வெள்ளி, 30 நவம்பர், 2018

மகத்தான மரண அனுபவங்கள் – தொடர்ச்சி



கடந்த 2014 -2015 ஆம் வருடம், நான் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக ஜெர்மனியில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போதைய எனது அனுபவத்தை என் முந்தைய பதிவில்சுருக்கமாக (லிங்க் பார்க்கலாம்)எழுதியிருக்கிறேன்.  அப்போது பிராணாயாமத்தை அதிக ஆர்வத்தோடு (ஆர்வ கோளாறு) என் இஷ்டத்திற்கு நாள்தவறாமல் காலையும் மாலையும் பயிற்சி செய்தேன்.  அப்போது, கடந்த 2015 ஆம் வருடம் மே மாதம் ஒரு மாலை வேளையில் எனக்கு திடீரென ஒரு யோசனை வந்தது.
எனது முறையில்லாத பிராணாயாமத்தோடு, ஹடயோகத்தின் சில விபரீதமான யோகாப்பியாசத்தையும் இணைத்து செய்தேன் (இதன் ஆபத்து கருதி மேலும் விளக்க எனக்கு அனுமதி இல்லை). ஆபத்தான ஹடயோக ஆசன பயிற்சியோடு மூச்சையடைக்கி வெளியிடும்போது, சட்டெனெ என் உயிர் எனது உடலிலிருந்து பிரிந்து ஏதோ ஒரு பிரகாசமான ஒளிக்கூட்டத்திற்குள் சென்றுவிட்டேன். என்ன நடந்தது? என என்னால் சில நிமிடங்களுக்கு யூகிக்கமுடியாமல், அந்த ஒளிகூட்டத்திற்குள் நான் கலந்து இருப்பது மிகுந்த ஆச்சர்ய ஆனந்தமாக இருந்தது. ஆனால், இந்தமுறை நல்ல சுயநினைவுடன் என்னால் நன்றாக யோசிக்கமுடிந்தது. திடீரெனெ எனது அறையும் அங்கிருந்த நாற்காலி மேசை கட்டில் எல்லாம் எங்கே போனது? என தேடிப்பார்த்தேன். அங்கு பரந்த ஒளியைத்தவிர எதுவுமே இல்லை. எனக்கும் எந்த உருவமும் இல்லை, ஆனால் யோசிக்க முடிகிறது. சிலநிமிடங்கள் என்ன செய்வது என புரியாமல் இருந்துவிட்டு, மீண்டும் என் உடலுக்குள் போகவேண்டும் என்று விரும்பினேன், எப்படி போவது என்று புரியாமல் கவலை கொண்டேன். ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோமே, இனி எனது உடலுக்குள் எப்படி செல்வது? என்று தெரியவில்லையே என யோசித்தேன். இதற்க்கு முந்தய வருடம் பக்திமார்க்கமாக அகத்திய மகாமுனி அய்யாவை வணங்கி, அவர் குருமந்திரத்தை பலமுறை பலநாட்கள் ஜெபித்து சித்திசெய்தது ஞாபகம் வந்தது. இனி அகத்தியர் தான் என்னை இங்கிருந்து காப்பாற்றவேண்டும் என்று முடிவுசெய்து, நான் ஏற்கனவே சித்திசெய்த குருமந்திரைத்தை தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தேன். சிலநிமிடங்களில் யாரோ மேலிருந்து கீழ்நோக்கி அழுத்துவதுபோல் இருந்தது. சட்டெனெ நான் என் உடலுக்குள் வந்துவிட்டேன். நான் அதே அமர்ந்த நிலையில் என் அறைக்குள் இருந்தேன். அப்பாடா தப்பித்துவிட்டோம் என நிம்மதி வந்தது. நான் என் இஷ்டத்திற்கு விளையாட்டாய் செய்த தவறை தாயின் கருணையோடு மன்னித்து, என்னை புதிதாய் பெற்றெடுத்த என் குருபாதம் போற்றி போற்றி. கருணைமிகு பொதிகைமுனி பொற்பாதம் போற்றி போற்றி.
          இந்த நிகழ்விற்குப்பிறகு பலநாட்கள் உடல்ரீதியான சில தொந்தரவுகளும் வலியும் இருந்தது. அகத்தியர் கருணையால் மீண்டுவர முடிந்தது. இதை மீண்டும் பரிசோதிக்க விருப்பமில்லை. அய்யாவும் அதை நிச்சயம் விரும்பமாட்டார்.  எனது அனுபவத்தில், இறைவன் அருளைப்பெற்று வாழவும், இறுதியில் இறைவனை சேரவும், முக்தி பெறவும் கடுமையான பயிற்சிகள்தான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை.
நாம் அனைவரும் நமது உலகவாழ்வை இனிதாக அனுபவித்துக்கொண்டே அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கி எளிதாக இறைவன் அருளை பெற்று வாழ்ந்து, இறைவனோடு எளிதாக சேர வழிகள் உண்டு. மேலும் இது தொடர்பான பதிவை"எங்கள் வீட்டில் எந்நாளும் ஆயில்யம்" (லிங்க் உள்ளது) என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். படித்து பயன் பெற வாழ்த்துக்கள்.


வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ஜெர்மனி தங்குமிடம்.





ஓம் அகத்தீசாய நமஹ.

இப்படிக்கு,
அகத்திய பக்தன்.

வியாழன், 22 நவம்பர், 2018

மகத்தான மரண அனுபவங்கள்

மகத்தான மரண அனுபவங்கள்

குரு பாதம் போற்றி.



இந்த பதிவு என் தனிப்பட்ட அனுபவங்களைக்கொண்டது. இதை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம். ஆனால், உங்களை ஆபத்து மற்றும் கஷ்டகாலத்தில் காப்பாற்றும் ஒரு எளிய சூட்சுமத்தை சொல்லவேண்டும் என்ற நோக்குடன் இப்பதிவை எழுதுகிறேன்.
கடந்த 2007 ஆம் வருடம் நான் பெங்களூரில் பணி செய்துகொண்டிருந்தபோது பெற்ற விசித்திர அனுபவம் இது.  நான் அப்போது தீவிர பெருமாள் பக்தனாக இருந்தேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாமிசம் தவிர்த்துவிட்டு, குடும்பத்துடன் பெருமாள் கோவில் செல்வது வழக்கம். (குருவருளால் கடந்த 2012 முதல் முழுமையான சைவ உணவுக்கு குடும்பத்தோடு மாறிவிட்டோம்.) எம்பெருமாள் மேல்கொண்ட காதலால் நாலாயிரத்திவ்ய பிரபந்த பாடல்களில் பலவற்றை மனனம் செய்வது, பெருமாளின் ஆயிரெத்தெட்டு நாமங்களை ஜெபித்து வணங்குவதும், எம்பெருமாளின் மேல் கவிதைகள் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.
மேலும் திருமணத்திற்கு ( 2003  ) முன்பிருந்தே, எனது உயிர் நண்பர் சேதுபதியின் அறிவுரைப்படி எனது ஜாதகப்படியான கடுமையான கருமவினை மற்றும் தோஷங்கள் அகல, காலபைரவர் வழிபாடும் தொடர்ந்து செய்துவருகிறேன். ஒவ்வொரு வாரமும், திண்டுக்கல் அபிராமியம்மன் கோவிலில் உள்ள பைரவரையும், தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் உள்ள சொர்ண ஆகர்சன பைரவரையும் நண்பர் சேதுபதியின் அறிவுரைப்படி தவறாமல் வணங்கினேன். இந்த பைரவ வழிபாடு, எனது கடும் கருமவினை மற்றும் தோஷங்களை நீக்கி நல்ல திருமண வாழ்வை தந்தது.  அவ்வப்போது என்வாழ்வில் கர்மவினைகாரணமாக வரும் சிக்கலான தருணங்களில் பைரவ வழிபாடு செய்வதுண்டு. நான் தூர இடங்களில் பணிபுரியும்போது எனது சிறிய மாமனார் திரு.இருளேசன் அவர்களை தொலைபேசியில் அழைத்து, பைரவர் அர்ச்சனை செய்யச்சொல்வேன். அவர் உடனே எனக்காக ராம்நாடு வழிவிடும் முருகன் கோவிலில் உள்ள பைரவருக்கு அர்ச்சனை செய்வார். நிற்க.

பலஆண்டுகள் தொடர்ந்து கணிப்பொறியில் வேலைபார்த்த காரணமாக எனக்கு கடுமையான “கீழ் இடுப்புவலியால்” (low back pain) துன்பப்பட்டுக்கொண்டிருந்தேன். பெங்களூரின் பிரபல ஆங்கில மருத்துவம் செய்தும் பலன் இல்லை. நரம்பில் ஊசி போடலாம், ஆனால் உத்திரவாதம் இல்லை என்றார்கள். அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தேன். எனது குடும்ப மருத்துவரும் உற்ற நண்பருமான ஓசூர் ஆங்கில மருத்துவர், என் வேதனையை கண்டு மிகவும் மனம் நொந்துபோனார். எனக்காக அவர் பல ஆங்கில மருத்துவ குறிப்புகளை ஆராய்ந்து, ஒரு குறிப்பிட்ட ஆங்கில ஊசிமருந்தை குறிப்பெடுத்துவைத்திருந்தார். ஒரு ஞாயிறு நாளில், நான் என் மருத்துவ நண்பரை, கடும் வலியோடு அவர் மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது அவர் குறிப்பெடுத்த ஊசிமருந்தைப்பற்றி சொல்லி, அதன்மூலம் வலி குணமாக அதிக வாய்ப்பு உண்டு என்றார். அந்த ஊசிமருந்து வைட்டமின் B12 வின் ஒரு குறிப்பிட்ட ( Cobalamin ) வேதிமருந்து. நான் அப்போது அதிக வலியில் இருந்ததால் என் மருத்துவ நண்பரிடம் அந்த ஊசியை உடனே எனக்கு செலுத்துமாறு வேண்டினேன். சரியென்று அருகேயிருந்த மருந்தகத்தில் அந்த ஊசியை வாங்கி, நான் நாற்காலியில் அமர்ந்த நிலையில் எனக்கு செலுத்தினார். ஊசிமருந்து செலுத்திய இருபது நொடிகளில் எனக்கு ஏதோ கரும்படலம் சூழ்ந்ததைபோல் இருந்தது. அடுத்த வினாடியே என் உயிர் என்னுடலை விட்டுப்பிரிந்து வேறு எங்கோ நின்றுகொண்டிருந்தேன். அங்கே நான் என் அருமைதெய்வம் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் முன் ஆச்சரிய ஆனந்தத்துடன் நின்றுகொண்டிருந்தேன். என்பெருமாள் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத பேரொளிரூபமாக நின்றுகொண்டு, என்னை தாயின் கருணையோடு பார்த்து புன்னகை பூத்தார். எனக்கு ஒரு குடும்பம் இருக்கும் நினைவோ அல்லது பூமியில் வாழ்ந்த நினைவோ சிறிதும் இல்லை.  நான் பேரார்வத்தோடு எம்பெருமாளின் ஒளிரூபத்திற்குள் சென்றுவிட எத்தனித்தேன். ஆனால், சட்டெனெ யாரோ என்னை பின்புறமாக வெக்கேனெப்பிடித்து இழுப்பதாக உணர்ந்தேன்....   நான் கண்விழித்துப் பார்த்தபோது, நண்பரின் மருத்துவமனை படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தேன். என் மருத்துவ நண்பர், கையில் வேறொரு ஊசியுடன் நிம்மதி பெருமூச்சோடு சிரித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். அவர் முகத்தை பார்த்தவுடன் எனக்கு மிகுந்த எரிச்சலும் கோபமும் வந்தது. இன்னும் ஒரேயொரு வினாடி தாமதித்திருந்தால் நான் என் இறைவனோடு கலந்திருப்பேன். என்ன செய்ய? இன்னும் இந்த பூமியில் கணக்கு இருக்கிறது போலும். இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், என் மருத்துவ நண்பரின் இஷ்டதெய்வமும் அதே பெருமாள்தான். நான் குறிப்பிட்ட cobalamin மருந்தின் ஒவ்வாமையில் மயங்கியவுடன், தன்கைவசமிருந்த ஒரேயொரு மாற்றுமருந்தை, பெருமாளை வேண்டி எனக்கு செலுத்தி உயிரை மீட்டுவிட்டார்.  வாய்ப்பை தவறவிட்ட வருத்தத்தில், மருத்துவ நண்பருக்கு நன்றியும் சொல்லாமல் கட்டணமும் கொடுக்காமல் வீட்டிற்கு எழுந்து சென்றுவிட்டேன். எனது அனுபவத்தில் உணர்ந்தது யாதெனில், சிறிதும் சந்தேகமில்லாத இறைநம்பிக்கையோடு வாழ்வோருக்கு "மரணம் துன்பமானதல்ல.. அதுவே உச்சகட்ட இன்பமானது". 
எனினும், செத்து பிழைத்த காரணத்தால், காலபைரவருக்கு ஒரு விசேஷ அர்ச்சனை செய்ய விரும்பினேன். உடனே என் உற்ற தோழனும் சகோதரனுமான பழனி சிவராமராஜாவை தொலைபேசியில் அழைத்து, பழனிமலை கோவில் படிக்கட்டின் ஆரம்பத்தில் உள்ள பிரம்மாண்ட காலபைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டினேன். அவனும் எனக்காக அதிகாலை கடும்குளிரையும் பொருட்படுத்தாது மலையடிவாரம் சென்று பைரவருக்கு அர்ச்சனை செய்தான். கடந்த 2015 ஆம் வருடத்தில் கிடைத்த மற்றோரு மரண அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.  இறைவன் அருள் பரிபூரணமாக உங்களோடு இருக்கவேண்டி இப்போதைக்கு விடைபெறுகிறேன். (ஆம், மரணம்கூட இன்பமான போதைதான்) 

குறிப்பு: இதை படித்த உங்களுக்கு என் கீழ் இடுப்பு வலியின் தீவிரத்தையும், அதற்கான தீர்வையும் அறிய ஆவலாய் இருக்கலாம். இதைப்பற்றி ஒரு கவிதை வடிவில் இந்த பதிவில் (லிங்க்)எழுதியுள்ளேன். http://fireprem.blogspot.com/2016/12/blog-post_30.html?m=1
Accupunture மற்றும் பாரம்பரிய வர்மா தடவல் சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்தது. அத்துடன் தினமும் காலை மாலை சூர்யநமஸ்கரா யோகாசனமும் செய்கிறேன்.

இப்படிக்கு,
அகத்திய பக்தன்.