வியாழன், 30 நவம்பர், 2017

புண்ணியத்தின் பற்றாக்குறை


  விலை மலிவானது அல்லது இலவசமானது, மிக எளிதாக எங்கும் கிடைப்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?  உடனே உங்கள் மூளைக்குள் அநேக மின்சார பொறிகள் பாய்ந்து பல விடைகளை தருவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் விடை சிலவேளை தவறாக போகலாம். எனக்கு தெரிந்தவரை மிக மிக மலிவாக கிடைப்பது "அறிவுரை" தான். நீங்களும் இதை சரியென்பீர்கள் என நினைக்கிறேன். எனவேதான், நான் அறிவுரை கூறுவதை முடிந்தவரை குறைத்துவிட்டு, என் சொந்த அனுபவத்தில் நான் நேரடியாக உணர்ந்ததை மட்டும் எனக்கு மிகவும் நெருங்கியவர்க்கு மட்டும் பகிர்வது என கவனமாக உள்ளேன். அநேக மனித ஜென்மங்கள் கர்மா என்னும் விதியின் கையில் சிக்கி அதன் போக்கிலேயே வாழ்கிறார்கள். இதில் யாரையும் திருத்தவேண்டும் என்ற அவசியம், யாருக்கும் இல்லை. திருத்தநினைப்பவனே யோக்யனா? என்பது கேள்விக்குறி. மனிதக்கூட்டத்தில் நூற்றில் ஒருவனுக்கு மட்டும் சரியான வழிமுறைகள் சரியான நேரத்தில் போய்சேர்க்கிறது. அதை அவன் ஆழ்மனம் "இது சரியான வழிமுறைதான்! " என மனதார ஏற்றுக்கொண்டு அவனை நல்ல வழியில் மாற தூண்டுகிறது. எனவேதான் நான் ,  என்பதிவுகளை படிப்பவரின் பாராட்டுக்கும், லைக்குகளுக்கும் ஆசைப்பட்டு "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என ஏங்கிப்போகாமல் கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்.

அப்பாவி ஏழைகள் கந்துவட்டியால் பாதிக்கும்போது மனம் வேதனைப்படுகிறது. அதைவிட மனதை மிகவும் பாதிக்கச்செய்வது பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை. எங்கோ எந்தப்பெண் பாதித்தாலும், என் மகளே! என மனம் வேதனைப்படுகிறது. தொடர்ச்சியான எண்ண ஓட்டங்கள் தூக்கத்தை கெடுத்து சோர்வை கொடுக்கிறது. இதற்கொரு முடிவென்ன என்று சிந்தித்து, என் குருநாதர் முன் மண்டியிட்டு, "அப்பா, இதுயென்ன கொடுமை? நான் ஏன் தொடர்ச்சியான எண்ண ஓட்டத்தில் சிக்கிக்கொள்கிறேன்? என்னால் என்ன செய்யமுடியும்? என்னிடம் உள்ள குறைபாடா? எப்படி எதிர்கொள்வது? " என பணிந்து கேட்டேன். பற்றவைத்த நெய்விளக்கின் தீபம் மேலும் சிறிது உயர்ந்து பிரகாசத்துடன், ஆழ்மனதில் இருந்து வரிகள் வர ஆரம்பித்தது. //என் மகனே! அவரவர் கர்மா வினைப்படி அவரவர் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.

ஒருவனுக்கு பணம் தேவைப்படும்போது, கந்துவட்டிக்காரன் கடவுளாக தெரிவான். எப்படியாவது கேட்ட பணம் கிடைக்கவேண்டும் என பிராத்தனை செய்து சென்று கந்துவட்டி வாங்குவான். வட்டிக்காரன் பணம், சொத்து, மானம் என உருவிக்கொண்டே இருப்பான். பின்பு, கடவுளாக தெரிந்த கந்துவட்டிக்காரன் எமனாக தெரிகிறான். ஹ்ம்ம்... எமன் கூட கடவுள் தானே !!!

கந்துவட்டிக்காரனிடம் கேட்ட பணம் கிடைத்தவுடன், என் "அதிஷ்டம்" பணம் கிடைத்தது என்பான். மானத்தையும் உயிரையும் விடும்போது "பாவி" என்பான்.   என் மகனே! நீ பாவம் எது என ஆழ்ந்து சிந்திப்பதிலோ, சஞ்சலப்படுவதிலோ என்ன பலன்? நீ இது இது பாவம் என்று யாரிடம் சொன்னாலும் உனக்கு பகைதான் வரும். சிந்திப்பதற்கும் செயல்படுத்துவதற்கு மிகவும் எளிதான ஒன்று உள்ளது. அணைத்து மனிதர்களிடமும் பெருவாரியாக தென்படுவது "புண்ணியத்தின் பற்றாக்குறை"!!!.

நீயும், உன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளும், இன்று நல்ல படிப்பிலும், நல்ல தொழிலாலும் முன்னேறியிருப்பது எதனாலே ? என்றோ நீங்களும் உங்கள் முன்னோராலும் செய்யப்பட்ட புண்ணியமும் தானடா.   மனிதர்கள், தான் அதிகம் அதிகம் சேர்க்கும் பணமும் சொத்தும் தன் சந்ததிக்கு முழுமையான பாதுகாப்பையும் நல்வாழ்வையும் அளித்துவிடும் என நம்புவது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் மறந்து விட்ட மறுத்துவிட்ட விஷயம் "புண்ணியத்தின் பற்றாக்குறை". மேற்கொண்டு உன்புத்தியால் புரிந்துகொள். காட்சிகளை கண்டு கலங்க வேண்டாம். உன்னாலான தான தர்மங்களை பிரதிபலன் பார்க்காமல் செய்து உன்வழியில் போய்க்கொண்டே இரு. நீ விரும்புவோருக்கும் "புண்ணியத்தின் பற்றாக்குறை" பற்றி சொல்லலாம்.  ஆனால், பாவத்தைப்பற்றி விரிவாக பேசினால் தேவையில்லாத வம்புதான். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.// என முடித்துக்கொண்டார்.

இன்றைய காலகட்டத்தில் இதுதான் பாவச்செயல் என அறுதியிட்டு கூறுவது மிகவும் சிக்கலான காரியம். "தர்மம் செய்ய செய்ய கர்மத்தின் வினை குறையுமப்பா" என்ற குருவின் வரிகளை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது. "பண வசதி உள்ளவன் தான தர்மம் நன்கு செய்யலாம், வசதியில்லாத நான் ஏன் செய்ய வேண்டும்?" என உங்களில் சிலர் யோசிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தர்மம் செய்ய பணத்தைவிட மனம் முக்கியம். 1995 இல் எனது கல்லூரி படிப்பு செலவிற்காக திண்டுக்கல்லில் பகுதி நேர வேலை செய்வேன். மாதம் ரூபாய் 800 சம்பளம். எனது செலவுபோக குறைந்தது ரூபாய் ஐம்பது மிச்சம் செய்து மணிஆர்டர் மூலம் "உதவும் கரங்கள், சிவானந்த குருகுலம்" போன்ற ஆதரவற்றோர் அசிரமங்களுக்கு அனுப்புவேன். அது அற்புதமான மனநிறைவை தரும். ஏதோ பெரும் சக்தி என்னை சூழ்ந்து அருள்வதை உணரமுடியும். இந்த சுகத்தை இன்றுவரை அனுபவிக்கிறேன். ஒரு நிமிடமேனும், 137 பெண்குழந்தைகளுக்கு தாய் தகப்பனாக என் மனைவியும் நானும் அங்கு நிற்க்கும் பாக்கியம் குரு அருளால் கிடைக்கிறது.



 உங்களுக்காக இல்லாவிட்டாலும், நீங்கள் விரும்பும் உங்கள் சந்ததிக்காகவேனும் "புண்ணியத்தின் பற்றாக்குறையை" ஈடு செய்து வளமோடு வாழ குருவை வணங்கி வாழ்த்துகிறேன்.



வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து
(அதிகாரம்:ஈகை குறள் எண்:221)

பொழிப்பு (மு வரதராசன்): வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.

இவன்,

அகத்திய பக்தன்,

பிரம்மேந்திரன் கலைச்செல்வி