வியாழன், 14 பிப்ரவரி, 2019

திக்.. திக்.. திகில்..

இந்த அனுபவ பதிவின் நோக்கம், நீங்கள் நம்பாத விஷயங்களை அனுபவத்துடன் சொல்லி நம்பவைப்பதற்கு அல்ல. ஒருவர் எந்நாளும் இறைநம்பிக்கையோடு வாழும்போது, இறைவன் எப்போதும் துணையிருப்பார். இதற்க்கு அடியேன் என் வாழ்வில் பல சாட்சிகள் அனுபவங்கள் உண்டு. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.
கடந்த 2004 ஆம் வருடம் நான் திண்டுக்கலில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தொடையில் ஒரு கட்டி வெகுநாளாக இருந்தது. திருமணத்திற்கு ஒரு மாதகாலம் இருந்தநிலையில், கைக்கு கிடைத்த ஒரு மருந்தை கட்டியில் தடவியத்தில், கட்டி மேலும் பெரிதாகி infection வலிக்க ஆரம்பித்தது. திண்டுக்கல் YMR-பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆலோசனை கேட்டேன். மருத்துவர் உடனே அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற வலியுறுத்தினார். ஆனால் திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாமா? என மருத்துவரிடம் கேட்டேன். அவர் "அதில் பெரிய பிரச்சனை இல்லை. இறைவன் அருளால் துன்பம் வாராது. கவலை வேண்டாம்" என தெம்பூட்டினார்.
அடுத்த நாள் இரவு எட்டு மணிக்கு இன்னொரு சிறப்பு மருத்துவரோடு அறுவை சிகிச்சை செய்ய முன்பதிவு செய்யப்பட்டது. நான் பகுதிநேர கல்லூரியில் MCA படித்துக்கொண்டிருந்ததால், என் தாயாரிடம் படிப்பு விஷயமாக ஒரு நாள் இரவு என் நண்பன் சுதாகர் வீட்டில் தங்குவதாக பொய் சொல்லிவிட்டு, நண்பன் சுதாகர் துணையுடன் மாலைநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
என் வாழ்வில் முதன்முறையாக நோயாளிக்கான பச்சை அங்கி ( கவுன் ) அணிந்து, அறுவை சிகிச்சை அரங்கினுள் சென்று அறுவை படுக்கையில் படுத்திருந்தேன். இரண்டு மருத்துவர்களும் முகமூடியோடு வந்தார்கள். ஏதோ புதிதாக கடை துவங்க வந்து ரிப்பன் வெட்டுவதுபோல், முதலில் இடுப்பின் அரைஞாண் கயிறை வெட்டிவிட்டு ஏதோ பெரிதாக சாதித்ததைபோல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அடுத்த பத்து நிமிடங்களில் கட்டி அகற்றப்பட்டது. அன்று இரவு தங்குவதற்கு, மருத்துவமனையின் முதல்தளத்தின் நோயாளிகள் பிரிவில் என்னை விட்டுவிட்டு சென்றார்கள். நண்பன் சுதாகர் இரவு வீட்டிற்கு செல்லவேண்டும் என்று கூறிசென்றுவிட்டான். நான் இருந்த அறையில் கிட்டத்தட்ட 20 படுக்கைகள் இருந்தது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நர்ஸ் அனைவரும் கீழ்தளத்திற்கு சென்றுவிட்டார்கள். நான் மட்டும் தனியாக அந்த பெரிய அறையில் தங்கவேண்டிய நிலை. எப்படியாது இந்த இரவை கடத்திவிடலாம் என்று உறங்க முயற்சிசெய்தேன். ஏனோ அங்கு உறங்க மிகவும் சிரமமாக இருந்தது. இரவு நேரம் கடந்து கொண்டே இருந்தது. நடுஇரவில் எனக்கு திரும்ப முடியாதளவுக்கு திணறலாக இருந்தது. என்னால் சிறிதும் அசையமுடியவில்லை. ஏதோ தீயசக்தி என்னைக்கட்டி கட்டிலிலிருந்து வலுக்கட்டாயமாக தூக்குவதுபோல் இருந்தது. மரணபயம் கவ்வும் நிலையிலும் உடனே நான் ஸ்ரீ நரசிம்மர் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தேன். நான் வாராவாரம் சென்று வணங்கும் தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் உள்ள "நரஸிம்ஹர்" உருவம் எனக்கு மிகுந்த தைரியம் தந்தது. "ஓம் ஸ்ரீ நரஸிம்ஹாய நமஹ" என்று ஜெபிக்க ஜெபிக்க என்னை இறுக்கப்பிடித்த தீய பிடியிலிருந்து விலகுவதை உணர்ந்தேன். அப்படியே நிம்மதியாக உறங்கி, மறுநாள் காலை 6 மணிக்கு மருத்துவமனையிலிருந்து நல்லபடியாக வீட்டிற்கு சென்றுவிட்டேன்.



    கடந்த 2017 ஆம் வருடம் பணிநிமித்தமான சீனா பயணத்தின்போதும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டது. சீனர்கள் சிலருக்கு செய்வினை சூனியம் செய்வார்கள் என நான் சிறிது கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை பெரிதாக மனதில் எடுத்ததில்லை. 2017 ஆம் வருடம் சீனாவிற்கு இரண்டு வாரப்பயணமாக மூன்றுமுறை சென்றிருக்கிறேன். அதில், ஒருமுறை ஹாங்-செவ்வு என்ற நகரத்தில் ஒரு விடுதியில் தங்கினேன். இரவில் ஆரம்பத்திலேயே ஏதோ ஒரு அசௌகரியமாக இருந்தது. சிறிது முயன்று உறங்கினேன். நடுஇரவில் யாரோ அழைப்பதுபோல் தோன்றவே விளித்துப்பார்த்தேன். நான் கண்ட கட்சி என்னை தூக்கிவாரிப்போட்டது. எனது அறையில் ஒரு விகாரமாக விழிக்கும் ஒரு குழந்தை பொம்மை என்னை ஆழமாக பார்த்து சிரித்தது. சட்டென என்னையும் அறியாமல் காலபைரவ மந்திரம் உரக்க ஜெபிக்க ஆரம்பித்தேன். சில வினாடிகளில் என் அறையின் நிலை சீரானது. படபடக்கும் என் இதயத்துடிப்பு சீரானது. அந்த கடும் குளிர்காலத்திலும் உடலெங்கும் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டு என்னை ஈன்ற அகத்தீசரை வணங்கி ஒரு அருள்காப்பு வளயமிட்டு பிராத்தித்து நிம்மதியாக உறங்கினேன். மறுநாள் காலை முதல் வேலையாக ஹோட்டல் மானேஜரை சந்தித்து, தற்போதைய அறை எனக்கு வசதியாக இல்லை என்று உப்பு சப்பில்லாத சாக்கு சொல்லி வேறு ஒரு அறைக்கு மாறிக்கொண்டேன்.
    இதை உங்களில் சிலர் மூடநம்பிக்கை என்றோ அல்லது மனோதத்துவம் என்றோ எண்ணலாம். "இறைவனை நம்பினார் கெடுவதில்லை".  பல ஆயிரம் ஆண்டுகளாக பல யுகங்களாக, நம் முன்னோர்கள் நமக்காக வடித்துத்தந்த ஆன்மீகம் வேடிக்கை அல்ல.


ஓம் அகத்தீசாய நமஹ.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.

செவ்வாய், 29 ஜனவரி, 2019

யோகவேல் ஞானவேல்



ஓம் ஞானாலய முருக பாதம் போற்றி 

ஞானாலய வெளியீடான "ஆகம வேதம்நூலில் 
நம் ஆணவ மரத்தை முழுமையாக வேரோடு 
பிடுங்கி வெட்டி  அக்னி குண்டத்தில் போட்டு எப்படி எரிக்கவேண்டும்என்று பரத்வாஜ மகரிஷி 
அருளியிருப்பார்। 



நமக்குள் ஆழமாய் ஆணிவேரை விட்டிருக்கும் "ஆணவம்" (ஈகோ) உள்ளவரை, அகத்தீசர் மற்றும் சித்தர்களால் நம்மை நெருங்கி நல்லருள் அளிப்பது மிகவும் கடினமான காரியம். இதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.  இந்த கொடிய ஆணிவேரை முழுமையாக உருவிஎடுத்தாலும், அந்த ஆழமான துளை மீண்டும் "ஆணவவேர்" வளர காரணமாகுமே? என்னை ஈன்ற அகத்தியமாமுனியே என்ன செய்வது?
   பிடுங்கிய ஆணிவேர் துளையில் குருமுனியின் குருவான "ஞானவேல்" சொருகி பிரதிஷடை செய்து தினமும் அன்பு மலர் வைத்து பூசித்தால் "ஆணவம்" வளர வழியே இல்லை இல்லை இல்லை. "ஞானவேல்" இருக்கும்மனம், அகத்தீசரையும் அனைத்து சித்தர்களையும் ஈர்க்கும் சக்திமையம்.


குருவருளால்,  அடியேன் யான்
 *முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள்* , அதற்குரிய வேதம் ,  பூதம் , யோக ஆதார மையம் , அதற்குரிய பஞ்சாச்சரம் இவைகளை
 முறையாக தொகுத்துபோற்றி பாடலாக கீழே 
எழுதியுள்ளேன் 

உங்கள் ஒவ்வொரு ஆதார தளத்திலும் 
முருகவேலை பாவனை செய்து பக்தியோடு 
இந்த போற்றிகளை ஓதி  , ஓதியப்பர் அருளை பெற அடியேன்
 வேண்டுகிறேன் 



      காப்புவேல்.
ஓம் கணபதிவேல் காப்பு.
ஓம் அகத்தியமாமுனிவேல் காப்பு.
ஓம் சப்தரிஷிவேல் காப்பு.
ஓம் சங்கத்தமிழ்வேல் காப்பு.

      போற்றிவேல்
ஓம் பொதிகைவேல் போற்றி.
ஓம் கும்பமுனிவேல்போற்றி.
ஓம் குருமுனிவேல் போற்றி.
ஓம் ஞானலயம்வாழ் பெண்வேல் போற்றி.

      யோகஞானவேல்
ஓம் ஓம்காரவேல் போற்றி.
ஓம் சத்யவேல் போற்றி.
ஓம் தவவேல் போற்றி.
ஓம் தத்துவவேல் போற்றி.
ஓம் தூயவேல் போற்றி.
ஓம் தர்மவேல் போற்றி.
ஓம் அன்புவேல் போற்றி.
ஓம் மகிழ்வேல் போற்றி.

ஓம் விநாயகவேல் போற்றி.
ஓம் அகாரவேல் போற்றி.
ஓம் உகாரவேல் போற்றி.
ஓம் மகாரவேல் போற்றி.
ஓம் ரவிவேல் போற்றி.
ஓம் மதிவேல் போற்றி.
ஓம் பிராணநாகவேல் போற்றி.
ஓம் திருப்பரங்குன்றவேல் போற்றி.

ஓம் பிரம்மவேல் போற்றி.
ஓம் வாணிவேல் போற்றி.
ஓம் நகாரவேல் போற்றி.
ஓம் பூமிவேல் போற்றி.
ஓம் ரிக்வேதவேல் போற்றி.
ஓம் கிரியாவேல் போற்றி.
ஓம் கர்மவேல் போற்றி.
ஓம் திருசெந்தூர்வேல் போற்றி.

ஓம் காக்கும்கரவேல் போற்றி.
ஓம் விஷ்ணுவேல் போற்றி.
ஓம் திருவேல் போற்றி.
ஓம் மகாரவேல் போற்றி.
ஓம் யஜுர்வேதவேல் போற்றி.
ஓம் சக்ராயுதவேல் போற்றி.
ஓம் உந்திக்கமலவேல் போற்றி.
ஓம் திருஆவினன்குடிவேல் போற்றி.

ஓம் ருத்ட்ரவேல் போற்றி.
ஓம் சிகாரவேல் போற்றி.
ஓம் அக்னிவேல் போற்றி.
ஓம் இதயக்கமலவேல் போற்றி.
ஓம் சாமவேதவேல் போற்றி.
ஓம் முக்கோணசெவ்வேள் போற்றி.
ஓம் சுகமானசுழுத்திவேல் போற்றி.
ஓம் ஸ்வாமிமலைவேல் போற்றி.

ஓம் மஹேசவேல் போற்றி.
ஓம் வகாரவேல் போற்றி.
ஓம் வாயுவேல் போற்றி.
ஓம் கண்டவேல் போற்றி.
ஓம் அதர்வணவேதவேல் போற்றி.
ஓம் கருமைஅறுகோணவேல் போற்றி.
ஓம் சோப்பனவேல் போற்றி.
ஓம் திருத்தணிவேல் போற்றி.

ஓம் சதாசிவமணிவேல் போற்றி.
ஓம் யகாரவேல் போற்றி.
ஓம் அன்புஅருள்வேல் போற்றி.
ஓம் சுழிமுனைவேல் போற்றி.
ஓம் காயகல்பவேல் போற்றி.
ஓம் சாக்ரதவேல் போற்றி.
ஓம் முடிமூலவேல் போற்றி.
ஓம் பழமுதிர்சோலைவேல் போற்றி.

ஓம் சஹஸ்ரவேல் போற்றி.
ஓம் விந்துநாதவேல் போற்றி.
ஓம் பராபரவேல் போற்றி.
ஓம் பரப்ரம்மவேல் போற்றி.
ஓம் ஐங்கோணவேல் போற்றி.
ஓம் சமாதிவேல் போற்றி.
ஓம் ஆதிமுருகவேல் போற்றி.
ஓம் சரவணபவவேல் போற்றி.

ஓம்ம்ம்...
வானிலொளிரும் வாலைவேல் போற்றி.
துளைத்துப்புணரும் போகவேல் போற்றி.
களங்கமில்லா கற்புவேல் போற்றி.
பிழைபொருக்கும் கருணைவேல் போற்றி.
சாகா சிவசக்திவேல் போற்றி.
ஊண்ணுள்ளிருக்கும் உயிர்வேல் போற்றி.
உயிருள்ளிருக்கும் ஈசவேல் போற்றி.
கனவிலும் காக்கும் கந்தவேல்ல்ல்.. போற்றி போற்றி.

ஓம் சுபவேலனே போற்றி.

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

அகத்தியரின் உரைப்படி பரத்வாஜர் உரைப்பது - ஆகம வேதம்

ஆகம வேதம்



மகாமுனி அகத்தியரையும், சித்தர்களையும் வணங்கும் ஆன்மாக்கள் உலகெங்கும் உள்ளனர். அவர்கள் ஒவ்வருவருக்கும் கண்டிப்பாக ஒரு ஆசை இருக்கும். ஆம், என்றாவது ஒருநாள் அன்பான அகத்திய முனி நம்முள் வந்து அருள்பலிப்பாரா?  நம்மையும் சித்தர் நிலைக்கு உயர்த்துவாரா ? என்ற ஆசை நம்முள் இருக்கும்.

     இதற்க்கு முந்தய பிலாக்கில் "கலியுக காவியம் - ஆத்மாவின் சுயசரிதம்" என்ற நூலை பற்றி சிறிய முன்னுரையை அடியேன் எழுதியிருந்தேன். ( லிங்க் கிளிக் செய்யவும் ).   இந்த நூலுக்கு அடுத்து எனக்கு மற்றுமொரு தெய்வீக நூலை படிக்கும் பாக்கியம் கிடைத்தது.
"பரதவசி" என்னும் பரத்வாஜர் முனிவரால் உரைக்கப்பட்ட "ஆகம வேதம்" என்கின்ற இந்த நூல் உலகெங்கும் சித்தர்களை வணங்குவோர்க்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.  இந்த நூலில் பாரத்வாஜ முனிவர் அவர்கள், கீழ்கண்ட விஷயங்களை மிக விரிவாக அழகாக உரைத்துள்ளார்.
*  ஒரு பக்தனின் சிரசில் உள்ள எந்த தகுதியை வைத்து "அகத்திய முனிவர்" உள்ளே வர விரும்புவார்,
*  எந்த விஷயம் அவர் வருவதை தடுக்கும், எது அவர்க்கு மகிழ்வை தரும்? 
*  அவர் ஒரு சிரசை தேர்தெடுக்க ஒரு பக்தன் என்ன என்ன முன்னேற்பாடுகளை செய்தல் வேண்டும்,
*  ஒரு பக்தனின் சிரசில் அமர்ந்து அணுக்களை உயிர்பித்து செயலாற்றும்போது, என்ன என்ன வெளிப்பாடுகள் தோன்றும்? அதை எப்படி எதிர்கொள்வது ?
* அகத்தியர் முழுமையாக சிரசில் செயலாற்றியபின் பக்தனுக்கு கிடைக்கும்  பலன்களை யாவை? , ஆற்றல் பெற்ற பக்தனின் கடமைகள் யாவை.
*  முந்தய யுகங்களில் அகத்தியர் வருகை எப்படி எளிதாக இருந்தது?, ஏன் கலியுகத்தில் அவரால் எளிதில் நம் சிரசில் வரமுடியவில்லை ?
*  நம் குழந்தைகளுக்கு எதை எப்படி எந்த வயதில் கற்றுக்கொடுக்க வேண்டும்?
* நமக்கு எளிதில் கிடைக்கும் சூரியனின் சக்தியை எப்படி நம் ஆன்ம முன்னேற்றத்திற்கு முழுமையாக பயன்படுத்துவது.
மேலும் பல அற்புதமான சூட்சமங்களை வெளித்திறந்து அருளியிருக்கிறார் "பரதவசி" என்னும் பரத்வாஜர் மகரிஷி.
மேலும் விபரங்கள் கீழே உள்ள இணையதளத்தில் உள்ளது.

http://www.enlightenedbeings.org/books.php
http://www.enlightenedbeings.org/books.php

இதைப்படிக்கும் உங்கள் ஆன்மாவிற்கு அகத்தியர் அருள் கிட்ட அகத்தியரை வணங்குகிறேன்.

ஓம் அகத்தீசாய நமஹ.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.

செவ்வாய், 25 டிசம்பர், 2018

கலியுக காவியம் – அணு - பிரளய நோய் -> புற்றுநோய்


       கலியுக காவியம்அணு - பிரளய நோய் -> புற்றுநோய்



பலகாலமாக அகத்தீசரை வணங்கி வேண்டி கேட்ட கேள்விகளுக்கு, இப்போது அருளான பதில்களை அய்யா அருளிவிட்டார். ஒரு அற்புதமான நல்ல விஷயம் எனக்கு கிடைத்திருக்கிறது. காக்கை ருசியான உணவைக் கண்டவுடன் மற்ற காக்கைகளை கூவி அழைப்பதுபோல், அடியேன் நானும் உங்களிடம் உடனே பகிரவேண்டும் என இப்பதிவை எழுதுகிறேன். நம் உடல் மற்றும் உயிரை மேம்படுத்தி, அனைத்து செல்வங்களையும் பெற்று இறைவனோடும் சேர பல யோகஞான பயிற்சி பாடல்களை நம் சித்தர்கள் ஏற்கனவே பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

அடியேன் நானும் அதில் பல சித்த நூல்களை படித்து, சிறிது பயிற்சியும் செய்து பார்த்தேன். ஆனால் என்மனதில் பல கேள்விகள் இருந்தது. என்றோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் சித்தர்கள் எழுதிய இந்த நூல்களின் நுணுக்கங்கள் இன்றைய கலியுகத்திற்கு எவ்வாறு பொருந்தும் என்ற குழப்பம் இருந்தது. ஒருவிஷயம் மட்டும் உறுதியாக தோன்றியது. அகத்தீசர் நினைத்தால் இன்றைய கலியுகத்திலும் நமக்கு ஞானம் அருள முடியும் என்று.

     என்னை ஈன்ற அகத்தியமஹாமுனியே! என்குழப்பத்திற்கு விடை அருளுங்கள் என பல நாட்கள் வேண்டினேன். என்னைபோல் உலகெங்கும் பலர் அய்யாவிடம் வேண்டியிருப்பார்கள் என உணரமுடிகிறது. நம் அனைவரின் வேண்டுதலை அய்யா அருளோடு கண்டுகொண்டார். கடந்த மாதம் எதேச்சையாக "ஞானாலயம் - ஒளியைநோக்கிய பயணம்" என்ற இணையதளத்தை அய்யா எனக்கு காண்பித்தார். மேலும் ஆராய்கையில் "கலியுக காவியும் - பாகம்  ஒன்று" என்ற நூலை பற்றி அறிந்து, அதை வரவழைத்து படிக்க ஆரம்பித்தேன். இந்த நூல் வால்மீகி முனிவர் உரைக்க எழுதியது என்று தெரிந்ததும் சிறிது சந்தேகம் வந்தது. ஆனால் நூலை படிக்க படிக்க என் சந்தேகமும் குழப்பமும் தீர்ந்தது.

    ஆரம்பத்தில் தவறாக எண்ணியதற்காக அகத்தியரிடம் மன்னிப்புகோரினேன். இந்நூலில் அணுவைப்பற்றியும், கலியுகத்தில் ஏற்படும் பிரளயம் என்பது புற்றுநோயே, இதிலிருந்து நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது, மனித உடல் பாதரச தன்மை பெற்று ஒளியுடன் பெறுவது  என்ற பல அரிய தகவல்களை அருள்மிகு வால்மீகி முனிவர் உரைத்திருக்கிறார். இந்நூல் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியின் கேள்விக்கும் பதிலுரைக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.  இந்நூலின் பெருமையை அகத்தியரே சொன்னால் எப்படியிருக்கும் என்று நான் யோசிக்கையில், அகத்தியரின் ஞான பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. கீழே உங்களுக்காக ஒலிவடிவில் அதன் சிறுபகுதியை அகத்தியரை வணங்கி பகிர்ந்துள்ளேன். இந்த லிங்க்கை அழுத்தி கேட்டு மகிழுங்கள்.

   மொத்தம் 689 பக்கங்கள் கொண்ட இந்த அதிசய நூலி நீங்கள் சிறிதும் எதிர்பாராத அதிசய விஷயங்களை வால்மீகி முனிவர் அருளியுள்ளார் என்பதை நூலை முழுவதுமாக படிக்கும்போது உணர்வீர்கள். மேலும் இதுபோன்ற நூலை ஒரு கலியுக மனிதனால் நிச்சயம் வழங்கமுடியாது என்பதையும் ஒத்துக்கொள்வீர்கள். 
 

புண்ணியம் உள்ளோர் இந்நூலை தேடிக்கண்டு படித்து பயன்பெறுவார்கள். மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட இணையதள இணைப்புகளை பகிர்ந்துள்ளேன். பார்த்து பயன் பெறுங்கள்.



கலியுகத்தில் சித்தர்கள் அருளிய புத்தம் புதிய செய்திகள்.

நம் சித்தர்கள் 1000, 2000 வருடங்களுக்கு முன்னரே அருளிய பழைய வைத்திய சாஸ்திரம், யோக சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ்திரம் இன்றைய கலியுக கடைசி காலகட்டத்திலும் வலிமையோடு பிரபலமாக உள்ளது. இந்த அற்புதமான பழமைவாய்ந்த சாஸ்திரங்களை மையப்படுத்தி இன்று பலரும் பல அருமையான சிந்தனைகளை தினமும் கருணையோடு பகிர்கிறார்கள். 

ஒருவேளை அதே பதிணெட்டு சித்தர்களும் முருக பெருமானும் இன்றைய கலியுக மானிடர்களுக்காக மீண்டும் இரங்கிவந்து அற்புத சாஸ்திரங்களை அருளினால் எப்படி இருக்கும் ? என்ன, இது சாத்தியமா ?   என தோன்றுகிறதா?

இது சாத்தியாமென்றால் மகிழ்வேன் என நினைப்போர்க்கு அந்த அற்புத செய்தியை அடியேன் வெளியிட விரும்புகிறேன். உங்களில் எத்தனைபேர்கள் இந்த கலியுகத்தில் லேட்டஸ்டாக சாஸ்திரங்களை அந்த பழைய சித்தர்களே வெளியிடவேண்டும் என விரும்புகிறீர்கள்? அப்படி வெளியிட்டால் படித்துப்பார்க்க விருப்பமா? 
உங்களில் எத்தனைபேர் இந்த பதிவை லைக் அல்லது கருத்திடுவீர்கள்?

அன்புடன்
அகத்திய பக்தன்.
ஓம் அகத்தீசாய நமஹ.


வெள்ளி, 30 நவம்பர், 2018

மகத்தான மரண அனுபவங்கள் – தொடர்ச்சி



கடந்த 2014 -2015 ஆம் வருடம், நான் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக ஜெர்மனியில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போதைய எனது அனுபவத்தை என் முந்தைய பதிவில்சுருக்கமாக (லிங்க் பார்க்கலாம்)எழுதியிருக்கிறேன்.  அப்போது பிராணாயாமத்தை அதிக ஆர்வத்தோடு (ஆர்வ கோளாறு) என் இஷ்டத்திற்கு நாள்தவறாமல் காலையும் மாலையும் பயிற்சி செய்தேன்.  அப்போது, கடந்த 2015 ஆம் வருடம் மே மாதம் ஒரு மாலை வேளையில் எனக்கு திடீரென ஒரு யோசனை வந்தது.
எனது முறையில்லாத பிராணாயாமத்தோடு, ஹடயோகத்தின் சில விபரீதமான யோகாப்பியாசத்தையும் இணைத்து செய்தேன் (இதன் ஆபத்து கருதி மேலும் விளக்க எனக்கு அனுமதி இல்லை). ஆபத்தான ஹடயோக ஆசன பயிற்சியோடு மூச்சையடைக்கி வெளியிடும்போது, சட்டெனெ என் உயிர் எனது உடலிலிருந்து பிரிந்து ஏதோ ஒரு பிரகாசமான ஒளிக்கூட்டத்திற்குள் சென்றுவிட்டேன். என்ன நடந்தது? என என்னால் சில நிமிடங்களுக்கு யூகிக்கமுடியாமல், அந்த ஒளிகூட்டத்திற்குள் நான் கலந்து இருப்பது மிகுந்த ஆச்சர்ய ஆனந்தமாக இருந்தது. ஆனால், இந்தமுறை நல்ல சுயநினைவுடன் என்னால் நன்றாக யோசிக்கமுடிந்தது. திடீரெனெ எனது அறையும் அங்கிருந்த நாற்காலி மேசை கட்டில் எல்லாம் எங்கே போனது? என தேடிப்பார்த்தேன். அங்கு பரந்த ஒளியைத்தவிர எதுவுமே இல்லை. எனக்கும் எந்த உருவமும் இல்லை, ஆனால் யோசிக்க முடிகிறது. சிலநிமிடங்கள் என்ன செய்வது என புரியாமல் இருந்துவிட்டு, மீண்டும் என் உடலுக்குள் போகவேண்டும் என்று விரும்பினேன், எப்படி போவது என்று புரியாமல் கவலை கொண்டேன். ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோமே, இனி எனது உடலுக்குள் எப்படி செல்வது? என்று தெரியவில்லையே என யோசித்தேன். இதற்க்கு முந்தய வருடம் பக்திமார்க்கமாக அகத்திய மகாமுனி அய்யாவை வணங்கி, அவர் குருமந்திரத்தை பலமுறை பலநாட்கள் ஜெபித்து சித்திசெய்தது ஞாபகம் வந்தது. இனி அகத்தியர் தான் என்னை இங்கிருந்து காப்பாற்றவேண்டும் என்று முடிவுசெய்து, நான் ஏற்கனவே சித்திசெய்த குருமந்திரைத்தை தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தேன். சிலநிமிடங்களில் யாரோ மேலிருந்து கீழ்நோக்கி அழுத்துவதுபோல் இருந்தது. சட்டெனெ நான் என் உடலுக்குள் வந்துவிட்டேன். நான் அதே அமர்ந்த நிலையில் என் அறைக்குள் இருந்தேன். அப்பாடா தப்பித்துவிட்டோம் என நிம்மதி வந்தது. நான் என் இஷ்டத்திற்கு விளையாட்டாய் செய்த தவறை தாயின் கருணையோடு மன்னித்து, என்னை புதிதாய் பெற்றெடுத்த என் குருபாதம் போற்றி போற்றி. கருணைமிகு பொதிகைமுனி பொற்பாதம் போற்றி போற்றி.
          இந்த நிகழ்விற்குப்பிறகு பலநாட்கள் உடல்ரீதியான சில தொந்தரவுகளும் வலியும் இருந்தது. அகத்தியர் கருணையால் மீண்டுவர முடிந்தது. இதை மீண்டும் பரிசோதிக்க விருப்பமில்லை. அய்யாவும் அதை நிச்சயம் விரும்பமாட்டார்.  எனது அனுபவத்தில், இறைவன் அருளைப்பெற்று வாழவும், இறுதியில் இறைவனை சேரவும், முக்தி பெறவும் கடுமையான பயிற்சிகள்தான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை.
நாம் அனைவரும் நமது உலகவாழ்வை இனிதாக அனுபவித்துக்கொண்டே அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கி எளிதாக இறைவன் அருளை பெற்று வாழ்ந்து, இறைவனோடு எளிதாக சேர வழிகள் உண்டு. மேலும் இது தொடர்பான பதிவை"எங்கள் வீட்டில் எந்நாளும் ஆயில்யம்" (லிங்க் உள்ளது) என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். படித்து பயன் பெற வாழ்த்துக்கள்.


வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ஜெர்மனி தங்குமிடம்.





ஓம் அகத்தீசாய நமஹ.

இப்படிக்கு,
அகத்திய பக்தன்.

வியாழன், 22 நவம்பர், 2018

மகத்தான மரண அனுபவங்கள்

மகத்தான மரண அனுபவங்கள்

குரு பாதம் போற்றி.



இந்த பதிவு என் தனிப்பட்ட அனுபவங்களைக்கொண்டது. இதை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம். ஆனால், உங்களை ஆபத்து மற்றும் கஷ்டகாலத்தில் காப்பாற்றும் ஒரு எளிய சூட்சுமத்தை சொல்லவேண்டும் என்ற நோக்குடன் இப்பதிவை எழுதுகிறேன்.
கடந்த 2007 ஆம் வருடம் நான் பெங்களூரில் பணி செய்துகொண்டிருந்தபோது பெற்ற விசித்திர அனுபவம் இது.  நான் அப்போது தீவிர பெருமாள் பக்தனாக இருந்தேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாமிசம் தவிர்த்துவிட்டு, குடும்பத்துடன் பெருமாள் கோவில் செல்வது வழக்கம். (குருவருளால் கடந்த 2012 முதல் முழுமையான சைவ உணவுக்கு குடும்பத்தோடு மாறிவிட்டோம்.) எம்பெருமாள் மேல்கொண்ட காதலால் நாலாயிரத்திவ்ய பிரபந்த பாடல்களில் பலவற்றை மனனம் செய்வது, பெருமாளின் ஆயிரெத்தெட்டு நாமங்களை ஜெபித்து வணங்குவதும், எம்பெருமாளின் மேல் கவிதைகள் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.
மேலும் திருமணத்திற்கு ( 2003  ) முன்பிருந்தே, எனது உயிர் நண்பர் சேதுபதியின் அறிவுரைப்படி எனது ஜாதகப்படியான கடுமையான கருமவினை மற்றும் தோஷங்கள் அகல, காலபைரவர் வழிபாடும் தொடர்ந்து செய்துவருகிறேன். ஒவ்வொரு வாரமும், திண்டுக்கல் அபிராமியம்மன் கோவிலில் உள்ள பைரவரையும், தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் உள்ள சொர்ண ஆகர்சன பைரவரையும் நண்பர் சேதுபதியின் அறிவுரைப்படி தவறாமல் வணங்கினேன். இந்த பைரவ வழிபாடு, எனது கடும் கருமவினை மற்றும் தோஷங்களை நீக்கி நல்ல திருமண வாழ்வை தந்தது.  அவ்வப்போது என்வாழ்வில் கர்மவினைகாரணமாக வரும் சிக்கலான தருணங்களில் பைரவ வழிபாடு செய்வதுண்டு. நான் தூர இடங்களில் பணிபுரியும்போது எனது சிறிய மாமனார் திரு.இருளேசன் அவர்களை தொலைபேசியில் அழைத்து, பைரவர் அர்ச்சனை செய்யச்சொல்வேன். அவர் உடனே எனக்காக ராம்நாடு வழிவிடும் முருகன் கோவிலில் உள்ள பைரவருக்கு அர்ச்சனை செய்வார். நிற்க.

பலஆண்டுகள் தொடர்ந்து கணிப்பொறியில் வேலைபார்த்த காரணமாக எனக்கு கடுமையான “கீழ் இடுப்புவலியால்” (low back pain) துன்பப்பட்டுக்கொண்டிருந்தேன். பெங்களூரின் பிரபல ஆங்கில மருத்துவம் செய்தும் பலன் இல்லை. நரம்பில் ஊசி போடலாம், ஆனால் உத்திரவாதம் இல்லை என்றார்கள். அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தேன். எனது குடும்ப மருத்துவரும் உற்ற நண்பருமான ஓசூர் ஆங்கில மருத்துவர், என் வேதனையை கண்டு மிகவும் மனம் நொந்துபோனார். எனக்காக அவர் பல ஆங்கில மருத்துவ குறிப்புகளை ஆராய்ந்து, ஒரு குறிப்பிட்ட ஆங்கில ஊசிமருந்தை குறிப்பெடுத்துவைத்திருந்தார். ஒரு ஞாயிறு நாளில், நான் என் மருத்துவ நண்பரை, கடும் வலியோடு அவர் மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது அவர் குறிப்பெடுத்த ஊசிமருந்தைப்பற்றி சொல்லி, அதன்மூலம் வலி குணமாக அதிக வாய்ப்பு உண்டு என்றார். அந்த ஊசிமருந்து வைட்டமின் B12 வின் ஒரு குறிப்பிட்ட ( Cobalamin ) வேதிமருந்து. நான் அப்போது அதிக வலியில் இருந்ததால் என் மருத்துவ நண்பரிடம் அந்த ஊசியை உடனே எனக்கு செலுத்துமாறு வேண்டினேன். சரியென்று அருகேயிருந்த மருந்தகத்தில் அந்த ஊசியை வாங்கி, நான் நாற்காலியில் அமர்ந்த நிலையில் எனக்கு செலுத்தினார். ஊசிமருந்து செலுத்திய இருபது நொடிகளில் எனக்கு ஏதோ கரும்படலம் சூழ்ந்ததைபோல் இருந்தது. அடுத்த வினாடியே என் உயிர் என்னுடலை விட்டுப்பிரிந்து வேறு எங்கோ நின்றுகொண்டிருந்தேன். அங்கே நான் என் அருமைதெய்வம் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் முன் ஆச்சரிய ஆனந்தத்துடன் நின்றுகொண்டிருந்தேன். என்பெருமாள் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத பேரொளிரூபமாக நின்றுகொண்டு, என்னை தாயின் கருணையோடு பார்த்து புன்னகை பூத்தார். எனக்கு ஒரு குடும்பம் இருக்கும் நினைவோ அல்லது பூமியில் வாழ்ந்த நினைவோ சிறிதும் இல்லை.  நான் பேரார்வத்தோடு எம்பெருமாளின் ஒளிரூபத்திற்குள் சென்றுவிட எத்தனித்தேன். ஆனால், சட்டெனெ யாரோ என்னை பின்புறமாக வெக்கேனெப்பிடித்து இழுப்பதாக உணர்ந்தேன்....   நான் கண்விழித்துப் பார்த்தபோது, நண்பரின் மருத்துவமனை படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தேன். என் மருத்துவ நண்பர், கையில் வேறொரு ஊசியுடன் நிம்மதி பெருமூச்சோடு சிரித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். அவர் முகத்தை பார்த்தவுடன் எனக்கு மிகுந்த எரிச்சலும் கோபமும் வந்தது. இன்னும் ஒரேயொரு வினாடி தாமதித்திருந்தால் நான் என் இறைவனோடு கலந்திருப்பேன். என்ன செய்ய? இன்னும் இந்த பூமியில் கணக்கு இருக்கிறது போலும். இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், என் மருத்துவ நண்பரின் இஷ்டதெய்வமும் அதே பெருமாள்தான். நான் குறிப்பிட்ட cobalamin மருந்தின் ஒவ்வாமையில் மயங்கியவுடன், தன்கைவசமிருந்த ஒரேயொரு மாற்றுமருந்தை, பெருமாளை வேண்டி எனக்கு செலுத்தி உயிரை மீட்டுவிட்டார்.  வாய்ப்பை தவறவிட்ட வருத்தத்தில், மருத்துவ நண்பருக்கு நன்றியும் சொல்லாமல் கட்டணமும் கொடுக்காமல் வீட்டிற்கு எழுந்து சென்றுவிட்டேன். எனது அனுபவத்தில் உணர்ந்தது யாதெனில், சிறிதும் சந்தேகமில்லாத இறைநம்பிக்கையோடு வாழ்வோருக்கு "மரணம் துன்பமானதல்ல.. அதுவே உச்சகட்ட இன்பமானது". 
எனினும், செத்து பிழைத்த காரணத்தால், காலபைரவருக்கு ஒரு விசேஷ அர்ச்சனை செய்ய விரும்பினேன். உடனே என் உற்ற தோழனும் சகோதரனுமான பழனி சிவராமராஜாவை தொலைபேசியில் அழைத்து, பழனிமலை கோவில் படிக்கட்டின் ஆரம்பத்தில் உள்ள பிரம்மாண்ட காலபைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டினேன். அவனும் எனக்காக அதிகாலை கடும்குளிரையும் பொருட்படுத்தாது மலையடிவாரம் சென்று பைரவருக்கு அர்ச்சனை செய்தான். கடந்த 2015 ஆம் வருடத்தில் கிடைத்த மற்றோரு மரண அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.  இறைவன் அருள் பரிபூரணமாக உங்களோடு இருக்கவேண்டி இப்போதைக்கு விடைபெறுகிறேன். (ஆம், மரணம்கூட இன்பமான போதைதான்) 

குறிப்பு: இதை படித்த உங்களுக்கு என் கீழ் இடுப்பு வலியின் தீவிரத்தையும், அதற்கான தீர்வையும் அறிய ஆவலாய் இருக்கலாம். இதைப்பற்றி ஒரு கவிதை வடிவில் இந்த பதிவில் (லிங்க்)எழுதியுள்ளேன். http://fireprem.blogspot.com/2016/12/blog-post_30.html?m=1
Accupunture மற்றும் பாரம்பரிய வர்மா தடவல் சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்தது. அத்துடன் தினமும் காலை மாலை சூர்யநமஸ்கரா யோகாசனமும் செய்கிறேன்.

இப்படிக்கு,
அகத்திய பக்தன்.