வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

அப்பனா? ஆஸ்தியா? எது வேண்டும்?

ஒரு மகனுக்கு அவன் அப்பனைவிட, அப்பனின் ஆஸ்தி பெரிதாகுமோ ?



கருணைமிகு அகத்தீசர் அப்பா அன்புக்கு கட்டுப்பட்டவர். பக்தனுக்கு உண்மையான பக்தி இருந்தால், அப்பா அழைத்தவரிடம் உடனே வர தயாராக உள்ளார். அருள்பொழிய கருணையோடு காத்திருக்கிறார்.  யோகநுணுக்கம் இருந்தால், அப்பாவின் ஆஸ்தியான ஞானயோக சித்தி கிடைக்கும். ஆனால் அது சுலபமல்ல. கடினமான சுயமுயற்சி, பல சோதனைகளை தாண்ட வேண்டும். யோகஞான சட்டப்படி, பல பல படிநிலைகளை தாண்டியே சித்தியாகும்.  பலரும் வாசியோகம் மட்டுமே சித்தியாக வழி என உழைக்கிறார்கள். முறையான வாசியோகம், முதலில் மூலாதாரத்தில் சித்தியடைந்து பிறகு ஒவ்வொரு சக்கரமாக சித்தியாகவேண்டும். இது கலியுகத்தில் மிகவும் சிரமமானது. பதினெட்டு சித்தர்களில் ஒரு சித்தர் தாமாக அருளாமல், வெறும் வாசிநுணுக்கத்தை மட்டும் செய்து, சித்தி அடைய இன்றைய காலகட்டத்தில் முயற்சிப்பது முழுப்பலனை அளிக்காது.
அகத்தீசர் கருணை இல்லாமல் ஞான சித்தியில் எந்த முன்னேற்றமும் இருக்காது. எல்லா உழைப்பும் வீண்தான். இன்றைய காலகட்டத்தில், அகத்தீசர் முதலில் பக்தியோகத்தில் நன்கு தேற அறிவுறுத்துகிறார். இதுவே இயம நியமத்திற்கான சரியான வழி. மேலும், நம்மை சுற்றியுளோர்க்கு பக்திமார்கத்தின் சிறப்பு, கோவில் வழிபாட்டின் சிறப்புகளை எடுத்து சொல்லி, இயன்றவரை அனைவரையும் இறைவழிபாட்டில் முன்னேறி வர ஊக்கப்படுத்த சொல்கிறார்.  பக்திமார்க்கத்திலும், வேதமார்கத்திலும் தானும் முன்னேறி, தன்னை சுற்றியுள்ளோரையும் ஊக்கப்படுத்தும் பக்தனை, அகத்தீசர் கருணையோடு கண்டுகொண்டு தாமாகவே அவருக்கு அடுத்தகட்டமான யோகஞான பாதையை காட்டுவார். 
அகத்தீசர் கருணையோடு பக்தனிடம் வரும்வரை, தொடர்ந்து முழு மனதோடு பக்திமார்க்க வழிபாட்டில் இருக்கவேண்டும். இதையே அகத்தீசர் விரும்புகிறார். அப்படிப்பட்ட பக்தனையே அவர் அடுத்தகட்டத்திற்கு முறையாக அழைத்துச்செல்வார்.
      அன்பிற்குரிய அப்பனைவிட, அவன் எழுதிய ஆஸ்தி (யோகஞானம்) பெரிதல்ல. *அப்பன் அகத்தியனே அனைத்து ஞானத்திலும் உயர்ந்தவன்*. கருணை நிறைத்த சிவதெய்வம். ஈஸ்வரனாய், நாராயணனாய், சக்தியாய், ஜோதியாய், வெட்டவெளியாய் அருள்பாலிக்கும் அகத்தீசர் பொற்பாதம் போற்றி போற்றி !!.
அலைந்து செத்தாலும் அகத்தீசரை வணங்கி சா. சித்தி முத்தி சிக்காமல் சீர்மிகு அகத்தீசர் பாதம் மட்டும் வணங்கு. கருமம் எனும் வினைப்பதிவில் கடுமையாய் சிக்கிவிட்டாய். பேராசை கொள்ளாதே, பேயாக திரியாதே !.  அஷ்டமாசித்தி என்பார், சாகாத உடலென்பார், மாயயோக ஆசையில் அகப்பட்டு மயங்கி நீ இருக்காதே! அருளான அகத்தீசர் பாதம் மட்டும் வணங்கு. மகத்தான ஜோதி அவரே! வெட்டவெளி நாதன் அவரே! நித்தம் நித்தம் வணங்கு, அப்படியே வரம் கேட்டுவிடு. பலகோடி ஜென்மமெடுத்தாலும் பார்புகழும் அகத்தீசர் பாதம் வணங்க வரம்கேளு.
அன்பான அகத்தீசரே! அருளான ஜோதியே! கும்பமுனி தகப்பனே! குருமுனீச ராஜா! சுழுமுனை ஜோதியே! வெட்டவெளி நாதரே! மகத்தான மாமுனியே... நின் மலர்ப்பாதம் தனையெடுத்து, என் மண்டைஓட்டின் மத்தி பதித்து, பொல்லாத அகம்பாவம் கொன்று என்னை விடுவிப்பாய் விமலநாதா !

ஓம் அகத்தீசாய நமஹ.
அகத்திய பக்தன்.