைசியாக ஒரு தங்கமான பாடலோடு இந்தத்தலைப்பை முடித்துக்கொள்வோம். நான் குருநாதர் எழுதிய "சௌம்ய சாகரம் 1200"  என்ற நூலைப் படிக்கும் போது 623 ஆம் பாடல் நமக்காக ஜொலித்துக் கொண்டிருந்தது.

"காணவே சற்குருவும் கருணை கூர்ந்து
      கண்கண்ட சரியையோடு கிரிகைரெண்டும்
 பூணவே செய்துவந்த நெறியைப் பார்த்து
      புத்தியுள்ள என்மகனே வாவென்றே தான்
 ஊணவே வாசியுட வழியுஞ் சொல்லி
      உண்மையுள்ள சிவயோக நிலையுங்காட்டி
தோணவே ஞானமென்ற அண்டத்துள்ளே
      தொடுகுறிபோல் சின்மயத்தின் மயஞ்சொல்வரே."

முக்கிய பொருள் :- சரியை கிரியை இரண்டையும் "பக்தி மார்க்கம்" என்று சொல்வார்கள். இந்த அற்புத பாடலில், அய்யா எவன் / எவள் பக்தி மார்க்கத்தில் சற்குரு என்ற "அகத்தீசரைப் போன்ற"  மஹாசித்தரை ( மனிதர் அல்ல ) உண்மையாக தினமும் வழிபடுகிறார்களோ, அவர்களை அந்த சித்தரே வந்து "என் மகனே / மகளே வா " என்ற சொல்லி மிகவும் உயர்ந்த யோகஞானமான "வாசியோகம், சிவயோகம் மற்றும் சின்மயத்தை" தொட்டுக் காட்டி அருள் செய்வார்கள். இப்போது மீண்டுமொருமுறை மேலேயுள்ள மார்க்க பகுதியை படித்துப் பாருங்கள். இனியும் என்ன குழப்பம் ? ஏன் இதே சித்தர்கள் பக்தி மார்க்கத்தை குறை சொல்லியுள்ளார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அது யோகா ஞான மார்க்கத்தில் சித்தியாகி "மௌனம்" அடைந்த யோகிகளுக்கானது. நாம் பாலகனாக தொடக்கப் பள்ளியில் சேர்ந்துவிட்டு, கல்லூரி பாடத்தை கையிலெடுத்தால் "குழப்பம்" தான் வரும்.
என்றும் வாழும் மஹா சித்தர்களைவிட, அவர்கள் அருளிய நுணுக்கங்கள் மட்டும் எப்படி உயர்வாகும்? என் புலம்பலை இதற்க்கு முந்தய"அப்பனா...ஆஸ்தியா?"  ( http://fireprem.blogspot.com/2018/08/blog-post.html?m=1 )என்ற பதிவில் எழுதியுள்ளேன்.  எப்போதும் அப்பனுக்கு முதல் மரியாதையை கொடுங்கள், அப்பன் கொடுத்த ஆஸ்திக்கு இரண்டாம் மரியாதையை கொடுங்கள். அல்லது இரண்டாம் மரியாதையை கொடுக்காவிட்டாலும் குற்றமில்லை. குழப்பம் வாராது.


பிரம்மச்சரிய மார்க்கம் :-
வானப்ரஸ்த மார்க்கம் :-
   பிரம்மசரிய மார்க்கத்தை பற்றி நான் சொல்லாமேலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும். 
வானப்ரஸ்த மார்க்கம் என்பது, ஒருவன் தன் முக்கிய கடமைகளை முடித்தபின், மனைவி இல்லாமலோ அல்லது மனைவியோடு சேர்ந்தோ  (முனி-பத்தினி தம்பதியராக ), தனியாக இறைவனே கதி! என சொந்த பந்தங்கள் இல்லாமல் வாழ்வது. முந்தய கால கட்டங்களில் அப்படிதான் வாழ்ந்தார்கள்.
  யாரேனும் பணி நிமித்தமாக அவர் குடும்பத்தை விட்டு பயணம் செய்து தனியாக சில காலம் வாழவேண்டி வந்தால், அது யாருக்குமே பெரும் சாபமாகவே இருக்கும். நம்மீது அன்பு கொண்ட மனைவி, மக்கள், சொந்த பந்தம் இல்லாமல், இது என்னடா நரக வாழ்க்கை? என புலம்புவார்கள் அல்லது குடியும் கும்மாளமுமாக ஊர் சுற்றுவதுமாக, வாழ்ந்துவிட்டு வருவார்கள். பணி நிமித்தமாக நான் குறுகிய கால பயணம் செய்யும் போது, மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை எனக்கும் அது பெரும் சாபமாகவே இருந்தது. இப்போது அகத்தியர் அருளால் ஒரு உண்மை புலப்பட்டது. "என் அருமை மைந்தா! ஒவ்வொரு சாபத்திலும் ஒரு வரம் ஒளிந்து கிடக்கிறது" என்று எனக்கு மட்டும் புலப்படுத்தினார். என்னதான் பொருள் ஈட்டும் செயல் இதில் இருந்தாலும், ஒரு தற்காலிக குறுகிய கால பிரம்மசரிய வானப்ரஸ்த வாழ்க்கை எத்தனை இல்லத்தார்க்கு கிடைக்கும் ? குருவின் பெருங்கருணை உள்ளவர்க்கே இல்லறமும் சித்தி,   அனைத்து மார்க்கமும் சித்தி. மதியில்லா மாந்தர்கள், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவார்கள்.
   அவ்வப்போது குரு அருளால் பாதாள லோகத்தில் அரும்பெரும் பாடங்கள் படித்து, பின்பு மீண்டும் இல்லறத்தில் சிறப்பாக இணைக்கப்படுகிறது. இல்லையென்றால் யாருக்குமே கிடைப்பதற்கரிய சித்தர்கள் நூல்களை எனக்கு காட்டுவார்களா ? இந்த மூன்று மாத பயணத்தில் அடியேனுக்கு, கோரக்கர், ஜட்ஜ் பலராமைய்யாவின் பல நூல்கள், அகத்தியர் மற்றும் போகரின் நூல்களை படிக்கும் பாக்கியம் குரு அருளால் கிடைத்தது.  இங்கு அகத்தியர் ஒருவர் மட்டுமே என் உறவு. 

      "ஓம் குருபிரம்மா, குருவிஷ்ணு, குருதேவோ மஹேஸ்வரஹ,
குருஸாட்தாட் பரப்பிரம்ம, தஸ்மை ஸ்ரீ அகத்தீசாய நமஹ !!!  


முடிவாக :-
    பொதுவாக யாருக்கு எந்த மார்க்கம் ஓரளவுக்கு பொருந்தும் என்று ஆராய்ந்தால்,  பக்தி மார்க்கம் உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு நன்கு பொருந்தும், மனோபலம் மற்றும் சிந்தனை சக்தியுள்ளோர்க்கு யோகஞான மார்க்கம் பொருந்தும். ஆனால், ஒருவர் மிகுந்த அறிவுஜீவியாக இருந்தால், அவர்க்கு சில சமயம் யோகஞான மார்க்கம் பொருந்தாது. ஏனெனில் இது அதிக அனுபவத்தால் உணர்வது.

“சரியையிலே சதாசிவன்  சட வடிவாய் நிற்பான்,
கிரியையிலே மந்திரத்தின் மறைபொருளாய் மலர்வான்,
ஓங்கி உயர்ந்த யோகத்தில் உள் ஒளியாய் நிற்பான்,
ஞானத்தில் தானாகி  இரண்டறவே கலப்பான்.”  -  திருமந்திர சாரம்.

ஹரிஓம் அகத்தீசாய நமஹ.
சிவஓம் அகத்தீசாய நமஹ.

இப்படிக்கு,
அகத்திய பக்தன்.

3 கருத்துகள்:

Elavalagan சொன்னது…

Hi Prem Can you please send a mail to my id i am not able get your mail id here.
I can directly ask some clarifications.

Elavalagan சொன்னது…

Dear Prem,
can you please share your mail id so that i can get clarified from you.

Agathiya Bakthan சொன்னது…

hi Elango,
vsmprem@gmail.com