யோக மார்க்கத்தில் பயிற்சி செய்வோர்கள், கொங்கணரின் வாலைக் கும்மி பாடலை கேட்டிருப்பார்கள். 18 சித்தர்களும் வாலை எனும் பெண் தெய்வத்தை வணங்கி சித்தி பெற்றதை அவர்களது ஞானப் பாடல்களில் விளக்கி இருப்பார்கள். நம் குருநாதர் எனக்கு அருள் பாலித்த வருடம் 2015 இல் இருந்து 2018 வரை எனக்கு வாலை அல்லது சக்தி என்ற பெண் தெய்வம் யார்? ஏன் சித்தர்கள் அந்த பெண் தெய்வத்தை வணங்கினார்கள் என்பது புரியவே இல்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு ஞானாலய நூல்களின் மூலம்தான் எனக்குப் புரிந்தது "சக்தி என்னும் ஒற்றை அணு" என்பது நமது உயிர் தான் என்று. இந்த ஒற்றை அணு, இயல்பாக வெப்ப ஆற்றல் கொண்ட இயங்கு சக்தி. இது சூட்சும ஒளி வடிவம் கொண்டது.
எனினும் எனக்கு நமது பழமையான கோயில்களில் பெண் சிலைகளின் வடிவங்கள் மிகவும் எடுப்பான உடல் அமைப்போடு செதுக்கப்பட்டு இருப்பதை பார்க்கும் பொழுது, சித்தர்கள் இதில் ஏதோ சூட்சமம் வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. நம் குருநாதர் ஆழ்மனத்திலிருந்து ஏதோ ஒரு முக்கியமான சூட்சுமத்தைக் க்ற்றுக்கொடுக்க வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். குருநாதர் நடத்தும் பாடம், 2019 ஆம் ஆண்டு காகபுஜண்டர் ஞானம் 80 என்ற நூலைப் படிக்கும் பொழுது தான் புரிந்தது. 44 ஆவது பாடலை கீழே காணலாம்
இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா!
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்;
ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது
பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம்
புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம்
மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே
வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே. பாடல் 44.
youtube song
சரி! இப்போது மேற்கண்ட பாடலில் சில சொற்களை மட்டும் நன்றாகக் கவனியுங்கள்.
கம்பம்,
பெண்ணரசி,
முன் பார்த்தால் புருட ரூபம்,
பின் பார்த்தால் பெண் போல் ரூபம்.
இந்த வரிகளை பொருளோடு பார்க்கும் பொழுது காகபுஜண்டரின் நுணுக்கமான யோகம் மற்றும் மருத்துவ அறிவியலை வியந்து பார்க்கிறேன்.
கம்பம் என்பது உள்மூளை தண்டைக் குறிக்கிறது ( brain stem ).
பெண்ணரசி என்பது பீனியல் சுரப்பிக்கு மிக அருகே இருக்கும் உயிர் சக்தி ஆகும். பீனியல் சுரப்பியை seat of the soul என்று மருத்துவ அறிவியலில் குறிப்பிடுவார்கள்.
இப்போது கீழ்கண்ட உள்மூளைத் தண்டின் பின்பக்க அமைப்பைப் பாருங்கள். பெண்ணின் உடலைப் போலவே இருக்கிறதா?
இப்போது நமது கோவிலில் உள்ள பெண் தெய்வங்களின் உடல் அமைப்பைக் கவனித்துப் பாருங்கள்.
உள்மூளை தண்டின் பின்பக்கம் பீனியல் சுரப்பியுடன். அசல் படம்.
வெப்ப ஆற்றலான உயிர்ப் பெண்ணிடம் இருந்து எப்படி காந்த ஆற்றலான அகார வெள்ளம், அல்லது அமிர்தம் கிடைக்கும் என்பதை அடுத்த பதிவில் விளக்குகிறேன். அதுவரை இந்த அமிர்தப் பெண்ணான மோகினியுடன் திருமாலின் யோகமார்க்கத் தொடர்பு என்ன என்பதை யோசித்துக் கண்டுபிடிங்களேன் பார்க்கலாம்.
நமது ரிஷி முனிகள் வடிவமைத்த தத்ரூபமான சிலைகளின் பரிபாசையைப் புரிந்து கொள்ள முடியாமல், ஆபாசமாய் பார்த்துவிட்டோமே !!
புருடன் என்றால் ஆண் அல்லது ஆண் குரங்கைக் குறிக்கும். உள்மூளை தண்டின் "முன் பார்த்தால் புருட ரூபம்" என்று காகபுஜண்டர் பாடி இருப்பார். இப்போது கீழ்கண்ட பிட்யூட்டரி சுரப்பியுடன் கூடிய மூளையின் உருவத்தைப் பாருங்கள். மூக்கு நீண்ட, வயிறு பெருத்த ஆண் தோற்றத்தைப் பார்க்கிறீர்களா?
மூக்கு நீண்ட ஒரு வகைக் குரங்கு.
இந்தக் குரங்குகளின் வயிறு இயல்பாகவே பெருத்த தோற்றம் உடையது.
இவ்வாறு உள்முகமாகக் உள்மூளை உறுப்புகளை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தி (visuvalise ), நமது உள்மூளையை நோக்கி தவம் செய்யும் பொழுது, சில ஆண்டுகளில் எளிதாக வாலை எனும் உயிரை உணர முடியும். மேலே கண்ட சோட்டானிக்கரை பகவதி அம்மனை வணங்கி இப்பதிவின் முடிவிற்கு வருவோமாக. இனிமேல் சோட்டானிக்கரை அம்மனை பார்க்கும் பொழுது உங்கள் உயிரை உணரும் யுக்தியைப் புரிந்து கொள்வீர்களா?
எச்சரிக்கை ( முக்கியமாக 40 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு ) :-
இது போன்ற சில யோக நுணுக்கங்களையும், யோக ஞானத்தையும் தெரிந்து கொண்டபின், தனக்கு எல்லா ஞானமும் வல்லமையும் வந்துவிட்டது, இனி அனைவருக்கும் போதிக்கலாம் என்று, சமூக வலைதலத்தில் உபதேசம் தீட்சை என தன்னை ஒரு குருவாகவோ தெய்வமாகவோ நினைத்துக் கொள்வது மாயையின் வெளிப்பாடே. இதில் மயங்கி விட வேண்டாம். உண்மையில் ஒரு யோக சாதகர், யோகஞான பயிற்சியை ஆரம்பித்ததில் இருந்து குறைந்தபட்சம் 12 வருடங்கள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பயிற்சி செய்ய வேண்டும். இந்த 12 ஆண்டுகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தோன்றும் அனைத்து எண்ணங்களையும் சாந்தப்படுத்தி உதாசீனம் செய்வது நல்லது. இது போன்ற தன்னை வெளிப்படுத்தும் எண்ணங்கள், தனது கட்டுப்பாட்டை மீறி வெளிப்பட்டால், ஒரு நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது. இவர்கள் யோகப் பயிற்சியை கைவிட்டு விட்டு, பக்தி மார்க்கத்திலேயே சில காலம் பக்குவப்படும் வரை பயணிக்கலாம். இவர்களின் உடலில் வாதம் அதிகரிப்பதாலேயே மனம் சமநிலை தவறுகிறது. வாதம் என்பது ஆகாசம் மற்றும் வாயு மூலக்கூறு சமநிலை தவறுவதால் ஏற்படும்.
வாயு மூலக்கூறு வெளிமனத்தையும், ஆகாய மூலக்கூறு ஆழ்மனத்தையும் கட்டுப்படுத்துகிறது. வாத பிரச்சனையை சரி செய்யாவிடில் இதன் தாக்கம் உடலிலும் மனதிலும் நோயை உண்டாக்கும்.
கீழ்கண்ட 14 கேள்விகளை தனக்குத்தானே கேட்கும் பொழுது, குறைந்தது ஐந்து கேள்விக்கு "ஆம்" என்று பதில் வந்தால் அவர்களுக்கு "வாதம்" ஓரளவிற்க்கு உள்ளது என்று பொருள். ஐந்துக்கு மேலே எத்தனை கேள்விகளுக்கு "ஆம்" என்று வருகிறதோ அவ்வளவு தீவிரமாக "வாதம்" இருக்கிறது என்று பொருள்.
1) ஒல்லியான தேகம். எப்பொழுதாவது எடை போடலாம்.
2) வேகமான நடை மற்றும் வேகமான பேச்சு.
3) குளிர்காலத்தை விட வெதுவெதுப்பான அல்லது வெயில் காலத்தில் அதிக சௌகரியமாக உணர்வது.
4) உடலில் மிகவும் குறைந்த வேர்வையை உணர்வது அல்லது எப்பொழுதாவது மட்டுமே வேர்க்கும்.
5) சமநிலையற்ற பசி உணர்வு. சில நேரம் பசிக்கும் சில நேரம் பசிக்காது.
6) சருமம் வறண்டது அல்லது பொலிவற்றது அல்லது சுருக்கம் கொண்டது.
7) மலக்கழிவு வறண்டது அல்லது கடினமானது. அடிக்கடி வாயு தொல்லை மற்றும் வயிற்றில் உருளும் சத்தம் வருவது(bloating).
8) கண்களில் வறட்சி அல்லது சோர்வை அடிக்கடி உணர்வது. அதிகமாய் கண் சிமிட்டுவது.
9) கை கால்களை மடக்கும் பொழுது மூட்டுகளில் சடசட சத்தம் வருவது. சிறிய முன் நெற்றி. எளிதில் உடையும் நகங்கள்.
10) எளிதில் கற்க முடியும் ஆனால் எளிதில் மறந்து விடும். குறுகிய கால ஞாபக சக்தியில் பலமானவர்.
11) இயற்கையாகவே அனேகமான நேரங்களில் மனம் எதையாவது ஓய்வின்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும்.
12) ஒரு செயலை செய்வதற்கு முன்பு அளவுக்கு அதிகமாக யோசிப்பது.
13) லேசான மற்றும் தடைபட்ட உறக்கம். காலையில் சிரமம் இல்லாமல் எளிதில் எழுந்து விடுவது.
14) சிறிய விசயத்திற்கும் அதிக கவலை உணர்வு. அடிக்கடி பதட்டம் அல்லது கோபம் உணர்வது.