ஞாயிறு, 5 அக்டோபர், 2025

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை - ஞானம்

 பட்டத்து ராணி பார்க்கும் பார்வை - ஞானம்


ஓம் அகத்தீசாய நமஹ. 

அறிமுகம் :-

      நமது புருவ மத்திக்கு உள்ளே, ஃபீனியியல் சுரபிக்கு மேலே, உயிராய் இருக்கும் பராசக்தியே நமது நடு-மூளைக்குள் இருக்கும் பல ஆயிரக்கணக்கான நரம்பணுக்களில் ( neurons ) கர்ம வினைகளை பதிந்து அதை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பட்டத்து ராணி ஆவார். இப்படி கர்மவினைகளை பதிந்து இருக்கும் நடு-மூளை நரம்பணுக்களின் தொகுப்பே ஆழ்மனமாகும். நமது வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்களை, நமது வெளி மனத்தாலும் அறிவாலும் பார்ப்பதற்கும், பட்டத்து ராணி பார்க்கும் பார்வைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. எனது சிறு வயதில் அதாவது ஆறு வயது முதல் 18 வயது வரையிலான வாழ்க்கை அனுபவத்தின் சுவாரசியமான பக்கங்களை இங்கே பார்க்கலாம். இதில் வெளி மனத்தின் பார்வையும்,  பட்டத்து ராணி பார்க்கும் பார்வையும், எப்படி வேறுபடுகிறது என்பதை அனுபவமாய் புரிந்து கொள்ளலாம்.



எனது சிறு வயது 18 ஆண்டுகள் வாழ்க்கை மிகுந்த சோதனைகளும் வேதனைகளும் இருந்தாலும் கூட இறைவன் என்னை காத்து இரட்சிப்பதற்காக, பல தேவதைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் அனுப்பிக் கொண்டே இருந்தார். இதில் மீனாட்சி அப்பத்தா, என்னை நீண்ட காலம் காத்து ரட்சித்தவர்களில் மிக முக்கியமான தேவதை.

     போடிநாயக்கனூரில் எனது பொன்னம்மா அம்மாச்சி வீட்டில், எனக்கு மூன்று வயது இருக்கும் பொழுது, நான் மிகவும் சிரமப்பட்டு புரிந்து கொண்ட முதல் விஷயம், எனது தாயும் தந்தையும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார்கள் என்பதே. எனது ஐந்து வயது வரை என்னை எப்போதும் இடுப்பில் வைத்து ஊட்டி வளர்த்தவர்கள் ஜோதி சித்தியும் மற்றும் பொன்னம்மா அம்மாச்சியும் தான். தாயார் எனது தந்தையினால் பட்ட மன உளைச்சல்களை அவ்வப்போது உற்றார் உறவினர்களிடம் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். எனினும் தந்தையாரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எப்போதும் இருந்தது. 

      மீனாட்சி அப்பத்தா எப்போதாவது என்னை வந்து பார்ப்பார். என் தாயாரிடம், கணவனோடு சேர்ந்து வாழ வேண்டிய அவசியத்தை சொல்லுவார். எனது ஆறு வயதில், நான், தாயார் மற்றும் சகோதரி பாப்பா மூவரையும் கோவை சூலூரில் உள்ள தந்தையிடம் அழைத்துச் சென்றார், அங்கேயே நிரந்தரமாக குடும்பத்தோடு வசிப்பதற்காக.  எனது தந்தை சூலூர் விமானப்படை நிலையத்தில் சிவிலியன் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார். தந்தை எனது தாயைப் பிரிந்த காலத்தில் இன்னொரு தாயாரை திருமணம் செய்து சூலூரில் வாழ்ந்து கொண்டிருந்தார். எனது சின்னம்மாவிற்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். இரண்டு தாயார்களுக்கும் சேர்த்து மொத்தம் ஆறு குழந்தைகள் இருந்தனர். அதில் மூத்தவன் நான்தான். சிறுவயதிலிருந்தே அவர்கள், இரண்டு குடும்பங்கள் என்றாலும், எனது தம்பி தங்கைகளை பாரபட்சமின்றி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி தந்தை அறிவுறுத்தினார். எனவே, இரண்டு குடும்பங்களுக்கும் தேவையான உணவுப் பொருட்கள், மளிகை, எரிபொருள் போன்ற அனைத்தையும் நான் அளந்து பிரித்து கொடுக்கும் பொறுப்பை தந்தையே எனக்கு கொடுத்தார். என் சின்னம்மா தன் சொந்த மகன்களை விட என் மீதுதான் அதிக அன்பை வைத்திருந்தாள்.  எனது இரண்டு தாயார் குடும்பத்திற்கும் நான் தான் வாராவாரம் மட்டன் மாமிசத்தை வாங்கி வருவேன். ஆட்டின் தலையை வெட்டி, ரத்தத்தை எடுத்து, தோலை உரித்து பின்னர் துண்டுகளாக வெட்டி எடை போட்டு தரும் வரை நான் அருகிலேயே இருந்து பார்த்து வாங்கி வர வேண்டும். இதனாலேயே நான் சிறுவயதிலேயே அசைவ உணவை விரும்பாமல் சைவ உணவையே எடுத்துக் கொள்வேன். தந்தையாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.

      என் தந்தை மிகவும் புத்திசாலி, திறமைசாலி, பலசாலி. பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். கவிதை எழுதுவதிலும், தத்துவம் பேசுவதிலும் திறமை மிகுந்தவர். ஆன்மீக நம்பிக்கையுடன் வாழ்ந்தவர். விமானப்படையின் தொழில்நுட்ப பிரிவில் இளம் வயதிலேயே MTSO என்ற பதவியில் இருந்தார். எழுத்திலும் பேச்சிலும் சிறந்தவர். எனக்கு அவரின் பத்தில் ஒரு பங்கு திறமையும் இல்லை என்றே உணர்கிறேன். அவர் இரண்டு தாயார்களுக்கும் வருமானம் வரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தார்; என் தாயாருக்கு தையல் நிலையமும், சிறிய தாயாருக்கு செருப்பு கடையும் இருந்தது. மேலும் தந்தையே ஒரு மெக்கானிக்கல் workshop கூடுதலாக வைத்து நடத்தினார். அதோடு, டெல்லி சென்று எந்திரங்களை வாங்கி வந்து விற்பதும் அவரது வணிகங்களில் ஒன்று. பலம், திறமை, மன உறுதி – இவற்றில் யாராலும் அவருடன் போட்டியிட முடியாது. தந்தையார் எனக்கும் சிறுவயதிலேயே நல்ல பக்குவத்தோடும் திறமையோடும் இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய பிராக்டிகல் பயிற்சிகளை கொடுப்பார். எனக்கு பதினோரு வயது இருக்கும்போதே, எங்கள் செருப்பு கடைக்கு தேவையான பொருட்களை நான்தான் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிற்றுக்கிழமையில் சூலூரில் இருந்து டவுன் பஸ் மூலமாக கோவை டவுன்ஹால் சென்று வாங்கி வர வேண்டும். பஸ்ஸில் ஏறியவுடன் எனக்கு வாந்தி மற்றும் தலை சுற்றல் வந்துவிடும். எனினும் சிரமப்பட்டு ஒவ்வொரு வாரமும் சென்று வருவேன். அத்தோடு கடைகளை தூய்மைப்படுத்தும் பணியும் வாராவாரம் இருக்கும். கொஞ்சம் எனக்கு மன உளைச்சல் தான். எனினும் ஒவ்வொரு வருடமும் ஒரு வசந்த காலத்தைப் போல, ஆண்டு விடுமுறைக்கு பெரியகுளம் ராசாத்தி அத்தை வீட்டிற்கு அப்பா அனுப்பி வைப்பார். ராசாத்தி அத்தை என்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொள்வார். அத்தை மகன் அங்குராசா என் மேல் அதிக அன்பு கொண்ட தோழன். தினமும் தோப்பிற்கு ( ஊரின் கடைசியில் உள்ள விவசாய காடு ) செல்லுவோம். ஆனால் என்னை எந்த வேலையும் அவன் செய்ய விட மாட்டான். ஆற்றில் குளிப்பது, சினிமாவிற்கு செல்வது என மிகவும் மகிழ்ச்சியான காலமாக எனக்கு அது இருக்கும்.

      வாழ்க்கை ஏதோ மாதிரியாக ஓடிக் கொண்டிருந்த போதும், நான் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தந்தைக்கு வாரம் ஒருமுறை நண்பர்களுடன் மாலை நேரம் குடிக்கும் பழக்கம் உருவானது. அது பின்னர் தினசரி மாலை குடிக்கும் பழக்கமாக மாறியது. சில காலத்தில் பகலிலும் குடிக்கும் நிலைக்கு சென்றது. முடிவில், முழுமையான குடிமகனாக மாறிவிட்டார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்தவர், பின்னர் வீட்டில் தினமும் சண்டை, சலசலப்பு, பயத்தை ஏற்படுத்தினார். குடிபோதையில் அவர் என்ன செய்வார், எப்போது சண்டை வரும் என்று யாரும் அறிய முடியாது. சில சமயங்களில் கத்தி, அரிவாளுடன் தலையணைக்குக் கீழே வைத்து தூங்குவார். அப்படி இருந்தால் நாங்கள் எப்படி நிம்மதியாக உறங்க முடியும்? பல இரவுகள் நான் உறங்கியதில்லை. சில நேரங்களில் அவர் இரண்டு நாட்களுக்கும் மேலாக வீட்டிற்கு வரவில்லை என்றால், என் தாயார் என்னைத் தேடிச் செல்லச் சொல்வார். அப்போது சிறுவனான நானும் ஒவ்வொரு ஒயின் ஷாப்பிலும் அப்பாவை தேடிச் செல்ல வேண்டியிருந்தது. இதிலும் இவர் கிடைக்காத பட்சத்தில், மதியழகன் நகர் மற்றும் காங்கேயம்பாளையத்தில் மிகவும் ஒதுக்கு புறமான இடங்களில் உள்ள பலான தாயார்களின் வீட்டு வாசலில் நின்று, "என் அப்பா இங்கு வந்தாரா ?" என கேட்பதுவே மிகவும் வேதனையாக இருக்கும். இப்படி இரண்டு குடும்பங்களும் துன்பப்பட்டன.

        நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது மது மறுவாழ்வு சிகிச்சை எடுத்தால் தந்தை சரியாகிவிடுவார் என்ற ஒரு நம்பிக்கை எங்களுக்கு வந்தது. கோவை குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரியில் மது மறுவாழ்வுக்கான சிகிச்சையில் தந்தையாரை சேர்த்தோம். பத்து நாட்கள் மருத்துவ சிகிச்சை. பெரும்பாலும் தந்தையார் உறக்கத்திலேயே வைக்கப்பட்டிருந்தார். ஆனால் பத்து நாட்கள் கழித்து எப்படியோ யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று மது அருந்தி விட்டார். இவரை திருத்த முடியவில்லை என்ற கவலையோடு வேறு வழி இல்லாமல் வீட்டிற்கு சென்று விட்டோம். சில மாதங்கள் கழித்து மீண்டும் வேறொரு ஆஸ்பத்திரியில் மது மறு வாழ்விற்காக மீண்டும் தந்தையாரை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றோம். ஆனால் அங்கும் அதே நிலைதான் ஒரு வாரம் கழித்து வெளியே எப்படியோ தப்பித்து சென்று மதுவை அருந்தி விட்டார். இப்படியாக இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பல தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு நாங்கள் கூட்டி என்றும் அவர் திருந்திய பாடில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தந்தையாரின் குடிபோதை ரகளை மிகவும் அதிகமாகிவிட்டது. குடும்ப செலவிற்கும் சரியாக பணம் தருவதில்லை. எனவே நானே எனது தாயையும் தங்கையையும் திண்டுக்கல் மனோ மாமா வீட்டிற்கு அனுப்பி விட்டேன். எனது பத்தாம் வகுப்பை முடிப்பதற்காக மீனாட்சி அப்பத்தா எனக்கு உறுதுணையாக என்னோடு சூலூரில் இருந்து விட்டார். அப்பத்தா எனக்காக மிகவும் சிரமப்பட்டார். பல நேரங்களில் அடுப்பு எரிப்பதற்கு விறகு வாங்க இயலாமல் விக்ரம் சித்தப்பா தையல் கடையில் வெட்டுத் துணிகளை எடுத்து வந்து எரித்து உணவு சமைத்து தருவார். பக்கத்து வீடுகளில் அரிசி புடைத்து வேலை செய்து சிறிது குருணை அரிசி வாங்கி எனக்கு சமையல் பண்ணி தருவார். எப்படியோ பத்தாம் வகுப்பு ஆண்டு தேர்வு வரை தினசரி குடி போதை ரகலையோடு சமாளித்து விட்டோம். ஆண்டு தேர்வு எழுதும் போது மிகுந்த சிரமம். ஒரு முறை கணித தேர்வுக்காக காலை கிளம்பி கொண்டு இருந்தேன். அப்பா வழக்கம்போல் ரகளை செய்து வீட்டை பூட்டை போட்டு பூட்டி விட்டார், வீட்டுக்குள்ளே எனது ஹால் டிக்கெட் உள்ளது என கெஞ்சினேன். நேரம் போய்க் கொண்டே இருந்தது, தேர்வும் ஆரம்பித்துவிட்டது. ஒரு மணி நேரம் கெஞ்சிய பிறகு ஹால் டிக்கெட் வாங்கிக் கொண்டு தேர்வை தாமதமாகவே எழுதினேன். எனினும் பத்தாம் வகுப்பு 80 சதவீதத்திற்கும் மேலே மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.  தேர்வு முடித்த கையோடு தப்பித்தோம் பிழைத்தோம் என நானும் திண்டுக்கல் மாமா வீட்டிற்கு சென்று விட்டேன். அப்பத்தா போடிநாயக்கனூர் சென்று விட்டார். நான் 11 மற்றும் 12ம் வகுப்பை திண்டுக்கல் டட்லி ஸ்கூலில் மாமா ஆதரவோடு படித்தேன். தாயார் தையல் வேலை மூலம் குடும்பத்திற்கான செலவிற்கு இயன்றவரை உழைத்தார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் மீண்டும் சூலூருக்கு எனது தாயாரோடு மேல் படிப்பிற்காக வந்தேன். 

      தந்தை பணி புரியும் அரசு சார்ந்த ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ஒரு வருட கோர்ஸ் தந்தை சம்மதத்தோடு சேர்ந்தேன். இதற்கான மாத கட்டணம் 600 ரூபாய் தந்தை தருவதாகவும் சொன்னார். குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்வேன் என உறுதி அளித்தார். ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் குடிபோதை ரகளை ஆரம்பமாகிவிட்டது. தந்தையோடு, ஒரு குடும்ப நண்பர் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் தன்னோடு பணிபுரியும் பலருக்கும் வட்டிக்கு பணம் கொடுப்பார், மாத சம்பளம் வரும்பொழுது அங்கேயே நேரடியாக அவரது பணத்தை வாங்கிக் கொள்வார். அவர் ஒரு வசூல் ராஜா. இதில் எனது தந்தையாரும் அவருக்கு வாடிக்கையாளர். நாங்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர். அந்த மாமா என் மீது அன்பு கொண்டவர். மூன்று மகள்கள் அவருக்கு உண்டு. அவரும் சூலூர்லயே குடும்பத்தோடு தங்கியிருந்தார். என் தந்தைக்கு இறுதியாக ஒரு முறை KMCH ஹாஸ்பிடல் மது மறுவாழ்வு வைத்தியம் செய்து பார்க்கலாம் என நானும் என் தாயும் யோசித்துக் கொண்டிருந்தோம். அதற்கான பண செலவிற்கு அந்த மாமாவிடம் கடனாக வாங்கிக் கொள்ளலாம், பிறகு தந்தையின் சம்பளத்தில் இருந்து கடனை கட்டிவிடலாம் என யோசித்து முடிவு எடுத்தோம். ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒரு யோசனை சொன்னார். "மாப்ளே உனது நன்மைக்காகத் தான் சொல்லுகிறேன், உனக்கும் விரைவில் 18 வயது ஆகப்போகிறது. உனது தந்தைக்கு பலமுறை வைத்தியம் செய்தும் அவன் திருந்திய பாடில்லை. மீண்டும் அவனுக்காக செலவு செய்ய ஏன் நினைக்கிறாய் ? அதற்கு பதிலாக நான் ஒரு ஆலோசனை சொல்லுகிறேன் கேள் ! அவனுக்கு நானே ஒரு ஐந்து ஆறு ஃபுல் பாட்டில் மதுவை கேண்டினில் இருந்து வாங்கி கொடுக்கிறேன். வீட்டில் அவன் கண் முன்னே வைத்துவிடு. அவன் விடாமல் தொடர்ந்து வீட்டிலேயே குடித்துக் கொண்டே இருப்பான், இரண்டு நாளில் குடியிலேயே மரணித்து விடுவான். அல்லது ஏதேனும் மருந்தை மதுவில் கலந்து வைத்தாவது அவன் மரணிக்கும்படியாக நீ விரும்பினால் செய்யலாம். அவன் இனி திருந்துவதற்கு வாய்ப்பில்லை, உனக்கு தொந்தரவு தான். மாறாக அவன் மரணித்து விட்டால், வாரிசு அடிப்படையில் உனக்கு அரசு வேலை கிடைத்துவிடும். உன் தந்தையோடு மது அருந்தும் மற்றொரு நண்பன் இப்படி குடித்து மரணித்த பின் அவனது மகளுக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைத்துவிட்டது. அதுபோல் உனக்கும் கிடைத்துவிடும். வீணாக ஏன் இப்படி அலைகிறாய் ?" என்று சொன்னார். இதில் சிறப்பு பரிசாக அவரது மகள்களில் ஒருத்தியை வருங்காலத்தில் நான் திருமணம் செய்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது என என் மனதில் ஒரு எண்ணம் ஓடியது.  ஆனால் என் தந்தையின் மரணத்தால் கிடைக்கும் வாரிசு வேலையில் எனக்கு உடன்பாடு இல்லை. "மாமா, அப்படி ஒரு வேலை எனக்கு வேண்டாம்" என மறுத்து விட்டேன். KMCH ஆஸ்பத்திரியில் இறுதியாக ஒரு வைத்தியம் பார்ப்பதற்கு அவரது பண உதவியை கேட்டேன், அவரும் மறுக்காமல் செய்தார். ஆனால் பத்து நாட்களில் வழக்கம்போல் தந்தையார் எப்படியோ வெளியே சென்று மதுவை அருந்தி ஃபுல் போதையில் வந்து விழுந்து விட்டார். மிகுந்த ஏமாற்றத்தோடு வீட்டிற்கு வந்து விட்டோம் வழக்கம் போல் குடிபோதையில் ரகளை, பிரச்சனை என மன நிம்மதி இழந்து நானும் என் தாயாரும் தினமும் துன்பப்பட்டோம். இனிமேல் இங்கு இருக்க வேண்டாம் என தாயாரை திண்டுக்கல் மனோ மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டு நான் மட்டும் ஒரு வருடம் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க சூலூரிலேயே இருந்து விட்டேன். வழக்கம்போல் என் தேவதை மீனாட்சி அப்பத்தா இந்த ஒரு வருட படிப்பை முடிக்கும் வரை எனக்கு உதவ சூலூர் வந்தார். மூன்று மாதங்களில் அப்பாவிடம் இருந்து பணம் வாங்குவது கடினமான காரியம் ஆகிவிட்டது. எனது கல்வி கட்டணம், சாப்பாட்டு செலவு, வீட்டு வாடகை கொடுப்பது மிகவும் சிரமமாகிவிட்டது. மாமா மற்றும் அம்மாவால் இவ்வளவு பணத்தை ஒவ்வொரு மாதமும் அனுப்ப இயலவில்லை. மீனாட்சி அப்பத்தா வீட்டில் உள்ள பொருட்களை எப்படியோ விற்று இரண்டு மாதம் படிப்பை கடக்கச் செய்தார். இனிமேல் முடியாது என்ற கட்டாயத்தில் வாடகை வீட்டை காலி செய்து விட்டோம். மேலும் அப்பத்தா நீண்டகால ஆஸ்துமா நோய் தொந்தரவு காரணமாக மிகவும் தளர்ந்து விட்டார். 

      கடைசி நான்கு மாத படிப்பை முடிப்பதற்காக, மீனாட்சி அப்பத்தா என்னை காந்திபுரத்தில் உள்ள பாண்டியன் மாமா வீட்டில் தங்க ஏற்பாடு செய்தார். இங்கே இறைவன் என்னை காத்து ரட்சிப்பதற்காக, பிரியா அத்தை என்ற இன்னொரு தேவதையை தயாராக வைத்திருந்தார். பிரியா அத்தை எனக்காகவே சைவ உணவை தினமும் சமைத்து தருவார். காந்திபுரத்தில் இருந்து சூலூர் கம்ப்யூட்டர் சென்டர் செல்வதற்கான பஸ் கட்டணத்தையும் தினமும் தருவார். பிரியா அத்தையும் பாண்டியன் மாமாவும் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். அது மட்டுமல்ல, இரண்டு மாத படிப்பு கட்டணத்தையும் எனக்காக கட்டினார்கள். எப்படியோ நான் என் ஓராண்டு படிப்பை முழுமையாக முடித்தேன். பின்னர் திண்டுக்கல் மாமா வீட்டிற்கு சென்று விட்டேன். இதற்குப் பிந்தைய வாழ்க்கை அனுபவத்தை வேறொரு தனிப்பதிவில் விரிவாக எழுதி இருக்கிறேன். இப்போதைக்கு இந்தப் பதிவின் இறுதிக்கு வந்து விட்டோம்.

      என்னை வளர்க்கும் தேவதைகளின் பட்டியல் இன்று வரை நீண்டு கொண்டே தான் இருக்கிறது. பொன்னம்மா அம்மாச்சி, நேசமணி அம்மா, ஜோதி சித்தி, மீனாட்சி அப்பத்தா, ராசாத்தி அத்தை, பிரியா அத்தை, கண்மணி பெரியம்மா மற்றும் எனது மனைவி...  "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலுக்கு ஏற்ப, என்னை பராசக்தி பல ரூபங்களிலும் இடைவிடாது காத்து ரட்சித்துக் கொண்டே இருக்கிறாள். பசி என்ற உணர்வை இதுவரை நான் உணர்ந்ததே இல்லை.

  

      மேலே உள்ள எனது வாழ்க்கையை அனுபவத்தை நீங்கள் கவனிக்கும் பொழுது எனது அனைத்து துன்பத்திற்கும் என் தந்தையார் தான் காரணம் என்று தோன்றுகிறதா ? . மேலோட்டமான நமது வெளி மரத்தின் பார்வையில் அப்படி தோன்றுவது இயல்புதான். ஆனால் பட்டத்து ராணியான நம் உயிரின் பார்வையில், உண்மை நிலை வேறு. இவளின் பார்வை தான் சத்தியம். 



உண்மையில் நான் சிறுவயதில், எனது சனி திசை காலத்தில், என்னென்ன துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற எனது கர்ம விதியே, ஒரு நல்ல ஆன்மாவான என் தந்தையை எனது விதிக்கேற்ப மாற்றி, நான் துன்பத்தையும் மன உளைச்சலையும் அனுபவிக்கும் சூழலை உருவாக்கியது. என் தந்தையின் மூலமாக இல்லாவிடினும் வேறு யார் மூலமாக வேணும் நான் துன்பத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பதுவே பட்டத்து ராணி வகுத்த விதி ( முற்பிறவியின் நடவடிக்கைகளால் பதியப்பட்டது ). என்னுடைய துன்பம் என் தந்தையால்தான் வந்ததாக நினைப்பது மூடத்தனம். தீதும் நன்றும் பிறர் தர வாரா. நீங்கள் ஒவ்வொருவரும் இதுபோல் துன்பமான காலகட்டத்தை அனுபவித்திருப்பீர்கள். சரி இதற்கு தீர்வு தான் என்ன ? பட்டத்து ராணி என்றும், கர்மாவின் ராணி என்றும் அழைக்கப்படும் நமது உயிரை சமாதானம் செய்து, கர்ம விதியின் வீரியத்தை குறைப்பது எப்படி ? இதற்கான அற்புதமான தீர்வை குருநாதர் "மோட்ச தீப ஞானம்" என்ற பதிவில் நமக்காக கருணையோடு அருளியுள்ளார். அந்த தனிப்பதிவை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது படித்து அல்லது கேட்டு பலன் அடையலாம்.


இப்படிக்கு உங்கள்,

அகத்திய பக்தன்.


கேட்பதற்கான வீடியோ சுருக்கம்.



அகத்திய பக்தன்.