புதன், 21 பிப்ரவரி, 2024

சட்டி சுடவில்லை கை விடவில்லை*

 சட்டி சுடவில்லை கை விடவில்லை


எண்ண பதிவுகளை விரைவாக நீக்குவதற்கும், வெற்றிடத்தையும் ஆன்ம ஒளியையும் அதிகமாக பெருக்குவதற்குமான ஒரு எளிய ஞானத்தை குருநாதர் எனக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு வினோத அனுபவத்தின் மூலம் கொடுத்தார். உப்பு சப்பு இல்லாத ஒரு வரி ஞானம் தான், ஆனால் இதை அறிந்து உணர்ந்து ஏற்று தினசரி தவறாமல் எனது இறைவழிபாட்டோடு வேண்டும்போது, இதன் பலனோ கணக்கில் அடங்காதது,  இன்ப துன்பங்களில் சிக்காமல் எளிதாய் பயணிக்க மிகவும் உதவியாக எனக்கு இருந்தது.  தினசரி தவறாமல் வேண்டுவதால், எப்போதும் ஆன்ம உற்சாகத்தை தந்துகோண்டே இருக்கிறது.



குருநாதர் கொடுத்த ஞானம் இவ்வளவுதான். "இறைவா உன் பாதம் சேரும் மரணத்தை விரைந்து எனக்கு கொடு". படிப்பதற்கு சொற்பமாய் தோன்றும் இந்த ஒரு வரி என்னை ஒரு ஆழ்ந்த வேறு ஒரு பரிணாமத்திற்கு கொண்டு சென்றது. எனினும் 2015 இல்  இதை என் குடும்பத்தாரிடம் சொல்வதற்கும் கூட எனக்கு தயக்கமாக இருந்தது. ஏனெனில் இதை மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஏதோ ஒரு எதிர்மறை வாசகமாக உள்ளது. 2018 இல் "ஆன்மாவின் சுயசரிதம்" நூல் வெளிவந்தவுடன் எனக்கு இந்த ஞானத்தை வெளியே சொல்ல தைரியம் வந்தது. முதலில் என் மனைவியிடம் கூறினேன், ஆனால் அவள் இதை ஏற்கவே இல்லை, மேலும் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக்  கூறினாள். எனினும் அதையும் மீறி எனது நெருங்கிய உற்றார் உறவினர்களிடம் இந்த ஞானத்தை சொல்லிப் பார்த்தேன். அனைவரும் என்னை திட்டினார்கள். ஏதோ செய்யக்கூடாத தவத்தை செய்து மனநிலை தவறிவிட்டது என்றும் சொன்னார்கள். யார் மீதும் எனக்கு கோபம் இல்லை. அவர்கள் புரியாமல் சொல்கிறார்கள். எப்படியாவது அவர்களுக்கு புரிய வைத்து அவர்களை கரை சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். பல கோணங்களில் இந்த ஞானத்தை விளக்கி, எப்படியாவது புரிய வைக்க வேண்டும் என்பதற்காக வேறு வழி இல்லாமல், முதன்முதலாக இணையதளத்தில் பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். இன்று வரை பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் யாருக்கும் இந்த ஞானம் பிடிக்கவும் இல்லை, புரியவும் இல்லை.


இந்த வேண்டுதலை அடியேன் நான் தினமும் வேண்டிக் கொண்டே இருக்கிறேன். தொடர்ந்து ஐந்தாண்டுகள் மனமுருகி முழு விருப்பத்தோடு வேண்டிய பிறகு எனக்கு ஒரு தனிப்பட்ட உணர்வுநிலை கிடைத்தது. இந்தக் குழுவில் அந்த விசயத்தை  முதன்முதலாக சொல்கிறேன். அடியேன் எனது வெளி மனத்திற்கும் ஆழ்மனத்திற்கும் உள்ள இடைவெளி நிறைய குறைவதை உணர்ந்தேன். நடந்து முடிந்ததற்கும், என்முன்னே நடக்கப் போவதற்குமான காரண காரியத்தை உள்ளுணர்வாக ஓரளவுக்கு சிறிது உணர முடிகிறது. இதற்கு மேல் சொல்ல எனக்கு அனுமதி இல்லை. இது எனது தனிப்பட்ட கருத்து தனிப்பட்ட அனுபவம் 🙏🙏🙏


இந்த ஒரு வரி ஞானதை விளக்க  50க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதினேன் என்றால் நம்ப முடிகிறதா?


அகத்திய பக்தன்.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

அகத்திய பக்தன் - கேள்வி பதில்

 

சிவனின் சிரசில் உள்ள மூன்றாம் பிறை எதைக் குறிக்கிறது ஐயா?

நீங்கள் விரும்பிய பதிலை எடுத்துக் கொள்ளலாம்.

1) மதி என்ற மனம், அதாவது வெளி மனத்தை குறைத்து விட்டால், உயிர் தரிசனம் அதாவது சப்கான்சியஸ் மைண்டை உணரலாம்.


2)  ஆரம்பத்தில் ஒரு யோகி இடகலை வழியாக ஆக்கினை சக்கரம் வரை ஏறி,  உயிர் தரிசனம் கண்ட பிறகு,  இடகலை என்ற மதியை குறைத்து அதற்கு மேலே  சூரிய மத்தி மற்றும் சூனிய பிரம்மத்திற்கு பின்கலை வழியே ஏறுவார்.


3)  மதி என்பது வெப்ப அணுக்கள் அல்லது அறிவு அணுக்கள் அல்லது எதிர்மறை அணுக்கள் என்று கூறப்படுகிறது. இந்த மதியே எண்ண பதிவுகளுக்கு காரணமாகிறது. இந்த மதியை குறைக்கும் பொழுது, அதாவது துறக்கும் பொழுது உள்ளொளி பெருகும்.


4)  மதி என்பது இடகலை அல்லது உகாரம் அல்லது இயங்கும் தன்மை என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த மதியை குறைத்து விட்டால்  அகரம் என்ற அமுது கிடைக்கும். மகாரம் என்ற இயங்கா தன்மையும் சித்திக்கும்.


5) Changing the number of electrons will change the overall charge on an atom. An atom that loses electrons will become positively charged.

மதி= electrons.


இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.


1 apr 2024.

டிவி பார்த்துக் கொண்டோ மொபைல் பார்த்துக் கொண்டோ உணவு உண்ணும் பொழுது அந்த உணவோடு மிக எளிதாக மாயாவும் சேர்ந்து உள்ளே சென்று விடும். உணவும் சரியாக செரிக்காது. ஆனால் மாயா உள்ளே சென்று சுலபமாக அமர்ந்து விடும். மாயாவை விரட்டுவது கடினமான காரியம் ஆகிவிடும். தன்னைச்  சூழ்ந்து இருப்பவரோடு அன்பு பாராட்டி பகிர்ந்து உண்ணும் பொழுது அன்பு எனும் ஆற்றலும் உள்ளே உணவு வழியாக சென்று விடும். கலியுக காவியம் ஆன்மாவின் சுயசரிதம் நூலின்படி நமது மூலையில் உள் மூளையில் பத்து வட்ட அணுக்கள் உள்ளன. இதில் முதல் வட்டம் மாயாவுக்குரியது. இரண்டாவது வட்டம் கர்மாவுக்குரியது. மூன்றாவது வட்டம் ஆணவத்துக்குரியது, இதுவே அன்புக்கும் உரியது. மூன்றாவது வட்டமே அன்புக்கும் உரியது. அதாவது இந்த உலகியல் மக்களோடு சேர்ந்த அன்பு .இங்கு சிறைப்பட்ட அன்பு அணுக்கள் வெகு எளிதாக பிரிக்கப்படும். அதே சமயத்தில் ஆணவமும் நீக்கப்பட்டு விடும்.


நன்றி எனும் உணர்வின் ஆரம்பமும் அன்புதான், முடிவும் அன்பு தான். இந்த அன்பை ஒரு கனிமமாகச் சொல்லும் பொழுது, முருகப்பெருமான் அதை பாதரச ஆற்றல் என்று கூறுகிறார். ஒரு நாளின் பிரம்ம முகூர்த்தத்தில் இருந்து 15 நாளிகைகளுக்கு பாதரச ஆற்றலை கிடைக்கிறது. இதில் முதல் ஐந்து நாழிகையில் கிடைப்பது உயர்ந்த பாதரச ஆற்றல்.

முருகப்பெருமானின் கலியுக வேத நூலான "ஒளி" என்னும் நூலில் இது விளக்கப்பட்டுள்ளது.




அலுவலகப் பணியில் இருக்கும் எனக்கு இடைப்பட்ட நேரத்தில் இதை எழுதுகிறேன். அலைபேசி எடுக்க எனக்கு நேரமில்லை. தயவு செய்து மன்னிக்கவும்.


 எனினும் தினசரி குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது மனம் உருகிய பிரார்த்தனை செய்பவருக்கு மட்டும், வாரத்தின் கடைசியில் ஞாயிற்றுக்கிழமை,  சந்தேகங்கள் இருப்பின்  வாட்ஸ் அப்பில் பேச முயற்சிக்கிறேன்.  உங்களுக்கு தனிப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான ஒரே தீர்வு, குருநாதர் அளித்த "ஒரு வரி" ஞானம் மட்டுமே. எனக்கு குரு நாதர் கொடுத்த சர்வரோக நிவாரணி அல்லது சஞ்சீவி மூலிகை இந்த "ஒரு வரி" ஞானமே.

🙏🙏🙏


அடியே நான் எடுத்து வைத்த குறிப்புகளை கீழ்கண்ட ஸ்கிரீன்ஷாட்டில் பார்க்கலாம்.


 இதை முழுமையாக புரிந்து கொள்ள நீங்கள் ஒளி நூல் மற்றும் பிரம்மம் நூலையும் படிக்க வேண்டும்.


 இதில் எட்டு மணிக்கு மேல் நமது ரத்தத்தில் உள்ள நச்சு பொருள்களை நீக்க முயற்சி செய்வதால் அதாவது பாதரச ஆற்றல் நச்சுக்களை நீக்க முயற்சி செய்வதால், அந்த நேரத்தில் ஜனார்தனன் அய்யா கூறியது போல தீய எண்ணங்கள் வெளியே வரலாம், அதை பற்றி கவலை இல்லை.  மனம் உருகிய வழிபாடுகளை செய்ய செய்ய சரியாகிவிடும். 👍


3-apr-2024


குருநாதர் அருளால் அடியேன்  ஒரு ஞான விஷயத்தை இன்று சொல்லுகிறேன்.


* ஐந்தாம் இட்லி சூட்சுமம்*

 மனம் உருகிய பக்தியே முதல் படி.  பின்னர் மாய கர்மா ஆணவத்தை நீக்கும் பயிற்சிகள்.

 பின்னர் உயிரின் இருப்பிடத்தை துல்லியமாக தெரிந்து கொள்வது.

முதல் படி ஏறாமல்  மேற்கொண்டு ஏறுவது சிரமம்தான்.


இன்றைக்கு வாசியோகம் / யோகா பாதையில் இருப்போர், மற்றும் யோகம் பழக விரும்புவோர் உடனடியாகவும் நேரடியாகவும், வெறும் யோக நுணுக்கங்களை மட்டும் கேட்டோ படித்தோ வெற்றி பெற விரும்புகிறார்கள். இது எனக்கு சிறிது நகைச்சுவையாக உள்ளது. பசியோடு இருக்கும் ஒருவன் முதலில் ஒரு இட்லி சாப்பிடுகிறான். பின்பு இரண்டாம் இட்லி, மூன்றாம் இட்லி, நான்காம் இட்லி... ஐந்தாம் இட்லி சாப்பிட்டபின் அவன் பசி அடங்கிவிட்டது. இதைப் பார்த்த ஒரு புத்திசாலி தன் மனதில் "அப்படியானால், அந்த கடைசி ஐந்தாம் இட்லியில் தான் பசியடங்கும் சூட்சமம் உள்ளது, எனவே முதல் நான்கு இட்லியை உதாசீனம் செய்துவிட்டு, நேரடியாக “ஐந்தாம் இட்லியை மட்டும் சாப்பிட்டால் போதும்", என்ற முடிவுக்கு வந்தானாம்.


அய்யா எழுதிய "சௌம்ய சாகரம் 1200 "  என்ற நூலைப் படிக்கும் போது 623 ஆம் பாடல் நமக்காக ஜொலித்துக் கொண்டிருந்தது.


"காணவே சற்குருவும் கருணை கூர்ந்து,

      கண்கண்ட சரியையோடு கிரிகைரெண்டும்

 பூணவே செய்துவந்த நெறியைப் பார்த்து,

      புத்தியுள்ள என்மகனே வாவென்றே தான்

 ஊணவே வாசியுட வழியுஞ் சொல்லி,

      உண்மையுள்ள சிவயோக நிலையுங்காட்டி

தோணவே ஞானமென்ற அண்டத்துள்ளே,

      தொடுகுறிபோல் சின்மயத்தின் மயஞ்சொல்வரே."


முக்கிய பொருள் :- சரியை கிரியை இரண்டையும் "பக்தி மார்க்கம்" என்று சொல்வார்கள். இந்த அற்புத பாடலில், அய்யா எவன் / எவள் பக்திமார்க்கத்தில் சற்குரு என்ற "அகத்தீசரைப்போன்ற"  மஹாசித்தரை ( மனிதர் அல்ல ) உண்மையாக தினமும் வழிபடுகிறார்களோ, அவர்களை அந்த சித்தரே வந்து "என் மகனே / மகளே வா " என்ற சொல்லி மிகவும் உயர்ந்த யோகஞானமான "வாசியோகம், சிவயோகம் மற்றும் சின்மயத்தை" தொட்டுக் காட்டி அருள் செய்வார்கள்.




புதன், 14 பிப்ரவரி, 2024

ஈசனைக் காணலாம் வாருங்கள்

 

ஈசன் என்பவர் யார்? கையில் சூலாயுதம் வைத்திருப்பாரே? கழுத்தில் பாம்பு அணிந்திருப்பாரா? ஆஜானுபாகுவாக ஒரு ஆணாக நின்று கொண்டிருப்பாரா? அல்லது உட்கார்ந்து கொண்டிருப்பாரா? அவரின் மதம் என்ன? அவரின் மொழி என்ன?



 இத்தனை கேள்விகளுக்குமான பதில்,  பாண்டிச்சேரி அன்பாலயத்தின் மூலம் வெளிவந்த "ஆத்மாவின் சுயசரிதம்" என்ற நூலில் உள்ளது. இதனை அருள் செய்தவர் வால்மீகி மகரிஷிகள். கீழே அந்த புத்தகத்தில் உள்ளது உள்ளபடி அப்படியே எழுதி இருக்கிறேன். படித்துக் கொள்ளுங்கள். 

நன்றிகள் : அன்பாலயம் ஜெயந்தி அம்மா.


ஈசனை ஒரு மனிதனாக உருவகம் செய்து பார்ப்பதை நிறுத்திவிட்டு பூமிக்கோளைப் போல பல கோள்களுக்கும் பல அண்ட சராசரங்களுக்கும் அதிபதி என்றும் பிரம்மாண்டத்தின் உச்ச நிலை எனவும் கருதி போற்ற தயாராகுங்கள். ஈசன் என்ற ஒரு மனித கடவுளை சந்திக்கப் போவதாக யாரும் கற்பனை செய்யாதீர்கள். எவரின் கற்பனைக்கும் எட்டாத நிலை அவர். அவரை தன்மையாகவே உணர முடியும் அறிய முடியும். ஒரு வகை உணர்ச்சியில் மட்டுமே அவர் நிலை அறியப்பட வேண்டும் என தெளிவுருவாயாக. 


ஈசன் என நீங்கள் கருதுபவர் காணக்கூடிய ஒரு உருவம் கொண்டவரா? இல்லவே இல்லை. அவர் ஒரு உணர்வு நிலை என அறிதலே மிகப்பெரிய பரிணாம வளர்ச்சி. ஈசனின் நிலை மதங்களுக்கும் மொழிகளுக்கும் அப்பாற்பட்டது. ஈசனின் ஆத்ம அணுவே அண்ட சராசரம். ஈசத்துவ நிலையானது முதன் முதலில் உருவாக்கிய ஓர் ஆத்மா அணுவே ஆதிபராசக்தி ஆகும்.


சிவாயநம.



ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

முதியோரை வணங்குவோம்

 முதியோரை வணங்குவோம்

ஓம் அகத்தீசாய நமஹ.


 60 வயது கடந்த முதியோருக்கான வாழ்வியல் வேண்டுகோள் :-



 1) ஒரு நாளைக்கு அலைபேசி அல்லது தொலைக்காட்சியில் நீங்கள் செலவிடும் நேரத்தை விட, அதிகமான நேரத்தை இறை பக்தியில் செலவிடுங்கள். உதாரணமாக, ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் அலைபேசி அல்லது தொலைக்காட்சியில் செலவிடுகிறீர்கள் எனில் ( மெகா சீரியல்கள், அரசியல் செய்திகள், சினிமா, முக்கிய பிரமுகர்களின் மரண நிகழ்ச்சிகள், youtube, whatsapp மற்றும் உறவினர் நண்பர்களிடம் அலைபேசியில் பேசுவது ),  உங்கள் தினசரி இறை பக்திக்கான நேரத்தை குறைந்தது 5 மணி நேரமாவது  ஒதுக்கி செலவிடுங்கள்.


2) மேற்கண்டவாறு உங்கள் தினசரி அலைபேசி தொலைக்காட்சி நேரத்தை விடவும் அதிகமான நேரத்தை இறை பக்தியில் செலவிட்டால்தான் உங்களுக்கான மரியாதையை உங்கள் குடும்பத்தாரிடமிருந்து பெறுவீர்கள். இல்லையெனில் உங்கள் குடும்பத்தில் முதியோருக்கான / பெற்றோர்கான மரியாதையை எதிர்பார்க்காதீர்கள். அதாவது முதியோருக்கான மதிப்பு மரியாதையை நீங்கள் முழுவதுமாக இழந்து விட்டீர்கள் என்று பொருள்.


3) ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் உங்களால் ஏன் வாரம் ஒரு முறையாவது மௌனம் இருக்க முடியவில்லை ?


4) 60 வயது வரை உங்கள் குடும்பக் கடமைக்காக ஓடிய உங்களால், ஏன் 60 வயதுக்கு மேல் இறைவனை நோக்கி முழுமையாக ஓட முடியவில்லை ?


5) உங்களின் இறைவனை நோக்கிய முழுமையான பயணத்தை தடுப்பது எவை எவை?

 அலைபேசி அல்லது தொலைக்காட்சி உபயோகம்,

 ருசியான உணவுகள், உடை, தோற்றத்தில் கவனம்,

 உறவினர்களின் வீடுகளில் நடக்கும் விஷயத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம்,

 வெளி உலக விஷயங்களில் ஆர்வம்,

 வெளிப்பொருட்களை அதிகம் சார்ந்து வாழ்வது.


6) தினசரி பகல் பொழுதில் 5 மணி நேரம் இறை வழிபாட்டில் எப்படி கவனம் செலுத்துவது?

 மந்திர ஜெபம் :  உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை தினமும்  காலையும் மாலையும் ஜெபம் செய்யலாம். ஆரம்பத்தில் 100 முறை ஜெபம் செய்கிறீர்கள் எனில், அதை அடுத்த நாள் 110 முறை, அதற்கடுத்த நாள் 120 முறை என அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். இதில் ஒரு கட்டத்தில் 1008 முறை மந்திர ஜெபம், அதாவது காலை 1008 முறை மாலை 1008 முறை ஜெபம் செய்தீர்களெனில், ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இதிலேயே செலவாகி விடும். தொடர்ச்சியாக உட்கார முடியவில்லை எனில், சிறிது சிறிது இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். அலைபேசியில் உட்காருவதற்கு மட்டும் உங்களால் முடிகிறது எனில் ஏன் இதை மட்டும் முடியாமல் போகிறது?

பூக்களால் அர்ச்சனை :-  உங்கள் வீட்டில் அல்லது அருகில் இருக்கும் இடத்தில் இயன்றவரை பூக்கள் அல்லது இலைகளை எடுத்துக்கொண்டு அதை வைத்து உங்கள் இஷ்ட தெய்வத்தை அர்ச்சனை செய்யலாம். இவ்வாறு செய்யும் பொழுது அதிக நேரம் செலவழிக்கலாம்.

அருகில் உள்ள கோவில் :-  உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகர் கோயில் அல்லது ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அங்கு அதிக நேரத்தை காலையிலும் மாலையிலும் செலவிடலாம். கோயில் அர்ச்சனை, கோயில் உழவாரப் பணிகள் அதாவது தூய்மை செய்யும் பணிகள் செய்யலாம். தியானம் செய்ய தெரிந்தால் தியானம் செய்யலாம், ஆனால் அங்கு போய் வீட்டு விஷயத்தை சொல்லி நேரத்தை வீணாக்கக்கூடாது. குடும்ப விஷயத்தை சொல்லி புலம்பி  தனது குடும்பத்தாருக்கு அவப்பெயர் கொடுக்கக் கூடாது.

வாசியோகம் :-  தனது உயிரின் இருப்பிடத்தை துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும். இது ஆரம்பத்தில் சிரமம் தான், ஆனால் தினசரி பயிற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். பின்பு தனது உயிரிலேயே கவனத்தை வைத்து, தனது உயிரையே இறைவனாக வணங்குவது. இந்தப் பயிற்சியில் இயன்றவரை அதிக நேரத்தை நீங்கள் செலவழிக்கலாம்.

புத்தக வாசிப்பு:-  ஆன்மீகம் மற்றும் தத்துவம் சார்ந்த புத்தகங்களை தினசரி வாசிப்பதில் அதிக நேரத்தை செலவிடலாம். தேவைப்பட்டால் இதற்காக அலைபேசியை நீங்கள் உபயோகிக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு அரை மணி நேரத்திற்கு மேல் அலைபேசியை உபயோகிக்காதீர்கள்.


இறைவன் தந்த வரங்கள்

 40 வயதில் இருந்து சாலேஸ்வரம் என்ற கண் பாதிப்பு:-  உன் அறிவை சிறிது தூரத்தில் வைத்து பழகு. ஆண்டவனை அருகில் வைத்து பழகு. ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாய் பழக்கத்தை அதிகப்படுத்து.

50 வயதிலிருந்து படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன உளைச்சல் :-  வெளி உணவு ருசியை கைவிடு,  உள் உணவான இறைவனை ருசிக்கப் பழகு. மருந்துக்கு அடிமையாவது தேவைதானா?

60 வயதில் கண்புரை நோய்  ( cataracts ):-  வெளிப்பார்வையின் கவனத்தை குறைத்து விடு.  உன் உள் பார்வையை ( உயிர் / இறைவன் ) கூட்டிவிடு. அறுவை சிகிச்சை தேவைதானா?

65 வயதில் இருந்து உடல் வலி, கை கால் வலி, வேகமாக இயங்க முடியவில்லை, நிதானம் தவறுகிறது.  வெளி இயக்கத்தை நிறுத்து, உள் இயக்கத்தை உயிரை நோக்கி செலுத்து. இறைவனை உணர்ந்து உணர்ந்து வழிபடு. மந்திர ஜெபம், பக்தி வழிபாடு, கோவில் பணி, பக்தி பாடல்கள், தியானம், இறைவன் இறைவன் முக்தி.

70 வயதிலிருந்து இருதய வலி, மரண பயம் :-  மரண தேவதையை விரும்பி வணங்கு. மரண தேவதையை காதலி. இதுவே ஞானத்தை பெருக்கும். உன் மரணத்தை விரும்பிக் கேள் தினமும் தினமும். இதுவே மரணம் இல்லா பெருவாழ்வு.



நாற்பது வயதிலிருந்து அறுபது வயதில் உள்ளவர்களுக்கான தனிப்பதிவு கீழே உள்ளது. இணைப்பை அழுத்தி படித்துக் கொள்ளவும்.

https://fireprem.blogspot.com/2022/10/blog-post.html?m=1


40 வயதில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் உங்கள் வாகனத்தை செலுத்தும் வல்லமை உங்களிடம் இருக்கிறது எனில். 41 வயதில் உங்கள் வேகத்தை 190 ஆக குறைத்துக் கொள்வது நல்லது. எஞ்சிய 10 கிலோமீட்டர் வேகத்தை இறைவனை நோக்கி செலுத்துங்கள். இப்படியே ஒவ்வொரு வயது ஏற ஏற பத்து கிலோமீட்டர் குறைத்துக் கொண்டே வரும் பட்சத்தில், 60 வயதில் நீங்கள் முழுமையாக இறைவனை நோக்கி ஓடும்  அற்புதமான ஞான வாழ்க்கையைப் பெறுவீர்கள். 

அதெல்லாம் முடியாது, 60 வயது வரைக்கும் 200 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்வேன், அதற்கு பிறகு சடன்பிரேக் அடிப்பேன் என்றால், வாகனமும் காலி நீங்களும் காலி. இதைப் புரிந்து கொண்டவர் ஞானி.



இப்படிக்கு,

 அகத்திய பக்தன்.

 சிவாயநம - திருச்சிற்றம்பலம்.