பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - பகுதி 1
ஓம் அகத்தீசாய நமஹ.
நீண்ட நாட்களாக எழுத நினைத்த ஒரு முக்கிய அனுபவத்தை, இந்த குறுகியகால கொரியா பயண இடைவெளியில், குருவருளால் எழுதுகிறேன். கடந்த பதிவுகளில் நான் எழுதிய ஜோதிடம் தொடர்புடைய அனுபவத்தை படித்ததில், ஒரு சிலருக்கு ஜாதகம் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டு நல்ல ஜோதிடர் யார் என தேடியிருக்கலாம். இன்றைய காலகட்டத்தில், நல்ல திறமையான, இறைவன் அருள்கொண்ட ஜோதிடரை காண்பது எளிதல்ல. எனது நோக்கமும் நீங்கள் உங்கள் ஜாதகத்தை உடனே ஆராயவேண்டும் என்பதல்ல. உங்கள் வாழ்வு உயர மிக எளிய நல்ல வழி, இறைவனை வணங்கி உங்கள் இஷ்ட குருவை தினமும் தியானம் செய்து உங்களால் இயன்ற தான தர்மங்களை ஆதரவற்றோருக்கு கொடுப்பதேயாகும். உங்கள் இஷ்ட குரு பதினெண் சித்தர்களில் ஒருவரோ அல்லது சாய் பாபா, ஸ்ரீ ராகவேந்திரர், யோகிராம் சூரத் குமார், வேதாத்ரி மகரிஷி, யேசுநாதர் என யாரோ ஒருவராக இருக்கலாம். ஜோதிட சாஸ்திரம் என்பது இறைவன் அருளுவதற்கான பல ஆயிரம் "எந்திரங்களில்" இதுவும் ஒன்றுதான். இதுபோன்ற சாஸ்திர எந்திரங்களுக்கு உள்ளே இருந்து ஆட்டுவிப்பவன் "இறைவன்" என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே எல்லாம்வல்ல ஈஸ்வரனை முழுமையாக சரணடையாமல், வெறும் சாஸ்திர எந்திரங்களை மட்டும் நம்பினால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சும். இவையனைத்தும் வெறும் மூடநம்பிக்கை என வீண்விவாதம் செய்யவேதொன்றும்.
சரி... இனி என் அனுபவத்தை பார்ப்போமா? இந்த அனுபவ காலகட்டம், சனிதிசை முடிந்து புதன் திசையின் காலகட்டம். ஆரம்பகட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் கணிப்பொறி தட்டச்சு வேலையில் முதலில் வாங்கிய சம்பளம் மாதத்திற்கு 800 ரூபாய். ஒவ்வொரு வருடமும், பத்து வட்டிக்கு (நூறு ரூபாய்க்கு மாதம் பத்து ரூபாய் வட்டி) ரூபாய் ஆயிரத்தை "பிச்சைக்காரன்" (அவர் பெயரே அதுதான்) என்ற ஒரு வட்டிக்கு விடுபவரிடம் பணம் வாங்கி என் B.Com பட்டப்படிப்பை படித்தேன். தீபாவளி போனசில் கடனை அடைப்பது வழக்கம். எனது பட்ட படிப்பு முடிந்து, திண்டுக்கலில் பகுதிநேர படிப்பாக MCA சேர்ந்துவிட்டேன். பட்டப்படிப்பு தகுதியுடன் கணிப்பொறி வல்லுனராக, பிடித்தம்போக மாதம் 3500 ரூபாய் சம்பளம் கிடைத்தது. வீட்டு செலவிற்குப்போக மீதத்தை MCA படிப்பிற்கு செலவு செய்தேன். எனது 25 ஆம் வயதில் எனது சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் ஒரு மந்தநிலை காணப்பட்டது. பணிபுரியும் நிறுவனத்தில் நான் மிகவும் மதிக்கும் ஒரு அதிகாரியிடம் எனது நிலைபற்றி பேசினேன். அவர் என்னை அவருக்கு பழக்கமான ஒரு ஜோதிடரிடம் அழைத்து சென்றார். நான் வாழ்க்கையில் முதன்முதலாக என் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சென்றேன். ஜோதிடர் என் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து என் பெற்றோர் பற்றியும், தாத்தா, பாட்டி குடும்பம் என மிக நுணுக்கமான விஷயங்களை மிக சரியாக சொன்னது வியப்பாக இருந்தது. அந்த முன்பின் தெரியாத ஜோதிடர் என் ஜாதகத்தை ஆராய்ந்துவிட்டு, என்னிடம் கேட்ட கேள்விகள் என்னை ஒருபக்கம் வியப்பிலும் மறுபக்கம் அங்கிருந்தோர்கள் மத்தியில் பெருத்த அவமானத்திலும் தள்ளியது. என்னிடம் கேட்ட கேள்விகளில் சில...
நீ சிறுவயதிலிருந்து மிகுந்த துன்பமும் மனவேதனையோடும் வளர்ந்தாயா? ஆம்.
உன் தகப்பனுக்கு இரண்டு மனைவிகளா? ஆம்.
உன் தந்தைவழி தாத்தாவுக்கும் இரண்டு மனைவிகளா? ஆம்.
உன் மாமாவுக்கும்... என்று சொல்லவரும்போது, அவரை நான் அழுகாத குறையாக பார்த்ததை புரிந்துகொண்டு பேச்சை நிறுத்தினார். முழுதுமாக வேர்த்துவிட்டது. மேலும் என் தந்தைவழி தாத்தாவின் முதல் மனைவிக்கு (என் அப்பத்தா) இத்தனை குழந்தைகள் மற்றும் இரண்டாவது மனைவிக்கு இத்தனை குழந்தைகள் என்னும்போது, நான் வியப்பின் உச்சத்தில் இருந்தேன்.
நான் பிறந்தது போடி, வளர்ந்தது கோவை, அப்போது வேலைசெய்துகொண்டிருந்தது திண்டுக்கல்லில். எனது உறவுக்காரர்களுக்கே தெரியாத விஷயத்தை இவரால் வெறும் கட்டங்களை மட்டும் பார்த்து எப்படி சொல்லமுடிந்தது? அடேங்கப்பா. (சும்மாவா? என் தாய்வழி பாட்டி, என் பிறந்த நேரத்தை மிகத்துல்லியமாக குறித்துவைத்து, அரண்மனை ஜோதிடரிடம் எனக்கு ஜாதகம் எழுதினார். இன்றைக்கு ஏனோதானோவென்று ஒரு நேரத்தை குறித்துவிட்டு, குறைந்த செலவில் ஒரு ஜாதகம் எழுதிவிட்டு, ஒட்டுமொத்தமாக ஜோதிட சாஸ்திரமே பொய்.. எல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்வார்கள். அதேசமயத்தில், இறைவன் நினைத்தால் சாபமெல்லாம் வரமாகும், வரமெல்லாம் சாபமாகும் என்பதை நினைவில் கொள்க.)
எனது வருங்காலம் பற்றி ஏதேனும் உண்டா? என்றேன். அவர், "உன் ஜாதகத்தில் எந்த கிரகமும் சொல்லும்படி பலமாக இல்லை. பொருத்தமான மனைவி அமைந்தால் வாழ்க்கை மாறலாம்" என்றார். கடைசியாக தயக்கத்துடன் நான் "சாமி எனக்கு எத்தனை மனைவிகள் இருப்பார்கள்?" எனக்கேட்டேன். அவர், "முதலில் உனக்கு திருமணம் ஆகிறதா என பார்க்கலாம். அப்படி நடந்தால் ஒரு தாரம் தான்" என்று சொல்லி ஜாதக நோட்டை மூடிவிட்டார். ஏற்கனவே இனம்புரியாத கவலையில் இருந்த எனக்கு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருந்தது.
மறுநாள், வீட்டாரிடம் ஜாதகம் பார்த்ததையும் திருமண அவசியத்தையும் சொன்னேன். முதலில் யாரும் நம்புவதாக இல்லை. சில மாதங்கள் கழித்து எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால், ஒன்றும் அமைவதாக இல்லை. என் பயோ-டேட்டாவை எப்படி பெண் வீட்டாருக்கு பிடிக்கும்படி கவர்வது என யோசித்தேன். மாப்பிள்ளைக்கு அரசாங்க வேலை இருந்தால் நிச்சயம் யோசிக்காமல் பெண் கொடுப்பார்கள் என திட்டமிட்டு, மத்திய மற்றும் மாநில போட்டி தேர்வுகளுக்கு படித்து போட்டியிட்டேன். வேலை பார்த்துக்கொண்டே கிடைத்த நேரமெல்லாம் இரவு பகல் பாராமல் படித்து, பலமுறை தேர்வுகள் எழுதினேன். அதுவும் ஒன்றும் அமைவதாக இல்லை. சரி, பெரிய நகரங்களில் உள்ள பெரிய தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்தால், ஏதேனும் மாற்றம் நிகழலாம் என யோசித்து பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, நேர்முக தேர்வுக்கும் சென்றேன். அதுவும் ஒன்றும் அமைவதாக இல்லை. கடைசியாக, நாமே களத்தில் இறங்கி காதலித்துப் பார்த்திடலாம் என யோசித்தேன். ஆனால், அடியேன் எனக்கு வேலை மற்றும் படிப்பில் இருந்த சாமர்த்தியம், பெண்களின் மனதை கவர்வதில் இல்லை என்பதை புரிந்துகொண்டேன்.
யாரிடம் போய் சொல்ல? இறைவனையே நொந்துகொண்டேன். இறைவா! ஏன் எனக்கு அனைத்திலும் தோல்வியையே தருகின்றாய்? என கோவித்தேன். (ஆனால், அனைத்து தோல்வியும் வரும்காலத்தின் வெற்றிக்கே என்பது அப்போது புரியவில்லை). ஒருவன் வெற்றி பெற கடின உழைப்பு மற்றும் திறமை மட்டும் இருந்தால் போதாது, இறைவன் அருளே முக்கியம் என்பதை புரிந்துகொண்டேன்.
தொடரும்...
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.