பூங்கதவே.. தாள் திறவாய்… – “வாழ்வியல்”
“பூங்கதவே.. தாள் திறவாய்…
பூங்கதவே.. தாள் திறவாய்…
பூவாய்… பெண் பாவாய்..
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்…”
கேட்பதற்கு இதமான மென்மையான பழைய பாடல். இந்த பதிவின் தலைப்போடு "வாழ்வியல்" என்ற சொல்லும் சேர்க்கப்பட்டதன் பொருளை கீழே படிக்கலாம். இந்த குறுகிய கால சிங்கப்பூர் பயணத்தில், முருகப்பெருமான் அருளோடு இப்பதிவை அடியேன் எழுதுகிறேன்.
சிங்கப்பூர் விடுதியிலிருந்து அலுவலகத்திற்கு வந்த முதல் நாளே என் அலைபேசியை நான் பயணித்த டாக்ஸியிலேயே மறந்து விட்டுவிட்டேன். நமக்கு உள்ளூரிலேயே அலைபேசி ( smartphone ) இல்லையென்றால் உயிரற்ற நடைப்பிணமாக உணர்வோம், நான் வெளிநாட்டில் என் அலைபேசியை தொலைத்துவிட்டு எப்படி இருப்பேன் என உங்களால் யூகிக்க முடியும்.
என்னை டாக்ஸியில் அழைத்து வந்த சீனத்து அலுவலக நண்பர், என்னை சிங்கப்பூர் அலுவலகத்தில் விட்டுவிட்டு உடனே இந்தோனேஷியா பறந்துவிட்டார். எனக்கு டாக்ஸி விபரம் எதுவும் தெரியாது , மேலும் சீனா நண்பரும் தொடர்பில் இல்லை. அலுவலக கணினியிலிருந்து என் மனைவியை தொடர்பு கொண்டு, நடந்ததை கவலையோடு சொன்னேன். அன்னவள் "ஏன் இப்போதெல்லாம் உலக விஷயங்களில் கவனக்குறைவும் மறதியும் உங்களுக்கு அதிகமாகிவிட்டதே!" என சிறிது என்னை கடிந்துகொண்டாள். மேலும் "இவ்வளவு தானா ? அல்லது தர்மத்தின் தலைவன் ரஜினி போல் அலுவலகம் வந்துவிட்டிரா ?" எனக் கேட்டாள்.
சட்டெனெ என் உடையை நான் சரிபார்த்துவிட்டு "இன்னும் அந்தக் கொடுமை நடக்கவில்லை" என சமாளித்தேன். அன்னவள் "அலைபேசியை பற்றி கவலை வேண்டாம். நம் குருநாதர் அய்யாவிடம் சொல்லிவிடுகிறேன் " என்று எளிதாக சொன்னாள். அன்னவள் கூறியது ஒருபக்கம் ஆறுதலாக இருந்தாலும், மறுபக்கம் "குருநாதர் அய்யாவுக்கு இருக்கும் வேலையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு இவள் சொல்கிறாள் என்பதற்க்காக என் அலைபேசியை இந்த சிங்கப்பூரில் தேடுவாராக்கும் ?" என்று தோன்றியது. இதன்பிறகு, எனக்குத் தெரியாமலேயே என் சிங்கப்பூர் அலுவலக நண்பர் தனது "whatsapp" மூலம் சீனா நண்பரை தொடர்பு கொண்டு டாக்ஸி விபரத்தை வாங்கி , டாக்ஸி அலுவலகம் தொடர்பு கொண்டு, அவர்கள் மூலம் டாக்ஸி ஓட்டுனரைத் தொடர்பு கொண்டார். அந்த நல்ல மனம் கொண்ட டாக்ஸி ஓட்டுநர், அலைபேசி தன்னிடம் தான் உள்ளது என்றும், அதை சனி ஞாயிறு இரண்டு நாட்கள் கடந்தபின் சிங்கப்பூர் அலுவலகத்தில் கொடுத்து விடுவதாக சொல்லிவிட்டார்.
அடேங்கப்பா ! நான் இதை எதிர்பார்க்கவில்லை. குருதெய்வமே! இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா? நானும் ஒரே ஒரு துளி மௌனம் கொடுங்கள் என்று மன்றாடினால் எனக்கு ஆயிரத்தியெட்டு சோதனைகள் வைக்கிறீர்கள், உங்கள் மகள் சொல்லிவிட்டால் சிட்டாய் பறந்து மாயம் செய்வது ஞாயமா? என புலம்பினேன். எல்லாம் சரிதான். இப்போது எப்படி இந்த இரண்டு நாட்களைக் கடத்துவது ? சட்டெனெ ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. கடந்த மாதம் "பாண்டிச்சேரி ஞானாலயம்" சென்ற போது வாங்கிய "வாழ்வியல்" என்ற புத்தகம் என் லேப்டாப் பையில் இருந்தது । இந்த புத்தகம் முருகப்பெருமான் அருளியது ( ஆமாம் சார்!!!, தமிழ் கடவுள் முருகப்பெருமான் தான்! ). இந்த கலியுகத்தில் முருகப்பெருமான் அருளிய புத்தகம் என்றவுடன் உங்கள் அனைவருக்கும் சந்தேகம் வருவது இயற்கைதான். கிராமத்து கோவில்களில் திடீரென்று ஒரு கிழவி தலைவிரிகோலமாய் "அடேய், நான் காளியாத்தா வந்திருக்கேன்டா " என்று அருள்வாக்கு சொல்வார்கள், அதுபோல் முருகப்பெருமான் பெயரில் இவர்களாகவே ஒரு புத்தகத்தை எழுதினார்களோ ! என்ற சந்தேகம் எனக்கு இந்தமுறை வரவில்லை. ஏனெனில் கடந்த வருடம் வால்மீகி மகரிஷி அருளிய "கலியுக காவியம் - ஆத்மாவின் சுயசரிதம் (click here to read the blog )" என்ற நூலை வாங்கும்போது, இதுபோல் சந்தேகப்பட்டு, பிறகு முழுமையாக படித்தபின் ஆத்மார்த்தமாக மன்னிப்பு கேட்டேன்.
முருகப்பெருமான் அருளிய "வாழ்வியல்" புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் சுவாரசியமும் வியப்புமாக இருந்தது. உங்களில் உள்ள "ஞான தேடல் - ஆத்ம தேடல் - இறை தேடல் - நான் ஏன் பிறந்தேன்? என் பிறவி நோக்கம் என்ன ?" போன்ற அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கத்தை ஒருவர் பிறந்ததிலிருந்து கடைசிக் காலம் வரை வயது வாரியாக அற்புதமாக முருகப்பெருமான் உரைத்துள்ளார். உதாரணத்திற்கு, முருகப்பெருமான் உரைத்த ஒரு கருத்தை மட்டும் எனது புரிதலில் சொல்கிறேன்। "வாழ்வியல்" புத்தகத்தில் பக்கம் 82 இல் ( என்னது ? எட்டும் இரண்டுமா? என வாசியோக அன்பர்கள் திகைப்புடன் படிப்பதை என்னால் உணரமுடிகிறது ), நம் உயிராகிய சிவன் எங்கிருக்கிறார் ? அவரை தரிசிக்க தடையாக இருக்கும் உயிர் கூடு ( shell ) எது ? அந்த உயிர் கூடு எப்படி தனது தாளை ( lock ) திறக்கும் ? என்று அருமையாக விளக்கி யிருப்பார். அதாவது, உயிராகிய சிவன் நேர்மறை ஆற்றலான காந்த ஆற்றல் எனில், எனது புரிதலில் உயிர்சக்தியை "ஆண்பால்" எனக்கொள்ளலாம் ( உயிரை தாங்கியவர் ஆண் என்றாலும் சரி, பெண் என்றாலும் சரி ) அப்படியெனில் அந்த உயிரை சூழ்ந்திருக்கும் உயிர் கூடு ( shell ) எதிர்மறை ஆற்றலான வெப்ப ஆற்றலால் உருவாக்கப்பட்டது. எனவே உயிர் கூட்டை நாம் "பெண்பால்" எனக்கொள்ளலாம்.
பெண்ணாகிய உயிர் கூடு தனது தாளை ( lock ) திறக்க வேண்டுமெனில் நாம் எப்படி பணிந்து இனிமையாக அதனிடம் சொல்ல வேண்டும் என்பதை முருகப்பெருமான் சொல்லியிருப்பார். இந்த கலியுகத்தில் எந்த பெண்ணிடமும் அதிகாரம் செய்து காரியம் சாதிக்க முடியாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மீறி பெண்ணிடம் ஒருவர் அதிகாரம் செய்தால், அவர் நிம்மதி இழந்து வாழ வேண்டியதுதான். சரி, இப்போது இந்த பதிவின் ஆரம்பத்தில் உள்ள பாடலை உங்கள் மனதில் ராகத்தோடு பாடிப்பாருங்கள். என்ன? உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளதா? அல்லது புரிந்தும் புரியாதது போல் உள்ளதா? அப்படியெனில் நீங்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கவேண்டும். இதுபோல் பல சூட்சமங்களை அள்ளி வீசியுள்ளார் முருகப்பெருமான். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புத்தக விபரங்களை பெறலாம். உடனே நீங்கள், இவனுக்கு ஞானாலயத்திலிருந்து ஒரு புத்தகத்திற்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? ஒரு நையா பைசா கூட கிடைக்காது. மேலும் என்னை யாரென்று ஞானாலயத்தில் யாருக்கும் தெரியாது. என்னைப் போல் தேடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த பதிவை எழுதி பகிரவேண்டும் என்ற பொறுப்பு மட்டுமே (அதுவும் என் ஆழ்மனம் என்னை தூங்கவிடாமல் தடுப்பதால் ). ஒருவேளை இதற்காகவே நம் குருநாதர் என்னை அவ்வப்போது தனிமைப்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புத்தக விபரங்களை பெறலாம்
http://www.enlightenedbeings.org/books.php
ஓம் சரவணபவ
ஓம் அகத்தீசாய நமஹ
இப்படிக்கு
அகத்திய பக்தன்.