செவ்வாய், 29 ஜனவரி, 2019

யோகவேல் ஞானவேல்



ஓம் ஞானாலய முருக பாதம் போற்றி 

ஞானாலய வெளியீடான "ஆகம வேதம்நூலில் 
நம் ஆணவ மரத்தை முழுமையாக வேரோடு 
பிடுங்கி வெட்டி  அக்னி குண்டத்தில் போட்டு எப்படி எரிக்கவேண்டும்என்று பரத்வாஜ மகரிஷி 
அருளியிருப்பார்। 



நமக்குள் ஆழமாய் ஆணிவேரை விட்டிருக்கும் "ஆணவம்" (ஈகோ) உள்ளவரை, அகத்தீசர் மற்றும் சித்தர்களால் நம்மை நெருங்கி நல்லருள் அளிப்பது மிகவும் கடினமான காரியம். இதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.  இந்த கொடிய ஆணிவேரை முழுமையாக உருவிஎடுத்தாலும், அந்த ஆழமான துளை மீண்டும் "ஆணவவேர்" வளர காரணமாகுமே? என்னை ஈன்ற அகத்தியமாமுனியே என்ன செய்வது?
   பிடுங்கிய ஆணிவேர் துளையில் குருமுனியின் குருவான "ஞானவேல்" சொருகி பிரதிஷடை செய்து தினமும் அன்பு மலர் வைத்து பூசித்தால் "ஆணவம்" வளர வழியே இல்லை இல்லை இல்லை. "ஞானவேல்" இருக்கும்மனம், அகத்தீசரையும் அனைத்து சித்தர்களையும் ஈர்க்கும் சக்திமையம்.


குருவருளால்,  அடியேன் யான்
 *முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள்* , அதற்குரிய வேதம் ,  பூதம் , யோக ஆதார மையம் , அதற்குரிய பஞ்சாச்சரம் இவைகளை
 முறையாக தொகுத்துபோற்றி பாடலாக கீழே 
எழுதியுள்ளேன் 

உங்கள் ஒவ்வொரு ஆதார தளத்திலும் 
முருகவேலை பாவனை செய்து பக்தியோடு 
இந்த போற்றிகளை ஓதி  , ஓதியப்பர் அருளை பெற அடியேன்
 வேண்டுகிறேன் 



      காப்புவேல்.
ஓம் கணபதிவேல் காப்பு.
ஓம் அகத்தியமாமுனிவேல் காப்பு.
ஓம் சப்தரிஷிவேல் காப்பு.
ஓம் சங்கத்தமிழ்வேல் காப்பு.

      போற்றிவேல்
ஓம் பொதிகைவேல் போற்றி.
ஓம் கும்பமுனிவேல்போற்றி.
ஓம் குருமுனிவேல் போற்றி.
ஓம் ஞானலயம்வாழ் பெண்வேல் போற்றி.

      யோகஞானவேல்
ஓம் ஓம்காரவேல் போற்றி.
ஓம் சத்யவேல் போற்றி.
ஓம் தவவேல் போற்றி.
ஓம் தத்துவவேல் போற்றி.
ஓம் தூயவேல் போற்றி.
ஓம் தர்மவேல் போற்றி.
ஓம் அன்புவேல் போற்றி.
ஓம் மகிழ்வேல் போற்றி.

ஓம் விநாயகவேல் போற்றி.
ஓம் அகாரவேல் போற்றி.
ஓம் உகாரவேல் போற்றி.
ஓம் மகாரவேல் போற்றி.
ஓம் ரவிவேல் போற்றி.
ஓம் மதிவேல் போற்றி.
ஓம் பிராணநாகவேல் போற்றி.
ஓம் திருப்பரங்குன்றவேல் போற்றி.

ஓம் பிரம்மவேல் போற்றி.
ஓம் வாணிவேல் போற்றி.
ஓம் நகாரவேல் போற்றி.
ஓம் பூமிவேல் போற்றி.
ஓம் ரிக்வேதவேல் போற்றி.
ஓம் கிரியாவேல் போற்றி.
ஓம் கர்மவேல் போற்றி.
ஓம் திருசெந்தூர்வேல் போற்றி.

ஓம் காக்கும்கரவேல் போற்றி.
ஓம் விஷ்ணுவேல் போற்றி.
ஓம் திருவேல் போற்றி.
ஓம் மகாரவேல் போற்றி.
ஓம் யஜுர்வேதவேல் போற்றி.
ஓம் சக்ராயுதவேல் போற்றி.
ஓம் உந்திக்கமலவேல் போற்றி.
ஓம் திருஆவினன்குடிவேல் போற்றி.

ஓம் ருத்ட்ரவேல் போற்றி.
ஓம் சிகாரவேல் போற்றி.
ஓம் அக்னிவேல் போற்றி.
ஓம் இதயக்கமலவேல் போற்றி.
ஓம் சாமவேதவேல் போற்றி.
ஓம் முக்கோணசெவ்வேள் போற்றி.
ஓம் சுகமானசுழுத்திவேல் போற்றி.
ஓம் ஸ்வாமிமலைவேல் போற்றி.

ஓம் மஹேசவேல் போற்றி.
ஓம் வகாரவேல் போற்றி.
ஓம் வாயுவேல் போற்றி.
ஓம் கண்டவேல் போற்றி.
ஓம் அதர்வணவேதவேல் போற்றி.
ஓம் கருமைஅறுகோணவேல் போற்றி.
ஓம் சோப்பனவேல் போற்றி.
ஓம் திருத்தணிவேல் போற்றி.

ஓம் சதாசிவமணிவேல் போற்றி.
ஓம் யகாரவேல் போற்றி.
ஓம் அன்புஅருள்வேல் போற்றி.
ஓம் சுழிமுனைவேல் போற்றி.
ஓம் காயகல்பவேல் போற்றி.
ஓம் சாக்ரதவேல் போற்றி.
ஓம் முடிமூலவேல் போற்றி.
ஓம் பழமுதிர்சோலைவேல் போற்றி.

ஓம் சஹஸ்ரவேல் போற்றி.
ஓம் விந்துநாதவேல் போற்றி.
ஓம் பராபரவேல் போற்றி.
ஓம் பரப்ரம்மவேல் போற்றி.
ஓம் ஐங்கோணவேல் போற்றி.
ஓம் சமாதிவேல் போற்றி.
ஓம் ஆதிமுருகவேல் போற்றி.
ஓம் சரவணபவவேல் போற்றி.

ஓம்ம்ம்...
வானிலொளிரும் வாலைவேல் போற்றி.
துளைத்துப்புணரும் போகவேல் போற்றி.
களங்கமில்லா கற்புவேல் போற்றி.
பிழைபொருக்கும் கருணைவேல் போற்றி.
சாகா சிவசக்திவேல் போற்றி.
ஊண்ணுள்ளிருக்கும் உயிர்வேல் போற்றி.
உயிருள்ளிருக்கும் ஈசவேல் போற்றி.
கனவிலும் காக்கும் கந்தவேல்ல்ல்.. போற்றி போற்றி.

ஓம் சுபவேலனே போற்றி.

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

அகத்தியரின் உரைப்படி பரத்வாஜர் உரைப்பது - ஆகம வேதம்

ஆகம வேதம்



மகாமுனி அகத்தியரையும், சித்தர்களையும் வணங்கும் ஆன்மாக்கள் உலகெங்கும் உள்ளனர். அவர்கள் ஒவ்வருவருக்கும் கண்டிப்பாக ஒரு ஆசை இருக்கும். ஆம், என்றாவது ஒருநாள் அன்பான அகத்திய முனி நம்முள் வந்து அருள்பலிப்பாரா?  நம்மையும் சித்தர் நிலைக்கு உயர்த்துவாரா ? என்ற ஆசை நம்முள் இருக்கும்.

     இதற்க்கு முந்தய பிலாக்கில் "கலியுக காவியம் - ஆத்மாவின் சுயசரிதம்" என்ற நூலை பற்றி சிறிய முன்னுரையை அடியேன் எழுதியிருந்தேன். ( லிங்க் கிளிக் செய்யவும் ).   இந்த நூலுக்கு அடுத்து எனக்கு மற்றுமொரு தெய்வீக நூலை படிக்கும் பாக்கியம் கிடைத்தது.
"பரதவசி" என்னும் பரத்வாஜர் முனிவரால் உரைக்கப்பட்ட "ஆகம வேதம்" என்கின்ற இந்த நூல் உலகெங்கும் சித்தர்களை வணங்குவோர்க்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.  இந்த நூலில் பாரத்வாஜ முனிவர் அவர்கள், கீழ்கண்ட விஷயங்களை மிக விரிவாக அழகாக உரைத்துள்ளார்.
*  ஒரு பக்தனின் சிரசில் உள்ள எந்த தகுதியை வைத்து "அகத்திய முனிவர்" உள்ளே வர விரும்புவார்,
*  எந்த விஷயம் அவர் வருவதை தடுக்கும், எது அவர்க்கு மகிழ்வை தரும்? 
*  அவர் ஒரு சிரசை தேர்தெடுக்க ஒரு பக்தன் என்ன என்ன முன்னேற்பாடுகளை செய்தல் வேண்டும்,
*  ஒரு பக்தனின் சிரசில் அமர்ந்து அணுக்களை உயிர்பித்து செயலாற்றும்போது, என்ன என்ன வெளிப்பாடுகள் தோன்றும்? அதை எப்படி எதிர்கொள்வது ?
* அகத்தியர் முழுமையாக சிரசில் செயலாற்றியபின் பக்தனுக்கு கிடைக்கும்  பலன்களை யாவை? , ஆற்றல் பெற்ற பக்தனின் கடமைகள் யாவை.
*  முந்தய யுகங்களில் அகத்தியர் வருகை எப்படி எளிதாக இருந்தது?, ஏன் கலியுகத்தில் அவரால் எளிதில் நம் சிரசில் வரமுடியவில்லை ?
*  நம் குழந்தைகளுக்கு எதை எப்படி எந்த வயதில் கற்றுக்கொடுக்க வேண்டும்?
* நமக்கு எளிதில் கிடைக்கும் சூரியனின் சக்தியை எப்படி நம் ஆன்ம முன்னேற்றத்திற்கு முழுமையாக பயன்படுத்துவது.
மேலும் பல அற்புதமான சூட்சமங்களை வெளித்திறந்து அருளியிருக்கிறார் "பரதவசி" என்னும் பரத்வாஜர் மகரிஷி.
மேலும் விபரங்கள் கீழே உள்ள இணையதளத்தில் உள்ளது.

http://www.enlightenedbeings.org/books.php
http://www.enlightenedbeings.org/books.php

இதைப்படிக்கும் உங்கள் ஆன்மாவிற்கு அகத்தியர் அருள் கிட்ட அகத்தியரை வணங்குகிறேன்.

ஓம் அகத்தீசாய நமஹ.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.

செவ்வாய், 25 டிசம்பர், 2018

கலியுக காவியம் – அணு - பிரளய நோய் -> புற்றுநோய்


       கலியுக காவியம்அணு - பிரளய நோய் -> புற்றுநோய்



பலகாலமாக அகத்தீசரை வணங்கி வேண்டி கேட்ட கேள்விகளுக்கு, இப்போது அருளான பதில்களை அய்யா அருளிவிட்டார். ஒரு அற்புதமான நல்ல விஷயம் எனக்கு கிடைத்திருக்கிறது. காக்கை ருசியான உணவைக் கண்டவுடன் மற்ற காக்கைகளை கூவி அழைப்பதுபோல், அடியேன் நானும் உங்களிடம் உடனே பகிரவேண்டும் என இப்பதிவை எழுதுகிறேன். நம் உடல் மற்றும் உயிரை மேம்படுத்தி, அனைத்து செல்வங்களையும் பெற்று இறைவனோடும் சேர பல யோகஞான பயிற்சி பாடல்களை நம் சித்தர்கள் ஏற்கனவே பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

அடியேன் நானும் அதில் பல சித்த நூல்களை படித்து, சிறிது பயிற்சியும் செய்து பார்த்தேன். ஆனால் என்மனதில் பல கேள்விகள் இருந்தது. என்றோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் சித்தர்கள் எழுதிய இந்த நூல்களின் நுணுக்கங்கள் இன்றைய கலியுகத்திற்கு எவ்வாறு பொருந்தும் என்ற குழப்பம் இருந்தது. ஒருவிஷயம் மட்டும் உறுதியாக தோன்றியது. அகத்தீசர் நினைத்தால் இன்றைய கலியுகத்திலும் நமக்கு ஞானம் அருள முடியும் என்று.

     என்னை ஈன்ற அகத்தியமஹாமுனியே! என்குழப்பத்திற்கு விடை அருளுங்கள் என பல நாட்கள் வேண்டினேன். என்னைபோல் உலகெங்கும் பலர் அய்யாவிடம் வேண்டியிருப்பார்கள் என உணரமுடிகிறது. நம் அனைவரின் வேண்டுதலை அய்யா அருளோடு கண்டுகொண்டார். கடந்த மாதம் எதேச்சையாக "ஞானாலயம் - ஒளியைநோக்கிய பயணம்" என்ற இணையதளத்தை அய்யா எனக்கு காண்பித்தார். மேலும் ஆராய்கையில் "கலியுக காவியும் - பாகம்  ஒன்று" என்ற நூலை பற்றி அறிந்து, அதை வரவழைத்து படிக்க ஆரம்பித்தேன். இந்த நூல் வால்மீகி முனிவர் உரைக்க எழுதியது என்று தெரிந்ததும் சிறிது சந்தேகம் வந்தது. ஆனால் நூலை படிக்க படிக்க என் சந்தேகமும் குழப்பமும் தீர்ந்தது.

    ஆரம்பத்தில் தவறாக எண்ணியதற்காக அகத்தியரிடம் மன்னிப்புகோரினேன். இந்நூலில் அணுவைப்பற்றியும், கலியுகத்தில் ஏற்படும் பிரளயம் என்பது புற்றுநோயே, இதிலிருந்து நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது, மனித உடல் பாதரச தன்மை பெற்று ஒளியுடன் பெறுவது  என்ற பல அரிய தகவல்களை அருள்மிகு வால்மீகி முனிவர் உரைத்திருக்கிறார். இந்நூல் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியின் கேள்விக்கும் பதிலுரைக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.  இந்நூலின் பெருமையை அகத்தியரே சொன்னால் எப்படியிருக்கும் என்று நான் யோசிக்கையில், அகத்தியரின் ஞான பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. கீழே உங்களுக்காக ஒலிவடிவில் அதன் சிறுபகுதியை அகத்தியரை வணங்கி பகிர்ந்துள்ளேன். இந்த லிங்க்கை அழுத்தி கேட்டு மகிழுங்கள்.

   மொத்தம் 689 பக்கங்கள் கொண்ட இந்த அதிசய நூலி நீங்கள் சிறிதும் எதிர்பாராத அதிசய விஷயங்களை வால்மீகி முனிவர் அருளியுள்ளார் என்பதை நூலை முழுவதுமாக படிக்கும்போது உணர்வீர்கள். மேலும் இதுபோன்ற நூலை ஒரு கலியுக மனிதனால் நிச்சயம் வழங்கமுடியாது என்பதையும் ஒத்துக்கொள்வீர்கள். 
 

புண்ணியம் உள்ளோர் இந்நூலை தேடிக்கண்டு படித்து பயன்பெறுவார்கள். மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட இணையதள இணைப்புகளை பகிர்ந்துள்ளேன். பார்த்து பயன் பெறுங்கள்.



கலியுகத்தில் சித்தர்கள் அருளிய புத்தம் புதிய செய்திகள்.

நம் சித்தர்கள் 1000, 2000 வருடங்களுக்கு முன்னரே அருளிய பழைய வைத்திய சாஸ்திரம், யோக சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ்திரம் இன்றைய கலியுக கடைசி காலகட்டத்திலும் வலிமையோடு பிரபலமாக உள்ளது. இந்த அற்புதமான பழமைவாய்ந்த சாஸ்திரங்களை மையப்படுத்தி இன்று பலரும் பல அருமையான சிந்தனைகளை தினமும் கருணையோடு பகிர்கிறார்கள். 

ஒருவேளை அதே பதிணெட்டு சித்தர்களும் முருக பெருமானும் இன்றைய கலியுக மானிடர்களுக்காக மீண்டும் இரங்கிவந்து அற்புத சாஸ்திரங்களை அருளினால் எப்படி இருக்கும் ? என்ன, இது சாத்தியமா ?   என தோன்றுகிறதா?

இது சாத்தியாமென்றால் மகிழ்வேன் என நினைப்போர்க்கு அந்த அற்புத செய்தியை அடியேன் வெளியிட விரும்புகிறேன். உங்களில் எத்தனைபேர்கள் இந்த கலியுகத்தில் லேட்டஸ்டாக சாஸ்திரங்களை அந்த பழைய சித்தர்களே வெளியிடவேண்டும் என விரும்புகிறீர்கள்? அப்படி வெளியிட்டால் படித்துப்பார்க்க விருப்பமா? 
உங்களில் எத்தனைபேர் இந்த பதிவை லைக் அல்லது கருத்திடுவீர்கள்?

அன்புடன்
அகத்திய பக்தன்.
ஓம் அகத்தீசாய நமஹ.


வெள்ளி, 30 நவம்பர், 2018

மகத்தான மரண அனுபவங்கள் – தொடர்ச்சி



கடந்த 2014 -2015 ஆம் வருடம், நான் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக ஜெர்மனியில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போதைய எனது அனுபவத்தை என் முந்தைய பதிவில்சுருக்கமாக (லிங்க் பார்க்கலாம்)எழுதியிருக்கிறேன்.  அப்போது பிராணாயாமத்தை அதிக ஆர்வத்தோடு (ஆர்வ கோளாறு) என் இஷ்டத்திற்கு நாள்தவறாமல் காலையும் மாலையும் பயிற்சி செய்தேன்.  அப்போது, கடந்த 2015 ஆம் வருடம் மே மாதம் ஒரு மாலை வேளையில் எனக்கு திடீரென ஒரு யோசனை வந்தது.
எனது முறையில்லாத பிராணாயாமத்தோடு, ஹடயோகத்தின் சில விபரீதமான யோகாப்பியாசத்தையும் இணைத்து செய்தேன் (இதன் ஆபத்து கருதி மேலும் விளக்க எனக்கு அனுமதி இல்லை). ஆபத்தான ஹடயோக ஆசன பயிற்சியோடு மூச்சையடைக்கி வெளியிடும்போது, சட்டெனெ என் உயிர் எனது உடலிலிருந்து பிரிந்து ஏதோ ஒரு பிரகாசமான ஒளிக்கூட்டத்திற்குள் சென்றுவிட்டேன். என்ன நடந்தது? என என்னால் சில நிமிடங்களுக்கு யூகிக்கமுடியாமல், அந்த ஒளிகூட்டத்திற்குள் நான் கலந்து இருப்பது மிகுந்த ஆச்சர்ய ஆனந்தமாக இருந்தது. ஆனால், இந்தமுறை நல்ல சுயநினைவுடன் என்னால் நன்றாக யோசிக்கமுடிந்தது. திடீரெனெ எனது அறையும் அங்கிருந்த நாற்காலி மேசை கட்டில் எல்லாம் எங்கே போனது? என தேடிப்பார்த்தேன். அங்கு பரந்த ஒளியைத்தவிர எதுவுமே இல்லை. எனக்கும் எந்த உருவமும் இல்லை, ஆனால் யோசிக்க முடிகிறது. சிலநிமிடங்கள் என்ன செய்வது என புரியாமல் இருந்துவிட்டு, மீண்டும் என் உடலுக்குள் போகவேண்டும் என்று விரும்பினேன், எப்படி போவது என்று புரியாமல் கவலை கொண்டேன். ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோமே, இனி எனது உடலுக்குள் எப்படி செல்வது? என்று தெரியவில்லையே என யோசித்தேன். இதற்க்கு முந்தய வருடம் பக்திமார்க்கமாக அகத்திய மகாமுனி அய்யாவை வணங்கி, அவர் குருமந்திரத்தை பலமுறை பலநாட்கள் ஜெபித்து சித்திசெய்தது ஞாபகம் வந்தது. இனி அகத்தியர் தான் என்னை இங்கிருந்து காப்பாற்றவேண்டும் என்று முடிவுசெய்து, நான் ஏற்கனவே சித்திசெய்த குருமந்திரைத்தை தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தேன். சிலநிமிடங்களில் யாரோ மேலிருந்து கீழ்நோக்கி அழுத்துவதுபோல் இருந்தது. சட்டெனெ நான் என் உடலுக்குள் வந்துவிட்டேன். நான் அதே அமர்ந்த நிலையில் என் அறைக்குள் இருந்தேன். அப்பாடா தப்பித்துவிட்டோம் என நிம்மதி வந்தது. நான் என் இஷ்டத்திற்கு விளையாட்டாய் செய்த தவறை தாயின் கருணையோடு மன்னித்து, என்னை புதிதாய் பெற்றெடுத்த என் குருபாதம் போற்றி போற்றி. கருணைமிகு பொதிகைமுனி பொற்பாதம் போற்றி போற்றி.
          இந்த நிகழ்விற்குப்பிறகு பலநாட்கள் உடல்ரீதியான சில தொந்தரவுகளும் வலியும் இருந்தது. அகத்தியர் கருணையால் மீண்டுவர முடிந்தது. இதை மீண்டும் பரிசோதிக்க விருப்பமில்லை. அய்யாவும் அதை நிச்சயம் விரும்பமாட்டார்.  எனது அனுபவத்தில், இறைவன் அருளைப்பெற்று வாழவும், இறுதியில் இறைவனை சேரவும், முக்தி பெறவும் கடுமையான பயிற்சிகள்தான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை.
நாம் அனைவரும் நமது உலகவாழ்வை இனிதாக அனுபவித்துக்கொண்டே அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கி எளிதாக இறைவன் அருளை பெற்று வாழ்ந்து, இறைவனோடு எளிதாக சேர வழிகள் உண்டு. மேலும் இது தொடர்பான பதிவை"எங்கள் வீட்டில் எந்நாளும் ஆயில்யம்" (லிங்க் உள்ளது) என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். படித்து பயன் பெற வாழ்த்துக்கள்.


வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ஜெர்மனி தங்குமிடம்.





ஓம் அகத்தீசாய நமஹ.

இப்படிக்கு,
அகத்திய பக்தன்.

வியாழன், 22 நவம்பர், 2018

மகத்தான மரண அனுபவங்கள்

மகத்தான மரண அனுபவங்கள்

குரு பாதம் போற்றி.



இந்த பதிவு என் தனிப்பட்ட அனுபவங்களைக்கொண்டது. இதை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம். ஆனால், உங்களை ஆபத்து மற்றும் கஷ்டகாலத்தில் காப்பாற்றும் ஒரு எளிய சூட்சுமத்தை சொல்லவேண்டும் என்ற நோக்குடன் இப்பதிவை எழுதுகிறேன்.
கடந்த 2007 ஆம் வருடம் நான் பெங்களூரில் பணி செய்துகொண்டிருந்தபோது பெற்ற விசித்திர அனுபவம் இது.  நான் அப்போது தீவிர பெருமாள் பக்தனாக இருந்தேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாமிசம் தவிர்த்துவிட்டு, குடும்பத்துடன் பெருமாள் கோவில் செல்வது வழக்கம். (குருவருளால் கடந்த 2012 முதல் முழுமையான சைவ உணவுக்கு குடும்பத்தோடு மாறிவிட்டோம்.) எம்பெருமாள் மேல்கொண்ட காதலால் நாலாயிரத்திவ்ய பிரபந்த பாடல்களில் பலவற்றை மனனம் செய்வது, பெருமாளின் ஆயிரெத்தெட்டு நாமங்களை ஜெபித்து வணங்குவதும், எம்பெருமாளின் மேல் கவிதைகள் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.
மேலும் திருமணத்திற்கு ( 2003  ) முன்பிருந்தே, எனது உயிர் நண்பர் சேதுபதியின் அறிவுரைப்படி எனது ஜாதகப்படியான கடுமையான கருமவினை மற்றும் தோஷங்கள் அகல, காலபைரவர் வழிபாடும் தொடர்ந்து செய்துவருகிறேன். ஒவ்வொரு வாரமும், திண்டுக்கல் அபிராமியம்மன் கோவிலில் உள்ள பைரவரையும், தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் உள்ள சொர்ண ஆகர்சன பைரவரையும் நண்பர் சேதுபதியின் அறிவுரைப்படி தவறாமல் வணங்கினேன். இந்த பைரவ வழிபாடு, எனது கடும் கருமவினை மற்றும் தோஷங்களை நீக்கி நல்ல திருமண வாழ்வை தந்தது.  அவ்வப்போது என்வாழ்வில் கர்மவினைகாரணமாக வரும் சிக்கலான தருணங்களில் பைரவ வழிபாடு செய்வதுண்டு. நான் தூர இடங்களில் பணிபுரியும்போது எனது சிறிய மாமனார் திரு.இருளேசன் அவர்களை தொலைபேசியில் அழைத்து, பைரவர் அர்ச்சனை செய்யச்சொல்வேன். அவர் உடனே எனக்காக ராம்நாடு வழிவிடும் முருகன் கோவிலில் உள்ள பைரவருக்கு அர்ச்சனை செய்வார். நிற்க.

பலஆண்டுகள் தொடர்ந்து கணிப்பொறியில் வேலைபார்த்த காரணமாக எனக்கு கடுமையான “கீழ் இடுப்புவலியால்” (low back pain) துன்பப்பட்டுக்கொண்டிருந்தேன். பெங்களூரின் பிரபல ஆங்கில மருத்துவம் செய்தும் பலன் இல்லை. நரம்பில் ஊசி போடலாம், ஆனால் உத்திரவாதம் இல்லை என்றார்கள். அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தேன். எனது குடும்ப மருத்துவரும் உற்ற நண்பருமான ஓசூர் ஆங்கில மருத்துவர், என் வேதனையை கண்டு மிகவும் மனம் நொந்துபோனார். எனக்காக அவர் பல ஆங்கில மருத்துவ குறிப்புகளை ஆராய்ந்து, ஒரு குறிப்பிட்ட ஆங்கில ஊசிமருந்தை குறிப்பெடுத்துவைத்திருந்தார். ஒரு ஞாயிறு நாளில், நான் என் மருத்துவ நண்பரை, கடும் வலியோடு அவர் மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது அவர் குறிப்பெடுத்த ஊசிமருந்தைப்பற்றி சொல்லி, அதன்மூலம் வலி குணமாக அதிக வாய்ப்பு உண்டு என்றார். அந்த ஊசிமருந்து வைட்டமின் B12 வின் ஒரு குறிப்பிட்ட ( Cobalamin ) வேதிமருந்து. நான் அப்போது அதிக வலியில் இருந்ததால் என் மருத்துவ நண்பரிடம் அந்த ஊசியை உடனே எனக்கு செலுத்துமாறு வேண்டினேன். சரியென்று அருகேயிருந்த மருந்தகத்தில் அந்த ஊசியை வாங்கி, நான் நாற்காலியில் அமர்ந்த நிலையில் எனக்கு செலுத்தினார். ஊசிமருந்து செலுத்திய இருபது நொடிகளில் எனக்கு ஏதோ கரும்படலம் சூழ்ந்ததைபோல் இருந்தது. அடுத்த வினாடியே என் உயிர் என்னுடலை விட்டுப்பிரிந்து வேறு எங்கோ நின்றுகொண்டிருந்தேன். அங்கே நான் என் அருமைதெய்வம் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் முன் ஆச்சரிய ஆனந்தத்துடன் நின்றுகொண்டிருந்தேன். என்பெருமாள் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத பேரொளிரூபமாக நின்றுகொண்டு, என்னை தாயின் கருணையோடு பார்த்து புன்னகை பூத்தார். எனக்கு ஒரு குடும்பம் இருக்கும் நினைவோ அல்லது பூமியில் வாழ்ந்த நினைவோ சிறிதும் இல்லை.  நான் பேரார்வத்தோடு எம்பெருமாளின் ஒளிரூபத்திற்குள் சென்றுவிட எத்தனித்தேன். ஆனால், சட்டெனெ யாரோ என்னை பின்புறமாக வெக்கேனெப்பிடித்து இழுப்பதாக உணர்ந்தேன்....   நான் கண்விழித்துப் பார்த்தபோது, நண்பரின் மருத்துவமனை படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தேன். என் மருத்துவ நண்பர், கையில் வேறொரு ஊசியுடன் நிம்மதி பெருமூச்சோடு சிரித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். அவர் முகத்தை பார்த்தவுடன் எனக்கு மிகுந்த எரிச்சலும் கோபமும் வந்தது. இன்னும் ஒரேயொரு வினாடி தாமதித்திருந்தால் நான் என் இறைவனோடு கலந்திருப்பேன். என்ன செய்ய? இன்னும் இந்த பூமியில் கணக்கு இருக்கிறது போலும். இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், என் மருத்துவ நண்பரின் இஷ்டதெய்வமும் அதே பெருமாள்தான். நான் குறிப்பிட்ட cobalamin மருந்தின் ஒவ்வாமையில் மயங்கியவுடன், தன்கைவசமிருந்த ஒரேயொரு மாற்றுமருந்தை, பெருமாளை வேண்டி எனக்கு செலுத்தி உயிரை மீட்டுவிட்டார்.  வாய்ப்பை தவறவிட்ட வருத்தத்தில், மருத்துவ நண்பருக்கு நன்றியும் சொல்லாமல் கட்டணமும் கொடுக்காமல் வீட்டிற்கு எழுந்து சென்றுவிட்டேன். எனது அனுபவத்தில் உணர்ந்தது யாதெனில், சிறிதும் சந்தேகமில்லாத இறைநம்பிக்கையோடு வாழ்வோருக்கு "மரணம் துன்பமானதல்ல.. அதுவே உச்சகட்ட இன்பமானது". 
எனினும், செத்து பிழைத்த காரணத்தால், காலபைரவருக்கு ஒரு விசேஷ அர்ச்சனை செய்ய விரும்பினேன். உடனே என் உற்ற தோழனும் சகோதரனுமான பழனி சிவராமராஜாவை தொலைபேசியில் அழைத்து, பழனிமலை கோவில் படிக்கட்டின் ஆரம்பத்தில் உள்ள பிரம்மாண்ட காலபைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டினேன். அவனும் எனக்காக அதிகாலை கடும்குளிரையும் பொருட்படுத்தாது மலையடிவாரம் சென்று பைரவருக்கு அர்ச்சனை செய்தான். கடந்த 2015 ஆம் வருடத்தில் கிடைத்த மற்றோரு மரண அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.  இறைவன் அருள் பரிபூரணமாக உங்களோடு இருக்கவேண்டி இப்போதைக்கு விடைபெறுகிறேன். (ஆம், மரணம்கூட இன்பமான போதைதான்) 

குறிப்பு: இதை படித்த உங்களுக்கு என் கீழ் இடுப்பு வலியின் தீவிரத்தையும், அதற்கான தீர்வையும் அறிய ஆவலாய் இருக்கலாம். இதைப்பற்றி ஒரு கவிதை வடிவில் இந்த பதிவில் (லிங்க்)எழுதியுள்ளேன். http://fireprem.blogspot.com/2016/12/blog-post_30.html?m=1
Accupunture மற்றும் பாரம்பரிய வர்மா தடவல் சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்தது. அத்துடன் தினமும் காலை மாலை சூர்யநமஸ்கரா யோகாசனமும் செய்கிறேன்.

இப்படிக்கு,
அகத்திய பக்தன்.

திங்கள், 29 அக்டோபர், 2018

எங்கள் வீட்டில் எந்நாளும் ஆயில்யம்.

அகத்தியரை வழிபடும் முறைகள்



ஓம் அகத்தீசாய நமஹ.
குருநாதரை எனக்கு தெரிந்த எல்லா மார்க்கத்திலும் இடைவிடாது வழிபடுவது பேரானந்தமானது.  நானும் blog எழுதுகிறேன் பேர்வழி என்று எனக்கு தோன்றியதை வைத்தோ அல்லது எங்காவது படித்ததை மட்டும் வைத்தோ எழுதாமல், என் அனுபவத்தை வைத்து எழுதியிருக்கிறேன்.   இரண்டு வாரங்களுக்கு முன்பே இந்த பதிவை எழுதி முடித்துவிட்டேன். ஆனால், உடனே வெளியீடு செய்ய மனம் தயங்கியது. நான் ஒருவேளை டம்பம் என்னும் தம்பட்டதினால் இப்படி எழுதுகிறேனோ என்ற கவலை என்னை தாமதப்படுத்தியது. என் குருவை தொடர்ந்து வழிபட்டு என் மனக்குழப்பத்தை நீக்கி, நல்லோர்க்கு இந்த பதிவு போய்சேரட்டும், எல்லாம் குருவருள் என்று வெளியிட முடிவுசெய்தேன். இந்த தாமதமும் நன்மைக்கே, வரும் ஆயில்யத்தை ஒட்டி வெளிவருவதும் சிறப்பே.

எனது அனுபவத்தில் நான் குரு அகத்தியரை எப்படியெல்லாம் வழிபட்டு பேரானந்தம் அடைகிறேன் என்பதை இங்கு எழுதியுளேன். இந்த பதிவை படிப்போருக்கு அகத்தியரின் பரிபூரண அருள்கிட்ட வேண்டுகிறேன்.
யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.


பக்தி மார்க்கம் :-
  குரு அகத்தியரை உருவமாக பாவித்து மலர்கள் மூலிகைகள் படைத்து அர்ச்சனை செய்து வழிபடுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. எங்கள் பகுதியில் உள்ள தேனீஸ்வரர் கோவிலில் அகத்தியர் சிலை உள்ளது. வாரம் ஒருமுறையேனும் குடும்பத்துடன் சென்று அகத்தியரை வழிபடுவது எங்களுக்கு மிகுந்த மனநிம்மதியை தரும்.  இது அகத்தியரை விரும்பும் யாவருக்கும் எளிதில் சாத்தியமானது. பாசமுள்ள அகத்தியமாஹாமுனி இந்த மார்க்ககத்தில் யாவரும் வழிபடுவதை அவர் மிகவும் விரும்புவதை நான் சூச்சமமாக உணர்ந்தேன். நான் கடந்த வருடம் யோக மார்க்கத்தில் முழு ஈடுபாட்டோடு இருக்கும்போது பக்தி மார்க்கத்தை அடிக்கடி ஏளனம் செய்து, குருவிடம் நான் கடும் தண்டனை வாங்கியதுண்டு. இந்த கலியுகத்தில் பக்தி மார்க்கம் மிகவும் எளிதானது ஆற்றல் வாய்த்தது. எங்கள் வீட்டில் மூன்று அடிகள் உயரத்திற்கும் மேலான அகத்தியர் படம் வைத்து எங்கள் குடும்ப தலைவனாக தெய்வமாக வழிபடுகிறோம்.  குடும்பத்தார் அனைவருக்குமான ஆசைகள், மனவேதனை, முக்கிய முடிவுகள் மற்றும் அதன் பலன்கள் அனைத்தையும் அவர் திருவடிகளில் தினமும் சமர்ப்பிப்பது எங்கள் குடும்பத்தார் வழக்கம். அதே சமயத்தில் அகத்தியர் பேரைச் சொல்லிக் கொண்டு யாரேனும் எங்களை ஏமாற்ற நினைத்தாலே, அவர்களை கண்டுகொள்ளவும் எங்களுக்கு தெரியும். அவ்வாறு செய்து, பிறகு அகத்தியரின் தண்டனைக்கு ஆளாகி பலர் வருந்துவதை நாங்கள் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.


கர்மயோக மார்க்கம் :-
      அறவழியில் பொருளீட்டி, அன்பான இல்லறம் நடத்திக்கொண்டே இறைவனை வழிபடுதலே அனைத்து மார்க்கத்திலும் மிகவும் சிறந்தது. அகத்தியர் அருளால் எனக்கு ஒரு மாறுபட்ட பக்குவம் கிடைத்தது. உங்களுக்கும் கிடைக்கும்.

எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. ஒரு வியாழனன்று, அகத்தியரை வழிபட மலர்கள் இல்லாமல் சிறிது மனவருத்தமாக நின்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு விசித்திர யோசனை. என் இரு மகள்களையும் அழைத்து, அகத்தியர் முன்பு நிர்க்கட்செய்து, "மலர்ப்பாதம் உடைய மகாமுனி தெய்வமே! இன்று இந்த இரு மகள்களையும் உங்களுக்கே மகள்களாக முழுமனதுடன் நான் சமர்ப்பிக்கிறேன்.



 இன்றுமுதல் அடியவன் நான் உங்கள் வேலைக்காரனாக உங்கள் மகள்களை வளர்த்து கடமை செய்வேன் என் எஜமானானே! இவர்கள் சாதனை பதக்கங்கள் வாங்கினாலும் சரி, சோதனை நலனுபவங்கள் வாங்கினாலும் சரி! இரண்டுக்கும், நீங்களே இவர்கள் தந்தையாக பொறுப்பு. நான் என் கடமையை மட்டும் சிரத்தையோடும் விசுவாசத்தோடும் செய்வேன்" என்று வாக்குக் கொடுத்துவிட்டேன்.

     இறைவனை தேடுகிறேன் அல்லது வணங்குகிறேன் என்ற பெயரில், நம்மீது அன்புகொண்ட குடும்பத்தாரையும், நம் கடமைகளையும் புறக்கணிப்பதை அகத்தியர் விரும்புவதில்லை.


தான மார்க்கம் / தர்ம மார்க்கம் :-
     "தர்மம் செய்ய செய்ய, உன் கர்மம் குறையுமப்பா" என அகத்தியர் உரக்க வாக்கு சொல்லியிருக்கிறார். கர்ணனின் தர்மத்திற்கு முன் பகவான் கிருஷ்ணனே ஒரு பிச்சைக்காரனாக கெஞ்சி நின்றிருக்கிறார். இறைவனையே கட்டுப்படுத்தும் இரண்டு ஆயுதங்கள் - ஒன்று தர்மம் மற்றொன்று அன்பு.
    என் மாத வருமானத்தில் குறைந்தது இரண்டு முதல் ஐந்து சதவிகிதத்தை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மத வேறுபாடு இல்லாமல் ஆதரவற்றோர்க்கு நேரடியாக என் குடும்பத்துடன் சென்று தானம் செய்துவிட்டு, அதற்காக கிடைக்கும் புண்ணிய மலர்களை எங்கள் அகத்தியர் பாதத்தில் சமர்பித்து வணங்குவோம். இந்த அகத்தியர் வழிபாட்டை பல ஆண்டுகளாக நானும் என் மனைவியும் இறைவன் அருளால் தொடர்ந்து செய்கிறோம். பொதுவாக தான தர்மம் செய்வதை வெளியே சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால், இதை ஊக்கமாகவோ அல்லது போட்டியாகவோ பிறரும் செய்தால், அவர்களும் இறைவனால் அருளப்பட்டு, அவர்களும் அவர் சந்ததியும் உயர்நிலைக்கு வருவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

யோகஞான மார்க்கம் :-
      மேலே குறிப்பிட்ட மார்க்கங்களில் இறைவனை மனதார வழிபட்டோரை, சித்தர்கள் தாமாக தேடிவந்து மனமுவந்து பக்தனின் உடல் மற்றும் மனம் பக்குவமறிந்து காட்டும் அடுத்த நிலை யோகஞான மார்க்கம்.  இதற்க்கு சிறிது பரந்த மனப்பான்மை வேண்டும்.   சிவானந்த யோக வேதாந்த நிலையத்தின் சுவாமி விஷ்ணுதேவனந்தா கூறியபடி “ஞான யோகத்தை பயிற்சிக்கும் முன்னர், மற்ற யோக மார்க்கங்களின் பாடங்களை ஒருவன் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். தன்னலமின்மையும் கடவுளிடம் அன்பும் இல்லாமல், உடல் மற்றும் மனவலிமை இல்லாமல், தன்னை அறியும் தேடல் வெறும் சோம்பேறிக் கற்பனையாக மாறிவிடும் சாத்தியமுண்டு.”
      இன்றைக்கு எங்கு பார்த்தாலும் பத்து ரூபாய் முதல் பத்து லக்ஷம் ரூபாய் வரை விற்கப்படும் பரிதாபத்திற்குரிய சாதனம் தான் இந்த யோக ஞான மார்க்கம்.       தவ பயிற்சிகளின் மூலம் இறைவனை வழிபடுவது. இது சித்தர்கள் ( தன்னை xyz சித்தர் என பட்டமிட்ட மனிதர்கள் அல்ல ) கருணையினால் ஒரு நையா பைசா செலவில்லாமல் தாமாகவே தக்க சமயத்தில் கிடைக்கும். இதற்காக நீங்களாகவே விரும்பிச் சென்றால் ஏமாற்றப்படுவீர்கள்.   தாமாக எப்படி கிடைக்கும் என்கிறீர்களா ? நிச்சயம் கிடைக்கும். அதை என் முந்தய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். என்னை ஈன்ற அகத்தியரை என்னுள் வைத்து வழிபடும் ஆனந்தம். இப்படி சொன்னவுடன் 'இவன் ஏதோ சாமியார் போல' என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் :-)  :-).  அறவழியில் பொருளீட்டி அன்பான இல்லறம் நடத்திக் கொண்டு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்பதுதான் சித்தர்களின் விருப்பம். இல்லற வாழ்க்கை இன்னும் சிறக்கும். இந்த யோகஞான மார்க்கம் என்பது எட்டாக்கனியோ அல்லது விசித்திரமோ அல்ல. பக்தி மார்கத்திலேயே நமக்கு அனைத்து செல்வங்களும் இறைவன் அருளால் நிச்சயம் கிடைக்கும், முக்தியும் கிடைக்கும். ஒருநாளும் தவறாமல் உங்கள் இஷ்டதெய்வத்தை வணங்கி வாருங்கள்.

         மேலே சொன்ன அனைத்து மார்க்கங்களிலும் உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கும்போது, நீங்கள் தானாகவே இயம நியமத்தின் சிறப்பை பெறுவீர்கள். பின்பு தானாகவே யோகப்பாதையை சித்தர்கள் உங்கள் பக்குவமறிந்து, சரியான காலகட்டத்தில் அருள்வார்கள். இன்றைக்கு வாசியோகம் / யோகா பாதையில் இருப்போர், மற்றும் யோகம் பழக விரும்புவோர் உடனடியாகவும் நேரடியாகவும், வெறும் யோக நுணுக்கங்களை மட்டும் கேட்டோ படித்தோ வெற்றி பெற விரும்புகிறார்கள். இது எனக்கு சிறிது நகைச்சுவையாக உள்ளது. பசியோடு இருக்கும் ஒருவன் முதலில் ஒரு இட்லி சாப்பிடுகிறான். பின்பு இரண்டாம் இட்லி, மூன்றாம் இட்லி, நான்காம் இட்லி... ஐந்தாம் இட்லி சாப்பிட்டபின் அவன் பசி அடங்கிவிட்டது. இதைப் பார்த்த ஒரு புத்திசாலி தன் மனதில் "அப்படியானால், அந்த கடைசி ஐந்தாம் இட்லியில் தான் பசியடங்கும் சூட்சமம் உள்ளது, எனவே முதல் நான்கு இட்லியை உதாசீனம் செய்துவிட்டு, நேரடியாக “ஐந்தாம் இட்லியை மட்டும் சாப்பிட்டால் போதும்", என்ற முடிவுக்கு வந்தானாம்.
   
யோகமார்க்கத்தில் இருப்போர்க்கு கீழ்கண்ட என் வழிபாட்டுமுறை புரியும். குருவருளால் எனக்கு கிடைத்த "அகத்தியர் பரிபூரண ஞானம் 35 " என்னும் நூல் எனக்கு நல்ல தெளிவையும் மகிழ்வையும் தந்தது. சில பாடல்களை என் சிற்றறிவிற்கு எட்டிய விளக்கத்துடன் பார்ப்போம் வாருங்கள்.

பாடல் 7 :
"சேர்த்தாக்கள் மனமறிவில் சேர்க்கவேணும்,
    தீபவொளி ஒளிகான தெளிவுவேணும்
நூத்தக்கால் அம்பரநூல் நூற்கவேணும்
    நோய்யென்ற உயிரெல்லாம் நொறுக்கவேணும்
 மூத்தக்கால் இந்நூலில் ஊக்கவேணும்
    முனைமீதில் அகத்தியமா மூர்த்தியமே.


முக்கிய பொருள் : அகத்தியரை வணங்கி யோகமார்க்கத்தில் வாழ்வோருக்கு, அகத்தியரே சுழுமுனை மேல் நின்று அருள் புரிவார். 
audio1  https://drive.google.com/file/d/1jNCXiWInKWXat0Z57VaHidVAQJb_8dK3/view


வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

அப்பனா? ஆஸ்தியா? எது வேண்டும்?

ஒரு மகனுக்கு அவன் அப்பனைவிட, அப்பனின் ஆஸ்தி பெரிதாகுமோ ?



கருணைமிகு அகத்தீசர் அப்பா அன்புக்கு கட்டுப்பட்டவர். பக்தனுக்கு உண்மையான பக்தி இருந்தால், அப்பா அழைத்தவரிடம் உடனே வர தயாராக உள்ளார். அருள்பொழிய கருணையோடு காத்திருக்கிறார்.  யோகநுணுக்கம் இருந்தால், அப்பாவின் ஆஸ்தியான ஞானயோக சித்தி கிடைக்கும். ஆனால் அது சுலபமல்ல. கடினமான சுயமுயற்சி, பல சோதனைகளை தாண்ட வேண்டும். யோகஞான சட்டப்படி, பல பல படிநிலைகளை தாண்டியே சித்தியாகும்.  பலரும் வாசியோகம் மட்டுமே சித்தியாக வழி என உழைக்கிறார்கள். முறையான வாசியோகம், முதலில் மூலாதாரத்தில் சித்தியடைந்து பிறகு ஒவ்வொரு சக்கரமாக சித்தியாகவேண்டும். இது கலியுகத்தில் மிகவும் சிரமமானது. பதினெட்டு சித்தர்களில் ஒரு சித்தர் தாமாக அருளாமல், வெறும் வாசிநுணுக்கத்தை மட்டும் செய்து, சித்தி அடைய இன்றைய காலகட்டத்தில் முயற்சிப்பது முழுப்பலனை அளிக்காது.
அகத்தீசர் கருணை இல்லாமல் ஞான சித்தியில் எந்த முன்னேற்றமும் இருக்காது. எல்லா உழைப்பும் வீண்தான். இன்றைய காலகட்டத்தில், அகத்தீசர் முதலில் பக்தியோகத்தில் நன்கு தேற அறிவுறுத்துகிறார். இதுவே இயம நியமத்திற்கான சரியான வழி. மேலும், நம்மை சுற்றியுளோர்க்கு பக்திமார்கத்தின் சிறப்பு, கோவில் வழிபாட்டின் சிறப்புகளை எடுத்து சொல்லி, இயன்றவரை அனைவரையும் இறைவழிபாட்டில் முன்னேறி வர ஊக்கப்படுத்த சொல்கிறார்.  பக்திமார்க்கத்திலும், வேதமார்கத்திலும் தானும் முன்னேறி, தன்னை சுற்றியுள்ளோரையும் ஊக்கப்படுத்தும் பக்தனை, அகத்தீசர் கருணையோடு கண்டுகொண்டு தாமாகவே அவருக்கு அடுத்தகட்டமான யோகஞான பாதையை காட்டுவார். 
அகத்தீசர் கருணையோடு பக்தனிடம் வரும்வரை, தொடர்ந்து முழு மனதோடு பக்திமார்க்க வழிபாட்டில் இருக்கவேண்டும். இதையே அகத்தீசர் விரும்புகிறார். அப்படிப்பட்ட பக்தனையே அவர் அடுத்தகட்டத்திற்கு முறையாக அழைத்துச்செல்வார்.
      அன்பிற்குரிய அப்பனைவிட, அவன் எழுதிய ஆஸ்தி (யோகஞானம்) பெரிதல்ல. *அப்பன் அகத்தியனே அனைத்து ஞானத்திலும் உயர்ந்தவன்*. கருணை நிறைத்த சிவதெய்வம். ஈஸ்வரனாய், நாராயணனாய், சக்தியாய், ஜோதியாய், வெட்டவெளியாய் அருள்பாலிக்கும் அகத்தீசர் பொற்பாதம் போற்றி போற்றி !!.
அலைந்து செத்தாலும் அகத்தீசரை வணங்கி சா. சித்தி முத்தி சிக்காமல் சீர்மிகு அகத்தீசர் பாதம் மட்டும் வணங்கு. கருமம் எனும் வினைப்பதிவில் கடுமையாய் சிக்கிவிட்டாய். பேராசை கொள்ளாதே, பேயாக திரியாதே !.  அஷ்டமாசித்தி என்பார், சாகாத உடலென்பார், மாயயோக ஆசையில் அகப்பட்டு மயங்கி நீ இருக்காதே! அருளான அகத்தீசர் பாதம் மட்டும் வணங்கு. மகத்தான ஜோதி அவரே! வெட்டவெளி நாதன் அவரே! நித்தம் நித்தம் வணங்கு, அப்படியே வரம் கேட்டுவிடு. பலகோடி ஜென்மமெடுத்தாலும் பார்புகழும் அகத்தீசர் பாதம் வணங்க வரம்கேளு.
அன்பான அகத்தீசரே! அருளான ஜோதியே! கும்பமுனி தகப்பனே! குருமுனீச ராஜா! சுழுமுனை ஜோதியே! வெட்டவெளி நாதரே! மகத்தான மாமுனியே... நின் மலர்ப்பாதம் தனையெடுத்து, என் மண்டைஓட்டின் மத்தி பதித்து, பொல்லாத அகம்பாவம் கொன்று என்னை விடுவிப்பாய் விமலநாதா !

ஓம் அகத்தீசாய நமஹ.
அகத்திய பக்தன்.

புதன், 6 ஜூன், 2018

தறுதலை பிள்ளைகளுக்கு யார் காரணம்?

ஆலயம் தொழுவது சாலவும் நன்றா ? ஏன் ?

சமீபத்தில், எனது உறவுக்கார சகோதரியும் சகோதரனும், தங்கள் மகனும் மகளும் ஒழுங்காக படிப்பதில்லை, மேலும் சொல்பேட்ச்சும் கேட்பதில்லை என கவலைப்பட்டார்கள். இன்றைய இளைய தலைமுறையினர் எளிதில் மனமுடைந்துபோவது அல்லது உணர்ச்சிவசத்தில் முடிவெடுப்பது வெகு சுலபமாக உள்ளது.
பெற்றோர்கள், தாங்கள் "பெற்றோர்" என்ற அதிகாரம் அல்லது அன்பு, இவைஇரண்டை மட்டும் வைத்துக்கொண்டு தாங்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்திவிடலாம் என நம்புகிறார்கள். நான் நிறைய குடும்பங்களை ஆராய்ந்ததில், இவையிரண்டும் எப்போதும் வேலைசெய்யும் என்ற உத்திரவாதம் இல்லை.  எந்தெந்த குடும்பத்தில் ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, வாரம் ஒருமுறையேனும் கோவில்களுக்கு தாங்கள் குழந்தைகளை கூட்டிச்செல்கிறார்களோ, அந்த பிள்ளைகள் வளர்ந்தபின் தங்கள் இன்ப துன்பங்களை வாழ்வில் எதிர்கொள்ளும்விதம் ஆரோக்கியமானதாக உள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாத பெற்றோர்கள், வீட்டில் விளக்கு ஏற்ற சோம்பேறித்தனம், வாரம் ஒருமுறையேனும் கோவில் செல்லாத பெற்றோர்கள், கடவுள் இருக்கிறாரா? இல்லையா ? என தர்க்கம் செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள் பெரும்பாலும், "தறுதலைகளாகவே" வளர்க்கிறார்கள். இந்த வார்த்தையை உபயோகிப்பது எனக்கு மனவருத்தமாக உள்ளது. ஆனால், நான் ஏதோ வாய்க்கு வந்ததை அடித்துவிடவில்லை. நிறைய பாதித்த குடும்பங்களை பார்த்தபின்னரே இப்பதிவை எழுதுகிறேன்.
   பிள்ளைகளை உருப்படியாக வளர்க்காமல், எப்போதும் பணம்சம்பாதிக்கிறேன், பிசியாக இருக்கிறேன் என்று வாழ்ந்து என்னையா பலன் ? கோவில் என்ற மனோதத்துவ சூட்சுமத்தை புறக்கணித்துவிட்டு,
பிறகு சமுதாயத்தையும் சுற்றுபுறத்தையும் குறைகூறி என்ன பயன் ? இன்றைய மனிதன், தன் வாழ்வில் நிகழும் மகிழ்ச்சியான தருணத்திலும் மது அருந்தும் நண்பனை தேடுகிறான்,  சோகமான தருணத்திலும் மது அருந்தும் நண்பனை தேடுகிறான். அருகில் உள்ள கோவில்களுக்கும் சென்று தங்கள் மனஇறுக்கத்தை எளிதில் போக்கிவிடலாம் என்று நிறைய மனித ஜென்மங்களுக்கு தெரிவதில்லை. கடவுள் இருக்கிறாரா? இல்லையா ? என ஆராய்ந்துகொண்டே இருப்பதைவிட, அந்த பக்தியினால் வரும் பலன்களைப்பாருங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் நிச்சயம் ஒரு கோவில் இருக்கும். அதிலும் பழமையான கோவில் உங்கள் பகுதியில் இருந்தால் நீங்கள் கொடுத்துவைத்தவர்தான். ஆயிரம் ஆண்டுகள் பழமையானவரை நீங்கள் சந்திக்க முடியாது, ஆனால் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் மரங்களின் உயிரூட்டம் நிச்சயம் உங்கள் மனதிற்கு ஆறுதல் தரும். அடுத்த சவால்களை சந்திக்கும் பக்குவத்தை தரும். சென்று பாருங்கள்.
    வெற்றி தோல்வி, இன்ப துன்பங்கள் எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக நிகழ்வது. யாரும் இதிலிருந்து தப்ப முடியாது. ஆனால், இதை எப்படி எதிர்கொண்டு வாழ்கிறார்கள் !! என்பதுதான் முக்கியம்.
   நான் இப்போதும் எனது தூரத்து மற்றும் நெருங்கிய உறவுக்காரர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பங்களை ஆராய்ச்சிக்காக கவனித்து வருகிறேன். கோவிலுக்கு செல்லும், மற்றும் செல்லாத குடும்பங்களின் தலைமுறையை இன்னும் பத்து ஆண்டுகள் கவனித்தபின் இந்தப்பதிவை மறுஆய்வு செய்யலாம். உனக்கு ஏன் இந்த வேலை? என நீங்கள் யோசிப்பது புரிகிறது. நமது முன்னோர்கள் தங்களின் கடின உழைப்பு, பணம் மற்றும் பெரும் பொருளை செலவழித்து இவ்வளவு கோவில்களை நமக்காக நம் சந்ததிக்காக கட்டியிருக்கிறார்கள். எனக்கும் உங்களுக்கும் அதில் நிச்சயம் ஒரு குறைந்தபட்ச   சமூக அக்கறை உண்டு.

எனது நட்பு மற்றும் உறவு உயிர்களுக்கு ஒரு வேண்டுகோள் :-
   தங்கள் கருத்து எதுவானாலும் இங்கே பதியுமாறு அன்புடன் வேண்டுகிறேன். பதிய இயலாதவர்கள் வாட்ஸாப்ப் அல்லது நேரில் கருத்து சொல்லுங்கள். தாங்கள் சார்பில் நானே பதிகிறேன்.  இதற்கான பதில் மற்றும் மறுஆய்வு பத்து ஆண்டுகளில்…

அக்கறையுடன் அகத்திய பக்தன்.
பிரம்மேந்திரன்.