இந்த அனுபவ பதிவின் நோக்கம், நீங்கள் நம்பாத விஷயங்களை அனுபவத்துடன் சொல்லி நம்பவைப்பதற்கு அல்ல. ஒருவர் எந்நாளும் இறைநம்பிக்கையோடு வாழும்போது, இறைவன் எப்போதும் துணையிருப்பார். இதற்க்கு அடியேன் என் வாழ்வில் பல சாட்சிகள் அனுபவங்கள் உண்டு. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.
கடந்த 2004 ஆம் வருடம் நான் திண்டுக்கலில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தொடையில் ஒரு கட்டி வெகுநாளாக இருந்தது. திருமணத்திற்கு ஒரு மாதகாலம் இருந்தநிலையில், கைக்கு கிடைத்த ஒரு மருந்தை கட்டியில் தடவியத்தில், கட்டி மேலும் பெரிதாகி infection வலிக்க ஆரம்பித்தது. திண்டுக்கல் YMR-பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆலோசனை கேட்டேன். மருத்துவர் உடனே அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற வலியுறுத்தினார். ஆனால் திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாமா? என மருத்துவரிடம் கேட்டேன். அவர் "அதில் பெரிய பிரச்சனை இல்லை. இறைவன் அருளால் துன்பம் வாராது. கவலை வேண்டாம்" என தெம்பூட்டினார்.
அடுத்த நாள் இரவு எட்டு மணிக்கு இன்னொரு சிறப்பு மருத்துவரோடு அறுவை சிகிச்சை செய்ய முன்பதிவு செய்யப்பட்டது. நான் பகுதிநேர கல்லூரியில் MCA படித்துக்கொண்டிருந்ததால், என் தாயாரிடம் படிப்பு விஷயமாக ஒரு நாள் இரவு என் நண்பன் சுதாகர் வீட்டில் தங்குவதாக பொய் சொல்லிவிட்டு, நண்பன் சுதாகர் துணையுடன் மாலைநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
என் வாழ்வில் முதன்முறையாக நோயாளிக்கான பச்சை அங்கி ( கவுன் ) அணிந்து, அறுவை சிகிச்சை அரங்கினுள் சென்று அறுவை படுக்கையில் படுத்திருந்தேன். இரண்டு மருத்துவர்களும் முகமூடியோடு வந்தார்கள். ஏதோ புதிதாக கடை துவங்க வந்து ரிப்பன் வெட்டுவதுபோல், முதலில் இடுப்பின் அரைஞாண் கயிறை வெட்டிவிட்டு ஏதோ பெரிதாக சாதித்ததைபோல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அடுத்த பத்து நிமிடங்களில் கட்டி அகற்றப்பட்டது. அன்று இரவு தங்குவதற்கு, மருத்துவமனையின் முதல்தளத்தின் நோயாளிகள் பிரிவில் என்னை விட்டுவிட்டு சென்றார்கள். நண்பன் சுதாகர் இரவு வீட்டிற்கு செல்லவேண்டும் என்று கூறிசென்றுவிட்டான். நான் இருந்த அறையில் கிட்டத்தட்ட 20 படுக்கைகள் இருந்தது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நர்ஸ் அனைவரும் கீழ்தளத்திற்கு சென்றுவிட்டார்கள். நான் மட்டும் தனியாக அந்த பெரிய அறையில் தங்கவேண்டிய நிலை. எப்படியாது இந்த இரவை கடத்திவிடலாம் என்று உறங்க முயற்சிசெய்தேன். ஏனோ அங்கு உறங்க மிகவும் சிரமமாக இருந்தது. இரவு நேரம் கடந்து கொண்டே இருந்தது. நடுஇரவில் எனக்கு திரும்ப முடியாதளவுக்கு திணறலாக இருந்தது. என்னால் சிறிதும் அசையமுடியவில்லை. ஏதோ தீயசக்தி என்னைக்கட்டி கட்டிலிலிருந்து வலுக்கட்டாயமாக தூக்குவதுபோல் இருந்தது. மரணபயம் கவ்வும் நிலையிலும் உடனே நான் ஸ்ரீ நரசிம்மர் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தேன். நான் வாராவாரம் சென்று வணங்கும் தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் உள்ள "நரஸிம்ஹர்" உருவம் எனக்கு மிகுந்த தைரியம் தந்தது. "ஓம் ஸ்ரீ நரஸிம்ஹாய நமஹ" என்று ஜெபிக்க ஜெபிக்க என்னை இறுக்கப்பிடித்த தீய பிடியிலிருந்து விலகுவதை உணர்ந்தேன். அப்படியே நிம்மதியாக உறங்கி, மறுநாள் காலை 6 மணிக்கு மருத்துவமனையிலிருந்து நல்லபடியாக வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
கடந்த 2017 ஆம் வருடம் பணிநிமித்தமான சீனா பயணத்தின்போதும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டது. சீனர்கள் சிலருக்கு செய்வினை சூனியம் செய்வார்கள் என நான் சிறிது கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை பெரிதாக மனதில் எடுத்ததில்லை. 2017 ஆம் வருடம் சீனாவிற்கு இரண்டு வாரப்பயணமாக மூன்றுமுறை சென்றிருக்கிறேன். அதில், ஒருமுறை ஹாங்-செவ்வு என்ற நகரத்தில் ஒரு விடுதியில் தங்கினேன். இரவில் ஆரம்பத்திலேயே ஏதோ ஒரு அசௌகரியமாக இருந்தது. சிறிது முயன்று உறங்கினேன். நடுஇரவில் யாரோ அழைப்பதுபோல் தோன்றவே விளித்துப்பார்த்தேன். நான் கண்ட கட்சி என்னை தூக்கிவாரிப்போட்டது. எனது அறையில் ஒரு விகாரமாக விழிக்கும் ஒரு குழந்தை பொம்மை என்னை ஆழமாக பார்த்து சிரித்தது. சட்டென என்னையும் அறியாமல் காலபைரவ மந்திரம் உரக்க ஜெபிக்க ஆரம்பித்தேன். சில வினாடிகளில் என் அறையின் நிலை சீரானது. படபடக்கும் என் இதயத்துடிப்பு சீரானது. அந்த கடும் குளிர்காலத்திலும் உடலெங்கும் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டு என்னை ஈன்ற அகத்தீசரை வணங்கி ஒரு அருள்காப்பு வளயமிட்டு பிராத்தித்து நிம்மதியாக உறங்கினேன். மறுநாள் காலை முதல் வேலையாக ஹோட்டல் மானேஜரை சந்தித்து, தற்போதைய அறை எனக்கு வசதியாக இல்லை என்று உப்பு சப்பில்லாத சாக்கு சொல்லி வேறு ஒரு அறைக்கு மாறிக்கொண்டேன்.
இதை உங்களில் சிலர் மூடநம்பிக்கை என்றோ அல்லது மனோதத்துவம் என்றோ எண்ணலாம். "இறைவனை நம்பினார் கெடுவதில்லை". பல ஆயிரம் ஆண்டுகளாக பல யுகங்களாக, நம் முன்னோர்கள் நமக்காக வடித்துத்தந்த ஆன்மீகம் வேடிக்கை அல்ல.
ஓம் அகத்தீசாய நமஹ.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.