மகளே நம் சாதி வேறு
பொன்னான பொதிகைமுனி பாதம் தொட்டே,
சொல்லுகிறேன் என் மகளே நலமாய் கேளு!
பூவுலகில் வகை வகையாய் சாதி சொல்வார்,
முனி நாதர் நமக்குச் சொன்ன சாதி ரெண்டே!
மண்ணிலே மனதறிவை வைத்தார் மக்கள்,
மண் சாதி என்றேதான் அழைக்கலாகும்!
விண்ணிலே மனதறிவை வைத்தே வாழ்வார்,
விண் சாதி என்றேதான் சொன்னார் நாதர் !
மண் சாதி மானிடரை சொல்லுகிறேன் கேள்,
பூவுலகில் பெரும்பாலும் இவரே இருப்பார்!
புற மனமும் உடலுமே "தான்" என்பாரே,
புத்தி கெட்ட மானிடரை என்ன சொல்வேன்!
இவர் கேட்டதெல்லாம் கொடுத்தால்தான் கடவுள் என்பார்,
இல்லையென்றால் கல்லென்றும் பொய்யென்றும் புலம்புவாரே!
தான் விரும்பியதே வாழ்க்கை என்று திரிவார் பாரே,
பிறவி நோக்கம் கேட்டுப் பார் விழிப்பார் நன்றாய் !
விண் சாதி மானிடரே உயர்ந்தோர் அம்மா,
சத்தியமாய் சொல்லுகிறேன் அறிவாய் கேளே!
ஆழ்மனமும் உயிருமே "தான்" என்பாரே,
வீண் பேச்சு இவரிடமே இருக்காதம்மா!
இறைவனிடம் இவர் கேட்பது இறைவனையே தான்,
பெரிதினும் பெரிது மட்டுமே வேண்டும் என்பார்!
செல்வமும் செல்வாக்கும் உனக்கே அடிமை,
பற்றில்லாமல் பற்றியே ஆட்சி செய்வாய்!
இன்னும் பலசேதிகளை உனக்கே சொல்வேன்,
என் மகளே உன் உயிரை பணிந்து கேளு!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் வேண்டும்,
மற்றும் ஒரு வழி என்றால் பிரம்மச்சரியம்!
கூடாது என்னாலும் மரண பயம் நமக்கு,
எப்போதும் உன் பணியில் உற்சாகம் தான்!
புறமனத்தால் உற்சாகம் மாயை அம்மா,
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்!
குரு என்றும் ஞானி என்றும் பலரும் வாழ்வார்,
வெளிவேஷம் மானிடர்கள் கலியுகத்திலே!
சுழுமுனையில் வருவோருக்கே குருவென்று பேரு,
சித்தரென்று வணங்குவாய் அவரை மட்டும்!
குருநாதர் எனக்களித்த சொத்தின் பங்கை,
உனக்கே தான் எழுதி வைத்தேன் அன்பு மகளே!
விரைவாக பிறவிகர்மம் ஒழிவதற்கே,
சூச்சாதி சூட்சமதை சொல்லுகிறேன் கேள்!
கேளம்மா என் மகளே குழப்பம் இல்லை,
புறமனத்தால் புரியாது இந்த சூட்சம்!
ஆழ்மனத்தின் ஏக்கம் இதே பல பிறவிகளாய்,
பிறவிகர்மம் நீக்கினாலே முக்தி கிட்டும்!
சூட்சமது சுலபம்தான் கண்ணே மணியே,
மகத்தான மரணத்தை தினமும் கேளு!
கேளென்றால் யாரிடத்தில் குருவின் பாதத்தில்,
ஆவலாய் தினம் தினமும் கேட்டு வாழ்வாய்!
உனை சார்ந்த மற்றொர்க்கும் இதையே கேளு,
சிறிதளவும் சோகம் இல்லாது விரும்பிக் கேளு!
உன்னைப் பெற்ற அப்பனும் நான் இதையே கேட்டேன்!
அனுதினமும் கேட்டேனே பல்லாண்டுகளாய்,
கேட்பதினால் குறையொன்றும் இல்லை மகளே!
முக்காலமும் மூவுலகும் உனக்கே உனக்கே,
உனை வெல்ல பூவுலகில் யாரும் இல்லை!
சூட்சாதி சூட்சத்தால் குருவை வேண்டு,
மயங்காதே மரணம் என்று புலம்பாதே நீ!
தேவாதி தேவர் நமக்கு மரணம் இல்லை,
புறமனத்தால் வாழ்வோருக்கு நித்தம் மரணம்!
ஸ்ரீ கிருஷ்ணர் கீதையிலே காட்டினாரே,
தர்மத்தை எந்நாளும் கைவிடாதே!
குருபாதம் எப்போதும் போற்றி வாழ்வாய்.
புரியவும்தான் முயற்ச்சித்தால் என் மகளே நீ,
உன் அப்பன் அகத்தீசர் பக்தனம்மா!.