ஞாயிறு, 21 ஜூலை, 2024

குரு சாயி நாதம் - பாகம் 1

 குரு சாயி நாதம் - பாகம் 1


ஓம் சாயிநாதாய நமஹ.

குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்.


குருநாதரின் அருளால் அடியேன் அனுபவமாய் உணர்ந்த, ஸ்ரீ சீரடி சாயிநாதரை யோகமார்க்கமாக தியானிக்கும் முறை இந்த பதிவில் பகிரப்படுகிறது. ஆர்வமுள்ளோர் யாவரும் இந்த முறையை பின்பற்றி சாயிநாதரின் அருளைப் பெறலாம். இது சுருக்கமான குறிப்புகளாகவே இருக்கும், எனினும் புரியும் படியாக இருக்கும். மேலும் விளக்கம் தேவைப்படுவோருக்காக ஒரு கலந்தாய்வை ஜூம் மீட்டிங்கில் விரைவில் ஏற்பாடு செய்யலாம்.




(1) உங்களிடம் உள்ள சாயிநாதரின் உருவப்படத்தையோ அல்லது சிலையையோ உங்களால் இயன்ற அளவு பூக்களால்  அல்லது இலைகளாலோ அலங்கரித்து விளக்கு ஏற்றி பக்தி மார்க்கமாக வழிபாட்டை சில நிமிடங்களுக்கு ஆரம்பிக்க வேண்டும். இந்த பக்தி வழிபாடு நமது மனதை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஒருமுகப்படுத்தி, பின்பு மனம் உருகிய வழிபாட்டில் எங்கும் நிறைந்த சாயிநாதரை தியானிக்க உதவும்.

 குறிப்பு புத்தகம்: ஸ்ரீ சாயி ஞானஸ்வரி - பக்கம் 93

 உங்கள் மனதை சீராக வைக்கவும். ஒரு சிலையை வணங்கும் போது நம் புலன்கள் ஒரே இடத்தில் கூடுகின்றன. சிலை பக்தி மற்றும் வழிபாட்டின் புள்ளியாக மாறும். இதேபோல் உங்கள் நிலையற்ற மனதை உங்கள் இருதயத்தில் இருக்கும் சர்வ வல்லமையுள்ள கடவுள் மீது நிலை நிறுத்துங்கள். அவர் வேறு எங்கும் இல்லை. உங்கள் மனதை அமைதிப்படுத்தி அவரை வணங்குங்கள். இது உங்களுக்கு மன அமைதியை அளிக்க உதவும். மன ஸ்திரத்தன்மை இல்லாமல்  உலகாயத உலகத்திலிருந்து விடுதலையை பெற முடியாது.




(2)   உங்களுக்கு வசதியான ஆசனத்தில் அமர்ந்து, முதுகு தண்டுவடத்தை சிரமம் இல்லாமல், இயன்ற அளவு நேராக வைத்துக் கொள்ளுங்கள்.


(3)   உங்கள் வசதிக்கேற்ப கண்களை மூடியோ அல்லது திறந்து வைத்துக் கொண்டோ, சாயி தியானத்தை ஆரம்பிக்கலாம்.


(4) உங்கள் "மனதால்" உங்கள் வாயிற்குள் இருக்கும் உள்நாக்கு என்ற அண்ணாக்கை உள்நோக்கிப் பாருங்கள்.  இதை ஆங்கிலத்தில் uvula என்று அழைப்பார்கள். உங்கள் உள்நாக்கையே சாயிநாதரின் பாதமாக எண்ணி அங்கே இயன்றவரை சில நிமிடங்கள் கவனம் வைத்து பக்தியாக மனதால் வழிபடுங்கள். யோக மார்க்கத்தில் இந்த உள்நாக்கையே குஞ்சிதபாதம் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். 

(உங்கள் உள்நாக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமெனில், கண்ணாடியின் முன் நின்று ஆவென வாய் திறந்து உங்கள் உள்நாக்கை, வழிபாட்டில்  அமர்வதற்கு முன்னதாகவே பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்).


(5)  உங்கள் கவனத்தை உள்நாக்கிற்கு மேலே உங்கள் உயிரை நோக்கி செலுத்துங்கள். உங்கள் உயிரானது உங்கள் இரண்டு கண்களுக்கு மத்தியில் உள்நோக்கி உள்நாக்கிற்கு மேலே பீனியல் சுரப்பிக்கு அருகில் ஒளிவடிவாக உள்ளது. சித்தர்கள் இதையே அண்ணாமலை (அண்ணாகிற்கு மேலே) என்றும் உண்ணாமுலை  (உள்நாக்கின் அமைப்பு) என்றும் கூறுவார்கள்.


(6)  உங்கள் உயிரில் கவனத்தை வைத்து சாயிநாதரை உருவமற்றவராக தியானம் செய்யுங்கள். இது சாத்தியம் இல்லை கடினம் எனில் உருவம் உள்ளவராகவே (மேலே உள்ள சாயிநாதரின் புகைப்படம்) தியானம் செய்யுங்கள்.

 குறிப்பு புத்தகம் : ஸ்ரீ சாயி சரிதம்.  பக்கம் 177.  அத்தியாயம் 18 & 19.

  மனது ஒருமுகப்படுத்தப்பட்ட பின்பு நமது குறிக்கோள் எய்தப்பட்டு விடும். எனது உருவமற்ற இயல்பை எப்போதும் தியானம் செய்யுங்கள். இதை செய்ய தங்களால் இயலாவிடில் இங்கே இரவும் பகலும் காண்பது போன்று உச்சி முதல் உள்ளங்கால் வரையுள்ள எனது ரூபத்தை தியானம் செய்யுங்கள்.


ஸ்ரீ சாயிநாதரின் ஆசிர்வாத வாக்கு :  தங்களது நிலையும் கற்கண்டை போலவே சுவை உள்ளதாகும். உங்களது எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படும். நீங்களும் சந்தோசமாய் இருப்பீர்கள். ( ஸ்ரீ சாயி சத்சரிதம் பக்கம் 178 ).






தொடரும்...


  ஓம் சாயிநாதாய நமஹ.

 இப்படிக்கு,

 அகத்திய பக்தன்.